புதன், ஆகஸ்ட் 12, 2015

மதச்சார்பற்ற பள்ளிகள் சாத்தியமில்லையா?



மதச்சார்பற்ற பள்ளிகள் சாத்தியமில்லையா?       - மு.சிவகுருநாதன்


      தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மழைவேண்டி யாகம் நடத்தி அது தொடர்பான அறிக்கை அனுப்பச் சொன்னது இங்கு விவாதத்திற்குரியதாக ஆனது. ஆனால் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசி உதவி பெறும் பள்ளிகளில் அன்றாடச் செயல்பாடுகள்  மதச்சார்பற்றதாக இல்லை.  சிறுபான்மையினர் பள்ளிகளில் வரையறைக்குட்பட்ட சில விதிவிலக்குகள் உண்டு.

     பள்ளிக்கூடங்களில் மத நிகழ்வுகளுக்கு இடமில்லை. கடவுள் சிலைகள், மதக்குறியீடுகள், படங்கள் வைத்திருக்கக் கூடாது. மத வழிபாடுகள் நடத்த அனுமதியில்லை. பள்ளிகளில் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்தும் மதநீக்கம் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது நியதி. ஆனால் இவற்றை அரசும் கல்வித்துறையும் துளியும் கடைபிடிப்பதில்லை. பள்ளிகளில் ஆயுதபூசை நடத்தக் கூடாது என்ற சுற்றறிக்கை மற்றும் நீதிமன்ற உத்தரவைக்கூட அமல்படுத்த இவர்கள் முடிவதில்லை. 

      அரசு மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் கூட சட்டங்களைச் செயல்படுத்தாத நமது அரசுகள் சுய நிதி தனியார் பள்ளிகளை என்ன செய்யும்? இருப்பினும் இத்தகைய விதிமுறைகள் பள்ளிகள் அனைத்திற்குப் பொதுவானவை என்பது உண்மை. 

    பெரியார் பிறந்து, வாழ்ந்த  மண் என்ற பெருமை பேசுவதோடு நம் தலைவர்களின் பணி முடிந்துவிடுகிறது. மத நீக்கச் செயல்பாடுகள் மிகவும் அடிப்படையான பள்ளிக் கல்வியிலேயே செயல்படுத்த வேண்டியது. ஆனால் இங்கு நடக்கின்ற மதக்கூத்துக்களுக்கு அளவில்லை. பள்ளிகளில் நடைபெறும் சுதந்திர தின, குடியரசு தின விழாக்கள்கூட மதச்சாயமின்றி நடத்தப்படுவது இல்லை. 

  வீட்டில் செய்யவேண்டிய மதச்சடங்குகளை பள்ளிகளில் நிகழ்த்தினால் பள்ளிகளின் அன்றாடச் செயல்பாடுகள் எங்கு நிகழும்? ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள மதச் சுதந்திரத்தை அவர்கள் வீட்டில் கடைபிடிக்கட்டுமே. பெற்றோர்கள் தனது இல்லங்களில் செய்ய வேண்டியனவற்றை பள்ளிகள் அபகரித்துக் கொள்ளக்கூடாது. 

    பள்ளிகளில் நடக்கும் சில மதச்சார்பு நடவடிக்கைகளைத் தொகுத்துக் கொள்வோம்.


  •  பெரும்பாலான பள்ளிகள் திங்களன்று பள்ளித் தொடங்கும் நிகழ்வில் மாணவர்கள் செருப்பு போட அனுமதிப்பதில்லை.
  •  தேசிய கீதம் பாடும்போது நேராக நின்றாலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது இரு கைகளையும் கூப்பிய வண்ணம் நிற்க வைக்கப் படுகின்றனர்.
  • தேசியக் கொடியேற்றும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அப்போது காலணிகளைக் கழற்றி வைத்துவிடுகின்றனர்.
  • வகுப்பறைகளில் சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு இந்துக்கடவுள்களின் படம் மாட்டப்பட்டோ அல்லது ஒட்டப்பட்டோ இருக்கும்.
  • இப்படங்களுக்கு மாணவர்கள் பூ அல்லது மாலைபோட்டு வழிபடுவது அன்றாட நிகழ்வு.
  •   புதிய கட்டிடங்களுக்கு இந்து மதச் மரபுப்படி அடிக்கல்நாட்டுதல் என்ற பெயரில் பூமி பூசைகள் நடக்கின்றன.
  • வீடுகளில் செய்வதைப்போல புரோகிதர்களைக் கொண்டு கணபதி ஹோமம் நடத்தி புதுக்கட்டிடங்கள், பள்ளிகள் குடிபுகுதல் நடத்தப்படுகின்றன.
  • சரஸ்வதி பூசை, ஆயுத பூசை கொண்டாடத பள்ளிகளை பார்க்கவே முடியாது.
  • பள்ளிகளில் பண்டிகை விடுப்புகளுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கைகளில் சரஸ்வதி பூசை, தீபாவளி, பொங்கல் ஆகியவற்றிற்கு மட்டும் வாழ்த்துகள் தெரிவிக்கப்படும். இதர சிறுபான்மையினர் பண்டிகைகள், விழாக்களுக்கு வெறும் விடுமுறை அறிவிப்பு மட்டுமே இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி இப்போது செய்வதை தமிழகப் பள்ளிகள் பன்னெடுங்காலமாக செய்து வருகின்றன.
  •   தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் சீருடை தவிர்த்த பிற வண்ண ஆடைகள் அனுமதிக்கப்படும். பிற மதப் பண்டிகைகளுக்கு இத்தகைய அனுமதி கிடையாது.
  • சபரிமலை, மேல்மருவத்தூர் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு பல  நாட்கள் கழுத்தில் மாலை, தோளில் வண்ணத்துண்டு, சில சமயங்களில் வண்ண வேட்டி அனுமதிக்கப்படும். ஆனால் ரமலான் மாதத்தில் தொப்பி வைக்கவோ மதிய நேரத் தொழுகை நடத்தவோ முடியாது.
  •    பள்ளிகளில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களின் படங்கள் தேர்தல் நேரத்தில் அகற்றப்படும். பிறகேன் அப்படங்களை அங்கு மாட்டவேண்டும்?  ஓர் உதவிபெறும் பள்ளியில் உள்ள 50 -- க்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் அப்துல் கலாம் (மறைவுக்கு முன்பு. இனி சொல்ல வேண்டியதில்லை.) படம் மாட்டப்பட்டிருந்தது. இது எதன் குறியீடு? (அரசு உதவி பெறும் பள்ளி என்பதே பெரும்மோசடி. இங்குள்ள பாதிக்கு மேற்பட்ட வகுப்புகள் சுயநிதிப் பிரிவுகளுக்கானவை.)
  •   பத்து, பனிரண்டு வகுப்பு மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அருகிலுள்ள இந்துக் கோயில்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அர்ச்சனைகள், சிறப்பு பூசைகள், யாகங்கள் நடத்துதல். உதாரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் அருகேயுள்ள சரஸ்வதி கோயிலுக்கு அழைத்துச் செல்லுதல். எதிர்த்தால் கல்விக்கடவுள், அது இது என்ற நீண்ட வியாக்கியானம் நடக்கும். சரஸ்வதியை அனைத்துப்பள்ளிகளும் அங்கீகரிக்கப்பட்ட (?!)  கல்விக் கடவுளாகவே ஆக்கிவிட்டிருக்கின்றன. பெற்றோர்கள், மாணவர்களின் உரிமைகளில் ஏன் பள்ளி தலையிடுகிறது? வீட்டில் செய்யவேண்டிய அல்லது செய்ய விரும்பாத பணியை பள்ளிகள் திணிப்பது அராஜகம்.
  • தேர்வுக் காலங்களில் இந்துத்துவ அமைப்புகள் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க  அனுமதியளித்தல். அப்பிரசுரங்களில் உள்ள மந்திரங்கள், ஸ்லோகங்களைப் படிக்க வலியுறுத்துதல். (இது குறித்து எனது வலைப்பூ மற்றும் முகநூலில் தனிக்கட்டுரை உள்ளது. பார்க்க இணைப்பு:  பள்ளிகளில் இந்துமத அடிப்படைவாத பரப்புரை http://musivagurunathan.blogspot.in/2015/02/blog-post_11.html
  •   பள்ளிகளில் எந்த விழாவை இந்து மதச்சடங்கைப் போல் நடத்துதல்.
  • ஆண்டு விழாக்கள் மற்றும் மாறுவேடப் போட்டி போன்றவற்றில் மத நல்லிணக்கம், ஒற்றுமையை வலியுறுத்துகிறோம் என்கிற பெயரில் மூன்று மாணவர்களுக்கு முறையே பூணூல், இஸ்லாமியர் குல்லா,  சிலுவையுடன் கிருஸ்தவ பாதிரியார் என மாணவர்களைக் கொண்டு அபத்தமாக வேடமிட்டு நடிக்க வைப்பது. பூணூல் இந்துக்கள் அனைவருக்கும் பொதுவானதா? (பொதுவாக இந்துமதத்தில் சூத்திரர்களுக்கு அவர்களது திருமணம் மற்றும் தாய் – தந்தை இறப்பிற்கு இறுதிச்சடங்கு, கருமாதி செய்ய மட்டுமே இடம் மாற்றி பூணூல் அணிவிக்கப்படுவது இங்கு வழக்கமாக உள்ளது.)
  • வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கல்வி பற்றிய எவ்விதப் புரிதலுமின்றி குருகுலக் கல்வியின் புகழ் பாடுதல். இதில் ஆசிரியர்களுக்கு பங்குண்டு.
  • பாடத்திட்டம், பாடநூலாக்கத்திலும் மதநீக்கம் நடைபெறவேயில்லை. குறிப்பாக தமிழ், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை முக்கால் வாசி இந்துத்துவ பாடத்திட்டங்களாகவே அமைக்கப்பட்டுள்ளன.
  • வகுப்பறையில் ஆசிரியர் செயல்பாட்டில் மத அடையாளங்கள் தவிர்க்கப்படுவதில்லை. ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானவர் என்ற எண்ணத்தை விதைக்கவேண்டிய அவசியமல்லவா?
  • மிகத்தவறான இந்துத்துவக் கருத்தாக்கங்களை தெரிந்தோ, தெரியாமலோ மாணவர்களிடம் விதைக்கக்கூடிய பல ஆசிரியர்கள் உள்ளனர். “பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்.” என்கிற மகாகவி பாரதியின் பாடலுக்கு “இங்குள்ள பள்ளிவாசல் அனைத்தையும் இடித்துவிட்டு கோயில் கட்டுவோம்.” என்று பாடம் நடத்தும் ஆசிரியர்களும் இங்குண்டு.
  • சமூகத்தில் குற்றங்கள் நடக்கும்போது பள்ளிகளில் ஒழுக்கக் கல்வி கற்பிக்காததுதான் இதற்கெல்லாம் காரணம் என அடிக்கடி குரலெழுப்பப்படுகிறது. இவர்கள் வலியுறுத்துவது மதக்கல்வி. இதன் மூலம் ஒழுக்கத்தையோ சமத்துவத்தையோ உண்டுபண்ண முடியாது.

    
 இந்து சம்பிரதாயம் நல்லதுதானே! இதில் என்ன குறை கண்டீர்கள்? என்றும் சிலர் கேட்கலாம். ஒவ்வொன்றாக விளக்க இங்கு இடமில்லை. ஒன்று மட்டும் சொல்லி முடித்துக் கொள்வோம். கை கூப்பி வணக்கம் செலுத்துவது பெருமை என்று நினைத்துவிடாதீர்கள். அது ஓர் வகைத் தீண்டாமை; மாற்றானைத் தொடாமலிருக்க இந்து மதம் செய்த, செய்யும் சதி.

   இதனால் என்ன ஆகிவிடக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். இதுதான் வெறுப்பு அரசியல் மற்றும் சகிப்பின்மையின்  ஊற்றுக்கண் என்பதை மறந்துவிட வேண்டாம். அறிந்தோ, அறியாமலோ அனைவரும் இம்மாதிரியான ஓர் நெருக்கடியில் சிக்கியிருக்கிறோம் என்ற உண்மையாவது புரிந்துகொள்வது அவசியம். இந்தப் பெரும்பான்மைவாத பாசிசம் மிகவும் வன்முறையானது. இது அழிவிற்கே நம்மை இட்டுச்செல்லும். 

   பற்றிற்கும் வெறிக்குமான எல்லைக்கோடு மிக மெல்லியது. எனவே பற்றுக்கள் அனைத்தும் இறுதியில் வெறியாகவே மாறும். சாதி, மதம், மொழி, தேசம் இவையனைத்திற்கும் இது பொருந்தும்.  ஓரளவிற்கு நடுநிலையாக , பாரபட்சமற்ற முறையில் செயல்படுவதாக நினைப்போர் மத்திலும் இத்தகைய எண்ணங்கள் குடி கொள்வது மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும். 

இங்கு ஓர் முகநூல் விவாதத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.  

     இந்தக் கல்வி ஆண்டின் (2015-2016) முதல் கலை வழிக்கற்றலுக்கான பயிற்சிப் பட்டறை நாகையில் நடைபெறுவது குறித்த அழைப்பு முகநூலில் காணப்பட்டது. புனித ரமலான் (18.07.2015) அன்று ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு, கல்வி குறித்த மாற்றுப்பார்வையை முன்வைக்கும் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டது. இவர்களது இம்முயற்சி பாராட்டத்தக்கது என்பதில் துளியும் அய்யமில்லை. வணிகமய இன்றைய கல்வியில் இத்தகைய முயற்சிகள் மிகவும் முக்கியமானவை. 

    ஆனால் ரமலான் அன்று நடத்தப்பட்டது எனக்கு நெருடலாகத் தோன்றியது. அதனால் முகநூலில் கீழ்க்கண்ட பின்னூட்டத்தை இட்டேன். அதற்கு அளிக்கப்பட்ட பதிலையும் அப்படியே தருகிறேன்.
(தங்கிலிஷில் எழுதப்பட்ட பதிலை புரிதலுக்காக நான் அப்படியே தமிழில் மாற்றித் தருகிறேன்.)

 
      நன்றி... ரம்ஜான் பண்டிகை அன்று ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். இதைப் போன்று  ஓர் நிகழ்வை தீபாவளி அல்ல்து  பொங்கல்  அன்று ஏற்பாடு செய்வீர்களா?

பாஸ்கர் ஆறுமுகம்:
 
   பல்வேறு இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. விடுமுறை நாட்களை நல்ல முறையில்தான் செலவளிக்கிறோம்.

 
     நான் கேட்டதற்கு பதில் இல்லையே நண்பரே! விடுமுறையை நல்ல முறையில் செலவளிப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ரமலான் அன்று செய்வதை தீபாவளி, பொங்கலுக்குச் செய்வீர்களா? அன்றும் விடுமுறை நாள்தானே!

பாஸ்கர் ஆறுமுகம்:
 
   தயவுசெய்து எங்களது நிகழ்வுகளைப் பின்தொடர்ந்தால் உங்களுக்கு விடைகள் கிடைக்கலாம். எல்லாத்தையும் அரசியலா பாக்காதீங்க. ரமலான், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு எல்லா நாள்லயும்தான் பண்ணிட்டு இருக்கோம். நீங்க கேட்க வர்றத நேரா கேளுங்க.)

சிவகுருநாதன் முனியப்பன்:   

   மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  உங்களது நிகழ்வில் உடன்பாடு இருப்பதால்தான் இந்த விமர்சனம். வேறு யாரோ நடத்தும் பஜனையாக இருந்தால் நான் கண்டுகொள்ளப்போவதில்லை.

   நான் கேட்டதற்கு உங்களது நிகழ்வில் விடை கிடைக்கும் என்பது எனக்கு விளங்கவில்லை. இதர இந்துப் பண்டிகைகள் தினத்தில் நீங்கள் நிகழ்வுகள் நடத்திய ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். 

  ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அரசியல் இருப்பதை நீங்கள் வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால் அதுதான் நிதர்சனம். 

  நீங்கள் நடத்துவது கூட ஓர் அரசியல் நிகழ்வுதானே? இதை எப்படி மறுக்கமுடியும்? 

செல்வ ராம ரத்தினம்

   இவரின் கேள்விக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்...வழக்கம் போல தங்கள் பணியை தொடருங்கள்   பாஸ்கர் ஆறுமுகம்...  தொடரட்டும் தங்கள் சேவை...

    இவ்வாறாக விவாதம் முடித்து வைக்கப்பட்டது. 

     நான் முன்பே சொன்னதுபோல் கல்வி ஆர்வலர்கள் / தன்னார்வலர்களின் சேவையை நான் மிகவும் மதிக்கிறேன். அவற்றைக் குறைத்து மதிப்பிட  நான் விரும்பவில்லை. அவர்களது செயல்பாடுகளைப் பாராட்டுவோம். ஆனால்…?

    நான் சொல்ல வந்தது ரமலான் அரசுப் பொது விடுமுறையன்று கல்வி தொடர்பான நிகழ்வு ஏற்பாடு செய்கிறீர்களே! இஸ்லாமியத் தோழர்கள் கலந்துகொள்வதில் சிரமம் இருக்குமே! தீபாவளி, பொங்கல் அன்று இம்மாதிரியான கூட்டத்தை ஏற்பாடு செய்வீர்களா? என்று கேட்டதற்கு, இனி இதையும் கவனத்தில் கொள்கிறோம் என்று சொன்னால் முடிந்துவிட்டது. 

  ஆனால் தீபாவளி, பொங்கல் அன்றும் ஏற்பாடு செய்கிறோம் என்று சொன்னவர் அதற்கான ஆதாரத்தைக் காட்டவில்லை. மேலும் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கவிரும்புவதாகச் சொல்வது ஏற்புடையதுதான். அனைத்து மதப் பண்டிகையின்போதும் நீங்கள் இதைச் செய்யவேண்டுமல்லவா? சிறுபான்மையினர் பண்டிகைகளில் மட்டும் நிகழ்வுகள் நடத்துவது கல்விப்பணியில் அவர்களது பங்களிப்பை மறுக்கும் செயல்பாடாக எடுத்துக்கொள்ளலாமா?  இதைப் பேசுவது, கேட்பது கூட இங்கு மதிப்பற்றதாக மாறிவிடுகிறது. 

   இது மிகச் சாதாரண விடயம் என ஒதுக்கித் தள்ள இயலவில்லை. இது போன்ற நிலைப்பாடுகளை எடுப்பது எல்லோருக்கும் பழகிய ஒன்றாக உள்ளது. நமது கல்விமுறைகூட மாணவர்களை பெரும்பான்மை வாதத்திற்கு அடங்கிப்போக பயிற்றுவிக்கும் வேலையைச் செய்கிறது என்கிற உண்மை சுடுகிறது. 

   நமது அரசியல் சாசனம் மதச்சார்பின்மையைத் தெளிவாக வரையறுக்கிறது. மக்களாட்சி அமைப்புகள் நமது நாட்டின் அடிப்படைக் கொள்கையான மதச்சார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டியது அவற்றின் அடிப்படைக் கடமையாகிறது. கல்வி நிறுவனங்கள் பெரும்பான்மைவாதத்திற்கு ஆட்படாமல் மாணவர்களை சகிப்புத்தன்மையுடையவர்களாக வளர்த்தெடுக்கவேண்டும். ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறதே! இத்தகைய செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் வன்மம் உடனடியாக களையவேண்டியது அவசியம். மதச்சார்பற்ற நாட்டில் கல்வியும் மதச்சார்பற்றதாக இருக்கவேண்டியதும் அதைச் செயல்படுத்த அனைத்துத் தரப்பினரும் பாடுபடவேண்டியதும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே அமையும்.

இறுதியாக எனது கல்விக்கூட அனுபவம் ஒன்று: 
  
   நான் பத்தாம் வகுப்பை கத்தோலிக்க கிருஸ்தவப் பள்ளி விடுதியில் தங்கிப் படித்தேன். அரசுப் பொதுத் தேர்வுகளுக்கு முன்பாக விடுதி மாணவர்கள் வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்வது வழக்கம். எனக்கு பாதயாத்திரை செல்ல விருப்பமில்லை, வேண்டுமானால் பேருந்தில் வருகிறேன் என்று சொன்னபிறகு அதை நிர்வாகம் அனுமதித்தது. 

   இன்று இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பை யாரும் கேட்பதில்லை. அப்படி யாரேனும் கருத்துரைக்கவும் அனுமதி இல்லை. பெரும்பான்மை வாதத்திற்கு அடங்கிப்போக இங்கே பயிற்றுவிக்கப்படுகிறது

   அன்று எங்களுடன் விடுதிப் பொறுப்பாளர்கள் சிலர் மட்டுமே இருந்தனர். ஆனால் இன்று முழுப்பள்ளிக்கூடமே கோயிலுக்குச் செல்கிறது. கேட்பாரில்லை. இதன் நேரடி மறைமுக விளைவுகள் பாரதூரமானவை. கும்பகோணம் தீவிபத்து நடந்தபோது (ஆடி வெள்ளி)  பல ஆசிரியர்கள் பணிநேரத்தில் அங்கு இல்லை என்பது இங்கு யாராலும் பேசப்படாத மறைக்கப்பட்ட உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக