போகி விடுமுறை மறுப்பு பற்றி… மு.சிவகுருநாதன்
2001- 2006 ஆட்சி காலத்தில் ஜெ,ஜெயலலிதாவின் அ.இ.அதி.மு.க.
அரசு சிறுபான்மையினர் மீது தொடுத்த தாக்குதல்கள் பல. மதமாற்றத் தடை சட்டம், முகரம்,
போகி உள்ளிட்ட பண்டிகைகளுக்கான விடுமுறை ரத்து போன்றவை அவற்றுள் சில.
2006 – 2011 இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்ட அரசாணையை
ரத்து செய்து மீண்டும் விடுமுறை வழங்கியது. மேலும் தை மாதம் முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாக
அறிவித்து அதை மக்கள் கொண்டாட வேண்டுமென ஆணையிட்டது. மேலும் சமத்துவப் பொங்கலிடவும்
ஆணையிடப்பட்டது.
2011 – 2016 க்கு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெ,ஜெயலலிதாவின்
அ.இ.அதி.மு.க. அரசு இந்த மூன்றாண்டு காலம் இவ்விடுமுறை விடப்படுவது குறித்து ஒன்றும்
கண்டுகொள்ளவில்லை. எனவே 2012, 2013, 2014 ஆகிய மூன்றாண்டுகள் முகரம், போகி உள்ளிட்ட
பண்டிகைகளுக்கு விடுமுறை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. மூன்றாண்டுத் தூக்கத்திற்குப்
பிறகு இவ்வாண்டு (2015) விழித்துக் கொண்ட தமிழக
அரசு போகி விடுமுறை ரத்து செய்யப்பட்டு பள்ளிகள், அரசு அலுவலகங்கள் இயங்கவேண்டுமென
அறிவித்துள்ளது.
முதலில் போகி தமிழர் பண்டிகையே இல்லை. தமிழ் அல்லது
திராவிடக் கடவுள் முருகனுக்கு பின்னதாக அண்ணன் பிள்ளையார், தாய், தந்தை வந்ததைபோல போகியும்
பொங்கலுக்கு முன்னதாக வந்த கேடு. இன்னும் ஒன்று: எதையும் எரிப்பவன் தமிழனாக இருக்கமுடியாது.
பிணம், டயர், குப்பை எதுவானாலும். கூடவே தீயை வணங்குவதையும் சேர்த்துக் கொள்க. இவற்றின்
விடுமுறையை ஜெ.ஜெயலலிதாவிற்குப் பதிலாக தமிழினத்தலைவர் மு.கருணாநிதியே ரத்து செய்திருக்க
வேண்டும். ஜெ.ஜெயலலிதா செய்திருப்பது ஓர் முரண்நகை. சரி அது போகட்டும்.
அரசு அலுவலகங்கள் இயங்குவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால்
பள்ளிகள் இயங்குவது மாணவர்களின் வருகையைப் பொருத்தது. மாணவர்கள் வருகைக் குறைவாக உள்ளபோது
பள்ளி இயங்குவது ஜனநாயகமல்ல. இன்று மக்களின் கொண்டாட்ட மனநிலையை மாற்றமுடியாது. போகிக்கு
மாற்றையும் நம்மால் வழங்க இயலாது. வரையறுக்கப்பட்ட இதர விடுப்புப் பட்டியலில் போகி
இருக்கிறதே என்று கூட நீங்கள் கேட்கலாம். இவ்விடுப்பை ஒரே சமயத்தில் பலர் எடுக்கமுடியாது.
இறுதியாக, பண்டிகைகளை இன்று கொண்டாடு அல்லது இவ்வாறு
கொண்டாடு என அரசாணைகள் கட்டுப்படுத்துவது பாசிசத்தின் உச்சம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக