“தேசியம்
ஓர் கற்பிதம்”, எனவே தேச வெறியனாக இருப்பதைவிட தேசத் துரோகியாகவே இருக்க நான் விரும்புகிறேன்!
– மு.சிவகுருநாதன்
“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்.
‘தேசம் என்பது ஓர் கற்பிதம் செய்யப்பட்ட சமுதாயம்’
என்பது பென் ஆண்டர்சனின் கருத்து. ‘தேசியம் ஓர் கற்பிதம்’ குறித்து 1990 களில் விவாதங்களை
‘நிறப்பிரிகை’ ஏற்பாடு செய்து அவற்றைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டது. ‘தேசியம் ஓர்
கற்பிதம்’ என்னும் இந்நூற்தொகுப்பு http://www.padippakam.com/document/M_Books/m000453.pdf என்ற
இணைப்பில் pdf ஆகக் கிடைக்கிறது.
உலக அளவிலும்
ஏன் தமிழ்ச்சூழலில் கூட தேசியம் குறித்த நிறைய விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இது இயற்கையானதல்ல.
கட்டமைப்படுவது அல்லது உருவாக்கப்படுவதாகவே இருக்கின்ற தன்மையை வரலாறு நமக்கு உணர்த்தும்
படிப்பினையாக உள்ளது.
தேசிய உருவாக்கத்தின் பாசிசக் கூறுகள் மிகவும்
மோசமானவை. ஹிட்லர், முசோலினி காலத்தில் உலகக்
கவனிப்பைப் பெற்ற தேசிய வெறியூட்டல்கள் இன்றும் தொடர்பவை.
1947 க்கு
முந்திய இந்தியாவில் காலனியாதிக்கக் காலத்தில் தேசிய உணர்வு மத அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
பாரத தேசம், ஆரிய சம்பத்து என்றெல்லாம் இந்து மத அடிப்படையில் இங்கு தேசிய உணர்வு கட்டமைக்கப்பட்டது.
அதனால் இதர மதச்சிறுபான்மையினர் இந்த இந்து தேசியத்திலிருந்து விலகி நிற்க வேண்டியதாயிற்று.
புவியியல் அடிப்படையிலான தேசியங்கள் கூட ஒருபடித்தானது
அல்ல; காலந்தோறும் மாறக்கூடியது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சூடான் நாட்டவர்களுக்கு
ஓரே அடையாளம் இன்று தெற்கு, வடக்கு எனப் பிரிந்துள்ளதல்லவா? பங்காளாதேஷ் அடையாளத்திற்கு முன்னதாக அவர்கள் பாகிஸ்தான் அடையாளத்தைத்தானே
பங்காளாதேசிகள் சுமந்தனர்? எனவேதான் இந்தக் கற்பிதங்கள் நிலையானவை
அல்ல என்கிறார்கள்.
தமிழ்
ஈழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகள் மற்றும் தமிழ் தேசிய சக்திகளால் கட்டப்பட்ட
தேசிய உணர்வு சிறுபான்மை இஸ்லாமியர்களை வெளியேற்றவும் கொலை செய்யவும் துணிந்தது.
இப்போதும் கூட மொழிவழித் தேசியங்கள் பலர் கட்டமைக்கின்றனர்.
இதில் சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் யாரையாவது வெளியேற்றுவது என்கிற ரீதியில்தான்
இங்கு மொழிவழித் தேசியம் பேசப்படுகிறது. இதில் காந்தி போன்றோர் வலியுறுத்திய இணைத்துக்
கொள்கிற தன்மைக்கு இங்கு இடமில்லை.
இன்று தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ் தேசியம்
பெங்களூரு குணா போன்றவர்களின் தொடர்ச்சியே. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ (1995) என்ற
நூலின் மூலம் திராவிட இயக்கத்தை தெலுங்கர்கள், கன்னடர்கள் இயக்கமாகவும், இதுவே தமிழைப்
புறந்தள்ளி திராவிடத்தை முன்னிறுத்தியதாக கருத்துருவாக்கினார்.
இவரை நேரடியாகவோ மறைமுகமாகவோப் பின்பற்றுபவர்கள் புதுப் புதுப் பெயர்களில் தமிழ்தேசியர்களாகவும்
தமிழ்தேசியத்தைக் கட்டமைப்பவர்களாக உலா வருகிறார்கள்.
இவர்களில் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், சீமான் உள்ளிட்ட
பலர் அடக்கம். பிற மொழியினரை மட்டும் வெறுக்கும் இவர்கள் சாதி, மத வெறியர்களுடன் கூடிக்
கும்மியடிப்பதை நிறுத்துவதேயில்லை. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கன்னட வடுகர் என்று
சொல்லி பெரியாரின் படத்தை வைக்க மறுத்த இவர்கள் இல.கணேசன், அர்ஜூன் சம்பத் போன்றவர்களுடன்
உறவுகொள்ளத் துளியும் தயக்கம் காட்டுவதில்லை. இதுதான் தேசியங்கள் உறவாடும் புள்ளி.
வேற்று மொழிபேசும் மக்கள் இங்கு வசிக்கக்கூடாது.
அவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்பட எந்தச் சலுகையும் வழங்கப்படக் கூடாது என தமிழ்த் தேசிய
வெறியர்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்றனர். தேசியத்தின் பாசிச முகத்திற்கு
இதைவிட வேறு உதாரணங்கள் இருக்கமுடியுமா?
பற்றுக்கும் வெறிக்குமான எல்லைக்கோட்டை மிக மெல்லியது,
அல்லது இல்லை என்று கூட சொல்லலாம். சாதிப்பற்று,
மொழிப்பற்று, இனப்பற்று, தேசப்பற்று ஆகியன சாதிவெறி, மொழிவெறி, இனவெறி, தேசவெறிகளாக
மாறிப்போவதை யாராலும் தடுக்கமுடியாது.
இத்தகைய தேசிய உருவாக்கங்கள் பிறரை எதிரிகளாக முன்நிறுத்துகின்றன.
எனவே அவர்களை வெறுப்பது, விரட்டுவது முடிவாக
அழிப்பது என்பதெல்லாம் தேசியக் கடமைகளாகி விடுகின்றன. எனவேதான் பாசிச வெறியாட்டங்கள்
நடக்கின்றன.
தேசிய உணர்வு வல்லாதிக்க உணர்வையும் சேர்த்தே வளர்க்கிறது.
மேலும் தேசியப் பெருமிதங்களை கட்டமைக்கிறது. தொல்குடி தமிழ்ப்பெருமை, லமூரியா கணடம்,
சோழப்பெருமை, சைவபெருமை, களப்பிரர் வெறுப்பு, தெலுங்கு நாயக்கர்கள் வெறுப்பு போன்றவை
தமிழ்த் தேசியப் பெருமிதங்கள் என்றால் வேத மேன்மை, பாரத வர்ஷத்தின் பெருமை, புராண –
இதிகாச மேன்மை, சிவாஜி, ராஜபுத்திரர்கள் உள்ளிட்ட இந்து மன்னர்களின் கீர்த்திகள், இஸ்லாமிய
எதிர்ப்பு, அவைதீக பாரம்பரிய எதிர்ப்பு என இந்து கலாச்சாரத் தேசியப் பெருமிதங்களாக
உள்ளன. இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்று இவர்கள் சொன்னாலும் இவையிரண்டும் ஒன்றுபடும்
புள்ளிகளாகவே இன்றும் இருக்கின்றன.
அகண்ட
பாரதம், வல்லரசு போன்ற கருத்தாக்கங்கள் இதனூடாகவே உற்பத்தியாகின்றன. எனக்கு சுதந்திரத்
தினப் பாடல்கள் இரண்டு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் ஆப் வழியாக வந்தது. ஒன்று இந்துவாலும் மற்றொன்று இஸ்லாமியராலும் எழுதப்பட்டது.
இரண்டிலும் உள்ள ஒற்றுமை இந்தியா வல்லரசாகவேண்டும் என்பதே. தேசிய வெறியூட்டக்கூடிய
மதவெறி, மொழிவெறி பாசிச சக்திகள் வல்லரசுக் கருத்தாக்கத்தை அனைவரது ரத்தத்திலும் கலந்து
விட்டனர். ஒரு நாடு வல்லரசாணும் என்றால் யாரெல்லாம் சாகணும் என்ற மற்றவர்கள்
(others) பட்டியலை இந்த பாசிஸ்ட்கள் தொடர்ந்து உருவாக்கிகொண்டே இருப்பார்கள்.
1991 க்கு பிறகு உலகமய புதிய பொருளாதாரக் கொள்கைகள்
நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள் பேசும் இந்திய தேசியம் என்பது எவ்வளவு செயற்கையானது
என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேட் இன் இன்டியா என்று பேசிய சுதேசிகள் இன்று
மேக் இன் இன்டியா என்று முழங்குகிறார்கள். நாட்டையே பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிடம்
விற்றுவிட்டு தேசியம் பேசுவது எதற்கு? இனி தேசியத்தை மூலதனமே நிர்ணயிக்கும். இந்த்த
தேசியவாதிகள் வேறுவேலைகளைப் பார்த்துக்கொள்வது நல்லது.
இங்கு நரேந்திர மோடி, மன்மோகன் சிங் போன்றவர்கள்தான்
மிகச் சிறந்த தேசபக்தர்கள் எனும் நிலையில்,
தேச வெறியனாக இருப்பதைவிட தேசத் துரோகியாகவே இருக்கவே
நான் விரும்புகிறேன்!
தேசிய உணர்வு,
பற்று என்கிற பெயரில் நடைபெறும் கூத்துக்களையும் கொண்டாட்டங்களையும் வெறுக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக