வியாழன், பிப்ரவரி 09, 2017

பாலியல் கொடுமைகளும் ஆதிக்க சாதிகளின் தலித்கள் மீதான தாக்குதல்களும்

பாலியல் கொடுமைகளும் ஆதிக்க சாதிகளின் தலித்கள் மீதான தாக்குதல்களும்



தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!


நந்தினி வன்கொடுமை வழக்கை மையப்படுத்தி அணிதிரட்டுவோம்!!




நம்மிடம் நியாயம், நேர்மை இருக்கும்பொது, நமது மாண்புகளை மீட்டெடுக்க ஏன் தயங்க வேண்டும்?


– மாமனிதர் அம்பேத்கர்



பொ. இரத்தினம்,


வழக்கறிஞர்,
அலைபேசி: 94434 58118






அமைப்பாளர்


பகத்சிங் மக்கள் சங்கம் மற்றும்


அம்பேத்கர் சட்ட உதவி சங்கம்
 

(நந்தினி பாலியல் வன்கொலை வழக்கு பற்றிய வழக்கறிஞர் பொ.இரத்தினம் வெளியிட்ட அறிக்கை இங்கு நன்றியுடன் பிரசுரமாகிறது.)




        மேலவளவு, திண்ணியம், விருத்தாசலம் கண்ணகி – முருகேசன் போன்ற பல வழக்குகளில் பெற்ற அனுபவப்பாடங்கள் இம்மாதிரியான வழக்குகளில் இறங்க கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட அனைவரும் நம்மைக் கைவிடும்போது தனி ஆளாக நின்று போராடவேண்டியுள்ளது. வழக்குகளைத் தொடர்ந்து நடத்துவது பெருஞ் சிக்கலாகிறது. இருப்பினும் பல வழக்குகளில் இந்த சட்டப் போராட்டம் தொடர்கிறது.


        ஜனவரி 29, 2017 அன்று (29.01.2017) அம்பேத்கர் சட்ட உதவி சங்கத்தை சேலத்தில் முறைப்படித் தொடங்கினோம். அதில் கலந்துகொண்ட தோழர்கள் நிறைய பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். ‘தி இந்து’ நாளிதழில் பிப். 02, 2017 (02.02.2017) அன்று வந்த ‘நந்தினி கொலை வழக்கில் முதல்வரின் தலையீடு தேவை!’ என்னும் தலையங்கம் ஒரு கவன ஈர்ப்பாக அமைந்தது.


     03.02.2017 அன்று நானும் தடா. பெரியசாமி மற்றும் தோழர்கள் சிலருடன் அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் சென்று, பாலியல் கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட நந்தினியின் தாயார் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களைச் சந்தித்து வந்தோம்.


     தலித்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் காவல்துறை ஆதிக்க சாதி மனநிலையுடன் தொடர்ந்து செயல்படுகிறது. மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு காவல்துறை கொலை வழக்குப் பதிவிட்டுள்ளது. இவர்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்படவேண்டும்.


     இதே போன்று அப்பகுதிகளில் எண்ணற்ற கொடுமைகள் தலித்களுக்கு எதிராக நடந்துள்ளன. பல்வேறு கொடுமைகள் ‘கட்ட பஞ்சாயத்துக் குழுக்களால்’ வெளியே வராமல் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளன. இதற்கு தலித் இயக்கங்களே உடந்தையாக இருப்பது கொடுமையானது. இவற்றை வெளியே கொண்டுவந்து நீதி நிலைநாட்ட சட்டப் போராட்டம் மேற்கொள்ளவேண்டும்.


      இறந்த ஒருவரது குடும்பத்திற்கு உடற்கூறாய்விற்கு பின் ரூ. 4.25 லட்சமும் குற்றப்பத்தரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு ரூ. 4.25 லட்சமும் என மொத்தம் ரூ. 8.5 லட்சம் வழங்கவேண்டும் என்ற வன்கொடுமைச் சட்டப்படி, தற்போது நந்தினி குடும்பத்தாருக்கு ரூ. 4.25 லட்சம் காசோலை வழங்கப்பட்டுள்ளது.


     இழப்பீட்டைக் காசோலையாக வழங்காமல் வங்கிகளில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புநிதியாக்கி மாதந்தோறும் அதன் வட்டியை எடுக்கும் வகையில் இருப்பது நலம். இழப்பீட்டை அபகரிக்க பல்வேறு நபர்கள் உள்ளே நுழைவார்கள். பல இடங்களில் இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இழந்ததை நானறிவேன்.


      இவ்வழக்கில் தொடர்புடைய பலரைக் கைது செய்ய காவல்துறை காட்டிய சட்டவிரோத மெத்தனப் போக்கிற்கு உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உள்ளூர் காவல் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.


     நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு நீதி விசாரணை செய்ய வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம். அப்பகுதிகளில் தொடரும் தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆய்வு செய்யப்பட்டு, உரிய வழக்கு பதியப்பட்டு முறையான விசாரணை நீதிமன்றக் கண்காணிப்பில் நடைபெற வேண்டும்.


    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முதல்வர் பதவிக்குப் பொருத்தமான நபர் என வாட்ஸ் அப் தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இவரது உண்மை முகம் பலருக்குத் தெரிவதில்லை.


    மலைச்சாமி என்னும் தலித் தோழர் தலித் பேந்தர்கள் (DPI) என்னும் அமைப்பை நடத்தி வந்தார். அவர் உடல்நலிவுற்று மரணமடைந்த பிறகு மதுரையில் தடயவியல் துறையில் அரசுப்பணியில் இருந்த திருமாவளவன் அதை ஏற்று நடத்தினார்.

    சித்து வேலைகள் பலவற்றின் மூலம் இன்று தலித்களுக்கு எதிரான பலவற்றைச் செய்கின்றனர். படித்த தலித்கள் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதை ‘தலித்கள் சந்திக்கும் சவால்கள்’ என்னும் சொற்பொழிவில் ஆனந்த் டெல்தும்டே குறிப்பிடுவார்.


      ஈழப்பிரச்சினையை காசு பார்க்கும் ஒன்றாக மாற்றிய இவர்கள், ஈழப்போரில் லட்சக்கணக்கில் தமிழர்கள் அழிக்கப்பட்ட பிறகு கனிமொழி போன்றோர்களுடன் குழுவாகச் சென்று மஹிந்த ராஜபக்ச உடன் கைகுலுக்கித் திரும்பினர். சீரழிவின் மொத்த வடிவமாக இருக்கும் இவர்கள், தலித் மக்களின் விரோதிகளாகவும் உள்ளனர்.


    திண்ணியத்தில் 3 தலித்கள் ஆதிக்க சாதியினரால் சூடு வைத்து, பீ திங்க வைக்கப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர்  இவர்கள் மூவருக்கும் சால்வை போர்த்தி ரூ. 1000 அன்பளிப்பாக தந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அண்ணனுக்குப் போர்த்தவேண்டும் என்று அவற்றையும் வாங்கிச் சென்றுவிட்டனர்.


    விருத்தாசலம் கண்ணகி – முருகேசன் வழக்கில் முருகேசனது அப்பா, சித்தப்பா ஆகியோரை அழைத்து அவர்கள் தரும் ரூ. 20 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள். செத்தவன் திரும்பி வரவாப் போகிறான்? என்று நியாயம் பேசிய கதை அனைவரும் அறிந்த ஒன்று.


     இவரும் இவரது கட்சியைச் சார்ந்தவர்களும் இம்மாதிரியான சட்டவிரோதச் செயல்பாடுகள் மூலம் கோடீஸ்வரர்களாகி விட்டனர். மேலும் ஒழுக்கம் கெட்ட செயல்பாடுகளை இங்கு பட்டியலிட இடமில்லை. இது குறித்து பல அறிக்கைகளும் துண்டுப் பிரசுரங்களும் வெளியிட்டுள்ளோம்.


    தடா பெரியசாமி, சந்திரபோஸ், வடிவேல் ராவணன் ஆகியோருடன் இணைந்து வழக்கை சரியான பாதையில் கொண்டு செல்ல, திருச்சி ரயில் நிலையத்தில் கூடிப்பேசினோம். புலவர் கலியபெருமாளின் மகன் வள்ளுவன் மூலம் வழக்கைக் காலி செய்ய முயன்றபோது, நீங்கள் எல்லாம் எதுக்கு இயக்கம் நடத்துகிறீர்கள், தோழர் என்றெல்லாம் சொல்லாதீர்கள், இரத்தினம் என்று பெயரைச் சொல்லி அழையுங்கள், என்று கடுமையாகத் திட்டிய நிகழ்வும் நடந்தது.


    சிதம்பரம் தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்ட சமயத்தில் 400 க்கு மேற்பட்ட தலித் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இது தொடர்பான வழக்கு போட்டு பாதிக்கப்பட்ட வன்னியர் உள்பட பல்லருக்கு நிவாரணம் பெற்றுத் தந்தோம். இந்த நிகழ்வில் ரவிக்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரது துரோகங்கள் சொல்லி மாளாதவை.


    பின்னர் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் வெளியூரைச் சேர்ந்த (பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் மாவட்டம்) உஞ்சை அரசன் நிறுத்தப்பட்டபோது, கட்சிக்காக உழைப்பவர்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பில்லை என்கிற சலசலப்பு எழுத்தது.


   குறிப்பாக ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு 60% காரணமானவர்கள் தொல்.திருமாவளவன், சீமான், வைகோ போன்றவர்களே. பயந்தோடும் மாட்டைப் பிடிப்பது வீரமென்று சொல்லும் இவர்கள்தான் கலாச்சாரம் பற்றி கதைக்கிறார்கள். கலாச்சாரம், தேசியம் பேசும் பலர் தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி வாய் திறப்பதில்லை.

 
    குறிஞ்சாங்குளத்தில் 3 தலித்கள் பிறப்புறுப்பை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் காரணமானவர்கள் வை.கோபால்சாமி  நாயுடுவின் உறவினர்கள். இது குறித்து தலித் பெரியவர்கள் இவரிடம் பேசியபோது, ஈழப்பிரச்சினையைக் காரணம் காட்டி இதில் தலையிட மறுத்தார். ஈழத்தமிழர் அழிவிற்கும் இவர்களே காரணமாக இருந்தனர். இவரது தம்பி ரவிச்ச்சந்திரன் நாயுடு சங்கப் பொறுப்பாளர்.


    நந்தினியின் கொலையின் பின்னணியில் இந்துத்துவ இயக்கங்கள் இருக்கின்றன. இவர்களது அன்றாடப் பணியே வன்கொடுமைகள் தான். 2002 –ம் ஆண்டு குஜராத்தில் 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை கொன்று குவித்த மோடி தலைமையில் இவர்கள் பல்வேறு கொடுமைகளுக்குக் காரணமாக இருக்கின்றனர். இத்தகைய வன்செயல்களுக்கு தலித் மற்றும் பழங்குடியினரை பயன்படுத்தும் போக்கு உள்ளதை நாடறியும். குஜராத் சோதனைச்சாலையை நாடெங்கும் பரிசோதித்துப் பார்க்க இந்த கொடூரமான பாசிசக் கும்பல் திட்டமிட்டு செயலாற்றுகிறது. இவர்களை அம்பலப்படுத்துவதும் அடித்தட்டு மக்களை எழுச்சியை சரியான திசைவழியில் செலுத்தவும் நாமனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.


     தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஆய்வு செய்து தகவல்களைத் திரட்டுவோம். இது குறித்த சட்டப்போராட்டம் தொடங்க படை திரட்டுவோம். படை என்பது மிகவும் நல்ல சொல். ‘சமூக சமத்துவப் படை’ என்கிற அமைப்பைத் தொடங்க ப.சிவகாமிக்கு உறுதுணையாக இருந்தோம். அந்தப் படையின் நோக்கம் திசைமாறிவிட்டது. தேர்தலற்ற இயக்கமே இதன் கொள்கையாக இருக்க முடியும். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கருப்பு, சிவப்பு உடை சகிதம் ஸ்டாலினுடன் கூட்டத்தில் பங்கேற்று தலித் மக்களுக்கு அதிர்ச்சியளித்தார். தேர்தலை மையப்படுத்தி நடக்கும் எல்லா அநாகரீக செயல்களுக்கு துணை நின்றார்.


   பக்தசிங் பெயரை விட, ‘புத்தர் படை’ என்பதே மிகப் பொருத்தமானதாக இருக்க முடியும். வைதீக இந்து மதத்திற்கு எதிரான சங்கம் என்ற படையமைத்துப் போராடியவர் புத்தர். எனவே ‘புத்தர் படை’ அமைத்து. புத்தர், அம்பேத்கர் வழியில் நாமும் போராடுவோம்.



தொடர்புக்கு:


பொ. இரத்தினம்,


அலைபேசி: 94434 58118


தடா.பெரியசாமி


அலைபேசி: 94431 35344


நன்றி: 
 பொ. இரத்தினம், வழக்கறிஞர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக