குடும்பத்திற்காக
வாழ்ந்து அன்பில் கரைந்தவர்
- மு.சிவகுருநாதன்
(இன்று
(30.06.2015) எங்களுடைய அம்மா திருமதி மு.சாரதா
அவர்களுக்கு 75 வது பிறந்த நாள் பவளவிழா. அதற்காக இப்பதிவு.)
1940 இதே நாளில் பிறந்த அவர் தனது 6 குழந்தைகளை
வளர்த்து ஆளாக்கவும் தனக்கு உதவியாக இருந்த எங்களது அத்தைகள், தாத்தா, பாட்டி போன்ற
பலரை இறுதிக்காலத்தில் பராமரிக்கவும் தனது பல்வேறு உடல் உபாதைகளுடன் வாழ்க்கையைக் கழித்தவர்.
இன்றும் கண்புரை, நீரிழிவு போன்ற தொந்தரவுகளுடன் வாழ்க்கைப் போராட்டம் தொடர்கிறது.
இந்தப் பவள விழாவில் நாங்கள் வாழ்த்தி வணங்குகிறோம். அம்மாவின் 75 வது பிறந்த நாளில்
அவரது உழைப்பை நினைவு கூர்வதில் கொஞ்சம் மன
நிம்மதி; ஓர் ஆறுதல்.
கரியாப்பட்டினம் திரு. கா. சந்தானம் – சிவக்கொழுந்து
தம்பதிகளுக்கு கடைக்குட்டியாக பிறந்தவர் எங்கள் அப்பா திரு. ச.முனியப்பன். சுமார்
2 வயதில் தனது தந்தையை இழந்த அப்பாவின் குடும்பம் வறுமையில் வாடியது. எங்களது பாட்டி,
பெரியப்பாக்கள், அத்தைகள் ஆகியோர் மாடு மேய்த்தல், விவசாயக்கூலி வேலைகள் செய்து குடும்பத்தை
சிரமப்பட்டு நடத்தினர்.
அம்மா மு.சாரதா |
இத்தகைய வறுமைச் சூழலில் அய்ந்தாம் வகுப்பு படித்த
எங்களது அப்பா ஆயக்காரன்புலம் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றாக வேண்டும். ஆனால் அங்குள்ள
ஆதிக்க சாதிகள் அதை அனுமதிக்கவில்லை. கரியாப்பட்டினத்தில் ஆறாம் வகுப்பு தொடங்கும்
வரை மூன்றாண்டுகள் காத்திருந்து எட்டாம் வகுப்பை முடிக்கிறார். அந்த மூன்றாண்டுகள்
ஆடு, மாடு மேய்த்தலில் நாட்கள் நகர்கின்றன.
அதன் பிறகு தஞ்சாவூர் அரசினர் அடிப்படை ஆசிரியர்
பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து இடைநிலை ஆசிரியர் பயிற்சியினை முடிக்கிறார். அப்பா கடுமையான
முன்கோபி; அம்மாவும் அப்படியே. அதன் பாதிப்பு அவர்களுடைய குழந்தைகளான எங்களுக்கும்
உண்டு. என்ன செய்வது? பாரம்பரியத் தாக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவேச் செய்கிறது.
சில தனியார் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக சிறிதுகாலம்
பணியாற்றுகிறார். அப்பாவின் முன்கோபமும் தன்முனைப்பும் பிறரிடம் பணியாற்றவிடாமல் தடுத்திருக்கவேண்டும்.
அதனால் தனது சகோதரி திருமதி கண்ணம்மாள் வீட்டுக்கு
வந்து (அண்ணாபேட்டை) அவர் வீட்டிலேயே தொடக்கப்பள்ளி தொடங்கி (1952) நடத்துகிறார். பிறகு
அப்பள்ளி தனியிடத்தில் அரசு அங்கீகாரத்துடன் வ.உ.சி. உதவித் தொடக்கப்பள்ளியாக மலர்கிறது.
அப்பள்ளி இன்று சுமார் 100 குழந்தைகளுடன் தொடக்கப்பள்ளியாக தொடர்கிறது.
குடும்பத்தினருடன்... |
அத்தை அப்பாவுக்கு பக்கத்து ஊரில் பெண் பார்த்துத்
திருமணம் செய்து வைக்கிறார். சுயமரியாதைத் திருமணம். அப்போது அம்மாவுக்கு 17 வயதிருக்கலாம்.
அம்மாவின் குடும்பம் ஒரு காலத்தில் தேங்காய் வியாபாரத்தில் செழித்திருந்தது. வியாபார
நெளிவு சுளிவுகள் கைவரப்பெறாத காரணத்தால் பொருளாதாரத்தால் வீழ்ந்தது.
திருக்குவளைக்கட்டளை வ.மு.முருகையன் – ராஜாமணி
தம்பதிகள் அம்மாவின் பெற்றோர். அம்மாவுடன் மொத்தம் மூன்று குழந்தைகள். ஓர் ஆண்; ஒரு
பெண்கள். உள்ளூரில் பள்ளி இல்லை. மாமா தியாகராஜன் மட்டும் வெளியூரில் சென்று படித்தார்.
அம்மாவிற்கு பள்ளி செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. வீட்டிலேயே எழுத, படிக்கக் கற்றுக்கொண்டார்.
திருமணத்திற்குப்
பிறகு சில காலம் குடும்பம் கரியாப்பட்டினத்தில் இருக்கிறது. 1959 இல் முதல் பெண் குழந்தை.
அம்மா உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிறார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உடல்நலம் மீள்கிறார்.
அடுத்து முதல் ஆண் குழந்தை. குடும்பத்தில் சிக்கல். நீதிமன்றம் வரை சென்று பின்னர்
சமாதானமாகி ஒன்றிணைகின்றனர். சில ஆண்டுகளில் குடும்பம் அண்ணாபேட்டை பள்ளிக்கருகில்
இடம் பெயர்கிறது.
அப்பள்ளிக்குப் பக்கத்திலேயே கூரை வீடு. பள்ளியிலேயே
கிளை அஞ்சலகம் செயல்பட்டது. பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டராகவும் அப்பா இருந்தார். அதன் வேலை
நேரம் காலை 7:30 – 9:30 & 12:30 – 2:00.
எனவே அப்பா எப்போதும் பள்ளிக்கூடத்திலேயே குடியிருந்தார். நாங்களும் பகல் முழுக்கப்
பள்ளியிலும் இரவில் மட்டும் வீடு என்று வாழ்ந்தோம்.
அப்பா கண்டிப்பிற்கு பெயர் போனவர். அவருடைய வயதை
ஒத்தவர்கள் அவரிடம் படித்ததாகச் சொல்லும்போது எங்களுக்கு வியப்பாக இருக்கும். பள்ளிக்கூடம்
தொடங்கியபோது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டதை பிறகு
அறிந்துகொண்டோம். அப்பா வீட்டிலும் ஆசிரியராகவே இருந்தார். எனவே உறவு சொல்லி அழைக்கக்
கூடிய ஒரே நபராக அம்மா மட்டுமே இருந்தார்.
எங்கள் ஆறு பேரையும் வளர்க்கவும் குடும்பத்தைப்
பேணவும் அம்மா மிகுந்த சிரமப்பட்டார். பெரிய குடும்பம்; குறைவான ஊதியம். ஆகவே பொருளாதார
நெருக்கடியும் கூடவே இருந்தது. எங்களது அத்தைகள் மூவரும் கணவனை சிறுவயதிலே இழந்தவர்கள்.
முதலிரண்டு அத்தைகளான திருமதி லோகம்பாள், திருமதி கண்ணம்மாள் இருவருக்கும் தலா ஓர்
குழந்தைகள். மூன்றாவது அத்தை திருமதி காமாட்சி திருமணமான 6 மாதத்திலேயே கணவனை இழந்தவர்.
எங்களை அம்மாவுடன் சேர்ந்த்து வளர்த்தெடுத்ததில் இவர்களது பங்கு அளப்பரியது.
முதல் அக்கா மட்டும் அப்போதைய பி.யூ.சி. ஐ திருச்சி
சீதாலெட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தார். அதன் பிறகு நாங்கள் யாரும் கல்லூரிக்கு
சென்றதில்லை. பள்ளியிறுதி வகுப்பை முடித்ததும் ஏதெனும் வேலை சார்ந்த படிப்புகளுக்கு
அனுப்பப்பட்டோம். அப்பா குழந்தைப்பருவம் முதல் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானதால் அவருக்கு
நிரந்தர வருமானம், பணி குறித்தான பார்வையே இருந்தது. அதனால் நாங்கள் இருவரைத் தவிர
நால்வர் நிரந்தர வருமானத்திற்கான பணியில் சேர்க்கப்பட்டோம்.
குடும்பத்தினருடன்... |
1970 களில்
குடும்பம் பள்ளியை விட்டு இடம் பெயர்ந்தது. பள்ளி விட்டதும் ஆடு, மாடு மேய்ப்பது, விவசாய
வேலைகள் என நாங்கள் அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டோம். ஆசிரியரான அப்பா வீட்டில்
வேலைகள் இருப்பின் பள்ளி செல்லவேண்டாம் என்று உடனே சொல்லிவிடுவார். அம்மாவின் வேலைகளுக்கு
அளவே இருக்காது. எங்களுக்கு சோறு போட்டுவீட்டு நாங்கள் சாப்பிட்டவுடன் அவர் வேறு வேலைக்குப்
போய்விடுவார். பல நேரங்களில் சாப்பிடாமலும் நேரம் தவறிச் சாப்பிடுவதையும் வழக்கமாகக்
கொண்டிருந்தார். சாப்பிட்டு முடிக்க முடிக்க எங்களுக்கு பரிமாறிக்கொண்டிருப்பார். இறுதியில்
அவருக்கு ஒன்றுமிருக்காது. இதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
எங்களின்
தந்தை வழிப் பாட்டி சிவக்கொழுந்து நான் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.
எனது அத்தைகள் கண்ணம்மாள், காமாட்சி ஆகிய இருவரும் தங்களது கடைசிக் காலத்தை அம்மாவின்
பராமரிப்பில் இருந்து மறைந்தனர். அம்மாவி அம்மா திருமதி ராஜாமணி ஜனவரி 02, 1994 ஓர் அறுவடை நாளில் மாரடைப்பால் எங்கள்
இல்லத்தில் மரணமடைந்தார்.
திருவாரூரில் ஓர் தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப்
பணியாற்றிய மாமாவிற்கு எங்களது வீட்டிலேயே சுயமரியாதைத் திருமணத்தை அப்பா நடத்தி வைத்தார்.
அவர் உடல் நலமின்றி 1999 இல் இறந்தார். தாத்தா வ.மு.முருகையன் அவர்களது இறுதிக்காலமும்
எங்கள் வீட்டில்தான். அம்மாவின் உடல் நலம் சரியில்லாத நிலையிலும் மிகுந்த சிரமத்துடன் 2001 இல் தாத்தா மரணமடையும் வரை பார்த்துக்கொண்டார்.
இரண்டாவது பெரியம்மா திருமதி மணியம்மாள் இதற்கு உதவி புரிந்தார்.
இதற்கிடையில் அப்பாவின் உடல்நலமும் சரியில்லாது
போனது. அப்பாவைக் கவனிக்க முடியாமற்போகும் என்பதால் தனக்கு மாத்திரை எடுத்துக் கொள்வதை
அம்மா முற்றிலும் தவித்து வந்தார். தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு அப்பாவைக் கவனிப்பதுதான்
தனது முழுநேர வேலையாக அம்மா இருந்தார். மாத்திரை மருந்துகள் சாப்பிடாமலும் குறித்த
நேரத்தில் உணவுண்ணாமலும் தனது உடல்நிலையைக் கெடுத்துக் கொண்டார்.
நவம்பர் 19,
2005 இல் அப்பாவின் மரணம் அம்மாவின் உடல் மற்றும் மனத்தைப் பெரிதும் பாதித்தது.
அதன் பிறகு மெல்ல துக்கத்திலிருந்து மீண்டு எங்களது வற்புறுத்தல்களுக்கு இணங்க மருத்துவத்திற்கு
ஒப்புக்கொண்டார். அன்றிலிருந்து இன்று வரை பத்தாண்டுகள் மருத்துவமனை, மருந்து, இன்சுலின்
ஊசி என அவரது வாழ்க்கை ஓடிக்கொண்டுள்ளது.
இப்போது சிறிய அக்கா திருமதி மு.மங்கையர்க்கரசியின்
அரவணைப்பில் அவர் வாழ்ந்த இல்லத்தில் வசித்து வருகிறார். தனது வாழ்வின் 75 ஆண்டுகளில்
சில ஆண்டுகளைத் தவிர பிறந்த ஊரிலேயே வாழக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
வாழத்துகிறோம். வணங்குகிறோம். நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக