திங்கள், ஜூன் 29, 2015

திருநெல்வேலி கான்சாபுரம் கிட்டப்பா என்கவுன்டர் கொலை உண்மை அறியும் குழு அறிக்கை

                             உண்மை அறியும் குழு அறிக்கை

 
    திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பத்தமடை முன்னீர்ப்பள்ளத்திற்கு அடுத்துள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த சுப்புக்குட்டித் தேவர் – அம்பிகாவதி ஆகியோரின் மகன் கிட்டப்பா (34). இவர் திருநெல்வேலி சுத்தமல்லிக்கு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிர்புறம் உள்ள தற்போது கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கும் நாசர் என்பவரின் வீட்டில் வைத்து என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டார் என்கிற செய்தி மிக விரிவாக அனைத்து நாளிதழ்களிலும், புலனாய்வு இதழ்களிலும் வெளி வந்தது.

  தேடப்பட்டு வந்த குற்றவாளியான கிட்டப்பாவைப் பிடிக்க அமைக்கப்பட்டிருந்த காவல்துறை சிறப்புக் குழுவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், காவலர்கள் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் முதலானோருக்கு மேலே குறிப்பிட்டுள்ள வீட்டில் கிட்டப்பாவும் அவரது சகாக்கள் நரசிங்கநல்லூர் லெஃப்ட் முருகன், ராமையன்பட்டி மணிகண்டன் ஆகியோருடன் பதுங்கி இருப்பதாகச் செய்தி கிடைத்து அவர்களைப் பிடிக்கச் சென்றபோது நடந்த மோதலில் அவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அது மோதலில் நடந்த கொலை அல்ல என கிட்டப்பாவின் உறவினர்கள் கூறி,

   கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை உடலை வாங்க மறுத்ததோடு பேருந்துகள் மீது கல்வீசிப் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.

இது தொடர்பான உண்மைகளை அறிய மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பின்’ (National, Confederation of Human Rights Organisation -NCHRO) சார்பாகக் கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது:
  1. அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பு (NCHRO),
  2. கோ.சுகுமாரன்,  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (Federation for People’s Rights- FPR), புதுச்சேரி,
  3. கு.பழனிச்சாமி, மனித உரிமை ஆர்வலர், மதுரை,
  4. எம்.ஆரிஃப் பாட்சா, வழக்குரைஞர், திருநெல்வேலி,
  5. என்.இலியாஸ், மாவட்டச் செயலர், PFI, திருநெல்வேலி,
  6. 6. கே.அப்துல் பாரிக், சட்டக் கல்லூரி மாணவர், மதுரை,
  7. அ.பீட்டர், இனப் படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு, திருநெல்வேலி,
  8. பக்கீர் முகமது, PFI, திருநெல்வேலி.

    இக்குழுவினர் நேற்றும் இன்றும் கான்சாபுரத்தில் உள்ள கிட்டப்பாவின் மனைவி இசக்கியம்மாள் (23), தம்பி கருணாநிதி (30), அம்மா அம்பிகாவதி (60), மாமியார் துரைச்சி (45) ஆகியோரையும், திருநெல்வேலி ராஜீவ்காந்தி இரத்ததான சங்கத்தைச் சேர்ந்தவரும் தகவல் உரிமைச் சட்டப் போராளியுமான வழக்குரைஞர் பிரம்மநாயகம், வழக்குரைஞர் காந்திமதி நாதன் ஆகியோரையும், ‘மோதல்’ நடந்தபோது கிட்டப்பா குழுவினரின் தாக்குதலால் காயமடைந்ததாகக் கூறி இன்னும் ஹைகிரவுன்ட் மருத்துவமனையில் உள்ள  உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், காவலர்கள் சரவணசுந்தர், கிருஷ்ணசாமி ஆகியோரையும் சந்தித்தனர். அப்போது பணியில் இருந்த செவிலியர்களிடம் மூவரின் உடல் நிலை குறித்தும் அறிந்து கொண்டனர். சித்தமல்லி காவல் நிலையத்திற்குச் சென்று முதல் தகவல் அறிக்கை விவரங்களைத் தெரிந்து கொண்டதோடு, கிட்டப்பா தரப்பினரால் பேட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வாகனத்தையும் பார்வையிட்டனர். பின் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் வீட்டுக்குச் சென்று கிட்டப்பா சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தைப் பார்வையிட்டதோடு அவ்வீட்டைக் கட்டிக் கொண்டுள்ள நாசர் (த/பெ ஷேக் பாசல், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், அச்சன்புதூர்) மற்றும் அப்பகுதியில் அந்த மோதல்’ நடந்தபோது இருந்த மக்கள் சிலர் ஆகியோரையும் சந்தித்தனர். டி.ஐ.ஜி முருகன் அவர்கள் விரிவாக நாங்கள் கேட்ட கேள்விகளுக்குத் தொலைபேசியில் விளக்கமளித்தார்.
காவல்துறை கூறுவது

   சென்ற ஜூன் 13 அன்று மாலை,  சுத்தமல்லி காவல்நிலையத்திற்கு அருகிலுள்ள  K.M.A நகரில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த  கதவில்லாத வீடொன்றில் தேடப்பட்ட கிட்டப்பா தன் சகாக்களுடன் மறைந்திருப்பதாகக் காவல் துறைக்குச் செய்தி கிடைத்தது. உடன் சிவராமகிருஷ்ணன் தலைமையில் ஷண்முகவேல் (SSI), தலைமைக் காவலர் தங்கம், முருகன் (ARPC), மற்றும் காவலர்கள் கருப்புசாமி, முருகேசன், ஆல்வின் பாபு, ஓட்டுநர் சரவணசுந்தர் ஆகியோர் வாகனமொன்றில் அங்கு விரைந்து சென்றனர். வீட்டினுள் நுழைந்த காவலர்கள் சரவணசுந்தர் மற்றும் கிருஷ்ணசாமி இருவரையும்  கிட்டப்பா அரிவாளால் வெட்டியவுடன் அவர்கள் ரத்தக் காயங்களுடன் வெளியே வந்தனர். உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்னன் உள்ளே நுழைந்தபோது அவரையும் கிட்டப்பா வெட்டினார். உயிரைக்காத்துக் கொள்ள சிவராமகிருஷ்ணன் கிட்டப்பாவைச் சுட நேர்ந்தது. தலையில் குண்டடிபட்டு அவர் செத்தார். பக்கத்து அறையில் பதுங்கியிருந்த முருகன், மணிகண்டன் மற்றும் ஒருவர் பெட்ரோல் குண்டு ஒன்றைப் போலீஸ் வாகனத்தில் வீசித் தப்பி ஓட முயற்சித்தபோது முருகன் மணிகண்டன் ஆகிய இருவர் மட்டும் அகப்பட்டுக் கொண்டனர்.. இப்போது அவர்கள் இருவரும் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    [சித்தமல்லி காவல்நிலயம் மு.த.அ. 119/2015, 13- 06- 2015, குற்றப் பிரிவுகள் இ.த.ச 332,176, 307, TN PD DL Act 4, வெடிமருந்துப் பொருள் சட்டம் 415, குற்ற நடைமுறைச் சட்டம் 176, (1 A) (c)]

கிட்டப்பாவின் உறவினர்கள் சொல்வது

     பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் சிறையிலிருந்து விடுதலை ஆன கிட்டப்பா வீட்டில்தான் இருந்தார். திருந்தி வாழும் நோக்குடன் விவசாய வேலைகளையும் செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் கோடகநல்லூரில் உள்ள தன் மாமியாரின் வீட்டில் மனைவி குழந்தைகளுடன் இருந்துள்ளார். ஒரு இரு சக்கர வாகனத்தில் சாதாரண உடையில் வந்த இருவர் விசாரணை ஒன்றுக்காக ஒரு அரை மணி நேரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அதே இரு சக்கர வாகனத்தில் கிட்டப்பாவையும் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். நஞ்ஞாரஞ்சேரல் என்னும் இடம் வந்தவுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் அவர் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.. அதன் பின் இரவு 7 மணி அளவில் தொலைகாட்சிச் செய்திகள் மூலமே கிட்டப்பா கொல்லப்பட்டதை மனைவி, மாமியார், அம்மா ஆகியோர் அறிந்துள்ளனர். அதற்குச் சற்று முன்னதாக ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் என்பவர் சொன்னதாக கிட்டப்பாவின் தம்பி கருணாநிதியிடம் அவரது மாமா உறவுள்ள ஆதிசுப்பிரமணியன் என்பவர் கிட்டப்பா கொல்லப்பட்ட தகவலைக்  கூறியுள்ளார். போலீஸ் அழைத்துச் செல்லுமுன் மாலை 4 மணி வாக்கில் கிட்டப்பா கருணாநிதியிடம் செல்போனில் பேசியுள்ளார்.

‘மோதல்’ நடந்த இடத்தில் உள்ளோர் சொல்வது:

      மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாசரின் வீட்டில் அன்று பூச்சு வேலை நடந்துகொண்டிருந்தது. அருகில் வசிக்கும் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்று ஊரில் இல்லை. கிட்டப்பா யார் என்று அவர்களுக்குத் தெரியாது. இதற்கு முன் அவர் இங்கு வந்ததோ ஒளிந்திருந்ததோ கிடையாது,

     13 அன்று மாலை சுமார் 6 மணி அளவில் டெம்போ டிராவலரில் வந்து நாசரின் வீட்டில் இறங்கிய சாதாரண உடையில் இருந்த சுமார் 10 அல்லது 12 காவலர்கள்  கத்திக்கொண்டே திபு திபுவென கும்பலாகச் சிலருடன் நாசரின் வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அஞ்சி ஓடியுள்ளனர். வாகனத்தில் வந்து இறங்கியவர்களில் இரண்டு மூன்று பேர் சாரம் (கைலி) அணிந்திருந்தனர். சில நிமிடங்களில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் இருவர் கைகளைக் கட்டி இழுத்து வரப்பட்டனர், வாகனத்தில் வந்து இறங்கிய காவலர்களில் ஒருவர் பெட்ரோலை எடுத்து வாகனத்தில் ஊற்றிப் பின் தீ வைத்துள்ளார். தீ பரவு முன் அவர்களே அதை அணைத்துவிட்டு கிட்டுவின் உடலையும், கைகள் கட்டப்பட்ட இருவரையும் வாகனத்தில் ஏற்றி மற்ற காவலர்களும் சென்றனர்.

    திருநெல்வேலியில் ஆர்.டி.ஐ போராளியாக அனைவரும் அறிந்துள்ள வழக்குரைஞர் பிரம்மநாயகம் இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது மோதல் சாவு அல்ல. திட்டமிட்ட படுகொலை என்கிறார் அவர். முன்னதாக கிட்டப்பாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து ஆய்வாளர் சாகுல் தலைமையில் சென்ற சிறப்புக் காவல்குழு கைது செய்ததாகவும் அப்போது சுமார் 450 பவுன் நகைகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும், அதை காவல்துறை கைப்பற்றிய கணக்கில் காட்டவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு நகைகள் கைப்பற்றப்பட்டது குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரம்மநாயகம் விவரங்களைக் கேட்டபோது ஆய்வாளர் சாகுல் சிறிதுகாலம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுப் பின் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்..

எங்கள் பார்வையில்

1.சுட்டுக்கொல்லப்பட்ட கிட்டப்பா கொலைக் குற்றங்கள் உட்படப் பல கிரிமினல் வழக்குகளில் உள்ளவர். தனது தந்தையின் மரணத்திற்குப் பின் சென்ற பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் மதுரை சிறையிலிருந்து விடுதலையான அவர் காவல்துறைக்குப் பயந்து திரிந்தபோதும் அப்படி ஒன்றும் அவர் தலைமறைவாக இல்லை. வெளிப்படையாக விவசாய வேலைகளைச் செய்து கொண்டு இருந்துள்ளார். கொலை வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் சென்ற ஆண்டு அவரை விடுதலை செய்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பாணையை அப்போது பத்தமடை சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த நங்கையார் என்பவர் சென்ற மாதம் கோடகநல்லூரில் கிட்டப்பா இருந்தபோது சந்தித்து வழங்கியுள்ளார்.

2. சுத்தமல்லி K.M.A நகர் என்பது. காவல் நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் உள்ள  ஒரு குடியிருப்புப் பகுதி. அங்கு கட்டப்பட்டுக் கொண்டுள்ள ஒரு கதவு இல்லாத வீட்டில், கொத்தனார்கள் செய்து கொண்டிருந்த கட்டுமானப் பணிகளுக்கு மத்தியில் கிட்டப்பா தன் சகாக்கள் மூவரோடு போலீசுக்குப் பயந்து. ஒளிந்துகொண்டிருந்தார் என்பது முற்றிலும் நம்ப முடியாத ஒன்று. அப்படி அவர் அங்கு வந்து போனதாக வீட்டுக்காரரோ இல்லை யாருமோ சொல்லவில்லை. கிட்டப்பாவையும் இதர இருவரையும் சிவராமகிருஷ்ணன் தலைமையில் வந்த காவல் படையினர் அவர்களது டெம்போ டிராவெலர் வாகனத்திலேயே கொண்டு வந்திருக்க வேண்டும்.

3. தாம் வந்திறங்கிய  டெம்போ டிராவலரில் போலீஸ்காரர்களே பெட்ரோல் ஊற்றி எரித்துப் பின் அணைத்ததை நேரடியாகப் பார்த்தவர்கள் எங்களிடம் சாட்சியங்கள் பகர்ந்துள்ளனர். அந்த வாகனத்தை (TN 72 G 0855) நாங்கள் பரிசீலித்தபோது குண்டு வீசப்பட்டுத் தாக்கப்பட்டதற்கான எந்தத் தடயங்களும் அதில் இல்லை. குண்டு வீசித் தாக்கி இருந்தால் கண்ணாடிக் கதவுகள் உடைதிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் உடையவில்லை.

4. மருத்துவமனையில் தற்போது உள்ள சிவராமகிருஷ்ணன் மற்றும் இரு காவலர்களையும் சந்தித்து அவர்களின் காயங்களைப் பரிசீலித்தபோது அவை மிகச் சிறிய காயங்கள் என்பதும், பெரிய அரிவாளால் வெட்டப்பட்டவை அல்ல என்பதும் தெரிகிறது. மிகவும் கவனமாக அவர்களே அதிகம் ஆழமில்லாமல் வெட்டிக் கொண்ட காயங்களாகவே அவை உள்ளன. இது தொடர்பான நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்தால் இவை தாக்குதல் நோக்குடன் கூடிய அரிவாள் வெட்டுக் காயங்கள் இல்லை என்பது வெளிப்படும். இப்போது அந்தச் சிறிய காயங்களும் குணமாகி உரிந்து தழும்புகளாகி விட்டன. அவர்கள் பூரண நலத்துடன் உள்ளனர் எனவும் வேறு யாராக இருந்தாலும் அப்போதே அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்து அனுப்பப் பட்டிருப்பார்கள் எனவும் இவர்களை 21 நாட்கள் வரை வைத்திருக்குமாறு காவல்துறை கூறியுள்ளதால் அவர்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் சொல்லப்பட்டது.

5. கிட்டப்பாவுடன் இருந்த மூவரில் ஒருவர் தப்பி ஓடி விட்டதாகக் காவல்துறைத் தரப்பில் சொல்லப்படுவதும் உண்மையாகத் தெரியவில்லை. ஒன்று அப்படி யாரும் இல்லாமலிருக்க வேண்டும் அல்லது அந்த நபரைக் காவல்துறையினர் ஏதோ காரணங்களுக்காகச் சட்ட விரோதக் காவலில் வைத்திருக்க வேண்டும்.

6. எங்கள் அய்யங்களை நாங்கள் டி.ஐ.ஜி முருகன் அவர்களிடம் தெரிவித்தபோது அவர் இப்போது மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடந்துகொண்டிருப்பதால் எதுவும் பேச இயலாது என்றார். என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் கொடுத்துள்ள நெறிமுறைகள் முழுமையாகக் கடைபிடிக்கப் படுவதாகவும், இந்த வழக்கு விசாரணையைத் தாங்கள் மேற்கொள்ளாமல் சி.பி.சி.ஐ.டி யிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், விசாரணையில் கிட்டப்பா வீட்டார் கொடுத்துள்ள புகார்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கூறினார்.

எமது கோரிக்கைகள் 
  1. இது மோதல் கொலை அல்ல. மேலிருந்து திட்டமிட்ட படுகொலை. கிட்டப்பா மாமியார் வீட்டிலிருந்து அழைத்து, வரப்பட்டு கதவில்லாமல் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலையில் பங்குபெற்ற உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். 13ந் தேதி காலை முதல் கிட்டப்பா தன் தொலைபேசியில் யார் யாருடன் பேசியுள்ளார், அதேபோல என்கவுன்டர் செயத உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் யார் யாரிடம் பேசியுள்ளார் என்கிற விவரங்களை தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும்.  
  2. இந்தக் கொலை விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும். கிட்டப்பாவின் மனைவி, அம்மா ஆகியோர் கொடுத்த புகாரைக் கணக்கில் எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும்.
  3.  கிட்டப்பாவுக்கு இளம் மனைவியும், ஒன்றரைவயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. கிட்டப்பாவின் கொலையில் ஐயம் கொண்டு அவரது உறவினர்கள் அடுத்த ஒரு வாரம் உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்தபோது மாவட்ட நிர்வாகம் கிட்டப்பாவின் மனைவிக்கு இழப்பீடும், அரசுப்பணியும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.  அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.. குடும்பத்திற்கு 25 இலட்ச ரூ இழப்பீடும் மனைவிக்குத் தகுதிக்கேற்ற அரசுப் பணியும் அளிக்க வேண்டும்.
  4. முற்றிலும் குணமான இந்த மூன்று காவலர்களையும் மருத்துவமனையில் வைத்திருப்பது மருத்துவ அறப்படி குற்றம். அரசுப் பணம் வீணாவது தவிர இதர மூன்று ஏழை எளிய மக்களின் மருத்துவ வாய்ப்பும் இதனால் பறிபோகிறது. ஒரு வெளி நோயாளியாக வைத்து சிகிச்சை செய்து அனுப்பப்பட்டிருக்க வேண்டிய இவர்களை போலீசின் வற்புறுத்தலை ஏற்று இவ்வாறு மருத்துவமனையில் தொடர்ந்து தங்க அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு: அ. மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை-20.
செல்: 9444120582

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக