செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

கல்விக் குழப்பங்கள் - தொடர் (பகுதி 11 முதல் 15 முடிய.)

 கல்விக் குழப்பங்கள் - தொடர் -   (பகுதி 11 முதல் 15 முடிய.)   
                                              
                                                - மு.சிவகுருநாதன்

11. சந்தன மரம் ஓர் வேர் ஒட்டுண்ணித் தாவரம்.
                                          
      பட்டுக்கோட்டைக்கும் அதிராம்பட்டினத்திற்கும் இடையே உள்ள சிறிய கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஓர் பெரிய மாடிவீடு. 10 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டிருந்தன. கேட்டதற்கு சந்தன மரம் என்றார்கள். அருகில் வேறு எந்த மரங்களுமில்லை. 

    இரண்டு ‘நர்சரி’க் கொள்ளைகள் இருக்கின்றன. ஒன்று நர்சரி பள்ளிகள்; மற்றொன்று நர்சரி கார்டன்கள். ஏதோ ஒரு பெயரில் செடிகளை நம் தலையில் கட்டிவிடுவார்கள். அச்செடி நம் பகுதியில் வளருமா, அதை எப்படி வளர்ப்பது, பராமரிப்பது போன்ற  எந்தத் தகவலையும் நமக்கு அளிக்கமாட்டார்கள். செடி கைமாறினால் போதும்; உடன் அவர்களுக்கு பணம் கிடத்துவிடும். பிறகு வேறென்ன வேண்டும்?

   நாம் விஷயத்திற்கு வருவோம். சந்தன மரம் தனியாக வளருமா? என்று நான் கேட்டேன். அவர்கள் ஏன் வளராது என எதிர்க்கேள்வி கேட்டனர். சன்டலம் ஆல்பம் (Santalum album) என்றழைக்கப்படும் சந்தன மரம் உண்மையில் ஓர் வேர் ஒட்டுண்ணி மரமாகும்.

  ஒட்டுண்ணி பற்றி கேள்விபட்டிருப்போம். அது என்ன வேர் ஒட்டுண்ணி? ஒட்டுண்ணி என்றதும் நமக்கு பூஞ்சைகள், பாக்டிரீயங்கள் நினைவிற்கு வரலாம். 

   உயிருள்ள செல்களில் வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் (Obligate parasites),  இறந்த தாவர, விலங்கு உடலங்களில் இருக்கும் மாறும் ஒட்டுண்ணிகள் (Facultative parasites) எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. 

   முற்றிலும் பிறவற்றைச் சார்ந்திருப்பவை முழு ஒட்டுண்ணிகள் (Holo parasites),  என்றும் ஏதேனும் சிலவற்றிற்காக சார்ந்திருப்பவை பகுதி ஒட்டுண்ணிகள் (Hemi parasites),   என்றும் வழங்கப்படுகின்றன. 

    முன்னது உணவிற்காக ஓம்புயிரியை (Host) முழுதும் சார்ந்து வாழ்ந்து உணவைப் பெற்றுக்கொள்ளும். எ.கா. கஸ்கியூட்டா.  பின்னது ஓம்புயிரிடமிருந்து நீர் மற்றும் கனிம உப்புக்களைப் பெற்று தாமே உணவு தயாரித்துக் கொள்ளும். எ.கா. சந்தன மரம்.

  ஒட்டுண்ணிகளில் சில ஓம்புயிர்த் தாவரங்களின் வேர், தண்டு ஆகியவற்றில் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும். தாவரத் தண்டில் வாஸ்குலர் எனப்படும் கடத்துதிசுக்கள் இருக்கின்றன. இவற்றில் சைலம் கனிம நீரையும் ஃபுளோயம் தயாரிக்கப்பட்ட உணவையும் (ஸ்டார்ச்) கடத்தும். 

   ஒட்டுண்ணிகள் நீர் தேவை என்றால் சைலத்துடனும் உணவு தேவையெனில் ஃபுளோயத்துடனும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. ஓம்புயிரியை ஊடுருவவும் நீரை / உணவை உறிஞ்சவும் ஹாஸ்டோரியா (haustoria) எனப்படும் அமைப்புகள் உதவுகிறது. 

   சில தாவரங்கள் ஓம்புயிரியின் வேர்களிலேயே கனிம நீரை உறிஞ்சும் தன்மை உள்ளது. சந்தனமரம் இவ்வகையைச் சேர்ந்தது. எனவேதான் இதை வேர் ஒட்டுண்ணி என்கிறோம்.

   சந்தன்மரம் வேம்பு, புங்கம் ஆகியவற்றை ஓம்புயிரியாகக் கொண்டு வளரும். எனவே இம்மரத்தைத் தனியே வளர்க்கமுடியாது. பிற மரங்களுடன் சேர்த்துத்தான் வளர்க்கவேண்டும். காட்டில் சந்தன மரத்திற்கு அருகிலுள்ள மரத்தை வெட்டினால் சந்தனமரமும் சேர்ந்து இறக்கும். 

  வேம்புடன் (Azadirachta indica)  இணந்து வளர்வதால் இவை இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்கிற தவறான நம்பிக்கையும் உள்ளது. வேம்பு மெலியேசியே குடும்பத்தையும் சந்தன மரம் சன்டலேசியெ குடும்பத்தையும் சேர்ந்தவை. 

  அதிக மழை பெய்யக்கூடிய இடங்களில் வளர்வதால் சந்தன மரம் வளர்த்தால் மழை பெய்யும் என்றொரு மூடநம்பிக்கையும் இருக்கிறது. இதுவும் தவறானது. 

  இம்மரத்தை வெட்டினால் கரும்பைப் போல மறுதாம்புப் பயிராக வளரும் தன்மையுடையது. மேலும் வேர், விதைகள் மூலம் புதிய தாவரம் உண்டாகிறது. 

  எண்ணைய்ப் பனை, ஈமு கோழி போல சந்தன மரத்தை வளர்க்கச் சொல்லும் கும்பல்கள் பெருகியுள்ளன. எல்லாக் காடுகளிலும் உள்ள அனைத்துவகை மரங்களையும் வளர்க்கச் சொல்லி, விற்கும் வணிகக் கும்பல்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் இருக்கவேண்டும். அதற்கு அம்மரங்கள் குறித்து ஓரளவேனும் அறிந்திருப்பது அவசியம்.

112. ஹோமியோபதி மருத்துவத்தில் ஊசி போடுவதுண்டா?  

     சமணம், பவுத்தம் இரண்டும் தனித்தனி மதங்கள் என்பது படித்தவர்களுக்குக் கூட தெரியவில்லை என்ற ஆதங்கத்தை மயிலை.சீனி.வேங்கடசாமி தனது சணம் தொடர்பான நூலில் வெளிப்படுத்தியிருப்பார். (‘சமணமும் தமிழும்’ முன்னுரை.) அலோபதி (Allopathy) மற்றும் மாற்று மருத்துவ முறைகளுக்கு இடையேயான குழப்பம் இன்னமும் இருக்கிறது. 

   அதிலும் குறிப்பாக அலோபதி (Allopathy), ஹோமியோபதி (Hemopathy) குழப்பம் பலருக்கு இருக்கிறது. காலம்காலமாக இது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. 

   ஹோமியோபதி டாக்டரிடம் ஊசிபோட்டுக் கொள்வதாகப் பலர் சொல்கிறார்கள். இவர்கள் சொல்வது கிராமங்களில் இருக்கும் முறையான பயிற்சி பெறாத மருத்துவர்களைத்தான். மேலும் இவர்கள் அலோபதி மருத்துவ முறைகளைப் பின்பற்றுபவர்கள். ஆண்டிற்கு ஒருமுறை போலி மருத்துவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்படும் இவர்கள் சில நாட்களில்  மீண்டும் தமது பணியினைத் தொடங்கி விடுவார்கள். 

   குறிப்பாக தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம். 7 கோடிக்குமேல் மக்கள்தொகை உள்ள இம்மாநிலம் லட்சக்கணக்கில் பொறியாளர்களையும் சுமார் 3000 அலோபதி மருத்துவர்களை மட்டும் உருவாக்கும் வரை  இந்நிலை நீடிக்கவேச் செய்யும்.

   நம்மைவிட அதிக மக்கள்தொகை உடைய மக்கள் சீனம் வெறுங்கால் மருத்துவர்கள் (Barefoot Doctors) என்னும் தொழிலாளி மருத்துவமுறையால் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டது. மருத்துவரைத் தேடித் துயரர் என்ற நிலையை மாற்றி துயரரைத் தேடிச்செல்லும் மருத்துவர் என்கிற புரட்சிகரமான மாற்றத்தை சீனா செயல்படுத்தியது. நாம் எப்போதும் அமெரிக்க, அய்ரோப்பிய மாடலை விரும்பும் கலாச்சார துயரத்திற்கு ஆட்பட்டுள்ளோம். இதிலிருந்து மீள்வது கடினம். 

   அலோபதியைத் தவிர்த்த இந்தியமுறை அல்லது மாற்று மருத்துவ முறைகளாக ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் யுனானி ஆகியவற்றிற்கு அரசு, தனியார் மருத்துவப் படிப்புகள் இங்குள்ளன. இவற்றிற்கு முறையே  BHMS (Bachelor of Homoeopathic Medicine and Surgery),   BSMS   (Bachelor of Siddha Medicine and Surgery),   BAMS  (Bachelor of Ayurvedic Medicine and Surgery),  BYNS  (Bachelor of Naturopathy and Yogic Sciences),  BUMS   (Bachelor of Unani Medicine and Surgery) ஆகிய பட்டபடிப்புகள் உள்ளன.

   மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் (CCIM- Central Council of Indian Medicine) கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கல்லூரிகளுக்குஆயுஷ் துறையின்  (AYUSH -  Department of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy) இந்திய மருத்துவக் குழு  ஆய்வு செய்து அனுமதி வழங்குகிறது.

   இத்தகைய வேறுபாடுகளை அறியாமலிருப்பது கூட பரவாயில்லை.   எந்த மருத்துவம் என்றாலும் ஊசிபோடுவது என்று பழகியிருப்பதுதான் மோசம். முறையான பயிற்சி பெறாத, அலோபதி மருத்துவமுறைகளை அனுமதியின்றிப் பின்பற்றுபவர்களை ஹோமியோபதி என அழைப்பது அக்பரை அதாவது முகலாய மன்னரை இழிவுசெய்ய பீர்பால் கதைகள் பலவற்றைத் திட்டமிட்டு உருவாக்கியது போன்றது. 

    உண்மையில் ஹோமியோபதி மாற்று வைத்தியமுறைகளில் வித்தியாசமானது. ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவர் டாக்டர் சாமுவெல் ஹானிமன் (Dr.Hahnemann)  அவர்களது உருவாக்கப்பட்ட இப்புதிய முறை ஓர் உயிர் துளியும் ரத்தம் சிந்தக்கூடாது, வலியுண்டாக்கும் கருவிகளால் துன்பத்தை துயரர்களுக்கு உண்டாக்கக் கூடாது எனப் பல்வேறு கொள்கைகளை வகுத்தது. 

   டாக்டர் ஹானிமன் (1735-1843) அலோபதி மருத்துவக் கோட்பாடுகளை மறுத்து தர்க்கத்திற்கு உட்படுத்தினார். நீண்டகால ஆய்வின் பலனாக ஹோமியோபதி என்னும் புதிய மருத்துவ முறையைக் கண்டடைந்தார். 

  ஆர்கனான் ஆப் மெடிசன், மெட்டீரியா மெடிக்கா போன்ற முதன்மை நூல்களை எழுதிய டாக்டர் ஹானிமன், மருத்துவர்களின் கண்ணோட்டம், நோயியல் கருத்தாக்கம், மருந்துகள் பயன்பாடு, சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்தார். மிகக் குறைந்த அளவு வீரியப்படுத்தப்பட்ட மருந்து (Potency   Drugs)  என்கிற கொள்கையில் இது செயல்படுகிறது. 

  “ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும்” என்ற தத்துவத்தில் இம்மருத்துவமுறை இயங்குகிறது. ஊசிகள், அறுவை சிகிச்சைகள், விலை உயர்ந்த மருத்துவப் பரிசோதனைகள் ஆகியற்றை இது செய்வதில்லை. இம்மருத்துவம்  அலோபதியைப் போன்று ‘சர்வரோக நிவாரணி’ ஆகாமல் அறுவை சிகிச்சைகள் இன்றி குணப்படுத்தக் கூடிய நாள்பட்ட நோய்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளற்ற ஓர் மருத்துவமுறையாக இன்றும் விளங்குகிறது. 

  அலோபதி என்ற பெயரை வைத்ததுகூட டாக்டர் ஹானிமன் தான். தனது புதிய மருத்துவ முறைக்கு ‘ஒத்த நோய்’   என்ற பொருள்படும் ஹோமியோபதி என்ற பெயர் சூட்டிய  டாக்டர் ஹானிமன் இதற்கு எதிரான அன்றைய மருத்துவ முறைக்கு அலோபதி (எதிர் நோய்) என்றும் பெயரிட்டார். அப்பெயர் இன்றும் நிலைத்துவிட்டது. 

  அலோபதி மருத்துவம் தங்களுடைய முறைகளை நவீன மருத்துவம் என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் நவீன மருத்துவமென்பது ஹோமியோபதியாகத்தான் இருக்கமுடியும்.

 அலோபதியை ஆங்கில (இங்கிலீஷ்) மருத்துவம் என்று சொல்வதும் தவறானது. மருத்துவத்தின் தந்தை என்று போற்றக்கூடிய ஹெப்போகிரேடஸ் கிரேக்க (கிரீஸ்) நாட்டைச் சார்ந்தவர். அன்றைய காலகட்டத்தில் லத்தீன் மொழியே அய்ரோப்பாவில் கோலோச்சியிருந்தது. ஆங்கிலமெல்லாம் பின்னால் வந்தது. அய்ரோப்பிய அல்லது மேலை மருத்துவம் என்று சொல்வதுதான் பொருத்தமானது. 

     எந்த ஒரு குறிப்பிட்ட மருத்துவமுறை மட்டுமே அனைத்து நோய்களையும் தீர்க்கும் என நம்புவது நல்லதல்ல. பன்னாட்டு பெருமுலதனம், மருந்து கம்பெனிகளின் ஏகபோகம் போன்றவற்றின் பிடியில் அலோபதி மருத்துவம் சிக்கியுள்ளது. சித்தா, ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகளுக்கும் இதே சூழல்  உருவாகாமல் செய்யமுடியுமா?


13. இந்து மதத்தில் துறவறம் உண்டா?  

        மயிலை.சீனி.வேங்கடசாமி  'சமணமும் தமிழும்'  என்ற நூலில் இந்து மதத்தில் இந்து மதத்திலுள்ள  சமணக் கொள்கைகளைப்  பட்டியலிடுவார். அதில்  ஊன் உண்ணாமை, தீபாவலி, சிவராத்திரி, சிவனின் சடைமுடி, எருது சின்னம், அய்யனார்  போன்றவை அடங்கும். இதில் நாம் துறவையும் சேர்க்கலாம். இந்து மதத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் துறவறம்  மேற்கொள்வது  ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 

  கொஞ்சம் பிற மதங்கள் கொண்டுள்ள துறவு நிலைப்பாட்டைப் பார்ப்போம். கத்தோலிக்க கிருஸ்தவத்தில் திருமணம் செய்யாத துறவு உண்டு; பிராட்டஸ்டண்ட்களில் இல்லை. இஸ்லாத்தில் துறவுக்கு அனுமதியில்லை. சமணமும் பவுத்தமும் துறவை அனுமதிக்கின்றன. பவுத்தத்தின் திரிபீடகங்களில் ஒன்றான வினய பீடகம் துறவிகளுக்குண்டான புலனடக்கத்தை முன்வைக்கிறது. 

     மாறாக  இந்து மதத்தினர் மனிதவாழ்வை ஆசிரமம் என நான்காகப் பிரிக்கின்றனர்.   பிறப்பிலிருந்து 16 வயது வரை உள்ள குழந்தைப்பருவம் தவிர்த்து  பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம்  என்றும்  இந்துமதம் வரையறுக்கிறது

   இங்கு பிரம்மச்சரியம் என்பது 16 – 24 வயதுக்குள், அதாவது திருமணத்திற்கு முன்பு மட்டுமே. அதன்பிறகு 56 வயது வரை குடும்ப வாழ்க்கை (கிரகஸ்தம்). 56 வயதிற்குப் பிறகு துறவுக்கான ஆயத்தநிலை (வனப்பிரஸ்தம்). இறுதியாக சந்நியாசம் (துறவுநிலை).

  ஆனால் இங்கு நடப்பது என்ன? இந்துமதம் மற்றும் அதன்பிரிவுகளில் திருமணம் செய்துகொள்ளாமல் துறவறம் மேற்கொண்டு வாழ்வது புகழுக்குரிய ஒன்றாக உள்ளது. இந்து மதத்தை காப்பாற்றப் போவதாகச் சொல்லும் பலர் இவ்வாறான வாழ்வை மேற்கொண்டுள்ளனர். விவேகானந்தர், சங்கராச்சாரிகள், சைவ மடாதிபதிகள், பிரேமானந்தா, நித்தியானந்தா போன்ற அனைத்து சாமியார்களும் இதில் அடக்கம். இவர்கள் உண்மையில் இந்து தர்மத்தை கடைபிடிப்பவர்களா? அப்படி என்று ஒன்று இந்து மதத்தில் இருக்கிறதா?

  இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் துறவறம் மேற்கொள்வது இந்து மதத்தின் கொள்கை அல்ல. சமணம் போன்ற பிறமதக் கொள்கையான துறவறத்தையே இவர்கள் காப்பியடிக்கின்றனர். அதைக்கூட ஒழுங்காக, முழுமையாக செய்யாமல் ஆடம்பரமான போலித் துறவறம் மேற்கொள்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாலியல், கொலை வழக்குகளில் சிக்குகின்றனர். இந்துத்துவ ஆதிக்க சக்திகளின் துணையிருப்பதால் பிரேமானந்தா தவிர பிற மோசடிப் பேர்வழிகள் தண்டிக்கப்பட்ட வரலாறு இல்லை.
      
      பவுத்தம் பரி நிர்வாணம் (முக்தியடைதல்) பற்றிப் பேசுகிறது. சமணத்திள் ஆடைகளைத் துறந்த திகம்பரர்கள் இருக்கிறார்கள். சித்தர்களும் இம்மாதிரியான வாழ்வு நெறிகளைக் கொண்டவர்களே. பழங்காலத்தில் சமண முனிவர்கள் ஊருக்குப் புறமான  மலைகளில் நிர்வாணிகளாய் துறவு வாழ்க்கை நடத்தியுள்ளனர். இன்றும் திகம்பரர்கள்  நிர்வாணிகளாக இருப்பினும் இவர்கள் பொதுவெளிக்கு வருவதில்லை. அவர்களுக்கான இடங்களில் இத்தகைய வாழ்வை அவர்கள் மேற்கொள்கின்றனர். 

   ஆனால் இந்துமதத் துறவிகள் என்று சொல்லப்படும் சாதுக்கள், சாமியார்கள், அகோரிகள் மக்கள் கூடுமிடங்களில் நிர்வாணமாகவே வலம் வருகின்றனர். பிற மதக்கொள்கைகளைப் பின்பற்றுவதில் தவறில்லை. அவற்றை தமது வசதிக்கேற்ப திரிப்பதும் போலித்தனமான காரியங்களில் ஈடுபடுவதும் இங்கு கண்டிக்கப்படுவதேயில்லை. 

   திகம்பர சமண சமூகத்தினரை வெறும் நிர்வாணிகளாக சித்தரிக்கும் நமது பாடநூற்கள் இந்து சமூகத்திலுள்ள போலித்தனங்களை ஏன் கண்டுகொள்வது இல்லை? உண்மையான துறவறத்தைக் கடைபிடிக்கும் மதங்களைப் பற்றிய தவறான பார்வைகளை இது மாணவர்களிடம் கொண்டு சேர்க்குமல்லவா?


14. இந்தியத் தத்துவங்கள் அனைத்தும் வைதீகத்  தத்துவங்களா?      

         இந்தியாவில் பன்னெடுங்காலமாக பல்வேறு வகையான  தத்துவ மரபுகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் இவைகளை இந்துத் தத்துவங்களாகவே வரையறுக்கும் போக்கு நிரம்ப உள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற பலர் இத்தவற்றைச் செய்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.

    இத்தகைய தத்துவ மோசடிகளை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா வின் நூற்கள் நமக்கு புலப்படுத்துகின்றன. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், உலகாயதம், இந்திய நாத்திகம் போன்ற நூற்கள் இன்று தமிழிலும் கிடைக்கின்றன.

     சாணக்கியர் (கவுடில்யர்) தனது அர்த்தசாஸ்திரத்தில் சாங்கியம், யோகம், உலகாயதம் என மூன்று பிரிவுகளைச் சொல்கிறார். ஹரிபத்ர சூரி, ஜினதத்த சூரி, ராஜசேகர சூரி ஆகிய சமண ஆசிரியர்கள் ஆறு தத்துவப் பிரிவுகளைக் குறிப்பிடுகிறார்கள். 

   ‘சர்வதரிசன சங்கிரகம்’ என்னும் தத்துவத் தொகைநூல் 16 பிரிவுகளைச் சுட்டுகிறது. இவற்றில் ஒன்பது பிரிவுகளை அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் போக்கு உள்ளதாக தேவிபிரசாத் குறிப்பிடுகிறார். இவற்றை ஆத்திகவாதம், நாத்திகவாதம் எனப் பிரித்து முறையே கடவுள் நம்பிக்கை உடையவர்கள், அற்றவர்கள்   எளிமையாக வரையறுக்கும் தன்மையும் உண்டு. ஆனால் இங்கு கடவுள் முக்கியமல்ல; வேதங்கள் மட்டுமே முதன்மையானது. 

  வேதங்களை அப்படியே ஏற்பது அதன் மேலாண்மையை ஒப்புக்கொள்வது ஆத்திகவாதம் ஆகும். இத்தகைய தத்துவப் பிரிவுகளுக்கு வைதீகம் என்று பெயர். மாறாக வேதங்களை மறுக்கும், புறக்கணிக்கும் நாத்திகவாதப் பிரிவுகள் அவைதீகம் எனவும் வரையறுக்கப்படுகின்றன. 

  வைதீகத் தத்துவங்கள் பூர்வ மீமாம்சம், உத்திர மீமாம்சம் (வேதாந்தம்), சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் என ஆறாக பகுக்கப்படுகின்றன. இவற்றில் வேத மேலாண்மையை ஏற்றுக்கொண்டது முதலிரண்டு மட்டுமே. இங்கு வழிவழியாக வேதத்திற்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டு திணிப்பு வேலைகள் தொடர்ந்ததுதான் இந்தியத் தத்துவ வரலாற்றின் படிப்பினை. 

   அவைதீக மரபுகளாக உலகாயதம் (சாருவகம், பிரகஸ்பத்தியம், பொருள் முதல்வாதம்), சமணம், பவுத்தம் ஆகிய மூன்றையும் தேவிபிரசாத் ஆகிய மூன்றைக் குறிப்பிடுகிறார். 

   நான்காவதாக ஆசிவகத்தையும் சேர்க்கலாம். புத்தரின் சமகாலத்தில் அவருடன் இருந்து கருத்து முரண்பாட்டால் பிரிந்து சென்று ஆசிவகம் என்கிற தனி தத்துவப் பிரிவைத் தொடங்கிய மற்கலி கோசலர். பேரா.க.நெடுஞ்செழியன் தமிழர் மதம் ஆசிவகம் என்று அவரது ஆய்வு நூல்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

   இம்மாதிரியான அவைதீக தத்துவ மரபுகளையும் ஒன்றாக இந்து மரபாக கருதும் அபத்தம் இங்கு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாம் எங்களிடம் இருக்கிறது என்று காட்டுவதற்கு இது பயன்படுகிறது.  இவற்றை மறுப்பதற்காக தர்க்க நியாயங்கள் அற்ற இந்துமதம் இவைகளை அழிப்பதற்காகவே வரலாறு நெடுகிலும் இவ்வாறு செய்து வந்திருக்கிறது. 

   இந்துமதத்தில் ஒன்றுமே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஏன் இல்லை? வேதங்கள் இருக்கிறதே! முதல் வேதமாகவும் முதன்மையானதாகவும் கொண்டாடப்படும் ரிக் வேதத்தின் 10 வது அத்தியாயம் ‘புருஷ சூக்தம்’ வருணதர்மத்தைத் தெளிவாக வரையறுத்து விடுகிறதே. இது ஒன்று மட்டும் போதுமே இந்துப்பெருமையைச் சுட்ட. 

    பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்ற நால்வர்ணக் கோட்பாடுதான் இந்துமதத்தின் அடித்தளம். 

   இந்த அடித்தளத்தை அடித்து நொறுக்கியவை அவைதீக மதங்கள். வேதகாலத்திற்கு முன்பே நீண்ட தத்துவப் பாரம்பரியம் இங்குண்டு. அவைகள் எல்லாம் இந்து (வைதீக)  மரபுகள் அல்ல. 

   வேதமே இந்துமத அடிப்படை. அவைதீக மரபுகளில் வேத மறுப்பு முதன்மையானது. எனவே இது மத மறுப்புத் தத்துவமாகவும் விளங்குகிறது. வேதத்தின் சாரம் வர்ணப்பாகுபாடு. ஆகவே அவைதீகம் வர்ண எதிர்ப்பை மேற்கொள்கிறது. இந்த வர்ண தர்மமே (?!) இன்றைய சாதிமுறைக்கு ஊற்று. சாதி எதிர்ப்பு வைதீக தத்துவங்களில் வெளிப்படுவது இயல்பானது. 

   வைதீக, அவைதீக வேறுபாடுகளை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளாமல் ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் இரு பாடங்கள் எழுதப்பட்டுள்ளது இங்குள்ள அவலம். தமிழ் சமணம், தமிழ் பவுத்தம், தமிழ் ஆசீவகம் என்ற நீண்ட பாரம்பரியப் பெருமையுடைய தமிழ்நாடு, இன்று சோழப்பெருமைகள் உள்ளிட்ட பல்வேறு வைதீகப் புதைசேற்றில் சிக்குண்டு உண்மையான மரபுகளை இன்று வரை தொடர்ந்து அழித்துவருவது மிகுந்த வேதனைக்குரியது.


15. மகாத்மா காந்தி மட்டுந்தான் சனாதனியா?    
                              
            ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் ‘தமிழகத்தின் தற்கால சமூகச்சிக்கல்கள்’ என்றொரு பாடம் இருக்கிறது. அதில் சாதி முறை பற்றிச் சொல்லும்போது  மகாத்மா காந்தி உள்ளிட்ட சனாதன ஆதரவாளர்கள் தீண்டாமையை மட்டும் ஒழிக்க முற்பட்டு, வர்ணத்தை நியாயப்படுத்தியதும் ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி சாதியை வெறுத்து வர்ணத்தை நியாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

  லாலா லஜபதி ராய், கோபால கிருஷ்ண கோகலே, பால கங்காதர திலகர், வாஞ்சி அய்யர், சுப்ரமணிய பாரதியார், வ.வே.சு.அய்யர், சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார் போன்ற பலரைப் பற்றி பாடநூற்களில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இவர்கள் யாரையும் சனாதனி என்று எவ்விடத்திலும் சொன்னது கிடையாது. 

  இங்கு காந்தி மட்டும் சனாதனியாக்கப்படுவதுடன் வேத மேன்மையை வலியுறுத்தியதோடு நில்லாது சுத்தி இயக்கம் மூலம் மதம் மாறிய இந்துக்களை மீண்டும் தாய் மதத்தில் சேர்க்கும் சடங்கை நடத்திய சுவாமி தயானந்த சரஸ்வதியை காந்தியுடன் இணைப்பது பொருத்தமானதுதானா?
  சனாதனி என்பவர் யார்? ரிக் வேதம் வகுத்துள்ள நால் வர்ணம் எனும் வர்ணாசிரமக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் பிறப்பால் உயர்வு – தாழ்வு, சாதி, தீண்டாமை ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களை சனாதனிகள் என்றழைக்கலாம். இதற்கு காந்தி பொருத்தமானவரா? 

  தீண்டாமை, வர்ணாசிரமம் ஆகியவை பற்றிய காந்தியின் கருத்துக்களுக்கு தமிழ்நாட்டு சனாதனிகள் ஆற்றிய எதிர்வினை குறித்து ‘காந்தியும் தமிழ் சனாதனிகளும்’ என்னும் நூலில் அ.மார்க்ஸ் விளக்குகிறார். காந்தியை எதிர்த்து மா.நீலகண்ட சித்தாந்தியார் 1932 இல் வெளியிட்ட ‘தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம் (தடை)’ 67 பக்க குறுநூல் (முதல் பாகம்) முழுதும் பின்னிணைப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் காந்தி மீது இவர்கள் கக்கும் வெறுப்பு வெளிப்படுகிறது. இந்த காந்தி மீதான வெறுப்பை அவரது கொலையின் மூலம் தீர்த்துக் கொண்டது காவி கும்பல். 

   காந்தி வருணாசிரமத்தை ஏற்றார். ஆனால் அதன் அடிப்படையிலான தீண்டாமை, விதவைக் கொடுமை, குழந்தைத் திருமணம், தேவதாசி முறை போன்ற இந்துமதக் கொடுங்கோன்மைகளுக்கு எதிராக இருந்தார். தலித்கள் ஆலயப்பிரவேசம் செய்ய காரணமானார்.

  வருணாசிரம தர்மம் காந்தி கருத்தென்ன? அவரே சொல்கிறார் கேளுங்கள்.  “இந்து சம்யத்தில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணங்களும் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், சன்னியாசம், வனபிரஸ்தம் என்ற நான்கு ஆசிரமங்களும் இருக்கின்றன. அதுதான் வருணசிரம தர்மம் என்றழைக்கப்படுகிறது.’ (மேலே குறிப்பிட்ட நூலில் உள்ள மேற்கோள் – தமிழ்நாட்டில் காந்தி –அ.இராமசாமி)

   நால் வர்ணத்தை ஏற்றுக்கொண்ட காந்தியால் இவை பிறப்பால் வருபவை என்னும் கருத்தை ஏற்க இயலவில்லை. சாதி, தீண்டாமை, தேவதாசி முறை உள்ளிட்ட இதர கொடுமைகளையும் அவரால் பொருத்துக் கொள்ளமுடியவில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போராடவும் எதிர்க்கருத்துகளைப் பதிவு செய்யவும் துணிகிறார். இவற்றைத் தாங்கமுடியாமல் இறுதியாக அவரைப் படுகொலை செய்யவும் இத்தகைய வருணசிரமிகளும், பார்ப்பனர்களும் துணிந்தனர்.

  காந்தியத்தை கருத்தியல் ரீதியாக எதிர்கொண்ட அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்ட்கள் மட்டுமே காந்தியின் எதிரிகளாகக் கருதும் போக்கு இங்குண்டு. காந்தி உயிரோடு இருக்குபோது மிகக்கடுமையாக எதிர்த்தும் அவரைக்  கொலை செய்து, இன்றும் காந்தி வதத்தைக் கொண்டாடும் வருணசிரமிகளும், பார்ப்பனர்களும்தான் காந்தி மற்றும் காந்தியத்தின் உண்மையான எதிரிகள் என்பதை  இந்நூலில் அ.மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார். 

   உண்மையான சனாதனிகளைத் தவிர்த்துவிட்டு மகாத்மா காந்தி மீது மட்டும் சனாதன முத்திரை குத்துவது நியாயமா என்பதை யோசிக்கவேண்டும். இந்து வெறியர்களுடன் காந்தியை ஒப்பிடுவதும் தவறானது. காந்தியின் படுகொலைக்குப் பின்னும் தொடரும் சதி முறியடிக்கப்பட வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக