சனி, பிப்ரவரி 04, 2017

02. கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்? (பகுதி: 02)



02. கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்?

(
பகுதி: 02)

முந்தைய பதிவின் தொடர்ச்சி…

மு.சிவகுருநாதன்



(
ஜன. 30,31 – 2017 ஆகிய இரு நாள்கள்பாடத்துடன் நற்பண்புகளை இணைத்துக் கற்பித்தலும் கற்றலும்” (VITAL – Value Integrated Teaching And Learning) பயிற்சி 9, 10 தமிழ் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. அந்த அனுபவப் பகிர்வின் தொடர்ச்சி இது.)

எட்டு:

காந்தியின் பிள்ளைகள் சரியாக இல்லை.

       
இது காந்தியைப் பற்றி வைக்கப்படும் மிக மோசமான அவதூறு. காந்தியைப் படிக்காமல் போகிறபோக்கில் இவ்வகையான நச்சுப் பரப்புரை செய்யப்படுகிறது. இது என்ன மாதிரியான மனநிலையை வெளிப்படுத்துகிறது என்பது உலகறிந்த ஒன்று. ஜவகர்லால் நேருஇந்திரா காந்திராஜூவ் காந்தி என்பது போன்ற நிலை இருந்தால்தான் சரியென்பது மிகவும் அபத்தம். காந்தி அரசபதவிகளையும் அதிகாரத்தையும் ஒருங்கே எதிர்த்தவர். அவர் தன்னையும் குடும்பத்தையும் முன்னிறுத்தியவர் அல்ல.

     
காந்திக்கு 4 ஆண் குழந்தைகள். (ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ்) இதில் முதல் மகன் ஹரிலால் காந்தி மட்டும் காந்தியுடன் முரண்பட்டு, தானும் காந்தியும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக் காரணமாக இருந்தவர். காந்தியின் படுகொலைக்குப் பிறகு உண்மையை உணர்ந்த இவர் சில மாதமே உயிருடன் இருந்தார். இவரை மட்டும் வைத்து காந்தியின் ஒட்டுமொத்தக் குடும்பத்தை இழிவு செய்வது கடும் கண்டத்திற்குரியது.

      
மணிலால் காந்தி தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் போராடியவர். 25 முறை சிறை சென்றுள்ளார், 14 ஆண்டுகள் சிறை வாழ்க்கை. இவரது மகன் அருண் மணிலால் காந்தி, காந்தீய சித்தாந்த அறிஞர். எம்.கே. காந்தி அகிம்சை ஆய்வு மையத்தை அமெரிக்காவில் நிறுவியவர். துஷார் காந்தி இவரது மகன், எழுத்தாளர், அரசியல் விமர்சகர். மணிலால் காந்திக்கு சீதா காந்தி, இலா காந்தி ஆகிய இரு மகள்கள், இலா காந்தி தென்னாப்பிரிக்க விடுதலைப் போரில் பங்கு பெற்றவர், 1994 – 2004 காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்.

     
ராம்தாஸ் காந்தி 1948 –ல் காந்தியின் இறுதிச்சடங்கைச் செய்து அஸ்தியைக் கரைத்தவர். டாடாவில் எண்ணெய் ஆலையில் பணி செய்தார். ராம்தாஸ்நிர்மலா பென் தம்பதிகள் வார்தா ஆசிரமத்தில் சொந்த உழைப்பில் மிக எளிமையாக வாழ்ந்தவர்கள். 1969 -ல் இவர் இறந்த பிறகு நிர்மலா பென் தொடர்ந்து சமூகப்பணியாற்றினார்.

     
காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தண்டிக்கப்படக்கூடாது, அது காந்தியின் வழியல்ல என்று கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். ஆனால் அரசால் அது நிராகரிக்கப்பட்டது. கோட்சேவை மன்னித்துவிட்டதாக அவருக்கும் கடிதமெழுதினார். ரஜனிஷ் காந்தியை நிராகரித்து பேசியபோது, அதற்கும் உரிமை உண்டென்றார். இதுதானே காந்தியின் பாதை. இவருக்கு சுமத்ரா, கனு, உஷா ஆகிய மூன்று பெண்கள். கனு ஹார்வார்டில் கல்வி கற்ற அறிவியலாளர்.

      
தேவதாஸ் காந்தி இராஜாஜி மகள் லெட்சுமியை காதல் திருமணம் செய்துகொண்டவர். இந்தக் காதலை அறிந்த காந்தி சில கட்டுப்பாடுகள் விதித்தார், 5 ஆண்டுகள் காத்திருந்து காந்தியின் சம்மதத்துடன் இவர்கள் மணமுடித்தனர். பூனா ஒப்பந்தத்தில் காந்தியின் சார்பில் கைசாத்திட்டவர். ‘டைம்ஸ் ஆப் இன்டியாவின் ஆசிரியர் குழுவில் இருந்தார். சமூக, அரசியல் செயல்பாட்டாளர். இவருக்கு நான்கு குழந்தைகள். மூத்தவர் ராஜ்மோகன் காந்தி, வரலாற்றாசிரியர், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பணி செய்தவர், மாநிலங்களவை உறுப்பினர், எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர்.



       
இரண்டாவது மகன் கோபாலகிருஷ்ண காந்தி கவிஞர், நாவலாசிரியர் என பல பரிமாணங்கள் உடையவர்.  அயல்நாட்டு தூதர், ஆளுநர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். இவரது கட்டுரை ஒன்று பிப். 01, 2017 ‘தி இந்துநாளிதழில் வெளியாகியிருக்கிறது. படித்துப் பாருங்கள்! காந்தியம் நமக்குப் புலப்படும்.

       
மூன்றாவது மகன் ராமச்சந்திர காந்தி, தத்துவ அறிஞர். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையை நிறுவியவர். இவர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு பல்கலைக்கழங்களில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது மகள் லீலா காந்தி சமூக வரலாற்றாசிரியர், சிகாகோ பல்கலைக்கழகம். உலகில் எந்த ஒரு தலைவருக்கு இல்லாத நீண்ட மரபுத்தொடர்ச்சி காந்திக்கு மட்டுமே உண்டு. இந்த உண்மைகளை மறந்து பிரதமரின் மகன் பிரதமர், முதல்வரின் மகன் முதல்வர் என்கிற வருணாஸ்ரம, மநு நீதிக் கருத்தாக்கங்களைக் கொண்டு காந்தியின் குடும்பத்தை அணுகுவது நேர்மையல்ல.



ஒன்பது:

ஆங்கிலக் கல்விதான் நம்மை அடிமைப்படுத்தியது

      ஆங்கிலக்கல்வி பற்றிய இந்தப்புரிதல் மிகவும் தவறானது. நமது தவறான மொழிக்கொள்கைக்கு இதுவும் ஓரு உதாரணம். இந்தி, ஆங்கில மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பது வேறு. அந்த மொழிகளைப் படிப்பது வேறு. இன்றுள்ள சூழலில் இந்தி போன்ற ஒரு மொழியைப் படிப்பதைவிட ஆங்கிலம் போன்ற ஒரு உலக மொழியைக் கற்பதே சிறந்தது. 

    ஆங்கிலம் வழியாக நாம் நாம் நிறைய பெற்றிருக்கிறோம். சமஸ்கிருதம், இந்தி வேண்டும் என்று சொல்பவர்கள்தான் ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்கிறார்கள். எனவே இதன் உள் அரசியலைப் புரிந்துகொள்ள விளக்கம் தேவையில்லை. 

  தங்களது குழந்தைகளை தனியார் ஆங்கில வழிப்பள்ளிகளில் படிக்க வைத்துவிட்டு, ஆங்கிலத்தை எதிர்ப்பதாகச் சொல்வதும் தமிழ்ப் பெருமை பேசுவதும் அபத்தமின்றி வேறில்லை. பிரிட்டன் ஆட்சி வருவதற்கு முன்பு நாம் என்ன சுதந்திர நாட்டிலா இருந்தோம்? மன்னர்களிடமும் மதத்திடமும் அடைமைப்பட்டுக் கிடக்கவில்லையா? ஆங்கில மொழியாகக் கற்கப் போகிறோமா, அல்லது எல்லாமாக ஏற்றுக்கொள்கிறோமா என்பதுதான் இன்றைய கேள்வி. 



பத்து:

இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகள் 06; கடமைகள் 11.

      1976 –
ல் இந்திய அரசியல் சட்டம் பகுதி 4 -வில் 11 பிரிவுகள் (a -விலிருந்து  k முடிய)  அடிப்படைக் கடமைகளாகச் சேர்க்கப்பட்டது. கடமைகள் 11 என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம்.

    அடிப்படை உரிமைகள் 06 என்று சொல்வது தவறு.  இந்திய அரசியல் சட்டத்தில் பகுதி 3 -ல் பிரிவு 12 முதல் 35 முடிய குடிமக்களின் உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக சிலவற்றை பாடநூலில் குழந்தைகளுக்குப் பட்டியலிடுகிறார்கள். அதனாலேயே 6 உரிமைகள் என்று சொல்வது எவ்வாறு சரியாகும்? பாடநூல்கள் வேதநூல்கள் அல்ல; இரண்டும் விமர்சனத்திற்குட்பட்டதே என்கிற உண்மையை நாம் எப்போது உணர்ந்துகொள்ளப் போகிறோம்?



பதினொன்று:

மாற்றுக் கருத்துகளை ஏற்கும் மனநிலை இன்மை, முற்போக்கு முத்திரை குத்தும் மனப்பான்மை.
        கல்வியாளர் மாடசாமி  சொல்வதைப் போல ஆசிரியர்கள் ‘நிரம்பி வழிபவர்களாக’ இருப்பதை மாற்ற முடிந்தால் அது கல்வியின் வெற்றி. ஆனால் புதிய சிந்தனைகளை ஏற்காத மனநிலை, அவற்றை அறிந்துகொள்ள அல்லது விவாதிக்க இடமில்லாத மனப்போக்கு, காரண – காரியமற்ற தகவல்களை எவ்விதக் கேள்வியும் இன்றி அப்படியே ஏற்கும் தன்மை நிரம்ப விரவிக்கிடக்கிறது. சக ஆசிரியர்கள் கேள்வி கேட்பதை அனுமதிக்காதவர்கள் மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்வர்?
   புதிய கருத்துகள் வந்தால் அதெல்லாம் முற்போக்கு என்று முத்திரை குத்துகிறார்கள். தாங்கள் பிற்போக்கு அல்லது பழமைவாதிகள் என்று ஒத்துக்கொள்வதானே பொருள்! நாடு மதச்சார்பற்ற நாடாக இருப்பினும் கல்வியை மதச்சார்பற்றதாக மாற்ற முடியாத நிலையின் விளைவே இதுவாகும். இப்போது அரசே வேதக்கல்வியின் புகழைப் பாடுகிறது. அத்துடன் சேர்ந்து நாமும் தமிழ் மொழி, கலாச்சாரப் பெருமை பேசிவிட்டு போகப் போகிறோமா?

பனிரண்டு:
சொல் வேறு செயல் வேறு, இதுதான் ஆசிரியர்களின் நன்னெறியா?
    செயல் அதுவே சிறந்த சொல் என்பார்கள். ஆனால் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்னும் இரண்டக நிலையைக் படித்தவர்கள் கடைபிடிக்கலாமா? “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான், அய்யோன்னு போவான்”, என்று பாரதி வெதும்பிப் பாடியது இதைத்தானே!
  ஒருபுறம் மொழிக் கலாச்சார பெருமை; மறுபுறம் ஆங்கில வழிப் படிப்பு. சாதி முறை, மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதிலும் இரட்டை நிலைப்பாடு இருக்கலாமா? சமூக சமத்துவம் பேண ஏதாவது செய்ய வேண்டாமா?
பதிமூன்று:

திறந்த வெளிகழிப்பிடங்கள் பற்றிய குறும்படங்கள் சொல்வதென்ன?
    இன்று சூழலியல் சார்ந்த புரிதல் சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் பாடநூல்களும் ஆசிரியர்களும் இன்னும் பழைய மாவை அரைப்பது கொடுமை. கடுந்தீங்கு விளைவிக்கும் அணுக்கழிவுகள், தொழிலகக் கழிவுகள் பற்றி ஏதும் பேசாமல், பாடநூல்களும் ஆசிரியர்களும் திறந்த வெளியில் மலம் கழிப்பதைப் பற்றியே பேசுவது வேடிக்கை. மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டமும் இதே கதைதான். 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் போபால் நச்சு வாயுக்கசிவிற்கு இழப்பீடு வழங்க முடியாதது மட்டுமின்றி, அந்தக் கழிவுகள் இன்னும் அங்கிருந்து அகற்றப்படவில்லை என்பது எவ்வளவு வேதனையானது. ‘தூய்மை இந்தியா; விற்கு இவையும் அணு உலைகழிவுகளும் தெரியப் போவதில்லை.
   கார்ப்பரேட்களும் அவரது ஆதரவாளர்களும் தெருவில் மலம், சிறுநீர் கழிக்கும் இடங்களைத் தூய்மை செய்து படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்துகொள்கிறார்கள். கழிவறைகளைக் கட்டுவது குறித்து யாரும் யோசிப்பது இல்லை. வீடுகளில் கழிவறை கட்டச்சொல்லும் இவர்கள் பொது இடங்களில் ஏன் கழிவறைகளைக் கட்டி உரிய முறையில் பராமரிக்கச் சொல்வதில்லை. வெளியே செல்லும் போது கழிவறைகளை தூக்கிச் செல்லமுடியுமா என்ன?

பதினான்கு:
புராண-இதிகாசங்களின் வழியே நன்னெறிக்கல்வி.
   இந்து மத வேதங்கள், புராணங்கள், மநு நீதிக்கதைகள், ராமயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் வழியே நன்னெறிகளைப் போதிக்க முயலவது ரொம்பவும் அபத்தம். இவை பகுத்தறிவை, மாணவர்களை மழுங்கடிப்பவை மட்டுமல்ல; பிளவு படுத்துபவையும் கூட. இதைப்பற்றி நான் முன்பு குறிப்பிட்ட கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளேன். அவற்றை இங்கு தவிர்க்கிறேன்.
பதினைந்து:

ஆதாரங்கள் இல்லாமல் எதையாவது சொல்லிச் செல்லும் போக்கு.
  • அன்னை தெரசா நன்கொடை வேண்டி கையேந்தியபோது கைகளில் காறித்துப்பினர். அதைத் துடைத்துக் கொண்டு, எனக்கு அளித்தது போதும் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று கேட்டாராம்.
  • முன்னாள் மேற்குவங்காள முதல்வர் ஜோதிபாசுவிடம் தேசியகவி பாரதியின் சிலை அமைக்க அனுமதி கேட்டார்களாம். தேசியகவி ரவீந்தரநாத் தாகூர் மட்டுமே, இம்மாதிரி சொல்லிக்கொண்டு இங்கு வராதீர்கள், என்று சொல்லி அவர்களை விரட்டினாராம்.

      
அரசியல் கட்சிகளின் நாலந்தர மேடைப் பேச்சாளிகளைப் போல இம்மாதிரி ஆதாரமில்லாத கருத்துகளை உதிர்ப்பது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? நமது சமூகத்தில் ஆதாரப்பூர்வமான கருத்துகளைவிட இவற்றிற்கு பெருமதிப்புள்ளதை அறியலாம்.

     
பயிற்சி அனுபவத்திலிருந்து இரு உதாரணங்கள். இதைப்போன்ற ஒரு பயிற்சியின் போது பாடநூலில் பல்வேறு பிழைகள் இருக்கின்றன என்று சொன்னபோது, வல்லுநர்கள், அறிஞர் குழுவால் தயாரிக்கப்பட்ட பாடநூலில் சாத்தியமில்லை என்று பல ஆசிரியர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

      
பிறிதொரு தருணத்தில் சாலைகளில் நடந்து செல்வோர் (பாதசாரிகள்) நடைமேடை இல்லாத இடங்களில் எதிரே வரும் வாகனங்களைப் பார்த்தவாறு வலப்புறமாக நடக்கவேண்டும் என்பதே விதி என்று சொன்னபோதும், இல்லை என ஆட்சேபிக்கப்பட்டது. இடப்புறமாக செல்லும் விதி, வாகன ஓட்டிகளுக்குத் தானே தவிர பாதசாரிகளுக்கு அல்ல. ஆனால் இதுபோன்ற அவதூறுக் கருத்துகள் வெளிப்படும்போது எவ்வித சலனமும் ஏற்படுவதில்லை.


     
இவையனைத்தும் நாம் ஆசிரியர்கள் மீது வைக்கும் பல்வேறு விமர்சனங்களுக்கு வலு  சேர்ப்பதாகவே இருக்கின்றது. திராவிட, பெரியார் எதிர்ப்பு பகுத்தறிவு எதிர்ப்பாக உருக்கொள்கிறது. நாத்திகவாதமே இந்திய தத்துவமரபில் அடிப்படை என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று. (பார்க்க: இந்திய நாத்திகம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, வெளியீடு: பாரதி புத்தகாலயம்)
  
       
போலித் தமிழ் வெறி ஆங்கிலத்தை விலக்குகிறது. தமிழ்ப்பெருமை வெறியாக மாறுகிறது. இம்மாதிரியான உணர்ச்சிகளைத் துண்டி இளைய சமுதாயத்தை அழித்துகொள்ளும் மனநிலையில் ஆழ்த்துவது துரோகச் செயலாகவே இருக்கமுடியும்.

       
மாணவர்களுக்கு அப்துல்கலாம்ரோல் மாடலாகஇருந்துவிட்டுப் போகட்டும். பெரும்பாலான் ஆசிரியர்களுக்கு வாயாளிகள் (பிரசங்கிகள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள்) ‘ரோல் மாடலாகஇருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியது. இவர்கள் எதையும் படிப்பதில்லை. சமஸ்கிருத சுலோகங்களைப் போல நான்கைந்து பாடல்களை மனப்பாடம் செய்துகொண்டு, நீட்டி முழக்கி வாய்க்கு வந்தபடி எதையோ பேசியும் பணம் பார்க்கும் இவர்களிடம் எந்த உண்மைகளும் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் சொல்வதை அப்படியே வேதவாக்காக எடுத்துக்கொள்வது அறிவீனமாகவே போகும். சமூகப் பொறுப்புமிக்க ஆசிரியர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்

       இன்னொரு புறம் மொழி,கலாச்சார தேசியர்களின் பாதிப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது. பன்மைத்தன்மை கொண்ட நமது மாநிலம் மற்றும் நாட்டிற்கும் கலாச்சாரத் தேசியம் தேவையற்றது, மக்களை பாசிச மயப்படுத்துவது. குறிப்பிட்ட சிலரை வெளியேற்றுவது இந்த வெறுப்பரசியல் நிலைப்பாடு. மாறாக காந்தி போன்றோர் வலியுறுத்திய அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தேசியமே நமக்குத் தேவை. இவை கடந்தகால  அனுபவங்களும் வாசிப்புகளும் நமக்கு உணர்த்துபவை.

      
இம்மாதிரியான பொய்மைகளையும் பிறர் மீதான காழ்ப்பை உமிழும் கருத்துகளையும் ஆசிரிய சமூகம் கைக்கொள்ளுமானால், அது வருங்கால சமூகத்திற்குப் பெருந்தீங்காக அமையும்.

      
பயிற்சியில் கலந்துகொண்ட விரிவுரையாளர்கள், கருத்தாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது சில கருத்துகள் மட்டுமே இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. நாகரீகம் கருதி அவர்களது பெயர்கள் இங்கு தவிர்க்கப்படுகின்றன.

(முற்றும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக