திங்கள், ஆகஸ்ட் 27, 2012

இன்னும் விலகாத – தொடரும் மர்ம முடிச்சுகள்


இன்னும் விலகாத – தொடரும் மர்ம முடிச்சுகள்
                                   – மு.சிவகுருநாதன்
    

     தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை எந்தத் தேர்வு நடத்தினாலும் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகிவிடுகிறது. தொகுதி-2 வினாத்தாள் வெளியான விவகாரம் சந்தி சிரித்து நாறுகிறது. இவ்விவகாரத்தில் வினாத்தாளை வெளிக்கொண்டு வந்தவர்கள் இன்னும் பிடிபட்டபாடில்லை.

         வினாத்தாளை பொறுப்பானவர்களிடமிருந்து வாங்கி விற்றவர், அதை வாங்கித் தேர்வு எழுதியவர்கள் என சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பெரிய இடத்திலிருப்பவர்களை காப்பாற்ற முயற்சி நடப்பதாக புகார் கூறியுள்ளார். இதற்கு அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கொன்று தொடரப்படலாம். ஆனால் இவ்விஷயத்தில் உண்மை என்ன என்பதுதான் புரியாத புதிராகவும் மர்மமாகவும் உள்ளது.

   தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் வந்தபிறகுதான் தேர்வாணையம் மிகச் சிறப்பாக செயல்படுவதாக மக்களை நம்பவைத்து ஏமாற்றும் தினமணி போன்ற ஊடகங்களும் பிறரும் வாய்திறக்க மறுப்பதன் மர்மம் நமக்கு விளங்கத்தான் செய்கிறது.

  இந்நிலையில் ஜூலை – 12 ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை (23.08.2012) இரவோடிரவாக அவசரகதியில் வெளியிடப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பதவிக்கான பட்டயப் பயிற்சி (D.T.Ed) முடித்தவர்களுக்கான தாள்-1 தகுதித் தேர்வில் எழுதிய 2,83,806 பேரில் 1,735 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விழுக்காடு 0.61%. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வியியல் பட்டம் (B.Ed) படித்தவர்களுக்கு நடத்தப்பட்ட தாள் -2 தகுதித் தேர்வில் எழுதிய 3,83,616 பேரில் வெறும் 713 பேர் மட்டுமே தேர்வாயினர். தேர்ச்சி விழுக்காடு 0.19%. இரு தாள்களையும் எழுதியோர் 57,000 தேர்வர்களில் 83 தேர்வர்கள் மட்டுமே 60% மதிப்பெண்கள் பெற்று தேர்வாயினர்.

  90 நிமிடங்கள் 150 வினாக்களுக்கு பதிலளிக்க போதுமானதல்ல என்பது மட்டுமல்லாது பல்வேறு குளறுபடிகள் காரணமாகவே தேர்ச்சி இந்த அளவிற்கு குறைய நேரிட்டது. இதை அரசும் வாரியமும் நேரடியாக ஒத்துக் கொள்ளாவிட்டாலும் மறு தேர்வு, இனி 3 மணி நேரம் கால அவகாசம் உயர்த்தியிருப்பது உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

     இந்த 90 நிமிடத்தில் 150 வினாக்களில் 142 க்கு சரியான விடையளித்து நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பி.சித்ரா என்ற தேர்வர் முதலாவதாக வந்து கின்னஸ், ஒலிம்பிக் சாதனைகளுக்கு நிகரான சாதனை படைத்திருப்பதைக் கண்டு வியப்படையாமல் இருக்கமுடியவில்லை.

     தாள்-1 இல் 150 க்கு 122 பெற்ற எம். திவ்யாவின் சாதனை கூட பரவாயில்லை. பி.எட்., டி.ட்டி.எட். படிப்புகளில் 90% த்திற்கு மேல் வாங்கிக் குவித்தவர்கள் கூட 90 நிமிடத்தில் மூர்ச்சையான போது இது எப்படி சாத்தியமாயிற்று என்று அனைவருக்கும் அய்யம் உண்டாவது தவிர்க்கமுடியாதது. 
 
   TNPSC போன்று இங்கும் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா என்று விசாரிக்க வேண்டியது தற்போதையத் தேவையாகிறது. நள்ளிரவில் அவசர அவசரமாக தேர்வுமுடிவுகளை வெளியிட வேண்டிய அவசியம் குறித்தும் ஆராயவேண்டியுள்ளது. எதையும் சந்தேகி என பெரியோர்கள் சொல்லிருக்கிறார்களல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக