மரணதண்டனைகளுக்கு
எதிரான போராட்டங்கள் விசாலமடையட்டும்
- மு.சிவகுருநாதன்
மும்பைப் படுகொலைக் குற்றவாளி அஜ்மல் கசாப்பிற்கு
விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிரான கருணை மனுவை நிராகரிக்க குடியரசுத்தலைவருக்கு மத்திய
உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று குடியரசுத்தலைவர்
பிரணாப் முகர்ஜி விரைவில் அஜ்மல் கசாப்பின் கருணைமனுவை நிராகரிக்கக்கூடும்.
நூற்றுக்கணக்கான நாடுகளில்
ஒழிக்கப்பட்ட மரணதண்டனை இந்தியாவில் மட்டும் 21 ஆம் நூற்றாண்டிலும் நீடிப்பது அநியாயமானது.
இதுபோன்ற கற்கால தண்டனைகளால் நாட்டில் குற்றங்கள் குறையும் என்ற நம்பிக்கை மக்களின்
பொதுப்புத்தியில் விதைக்கப்பட்டுள்ளது மிகவும் அபாயகரமான விடயம். கண்ணுக்கு கண், பல்லுக்குப்
பல் என்கிற ஹெமுராபி கால சட்டங்களால் உயிர்க்கொலையைத் தவிர வேறேதுவும் நடந்துவிடப்போவதில்லை.
தமிழ்நாட்டிலும் இந்திய
அளவிலும் மரணதண்டனைக்கு எதிரான இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் அவற்றிற்கிடையே கருத்தொற்றுமை
இல்லை என்றெ எண்ணவேண்டியுள்ளது. ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு இன்று
தூக்குத் தண்டனைக் கைதியாக உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு ஆதரவாகக்
குரலெழுப்புவர்களில் பலர் நாடாளுமன்றத் தாக்குதலில்
குற்றஞ்சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடும் அப்சல் குரு பற்றி வாய்திறப்பதில்லை.
தருமபுரி பேருந்து
எரிப்பு சம்பவத்தில் தூக்குத் தண்டனை பெற்றிருக்கும் மூன்று அ.இ.அ.தி.மு.க. காரர்களைப்
பற்றி அந்த கட்சியே எதுவும் பேசுவதாகத் தெரியவில்லை. மரணதண்டைனைக்கு எதிரான இயக்கங்களில்
இந்த பாரபட்சமான போக்கு இன்னும் நீடிப்பது வருந்தற்குரியது. மரணதண்டனைக் குற்றங்களில்
மதம், சாதி, மொழி, இனம், நாடு என பேதம் பார்ப்பது மரணதண்டனையைவிட கொடூரமானது.
புத்தர், மாகாவீரர்,
அசோகர், காந்தி ஆகியோர் பிறந்த மண்ணில் மரணதண்டனை என்னும் கொலை நிகழ்வு அரங்கேறுவதை
அனுமதிப்பது அவர்களுக்கு நாம் செய்யும் அநீதியாகும்.
மரணதண்டனை என்ற பெயரில்
நீதிமன்றங்கள் செய்யும் கொலைகளும் என்கவுண்டர் என்ற பெயரில் ராணுவம், காவல்துறை செய்யும்
போலி மோதல் படுகொலைகளும் அழித்தொழிப்பு என்ற பெயரில் மாவோஸ்ட், நக்சலைட், போராளிக்குழுக்கள்
என்று எவர் செய்யும் கொலைகளும் கண்டிக்கப்படவேண்டியவை மட்டுமல்ல; உடனே தடுத்து நிறுத்தப்படவேண்டியதுமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக