திருவாரூர் – கோட்டூர் – கீழ மருதூர் – மூன்று ஆணவக்கொலைகள் உண்மை அறியும் குழு அறிக்கை
திருத்துறைப்பூண்டி, 24.12.2014.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழ மருதூர்
கிராமம் வடக்குத் தெரு பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ந.கணேசன் மகள் மாற்றுத்
திறனாளியான அமிர்தவள்ளி (30), அவரைத் திருமணம் செய்துகொண்ட அதே ஊர்
தெற்குத் தெரு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனியப்பன் (40),
அவர்களது 38 நாள் பச்சிளம் ஆண் குழந்தை ஆகிய மூவரும் 11.12.2014 அன்று
மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து, மனித உரிமை
ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த
அன்றும் 20.12.2014 அன்றும் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது.
இதில் பங்கு பெற்றோர்:
01. மு.சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.
02. தய்.கந்தசாமி, வழக்குரைஞர், தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப்பூண்டி.
03. ச. பாண்டியன், சமூக ஆர்வலர், திருத்துறைப்பூண்டி.
04. கே. ஹரிஷ் குமார், சமூக ஆர்வலர், திருத்துறைப்பூண்டி.
05. செ.மணிமாறன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.
எங்கள் குழுவினர் கொலையுண்ட அமிர்தவள்ளியின் தாய் திருமதி ரோஜினாவதி (60),
தந்தை திரு ந.கணேசன் (70), சகோதரர் திரு பசுபதி, அவரது மனைவி திருமதி
தேவகி (வார்டு கவுன்சிலர் மற்றும் தி.மு.க. உறுப்பினர்), அவரது
குடும்பத்தினர்-ஊர்மக்கள் அவர்களது இல்லத்திற்கு ஆறுதல் சொல்லவந்த தி.மு.க.
தலைமைக் கழகப் பேச்சாளர் திரு சோம.இளங்கோவன் உள்ளிட்ட அனைவரையும்
சந்தித்தது.
உண்மையறியும் குழு |
கொலையுண்ட பழனியப்பனின் குடும்பத்தில்
திருமதி கிருஷ்ணவேணி க/பெ. சிவசுப்பிரமணியன், திருமதி திலகா க/பெ.
ராமகிருஷ்ணன், கொலை வழக்கில் கைதாகியுள்ள மேலப்பனையூர் துரைராஜின் சகோதரி
திருமதி கமலா, பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் சேவை மையப் பொறுப்பாளர்
மேலப்பனையூர் திருமதி சா. ரஞ்சிதமேரி ஆகியோரையும் எங்கள் குழு சந்தித்தது.
இடையூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு கே.முருகன், கோட்டூர் காவல் நிலைய உதவி
ஆய்வாளர் திருமதி எஸ்.சுப்ரியா, திருத்துறைப்பூண்டி காவல்துறை துணைக்
கண்காணிப்பாளர் திரு ஆர்.அப்பாசாமி, கோட்டூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர்
திரு ஞானவேல், 60 பனையூர் ஊ.ம.தலைவர் திருமதி தமிழ்ச்செல்வி (தி.மு.க.),
ஆதிச்சபுரம் ஊ.ம.தலைவர் திரு சிவஞானம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),
தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி ரூபாவதி குமார்,
திரு கல்யாணசுந்தரம் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களைக்
கேட்டறிந்தது.
நிகழ்வுகளும் பார்வைகளும்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ மருதூர்
கிராமம் (60 பனையூர் ஊராட்சி) கோட்டூருக்கு மேற்குபுறமும்
ஆதிச்சபுரத்திற்கு தெற்கேயும் அமைந்துள்ள ஓர் சிறு கிராமமாகும்.
இக்கிராமத்தில் தலித்கள், பிள்ளைமார்கள், ஓர் வன்னியர் குடும்பம்
(கொலையுண்ட பழனியப்பன் மற்றும் அவருடைய சகோதரர்கள் குடும்பம்) மற்றும் மேல
மருதூரில் 10 வன்னியர் குடும்பங்கள் பெரிய வேறுபாடுகளின்றி திராவிட,
கம்யூனிஸ்ட் இயக்கங்களில் கலந்திருந்தாலும் ஊர் அடிப்படையில் மிகவும்
ஒற்றுமையாக இருக்கின்றனர். கொலை நடந்த அன்று (11.12.2014) பழனியப்பனின்
சடலத்தை வாங்க யாருமில்லாத நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒன்றியக்
கவுன்சிலர் திருமதி ரூபாவதி குமார் (தி.மு.க.) அச்சடலத்தைப் பெற்று
ஊர்மக்களுடன் சேர்ந்து அடக்கம் செய்த நிகழ்வை எங்கள் குழு நேரில் கண்டது.
கொலை செய்யப்பட்ட அமிர்தவள்ளி (30) வலதுகால் ஊனமுற்ற பள்ளர் இன
மாற்றுத்திறனாளிப் பெண். பத்தாம்வகுப்பு வரையில் படித்தவர்; செவிலியர்ப்
பயிற்சியும் பெற்றவர். ஆதிச்சபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
தற்காலிகச் செவியராக பணிசெய்த இவர் 8 மாதங்களுக்கு முன்பு
காணமற்போயுள்ளார். அவரது செல் எண் பயன்பாட்டில் இல்லாததாலும் அவரிடமிருந்து
எந்தத தகவலும் இல்லாததாலும் தொடர்ந்து தேடுதல் முயற்சி செய்துள்ளனர். சில
நாட்களுக்குப் பிறகு பழனியப்பன் குடும்பத்தினர் பழனியப்பனே அமிர்தவள்ளியை
அழைத்துச் சென்றிருப்பதாக சொல்லியுள்ளனர். காவல்துறையில் புகாரளிக்க
முயன்றபோது நமக்குத்தான் கேவலம்; அதனால் வேண்டாம் என அமிர்தவள்ளி தரப்பைத்
தடுத்துள்ளனர்.
தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் திரு சோம.இளங்கோவன், பச்சிளம்
குழந்தையைக் கொல்ல யாருக்கு மனம் வரும்? இக்கொலைகள் மிகவும் கொடூரமானவை,
என்றார். கோட்டூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு ஞானவேல் அவர்களைத்
தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, இரு குடும்பங்களும் எங்கள் கட்சியைச்
சேர்ந்தவை. கட்சித் தேர்தல் பணியில் இருந்ததால் சென்று பார்க்க இயலவில்லை.
முரசொலியில் அறிக்கை வெளியிட்டுள்ளேன். இக்கொலைக் குற்றவாளிகள் யாராக
இருந்தாலும் மன்னிக்கமுடியாது; கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
என்றார்.
பழனியப்பன் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவருக்கு
விஜயா என்கிற மனைவி 2 ஆண் குழந்தைகள் ஓர் பெண் குழந்தை ஆகியோருடன் தனியே
வசிப்பதாகக் கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே கணவன்-மனைவி சண்டையில்
பிரிந்து சென்றதாகவும் அவர்கள் எங்களுடன் தொடர்பில் இல்லை என்று
பழனியப்பனின் தம்பி மனைவி திலகா க/பெ. ராமகிருஷ்ணன் எங்களிடம் கூறினார்.
பழனியப்பனின் இரு சகோதரர்களுக்கும் இரண்டு ஆண் குழந்தைகள். பள்ளிகளில்
படிக்கும் அவர்கள் இந்தக் கொலைகளுக்குப் பிறகு தேர்வுக்குக்கூட பள்ளி
செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். கொலை என்பது தனிப்பட்ட நபர்களை
மட்டும் பாதிக்கும் ஒன்றாக இருக்கமுடியாது என்பதற்கு இது ஓர் சான்று.
அமிர்தவள்ளியின் தாயார் ரோஜினாவதி, “நெறய பொம்புளங்கள வச்சிருந்தான்னு
சொல்றீங்களே, அவங்கள விட்டுட்டு என் நொண்டிப் பொண்ண கொன்னுட்டிங்க
பாவிங்களே”, என்று எங்களிடம் அழுது புலம்பினார்.
பழனியப்பனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக ஊடகங்களால் ஓர் கருத்து
பரப்பப்படுகிறது. ஆனால் எவரிடமும் இதற்கான ஆதாரங்கள் இல்லை. இதற்கு முன்பு
ஒரு திருமணம் மட்டும் நடைபெற்றிருப்பதுதான் உறுதியாகிறது. இம்மாதிரியான
அறவியல் மதிப்பீடுகள் மூலம் நடைபெற்ற மூன்று கொடூரக் கொலைகளை
நியாயப்படுத்தும் போக்கு நிலவுவதை எங்கள் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
பழனியப்பன் குடும்பத்து நிலங்களை அமிர்தவள்ளியின் குடும்பம் குத்தகை
சாகுபடி செய்துவந்துள்ளது. பழனியப்பனின் சகோதரர் ரா.சிவசுப்பிரமணியன்
வெளிநாட்டிற்கு ஆளனுப்பும் முகவராக செயல்பட்டு வந்துள்ளார்.
அமிர்தவள்ளியின் அக்காவை வெளிநாடு அனுப்பியவகையில் அவர்கள் அளித்த பணம்
போதவில்லையென்று இவர்களுக்குத் தெரியாமல் குத்தகை நிலங்களை வேறு ஒருவருக்கு
மாற்றி அளித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கசப்புணர்வில் அமிர்தவள்ளி
குடும்பத்தினர் பழனியப்பன் வீட்டுக்கு வேலைகளுக்குச் செல்வதில்லை.
அமிர்தவள்ளியின் செல் எண்ணை மேலப்பனையூர் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்
செவை மையம் மூலம் பெற்று சமாதானமாகப் பேசி ஊருக்கு வரச்செய்துப் படுகொலை
செய்திருக்கலாம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் அய்யம் தெரிவித்தனர். சேவை மையப்
பொறுப்பாளர் திருமதி சா. ரஞ்சிதமேரி கடந்த 8 மாதங்களாக அந்தப்பெண் இங்கு
வரவுமில்லை, தொடர்பு கொள்ளவுமில்லை என்றார்.
11.12.2014
அன்று முதலில் பழனியப்பன் சடலம் கிடைத்தது. பிறகுதான் அமிர்தவள்ளி சடலம்
கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விரைவு முதல்
தகவல் அறிக்கையில் (எண்: 216/2014, நாள்: 11.12.2014) இ.த.ச. பிரிவு 302
மட்டும் போடப்பட்டுள்ளது. இதில் காவல்துறை மிகவும் மெத்தனமாக
நடந்துகொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. 60 பனையூர் ஊ.ம.தலைவர் திருமதி
தமிழ்ச்செல்வி (தி.மு.க.), ஆதிச்சபுரம் ஊ.ம.தலைவர் திரு சிவஞானம் (இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி), தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி
ரூபாவதி குமார் உள்ளிட்ட அப்பகுதி அனைத்துகட்சி ஊர்ப் பொதுமக்கள் திரண்டு
சாலைமறியல் செய்தபிறகு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்
கொடுமைத் தடுப்புச் சட்டம் போடுவதாக உறுதியளித்திருக்கிறார்கள்.
கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி எஸ்.சுப்ரியாவைத்
தொடர்புகொண்டு கேட்டபோது, முதலில் இ.த.ச. பிரிவு 302 மட்டும்
போடப்பட்டதாகவும் பிறகு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்
கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு (PCR ACT) சேர்க்கப்பட்டிருக்கிறது
என்றார். மேலும், இது அமிர்தவள்ளி கொலைக்கு மட்டும் பொருந்தும்.
நீதிமன்றத்தில் இவை இணைத்துத் தாக்கல் செய்யப்படும் என்றார். முதல் தகவல்
அறிக்கை நகலைக் கேட்டபோது, இது மிகவும் 'சென்சிட்டிவ்' ஆன கேஸ், எனவே முதல்
தகவல் அறிக்கை நகலைத் தரமுடியாது என மறுத்துவிட்டார். இந்த முதல் தகவல்
அறிக்கையுடன் (எண்: 216/2014, நாள்: 11.12.2014) குழந்தைக் கொலையை இணைத்து
இ.த.ச. பிரிவு 305 (V) (ii) போடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
உள்ளூர் அளவில் அனைத்துகட்சியைச் சேர்ந்த பொதுமக்களும் ஒருங்கிணைந்து
போராடினாலும் ஒன்றியம், வட்டம், மாவட்டம் போன்ற உயர்மட்ட கட்சி அமைப்புகள்
இக்கொலைகளைக் கண்டிக்காத மவுன சாட்சியாக இருக்கும் நிலையை எங்கள் குழு
பதிவு செய்கிறது.
பழனியப்பன் – அமிர்தவள்ளிக்கு
ஆண்குழந்தை பிறந்ததால் சொத்தில் பங்கு கேட்பார்கள் என்ற கோணத்தில் கொலை
செய்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. பழனியப்பனுக்கு ஏற்கனவே முதல்
மனைவி மூலமாக 3 குழந்தை இருக்கும்போது சொத்திற்காக இக்குழந்தை உள்ளிட்ட
அனைவரையும் கொன்றதாக சொல்லும் வாதம் ஏற்புடையதாக இல்லை. இக்கொலையில்
சாதியம் மட்டும் செயல்பட்டிருப்பதையும் இது முற்றிலும் சாதி ஆணவக்கொலைகள்
என்பதை எங்கள் குழு உறுதி செய்கிறது.
மேலும்
இக்கொலைகளில் தொடர்புடைய பழனியப்பனின் சகோதரர்கள் ரா.சிவசுப்பிரமணியன்
(45), ரா.ராமகிருஷ்ணன் (43), உறவினர் மகேந்திரன் (25) மற்றும் இவர்களது
நண்பர் மேலப்பனையூர் துரைராஜ் (50) ஆகிய நால்வர் காவல்துறையால் கைது
செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மேலப்பனையூர் துரைராஜ் யாதவர் சமூகத்தைச்
சேர்ந்தவர். இதன்மூலம் இது வெறும் சொத்து-குடும்பப் பிரச்சினை என்கிற வாதம்
அடிபட்டுப்போகிறது.
எமது பரிந்துரைகள்:
- தமிழகத்தில் இம்மாதிரியான சாதி ஆணவக்கொலைகள் அடிக்கடி நிகழ்வதைத் தடுக்க இது தொடர்பான சிறப்புச்சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவரவேண்டும்.
- தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன் கொடுமைத் தடுப்புச் சட்டப்படியும் கொலை செய்யப்பட்டவர் மாற்றுத்திறனாளி மற்றும் பச்சிளம் ஆண் குழந்தை ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு அமிர்தவள்ளியின் பெற்றோருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்.
- இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்ய உத்தரவிடவேண்டும். இக்கொலை வழக்கை மீண்டும் விசாரித்து பின்னணியில் உள்ள அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மிகுந்த மெத்தனமாகவும் கவனக்குறைவுடனும் இவ்வழக்கைக் கையாண்ட காவல்துறை அதிகாரிகள் மீது ஆறுமுக சேர்வை எதிர் தமிழ்நாடு அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி (2011) நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
- தாழ்த்தப்பட்டோர் மீது இத்தகைய வன்கொடுமைகள் நிகழ்த்தப்படும்போது இயக்கங்கள் உட்சாதி மனநிலையோடு பிரச்சினையை அணுகுவது கவலையளிக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் சாதியத்தை ஒழிக்க முன்வரவேண்டும். சாதியொழிப்பை கட்சித் தொண்டர்களுக்கு முன்நிபந்தனையாக்க வேண்டும்.
- இடதுசாரி மற்றும் திராவிட இயக்கங்கள் தவிர இந்தப்பகுதியில் சொல்லிக்கொள்ளும்படியான இயக்கங்கள் இருந்தும் இந்த சாதி ஆணவக்கொலைகளைக் கண்டுகொள்ளாத நிலையில் புதிய தமிழகம் கட்சி அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் 27.12.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது சற்று ஆறுதலளிக்கிறது.
- அமைதி காத்த இப்பகுதி பொதுமக்களையும் அறவழியிலான போராட்டங்கள் மூலம் காவல்துறையை நடவடிக்கை எடுக்கத் துணை புரிந்த அனைத்து தரப்பினரையும் எங்கள் குழு பாராட்டுகிறது.
தொடர்புக்கு:
தய்.கந்தசாமி, வழக்குரைஞர்,
27/7, ஏ.எஸ்.என். காம்ப்ளெக்ஸ்,
திருத்துறைப்பூண்டி- 614 713.
செல்: +91 9486912869
மு.சிவகுருநாதன்
+91 9842802010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக