திங்கள், அக்டோபர் 08, 2012

புதிய போராளி அமைப்பினர் 13 பேர் கைது: மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்

புதிய போராளி அமைப்பினர் 13 பேர் கைது: மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்

07.10.2012
சென்னை


         சென்னையை அடுத்த குன்றத்தூரில் நேற்று (6.10.2012) தனியார் பள்ளி ஒன்றில் நிர்வாகத்தின் அனுமதி பெற்று கூட்டம் நடத்திக் கொண்டிருந்த புதிய போராளி என்கிற அமைப்பைச் சேர்ந்த 13 பேர்களை க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கிரிமினல் திருத்தச் சட்டம் 7 (1)(A) பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டு தற்போது அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

     அவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பினர் என்றும் ரகசியமாக சதித் திட்டம் தீட்டினர் என்றும் க்யூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி இன்று பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள துரை சிங்கவேலு முன்னதாக நக்சல்பாரி அமைப்பு ஒன்றில் இருந்து செயல்பட்ட போதும் தற்போது அதிலிருந்து விலகி புதிய போராளி என்றொரு அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். அதே பெயரில் அவர்கள் ஒரு பத்திரிகையும் நடத்துகின்றனர். இந்த அமைப்போ, பத்திரிகையோ ரகசியமானவை அல்ல. மிகவும் வெளிப்படையானவை, சட்டபூர்வமாக இயங்கி வருபவை.

    வெளிப்படையான அமைப்புகளை உருவாக்குவது, கூடிப் பேசுவது, தங்கள் நோக்கங்களைப் பிரச்சாரம் செய்வது முதலியன இந்திய குடிமக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் அனுமதியுடன் கூடி விவாதித்துக் கொண்டிருந்த துரை சிங்கவேலு, பாஸ்கர், செந்தில், புவியரசன் உள்ளிட்ட 13 பேரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்திருப்பது சட்ட விரோதமானது.


      சென்ற சில நாட்களுக்கு முன்னர் இதே போல வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருந்த சதீஷ் என்கிற இளைஞரையும் திமுக ஒன்றிய செயலாளர் முரளிதரன் என்பவரையும் சென்னை அண்ணா நூலகத்தின் அருகில் கைது செய்து இதே பிரிவின் கீழ் க்யூ பிரிவு போலீசார் வழக்குத் தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

       இதுபோல வெளிப்படையாகவும் சட்டப்பூர்வமாகவும் இயங்குபவர்களை கைது செய்வதும் அவர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்திப் பிரச்சாரம் செய்வதும் இயக்கங்களை அச்சுறுத்தி ஒடுக்குகிற நடைமுறையை வன்மையாக கண்டிக்கிறோம். துரை சிங்கவேலு மற்றும் 12 பேர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற்று அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

1. பேராசிரியர் அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (People’s Union for Human Rights – PUHR), சென்னை.
 

2. கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for People’s Rights – FPR), புதுச்சேரி.       
 

3. எஸ்.வி.இராஜதுரை, எழுத்தாளர், மூத்த மனித உரிமை ஆர்வலர், நீலகிரி.
 

4. பேராசிரியர் பிரபா.கல்விமணி, ஒருங்கிணைப்பாளர், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்.

தொடர்பு முகவரி: 

அ. மார்க்ஸ், 
3/5, முதல் குறுக்குத் தெரு, 
சாஸ்திரி நகர், அடையாறு, 
சென்னை – 600 020. 
செல்: 9444120582.

 நன்றி:- அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக