புதன், அக்டோபர் 31, 2012

பலியாடுகள் - கணையாழி (புதுமலர்) சிறுகதை


பரண் - 0008
பலியாடுகள்  - கணையாழி (புதுமலர்)  சிறுகதை 
                                   -மு.சிவகுருநாதன்
முன்கதை சுருக்கம்:
     வாழ்வனுபவத்தை சிறுகதையாக்க கணையாழி இலக்கிய இதழில் புதுமலர் சிறுகதை  என்ற பகுதி தொண்ணூறுகளில் தொடக்கத்தில் ஆரம்பித்திருந்தார்கள். கி.கஸ்தூரிரங்கன் பொறுப்பில் வந்த கணையாழிக் காலமது. ஜூலை 1994 கணையாழி இதழில் என்னுடைய இந்த பலியாடுகள் சிறுகதை வெளியானது. இதை ஓர் சிறுகதை என்று சொல்வதைவிட பள்ளி வன்முறைக்கெதிரான பதிவு என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். இதில் வரும் எனது தொடக்கப்பள்ளி ஆசிரியர் சமீபத்தில் தனது எண்பதாவது வயதை தொட்டிருக்கிறார் என்பது மிக மகிழ்வான செய்தி. அவரைப் பற்றிய பதிவொன்றும் இவ்வலைப்பூவில் இடம்பெற்றுள்ளது. இந்த  புதுமலர் சிறுகதைக்காக கணையாழி அலுவலகத்திலிருந்து ரூ 100 சன்மானம் காசோலையாக வந்தது. A/C payee காசோலையாக அது இருந்தபடியால் வாய்மேடு இந்தியன் வங்கியில் கணக்கு தொடங்கி அப்பணத்தை பெற்றது ஓர் தனிக்கதை. அக்கதை பரண் பகுதியில் வெளியிடப்படுகிறது. இனி கதை (?!).

                 ---------------------------------------------------------------

   வகுப்பறைக்குள் அவன் நுழைந்தபோது வெறிச்சோடிக்கிடந்தது. அஃறிணையே காட்சிப்பொருளாய் கேட்பாரற்ற தனிமை. ஏதேனும் செய்யவேண்டும்போல மனம் குரங்காய் தாவியது. கைகள் குறுகுறுத்து ஆட்டம் போட்டது. என்றுமில்லாத புத்துணர்வை அன்றுதான் உணர்ந்தான் நெடுநாள் பசி தீர்ந்ததுபோல.
   புத்தகத்தையும் டப்பாவையும் டெஸ்க்கினுள் தள்ளிவிட்டு நிமிர்ந்தபோது அது தட்டுப்பட்டது. பல நாள் நீரில் நனைந்து போர்டு துடைக்கப் பயன்பட்ட நைந்துபோன துணி டஸ்டர். இறுகி கல் போலாயிருந்தது அது.
    போர்டில் கெமிஸ்ட்ரி வாத்தியார் நேற்று எழுதிய கரிமச்சேர்ம வாய்பாடுகள் மீந்திருக்க அதை மிக வேகமாக இங்குமெங்கும் அழித்தெடுத்தான். எதன் மீதோ சினந்தவனாய் டஸ்டரை மேலும் கீழும் உயர்த்தி பார்த்துவிட்டு அதே வேகத்தில் மேல்நோக்கி வீசினான்.
   இப்படி நடக்குமென அவன் எதிர்பார்க்கவில்லைதான். வீசிய வேகமும் டஸ்டரின் கனமும் அவ்வாறு செய்துவிட்டன. பெருத்த ஓசையுடன் மேலெயிருந்த டியூப் லைட் சிதறி சில்லானது. அவனுக்கிருந்த தனிமை அந்த வகுப்பிற்கும் இருந்தபடியால் எங்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இனிமேல் இங்கிருக்க இயலாது என்பதனால் ஒரு கணம் மனம் சஞ்சலப்பட்டு பிச்சைக்காரனுக்கு அளித்த சோறு பிடுங்கப்பட்டதாய் உணர்ந்தவனாய் மெதுவாக வெளியேறினான். மாணவர் கூட்டத்தில் மறைந்து போனான்.
                 ------------------------------------------------------
   பள்ளி அன்றைய சடங்குக்குத் தயாரானது. வீட்டு சோகங்களையும் ஆசிரியர்களின் அச்சுறுத்தல்களையும் அசை போட்டவாறு மாணவ கூட்டம் இங்குமங்கும் விரைந்தது. மேனிலைப் பள்ளி வாழ்க்கை உவப்பானதல்ல; உறுத்தல்கள் நிறைந்ததுகூட.
   நானும் என் வகுப்பு சக தோழர்களும் டியூசன் முடித்துவிட்டு பள்ளி தொடங்க நேரம் நெருங்கும் வேளையில் உள்ளே நுழைந்தோம். வகுப்பறையில் சில்லுகள் எங்களை சிரிக்க சிரிக்க வரவேற்றன.
   உடைந்த செய்தியை லீடர் தலைமையாசிரியருக்குத் தெரியப்படுத்தினான். தவறு செய்தவனுக்கு தடயத்தை மறைக்கத் தெரியவில்லை. டஸ்டர் இருக்கும் நிலையறிந்து உடைக்கப்பட்டது இதனால்தான் என்பது உறுதியானது.
    பள்ளித் தலைமை, பி.டி. ஆசிரியர்கள் புடைசூழ வந்து பார்த்துவிட்டு மிரட்டிச் சென்றது. உடைத்தவன் கூண்டேறுவதாகத் தெரியவில்லை.
   நாங்களும் விடாப்பிடியாக, டியூசன் முடிந்து நாங்கள் வருவதற்கு முன்பே இது நிகழ்ந்துவிட்டது. முன் வந்த ஒரு சிலரால்தான் இது அரங்கேற்றப்பட்டிருக்கவேண்டும், என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் கேட்பதற்குதான் ஆளில்லை.
    விசாரிக்க விருப்பமில்லையோ இல்லை வயது முதிர்ந்தவர்களை எப்படி எப்படி விசாரிப்பது என்ற மனவியல் காரணமோ என்னவோ யாரும் செய்ய முன்வரவில்லை. ஆனால் நாங்கள் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பொல நடத்தப்பட்டது கவனிக்கவேண்டிய பழைய செய்தி.
    உடைத்தவன் சரணடையுமாறு பொத்தாம் பொதுவாக கூறப்பட்டது. அது எந்த பிரதிபலிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை யாரும் பெரிதுபடுத்தவில்லை. பொது மன்னிப்பு என்று சொல்லிக் கேட்டிருக்கிறோம். பொதுத் தண்டனையை இப்பொழுதுதான் நாங்கள் உணரத் தலைப்பட்டோம்.
    அனைவரிடமும் ரூ 10 /- அபராதம் வசூலிக்கவேண்டுமென்று லீடர் பணிக்கப்பட்டான். அவனும் தனது பணி நேர்மையைக் காட்டும் பொருட்டு எங்களையெல்லாம் வற்புறுத்தத் தொடங்கினான்.
    முதன் முதலாக நாங்களும் கணக்கு போட்டோம். ஒருத்தருக்கு 10 என்றால் 50 பேருக்கு ரூபாய் 500 வரும். 30 ரூபாய் டியூப் லைட்டுக்கு 500 ரூபாயா? இது அநியாயம். அதுவும் எங்களுக்கு சம்பந்தப்படாத – வகுப்பறையில் இல்லாத போது நிகழ்ந்த ஒரு செயலுக்கு எப்படி பொறுப்பேற்க முடியும்?
   வினாக்கள் மூலம் புழுங்கினோம். ஆனால் பூனைக்கு மணி கட்டத்தான் ஆட்களில்லை.
    சந்தேகப்படற ஒரு நாலைஞ்சு பேரை கூப்பிட்டு விசாரிச்சா விஷயம் வெளியே வந்திடும். அதைச் செய்யாமல் வசூல் பண்றதெல்லாம் வேண்டாத வேலை, என்றேன் முதன் முதலாக. பல தலைகள் அசைந்தன. மணி கட்டிய தைரியத்தில் பலரும் பேச ஆரம்பித்தனர்.
   யாருன்னு கண்டு பிடிக்கட்டும், பணம் யாரும் கொடுக்கமுடியாது.
   நான் வர்றத்துக்கு முன்னமேயே அதான் உடஞ்சிபோச்சே.
   எல்லாரும் சேர்ந்து காசு போட்டு லைட்டை வாங்கி போடச் சொல்லலாம். அதைவிட்டு இவ்வளவு பணம் கேக்கிறது எதுக்கு? என்று பல பேச்சுகளும் கூச்சல்களும் தொடர்ந்து விவாதமாய் கிளம்பியது. வசூல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அவைக்குறிப்பில் நீக்கப்படவேண்டிய சொற்களும், தெளிவாக கேட்க முடியாதபடியான சொற்களும் நிறைந்ததாக அது இருந்தது. தலைமையிடம் நல்ல பெயர் வாங்கும் முயற்சியும் தோல்வியுற்றதே என்றெண்ணிய லீடர் தலைமை ஆசிரியர் அறைக்கு ஓடினான்.
    பணம் குடுக்க முடியாதுங்கிறாங்க, புகார் செய்தான்.
    எவன் சொன்னான்? தலைமை ஆசிரியருக்கு முந்திக் கொண்டு ஒரு துணை பி.இ.டி. கேட்டார்.
    எல்லாருன்னா... எவனாச்சும் ரெண்டு பேரைச் சொல்லு, இது தலைமையாசிரியர்.
   யாரைச் சொல்வது என்ற தர்ம சங்கடத்தில் சில கணங்கள் யோசித்துவிட்டு சடக்கென என் பெயரையும் எனது நண்பன் பெயரையும் சொல்லிவிட்டான்.
   அவனா... சொல்லியிருப்பான்  கவனிச்சுக்கிறேன்.... வா, என்று அவனை அழைத்துக்கொண்டு வகுப்பறைக்கு விரைந்தது.
   உள்ளே நுழைந்ததும், பணம் கொடுக்க முடியாதுன்னு சொன்னவன் எழுந்திரி, என்று மற்றொரு பி.இ.டி. கட்டளை பிறப்பித்தார். நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசாமல் உட்கார்ந்திருந்தோம். சிறிது இடைவெளிக்கு பின் நானும் எனது நண்பனும் பெயர் சொல்லி விசாரிக்கப்பட்டோம்.
   உனக்கு எவ்ள திமிர் இருந்தா இப்படி சொல்லுவே, உரத்த தொனியில் மிரட்டப்பட்டேன்.
   சார்... நாங்கள் பணம் கொடுக்க முடியாதுன்னு சொல்லல. டியூசனுக்கு வராத ஒரு சில பேர்தான் இதை செஞ்சிருக்கணும். அவங்கள விசாரிங்க சார், என்றேன்.
   எதிர்த்து பேசுறான் பாருங்க சார், கூடயிருந்த பி.இ.டி. தலைமையாசிரியருக்கு சுதி கலந்தார். இனிமேலும் பேச முடியாதபடி வாயடைக்கப்பட்டேன்.
   இந்த பையன் நமக்கு வேணாம் சார், வீட்டுக்கு அனுப்பிடுவோம், என்று தலைமையாசிரியர் உத்தரவு போட்டார். இதே ரீதியான பேச்சுக்குப் பிறகு என் நண்பனுக்கும் இதே முடிவுதான் எடுக்கப்பட்டது.
   உள்ளே போய் பையை எடுத்துட்டு வாங்கடா, இருவரும் பணிக்கப்பட்டோம். நோட்டையும் டப்பாவையும் எடுத்துக் கொண்டு திரும்பவும் அவர்களிடம் வந்தோம்.
   பாருங்க சார், எவ்வளவு வேகமா வர்றான். இவனுக்கு படிக்கிறத்துக்கே இஷ்டமில்லை, கொஞ்சம் அதிகமாகவே ஜால்ரா போட்டார். அப்படியென்றால் காலில் விழுவான் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் எந்த தப்பும் செய்யாத நான் மன்னிப்பு கேட்பதுகூட உசிதமாகப்படவில்லை.
   போய்... அப்பா அம்மாவை அழைச்சுகிட்டு வந்தாதான் இங்க எடம். இல்லைன்னா வரவே வேண்டாம். இந்த வார்த்தைகளை காதில் வாங்கிக்கொண்டே இருவரும் ஒருசேர வெளியே வந்தோம். பல வகுப்புகளின் மாணவ – மாணவியர் – ஆசிரியர்கள் எங்கள் மீது ஏளனப்பார்வை வீசினாலும் எங்கள் நடையில் பெருமிதம் இருந்தது.
  அப்பா அம்மா என்று சொன்னது பெற்றோர் என்பதற்காக சொல்லப்பட்டதா அல்லது எங்களைப் பெற்ற தெண்டத்திற்காக நாங்கள் செய்யாத தவறுக்காக சிலுவை சுமக்கவேண்டுமா? என்று சிந்தனை ஓடினாலும் பேச்சுரிமை – எழுத்துரிமை மறுக்கப்பட்ட அக்கால நிலையினை எண்ணி ஆறுதல் பெற்றேன்.
   பின்பு நடைபெற்ற பூர்வாங்க விசாரணையில் உடைத்தவன் ஒத்துக்கொண்டதால் மன்னிக்கப்பட்டான்.
   வெளியேறிய நாங்கள் கடையில் டீ அருந்திவிட்டு எவ்வித ஏற்பாடும் இன்றி பேருந்து ஏறி வீட்டுக்குச் சென்றோம்.
   மறுநாள் என் அண்ணன் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் மன்னிப்புக் கடிதம் அளித்தும் என் நண்பன் யாரோ ஒருவரை அழைத்து வந்து இவர்தான் எனது மாமா என்று சொல்லியும் பள்ளியில் இணைத்துக் கொண்டது ஒரு சாதாரண விஷயம் என்றாலும் இப்போது நினைத்தாலும் மனத்தில் வெறுமை படர்கிறது.


                          ------------------------------------------------------
நன்றி:- கணையாழி  (ஜூலை – 1994

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நானும் ஒரு ஆசிரியர் என்ற முறையில் கூறுகின்றேன் அய்யா, சிறுகதையானாலும், மனம் கணக்கிறது

கருத்துரையிடுக