ஆசிரியர்களின்
தகுதியை எப்படி - யார் நிர்ணயிப்பது?
-மு.சிவகுருநாதன்
ஆகஸ்ட் 13, 14 ஆகிய
இரு நாட்களும் சமூகப் பொறுப்பை தாங்களாகவே ஒட்டுமொத்தக் குத்தகை எடுத்துக்கொண்டுள்ள
தினமணி தீட்டியுள்ள தலையங்கங்களை மடத்தனத்தின் உச்சம் என்று சொல்லலாம். முன்னது ஆசிரியர்
தகுதித்தேர்வு தொடர்பானது; பின்னது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 வினாத்தாள்
வெளியானது பற்றியது.
ஆசிரியர் பணி உள்ளிட்ட
எந்தப் பணியானாலும் எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியை நிர்ணயம் செய்வது என்ற அடிப்படையே
மிகத் தவறானது. மாணவர்களின் மனப்பாடத்திறனை மட்டும் கொண்டு அவர்களின் ஒட்டுமொத்தத்
திறன்களை மதிப்பிடுவது எவ்வளவு நம்பகத்தன்மையற்றதோ அதைப்போலத்தான் இதுவும்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு
எழுத்துத்தேர்வு வைக்கப்பட்டு நியமனம் செய்யப்படுகிறது. அவர்களுக்கு தங்களுடைய பணியில்
எவ்வித பயிற்சியோ அனுபவமோ இதனால் கிடைப்பதில்லை. பொது அறிவு மற்றும் பாட சம்மந்தமான
கேள்விகளுக்கு விடை தெரியும் ஒருவர் அலுவலகப்பணிகளில் திறமையாக செயல்படுவார் என்று
எப்படி ஒத்துக்கொள்வது?
ஆசிரியர் தகுதித்
தேர்வு ஒன்றும் அ.இ.அ.தி.மு.க. அரசின் கண்டுபிடிப்பல்ல என்பதை தினமணி முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009 இன் கீழ்தான் இத்தகையத் தேர்வு நடத்தப்படுகிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009 ஐ கொண்டுவந்த
மத்திய அரசுதான் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளையும் ஆசிரியர் பட்டய படிப்பு நிறுவனங்களையும்
பல்லாயிரக்கணக்கில் தொடங்க அனுமதிக்கிறது. மாநில அரசும் இந்த முறைகேட்டிற்கு துணை போகிறது.
புற்றீசல் போல் கிளம்பிவரும்
இத்தகைய பயிற்சி நிறுவனங்களில் பயின்றவர்கள் தகுதித்தேர்வில் பெருமளவு தோல்வியடைந்துள்ளார்கள்
என்று புள்ளிவிவரங்கள் சொல்லும் தினமணி அவர்கள் அனைவரும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில்
தற்போது பணியாற்றிவருபவர்கள் என்கிற உண்மையை வசதியாக மறந்துவிடுகிறது.
இவர்கள் இப்படி 5 ஆண்டுகள்
வரை தோல்வியடைந்தாலும் பணியில் தொடரமுடியும் என்பதே இன்றைய நிலை. இவர்கள் மட்டுமே தரமான
கல்வியை அளிப்பதாக தினமணி கருதும் மடமையை என்னவென்பது?
தனியார் பள்ளிகளை இங்கு
வளர்த்தெடுத்தது யாரென்று தினமணிக்கு வேண்டுமானால் தெரியாமற்போகலாம். ஆனால் அனைவருக்கும்
தெரிந்த ரகசியமே இது.
தனியார் பள்ளிகள் தரமானவை; அரசுப் பள்ளிகள் தரமற்றவை
என்று இவர்கள் சொல்லும் வாதங்கள் ஒன்றிற்கொன்று முரணானவை. தனியார் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்கள் அதிபுத்திசாலிகள்; அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூடர்கள் எனும் இவர்களது வாதம்
சிறுபிள்ளைத்தனமானது. தேர்ச்சி வீதம் மட்டுமே தரத்திற்கான அளவுகோலல்ல.
பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தவேண்டும்
என்றெல்லாம் அரசுக்குக் கோரிக்கை வைப்பவர்கள், தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும்
என்று மட்டும் வாய்திறக்க மறுப்பதேன்? அப்பட்டமான
பார்ப்பனீயத்துடன் கருத்து சொல்லும் நேர்மையில்லாதவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?
தமிழக அரசுகள் பலமுறை எழுத்துத்தேர்வு வைத்து ஆசிரியர்களைத்
தேர்வு செய்துள்ளன. அப்படிப் பார்க்கும்போது எந்தத் தனியார் பள்ளி எழுத்துத்தேர்வு
வைத்து திறமையான ஆசிரியர்களைத் தேர்வு செய்தது என்பது தினமணிக்கே வெளிச்சம்.
ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில்
படிக்கவைப்பதில்லை என்றும் சட்டத்தின் மூலம் செய்துவிட்டால் அரசுப்பள்ளிகளின் தரம்
உயர்ந்துவிடும் என்பது மடத்தனமான கனவு. தரம் தேர்ச்சி விழுக்காட்டில் இல்லை என்று முன்பே
சொன்னோம்.
டாக்டர் கோத்தாரி கல்விக் குழு அருகாமைப் பள்ளிகள்
என்ற உயர்ந்த கருத்தாக்கத்தைப் பரிந்துரை செய்தது. நமது மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.
அதனுடைய பலனை நாம் அனுபவிக்கிறோம். கல்வியைத் தனியார்மயமாக்கி முழு வியாபாரத்தை அனுமதித்துவிட்டு
தற்போது பெயரளவில் மட்டும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதையெல்லாம்
கண்டுகொள்ளாமல் வெறும் வெத்துவேட்டு தலையங்கம் எழுத தினமணியால் மட்டுமே முடியும்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பன்னெடுங்காலமாக
ஊழலுக்குப் பேர்போனது. அதன் தலைவராக தமிழக காவல்துறையின் முன்னாள் உயரதிகாரி ஆர். நடராஜ்
நியமிக்கப் பட்டதிலிருந்தே அவரைப் பாராட்டி பல தலையங்கங்களை எழுதி குவித்தது தினமணி.
இதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2
வினாத்தாள் வெளியாகி அந்நிறுவனத்தின் நம்பகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் சமயத்திலும்
தினமணியின் பார்ப்பனீயத்திற்கு எல்லையேயில்லை.
நாட்டில் அனைத்து இடங்களிலும் ஊழல் மற்றும் குற்றங்கள்
மலிந்துவிட்டநிலையில் ஓய்வு பெற்ற ராணுவ, காவல்துறை உயரதிகாரிகள் அவற்றை சரி செய்துவிடுவார்கள்
என்று ஊடகங்களில் கருத்துத் திணிப்பை செய்வது ஒருவகையான பார்ப்ப்பனத் தந்திரமே. நமது அரசியல்வாதிகளுக்கு மாற்றாக இவர்களை உருவகப்படுத்தி
மக்கள் மனத்தில் பரப்புவது ஓருவகையான நரித்தனமே. இவர்களை அமைச்சர்களாக நியமித்துவிட்டால்
நாட்டில் ஊழலும் குற்றங்களும் ஒழிந்துவிடுமா என்ன?
தேர்வாணையத்தின்
அருமை-பெருமைகளை ஊடகங்களில் தினமும் பரப்புரை செய்வதுதான் அந்த அமைப்பின் தலைவருக்கு
வேலையென்றால் அமைப்பிலுள்ள குறைகள் எவ்வாறு களையப்படும்? இந்த மாதிரியான சாதிவெறிப்
பத்தரிக்கைகளும் இதர ஊடகங்களும் குற்றங்களை மூடிமறைக்க பெரிதும் உதவுகின்றன. இந்தப்போக்கு
வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.
வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவது பல ஆண்டுகளாக
நடந்துவரும் நிலையில் இந்த புதிய தேர்வணையத் தலைவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை
நாட்டு மக்களுக்கும் மிகுந்த சிரமப்பட்டுத் தேர்வு எழுதியும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள
நிலையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கடமையும் பொறுப்பும்
இல்லாமற்போனதேன்? இவர்களின் துதிபாடிகளான இந்த ஊடகக் கும்பல்களும் இதை உணருவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக