கல்விக் குழப்பங்கள் - தொடர் - பகுதி 01 முதல் 05 முடிய.
- மு.சிவகுருநாதன்
- மு.சிவகுருநாதன்
(இவைகள்
யாவும் மிகவும் சின்ன சின்ன விஷயங்கள். இவற்றை எங்கு தவறவிடுகிறோம் என்பதுதான்
தெரியவில்லை. இவையனைத்தும் கல்விக் குழப்பங்கள் மட்டுமல்ல; கற்றல் – கற்பித்தல் குழப்பங்களும்
கூட. மிகவும் எளிமையான இவைகளைக் கூட கண்டுகொள்ளாத நமது சமூகமும் கல்விமுறையும் என்ன
செய்கிறது? எங்கே போகிறது? தலையணை சைஸில்
நிறைய புத்தகங்களைப் பொதிமூட்டைபோல் சுமந்துசென்று படிப்பதுதான் கல்வி என்பதான கற்பிதங்கள்
தகர்க்கப்படவேண்டும். இங்கு நம் முன் உள்ள தவறான புரிதல்களைப் பட்டியலிட முயல்வோம்.
நன்றி.)
01. வாகன
ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் விதி ஒன்றா?
ஆகக்
கடைசியில் விபத்தைத் தடுக்க ஹெல்மட் மட்டுமே போதும் என்று கண்டுபிடித்தாகிவிட்டது.
எனவே ஓட்டுநர் உரிமம் கூட தேவையில்லை! சாலை விதிகள் என ஒன்று இருப்பது நீதிமன்றங்களுக்கு
கூடவா தெரியாமல் போய்விட்டது? மோட்டார் வாகனத் தயாரிப்பில் எவ்வித பாதுகாப்பு அம்சத்தையும்
கட்டாயப் படுத்தாத அரசுகளும் நீதிமன்றங்களும் ஹெல்மட், சீட் பெல்ட் ஆகியவை மட்டும்
போதும் என முடிவெடுக்கும்போது நாம் வேறு என்ன செய்ய முடியும்? இப்போது சீட் பெல்ட்டை
யாரும் கேட்பதில்லை. கடைக்கோடி மக்களின் உயிர்கள் மீது எவ்வளவு அக்கறை? இந்த அக்கறையை
சாலையில் நடந்து செல்லும் வெகு சாமான்ய மக்கள் மீது கொஞ்சம் காட்டினாலென்ன?
சாலை விதிகளை ஒழுங்காகக் கடைபிடித்தாலே பெருமளவு
விபத்துகள் குறையும். இவற்றில் ஒன்று வாகன் ஓட்டிகள் சாலையின் இடப்புறம் செல்வது. சாலையில்
நடந்து செல்வோரும் இதனைக் கடைபிடிப்பது வேடிக்கை. பாடநூற்கள் வெறுமனே சாலையின் இடப்புறம்
செல்ல வலியுறுத்துகின்றன. ஆனால் வாகன் ஓட்டியா? பாதசாரியா? என்பதை விளக்குவதில்லை.
எனவே எல்லாருக்கும் ஒரே விதி எனத் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
நடைமேடை (இது எங்கே இருக்கிறது?) இருக்கும் இடங்களில்
இடமோ வலமோ அதில் நடந்து செல்லலாம். நடைமேடை இல்லாத இடங்களில் எதிரே வரும் வாகனத்தைப்
பார்த்துக்கொண்டு வலபுறமாக நடக்கவேண்டும். அப்போதுதான் நமக்குப் பின்னால் வரும் வாகனங்கள்
நம்மீது மோத வழியில்லை. மேலும் முன்னால் வரும் வாகனத்தைப் பார்த்து நம்மை பாதுகாத்துக்
கொள்ளவும் முடியும். ஆனால் நடப்பதென்ன? இவ்விதி சரியாகச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை
அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால் நாள்தோறும் சாலையில் நடக்கும்
பலர் மரணமடைகின்றனர்.
நீங்கள் சாலையின் வலப்பக்கம் நடந்து சென்று பாருங்கள்.
பெரும்பாலனோர் அதே புறத்தில் எதிரே வருவார்கள். அதோடு நில்லாது நம்மை ஏதோ ஓர் விசித்திரப்
பிராணியைஒ போல் பார்த்துச் செல்வார்கள். இடப்புறம் நடக்கவேண்டும் (?!) என்ற விதிகூட
தெரியவில்லையே என்கிற ஏளனப்பார்வை அது.
வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் எப்படி ஒரே
விதி இருக்கமுடியும்? என்பதை பெரும்பாலோர் உணர்வதே இல்லை அல்லது உணர்த்தப்படவே இல்லை.
இது யார் குற்றம்?
இத்தகைய விதிகள் பள்ளிக் கல்வியிலேயே கற்பிக்கப்பட்டிருக்க
வேண்டும். ஆனால் சாலை விதிகளைக் கற்பிப்பதில் குழப்பங்களும் குளறுபடிகளும் இருக்கின்றன.
இதை எப்போது சரி செய்யப்போகிறோம்?
01. வாகன
ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் விதி ஒன்றா? ?
மேற்கண்ட எனது முகநூல் பதிவிற்கு வந்த பின்னூட்டமும்
அதற்கான மறுமொழியும்.
கி முருகன் மாப்பிள்ளைக்குப்பம்:
வங்கிகளில் பணம்
போட,
எடுக்க,
அனுப்ப
உரிய
விண்ணப்பங்களை
நிரப்பவும், போக்குவரத்தில் முன்பதிவு விண்ணப்பங்களை
நிரப்பவும் கற்று தந்தால்
நல்லது....
சிவகுருநாதன் முனியப்பன் :
தங்களது கருத்துகளுக்கு நன்றி. நீங்கள் சொல்கிற
படிவங்கள் பத்தாம்வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ் இரண்டாம் தாளுக்குரிய 5 மதிப்பெண்
வினாவாக உள்ளது. இங்குள்ள ஏதேனும் ஓர் வங்கியின் படிவத்தை அப்படியே கொடுத்தால் மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் அம்மாதிரியான வங்கிப்படிவங்கள் இங்குள்ள எந்த வங்கியிலும் இல்லை என்பதுதான்
உண்மை. ஒருவேளை அரசும் தமிழாசிரியர்களும் இனி தொடங்கப்போகும் புதிய வங்கியில் கொடுக்க
நினைக்கும் மாதிரிப் படிவமாககூட இருக்கலாம்!
யார் கண்டது?
இங்கு இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். இன்று வங்கிகள் அளிக்கும் பல்வேறு
படிவங்கள் எளிதாக இல்லை. அதில் தேவையில்லாத பல விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். வங்கியில்
கேட்டால் இதை மட்டும் எழுதிக்கொடுங்கள் என்பார்கள்.
இவற்றை எளிமையாகவும் புரியும்படியாகவும் அனைத்து வங்கிகளும் ஓரளவிற்காவது ஓர்மையுடன்
படிவங்களை வடிவமைக்கலாம் அல்லவா? ஆனால் வருமானவரிப்படிவம் எளிமையாக இருக்கவேண்டும்
என நினைக்கும் அரசுகள் சாமான்யர்கள் பயன்படுத்தும் வங்கிப்படிவம் எளிதாக இருக்கவேண்டும்
என்று நினைப்பதில்லை.
இன்று கிராமப்புற வங்கிகள்கூட மின்னணு பரிமாற்றம் செய்யும் நிலையில் இப்படிவங்களின்
நிலை கேள்விக்குரியதுதான்.
ஒரு விஷயத்தை தவறாகச் கற்றுக் கொடுப்பதைவிட சொல்லாமல் விடுவது எவ்வளவோ மேல்
என நான் கருதுகிறேன். அதனால்தான் இப்பகுதியை எழுதத் தோன்றியது.
மீண்டும் நன்றி.வணக்கம்.
கி முருகன் மாப்பிள்ளைக்குப்பம்:
அறிவார்த்தமாக, பொறுப்புத் தன்மையுடன் பதில் தந்தமைக்கு
நன்றி.
பயிற்றுவித்தலில் உள்ள நாம் அன்றைய நாள் வரையிலான தகவல்களை நாம் அறிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம் என்பது எனது அன்பான வேண்டுகோள்.
பயிற்றுவித்தலில் உள்ள நாம் அன்றைய நாள் வரையிலான தகவல்களை நாம் அறிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம் என்பது எனது அன்பான வேண்டுகோள்.
சிவகுருநாதன் முனியப்பன் :
நீங்கள் சொல்வது சரி. ஆனால்
நடைமுறையில்
இல்லை
என்பதுதான்
உண்மை.
பாடத்திட்டமும்
ஆசிரியர்களும்
மேம்பாடு (update ) அடைய வேண்டும்.
அதற்கான
வாய்ப்புகளும்
முயற்சிகளும்
இங்கு
மிகக்
குறைவு. நன்றி.
02. தாவரங்கள்
எதை சுவாசிக்கும்?
எந்த வகுப்பு மாணவர்களிடமும் நாம் எதை சுவாசிக்கிறோம்
என்று கேட்டால் முதலில் காற்று என்று சொல்லி பின்னர் ஆக்சிஜன் என்று பதில் வந்துவிடுகிறது.
தாவரங்கள் எதை சுவாசிக்கும் என்று கேட்டால் உடன் கார்பன்–டை-ஆக்சைடு என்று பதில் வருகிறது.
சுவாச உறுப்பு பற்றிக் கேட்டால் மூக்கு என்று
சொல்லியபிறகு இறுதியில் நுரையீரல் என்பதைச் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் இந்த சுவாசக்
கோளாறு அனைத்து வகுப்பிலும் உள்ளது!
கார்பன்–டை-ஆக்சைடை சுவாசிக்கும் உயிரினம் இருக்குமானல்
புவி வெப்பமடைதலைப் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டியதில்லையே! ஏனிந்த குழப்பம்? இம்மாதிரியான
உயிரினங்கள் பற்றிய புனைகதைகளோ படங்களோ வெளிவந்திருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவும்.
மனிதனால் செய்யமுடியாத வேலை ஒன்றையும் தாவரங்கள்
செய்கின்றன. அதுதான் ஒளிச்சேர்க்கை எனப்படும் ஸ்டார்ச் உணவு தயாரித்தல். நமது தோல்
வைட்டமின் டி ஐ மட்டும் உற்பத்தி செய்யும். கார்பன்–டை-ஆக்சைடு, நீர், பச்சையம், சூரிய
ஒளி ஆகியவற்றைக் கொண்டு தாவரங்கள் ஸ்டார்ச் தயாரிப்பதைத்தான் நாம் ஒளிச்சேர்க்கை என்கிறோம்.
இதுதான் குழப்பத்திற்கு காரணமாகிறது. மனிதனைவிட
தாவரம் கூடுதல் வேலை செய்வதா? மனம் ஒளிச்சேர்க்கையையும் சுவாசித்தலையும் சேர்த்து குழப்பமடைகிறது.
இதைத் தெளிவுபடுத்தாத கல்வியின் பயனேது?
ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜன் வெளியிடப்படுகிறது.
மாறாக சுவாதித்தலின்போது தாவர, விலங்குகள் அனைத்தும் கார்பன்–டை-ஆக்சைடை வெளியேற்றுகின்றன.
மேலும் கார்பன்–டை-ஆக்சைடு என்று சொன்னால் நாற்றமே
அவர்களுக்கு நினைவுக்கு வருகிறது. இது ஓர் நிறமற்ற, மணமற்ற வாயு என்று சொன்னால் மனம்
ஏற்க மறுக்கிறது.
கார்பன்–டை-ஆக்சைடை தாவரங்கள் பயன்படுத்துவதை மட்டும் வைத்துக்கொண்டு
அது சுவாசித்தல் என திடீரென்று முடிவு கட்டப்படுகிறது. அது எதற்காகப் பயனாகிறது என்பதை
அய்யமின்றி நிருபிக்க நாம் தவறிவிட்டோம்.
இதற்கு மாணவர்களைக் குறை சொல்வதில் பொருளில்லை.
கல்வியின் அடைவைச் சோதிக்க இதையும் உதாரணமாகக் கொள்ளலாம். நமது மனப்பாடக்கல்வி இவ்வாறான
குறுக்குவழிச் சமன்பாடுகளையே உருவாக்கும் என்பதில் அய்யமில்லை.
03.
Climate
சரியில்லை என்று சொல்லலாமா?
திடீரென்று மேகம் கறுத்து மழை வருவது, குளிர்ந்த காற்று வீசுவது, காற்றழுத்த மாறுபாட்டால் ‘இறுக்கம்’ உண்டாகி அதிகமாக வியர்ப்பது போன்ற வானிலை மாற்றம் உருவாகும்போது கிராமங்களில் எழுதப் படிக்காதவர்கள்கூட ‘வானம் (மானம்) சரியில்லை’ என்றோ அல்லது அந்தந்த வட்டாரத்திற்கேற்ற ஓர் சொல்லைக் கொண்டோ குறிப்பிடுவது வழக்கம்.
ஆனால் மெத்தப்படித்தவர்கள் இம்மாதிரியான அசாதாரண சூழ்நிலைகளை ‘Climate சரியில்லை’ என்று சொல்வதை வாடிக்கையாகவும் ஏன் பெருமையாகவும்கூட கருதும் நிலை இருக்கிறது. நம்மவர்களுக்கு ஓர் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துவதுகூட பெருமைதானே! இதைப் பயன்படுத்தலாமா? இதன் பொருளென்ன? என்பதைப் பலர் கவனிக்க மறந்துவிடுகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்தில் (அதாவது ஓர் நிமிடம் முதல் சில மாதங்கள் வரை) ஏற்படும் வெப்பம், அழுத்தம், ஈரப்பதம், மழை, காற்று, பனி, மேகம், புழுதிப்புயல் போன்ற நிகழ்வுகளையும் எப்போதாவது அரிதாக நிகழும் இயற்கைப்பேரிடர்கள், சூறாவளி, பனிப்புயல் ஆகியவற்றையும் வானிலை (weather) என்றே சொல்லவேண்டும்.
இத்தகைய வானிலைத் தொகுப்பின் நீண்டகால சராசரி காலநிலை (climate) என்றழைக்கப்படுகிறது. இதை தட்ப வெப்பநிலை என்றும் தமிழில் சொல்வதுண்டு. 30 ஆண்டுகளுக்கு மேலான ஓரிடத்தின் வானிலை சராசரியே இவ்வாறு கூறப்படுகிறது.
இன்று காலநிலை மாற்றம் (climate change) பற்றி உலமே பேசிக்கொண்டிருக்கும் நிலையில் வானிலையை (weather) காலநிலை (climate) என்றழைப்பது சரியா? இனியாவது வானிலையை ‘climate’ என்று சொல்லாதிருப்போம்.
இம்மாதியான நிறைய சொற் குழப்பங்கள் உண்டு. இவற்றைப் பட்டிலிட்டு மாணவர்களிடம் தெரிவிக்கும்போது இக்குறைகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவது குறையும்.
04.
பழைய
கட்டிடங்கள் மற்றும் ஈரமான தரைகளில் இருப்பது பாசியா?
பழைய கட்டிடங்கள், ஈரமான தரைப்பகுதிகள், சுவர்கள், ஓடுகள், கற்கள்,
பாறைகள் போன்றவற்றில் பசுமை போர்த்தியிருக்கும் சிறிய தாவரவகைகளைப் பார்த்திருப்போம்.
இவற்றை நாம் பாசி (ஆல்கா) படர்ந்துள்ளது, பாசி வழுக்கிவிட்டது என்கிற ரீதியில் குறிப்பிட்டு
வருகிறோம். பசுமையாக இருப்பதால் இவை பாசி என முடிவு செய்துவிட்டோம். பொதுவாக ஆல்காக்கள்
பசுமையாக மட்டும் காணப்படுவதில்லை. உண்மையில்
இவை பாசியா என்று கேட்டால் இல்லை என்பதே உண்மை.
கொஞ்சம் வகைப்பாட்டியலுக்குச்
செல்வோம். தாவர உலகம், பூக்கும் தாவரங்கள் (பெனரோகேம்ஸ்), பூக்காத தாவரங்கள் (கிரிப்டோகேம்ஸ்)
என இரு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன.
பூக்காத தாவரங்கள்
தாலோஃபைட்டா, பிரையோஃபைட்டா, டெரிடோஃபைட்டா (பெரணித் தாவரங்கள்) என்று மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தாலோஃபைட்டாவில் ஆல்காக்களும் (பாசிகள்) பூஞ்சைகளும் (காளான்கள்) வருகின்றன.
இவற்றில் பாசிகள்
பச்சையமுடையவை. இவை ஒளிச்சேர்க்கை மூலம் உணவு (ஸ்டார்ச்) தயாரிப்பதால் சுயஜீவிகள் என்று
அழைக்கப்படுகின்றன. பச்சையத்திற்கான நிறமிகளை (குளோரோபில் A மற்றும் B) பெற்றிருந்தாலும்
எல்லா பாசிகளும் பசுமையாகக் காணப்படுவதில்லை.
எந்த நிறமி அதிகமாகக்
காணப்படுகிறதோ அந்நிறத்தில் பாசி காட்சியளிக்கிறது.
ஃபைகோசயனின் (நீலப்பச்சை), குளோரோபில் (பச்சை), ப்யூகோஸாந்தின் (பழுப்பு), ஃபைகோஎரித்ரின்
(சிவப்பு) ஆகிய நிறமிகள் அதிகமாகக் காணப்படும்போது பாசிகள் அந்தந்த நிறத்தைப் பெற்றுக்
காட்சியளிக்கின்றன.
நாஸ்டாக், அனாபினா,
அலோசிரா, ஆசில்லடோரியா போன்ற நீலப்பசும்பாசிகள் வளிமண்டல நைட்ரஜனை (N2) நிலைப்படுத்தி
அதாவது நைட்ரேட்டாக (NO3) மாற்றி மண்ணை வளப்படுத்துகின்றன.
இதனால் நெல் போன்ற வேளாண்பயிர்களுக்கு உயிர் உரமாக இவை பயன்படுகின்றன.
பூஞ்சைகள் பச்சையமற்றவை.
எனவே இவை தனித்து வாழ முடியாதவை. மட்குண்ணி, ஒட்டுண்ணி, கூட்டுயிரி போன்ற வாழ்க்கைமுறையில்
இவை செயல்புரிகின்றன.
பிரையோஃபைட்டா பிரிவைச்
சேர்ந்த தாவரங்களையே நாம் பாசிகள் என்று தவறாகச் சொல்லி வருகிறோம். இவை ஆல்காக்களைவிட
மேம்பாடடைந்த தாவரப்பிரிவாகும். மேலும் இவை முழுமையாக நீரிலோ நிலத்திலோ வாழ இயலாதவை.
இவற்றின் இனப்பெருக்கத்திற்கு நீர் தேவைப்படுகிறது. எனவே இது இரு வாழ்வித் தாவரங்கள்
(நீர், நில வாழ்வன) என்றழைக்கப்படுகின்றன.
பிரையோஃபைட்டுகளில்
வாஸ்குலார் திசுக்கள் எனப்படும் கடத்து திசுக்களான சைலம் (நீர்), ஃபுளோயம் (உணவு) ஆகியவை
இல்லை. லிவர்வொர்ட்ஸ் (ஈரல் வடிவம்), ஹார்ன்வொர்ட் (கொம்பு வடிவம்), மாஸ்கள் ஆகிய இதற்கு
எடுத்துக்காட்டுகள்.
பாசிகள் முற்றிலும் நீரில் வாழ்பவை. இவை பசுமை தவிர சிவப்பு, பழுப்பு, நீலப்பச்சை ஆகிய நிறங்களிலும் காணப்படும்.
பிரையோஃபைட்டுகள் நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ்விகள். இவற்றை
பசுமையாக மட்டுமே காணலாம். இவை பாசிகள் (ஆல்காக்கள்) அல்ல.
05.
“விவசாயக்கழிவு
மற்றும்
குப்பை
+ நன்மை செய்யும்
பூஞ்சைகளும்
காளான்களும்
= உயிர் உரம்”. இச்சமன்பாடு சரியானதுதானா?
ஒன்பதாம் வகுப்பு புவியியலில் (மூன்றாம் பருவம்)
‘மண்வளத்தைத் தக்க
வைத்தல்’ என்கிற
தலைப்பில் “” என்று
படம்
போட்டு
விளக்கப்பட்டுள்ளது. இதை
உயிர்
உரம்
என்று
சொல்வது மடத்தனம்; இயற்கை
உரம்
என்றுதான் சொல்லவேண்டும். மேலும்
பூஞ்சைகளும் காளான்களும் ஒன்றுதானே! வேறு பெயர் வேண்டுமானால் பாக்டீரியங்கள் என்று சொல்லலாமே!
உயிர் உரங்களைப் பற்றி
கொஞ்சம். வளிமண்டலத்தில் மிக
அதிகமாக உள்ள
(78%) நைட்ரஜன் (N2) வாயுவை
நிலைப்படுத்தி அதாவது
நைட்ரேட்டாக (NO3)
மாற்றித் தாவரங்களுக்கு அளிக்கும் வேலையைச் செய்பவையே உயிர்
உரங்கள் என்று
அழைக்கப்படும். உம்.
பாசி
மற்றும் பூஞ்சை
வகைகளைச் சேர்ந்த அசோஸ்
ஸ்பைரில்லம், சூடோ
மோனாஸ்,
பாஸ்போ
பாக்டீரியா, அசட்டோ
பாக்டர், அனபினா,
நாஸ்டாக் மற்றும் வேர்முடிச்சு (வேர்முண்டுகள்) பாக்டீரியமான ரைசோபியம்.
அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ
மோனாஸ்
ஆகியவை
நெல்
போன்ற
பயிர்களுக்கு உயிர்
உரமாகத் தரப்படுகிறது. ரைசோபியம் அவரை,
உளுந்து குடும்பத் தாவரங்களின் வேர்முடிச்சுகளில் இயற்கையாகவே காணப்படுகிறது.
அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ
மோனாஸ்,
ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் உயிருள்ளவை. இவைகள்
வாழிடத்திற்காகவோ வேறு
காரணங்களுக்காகவோ நெல்,
அவரை.
உளுந்து போன்ற
வேளாண்பயிர்களைச் சார்ந்து வாழ்ந்து பலனடைகின்றன. எனவே
இவற்றை
உயிர்
உரங்கள் என்கிறோம்.
இறந்துபோன தாவர
விலங்கு உடலங்களை சாப்பிட்டு மட்கச்செய்யும் பாக்டீரியங்கள் (சாறுண்ணிகள்) மூலம்
தாவரங்களுக்குக் கிடைப்பவை இயற்கை
உரங்கள். இவை இல்லையென்றால் இறந்த தாவர,
விலங்கு உடலங்கள் மட்க வாய்ப்பே இல்லை. இதுகூடத் தெரியாமல்தான் நமது
பாடநூற்கள் எழுதப்படுகின்றன.
2 கருத்துகள்:
நீங்கள் சாலையின் வலப்பக்கம் நடந்து சென்று பாருங்கள். பெரும்பாலனோர் அதே புறத்தில் எதிரே வருவார்கள். அதோடு நில்லாது நம்மை ஏதோ ஓர் விசித்திரப் பிராணியைஒ போல் பார்த்துச் செல்வார்கள். இடப்புறம் நடக்கவேண்டும் (?!) என்ற விதிகூட தெரியவில்லையே என்கிற ஏளனப்பார்வை அது.
இந்த ஏளனப் பார்வையை பலமுறை உணர்ந்திருக்கிறேன் ஐயா
முக நூலில் பகிர்ந்துள்ளேன் ஐயா
நன்றி
கருத்துரையிடுக