வியாழன், மார்ச் 09, 2017

வரலாற்றெழுதியலில் தொடரும் காழ்ப்புணர்வு

வரலாற்றெழுதியலில் தொடரும் காழ்ப்புணர்வு

மு.சிவகுருநாதன்


         இருண்ட காலம் என்று திரிக்கப்பட்டு பின்னர் சங்கம் மருவிய காலம் என்று சொல்லப்பட்ட களப்பிரர் காலம் கி.பி. 250 முதல் கி.பி. 575 வரையுள்ள சுமார் 300 ஆண்டு காலம் என்பது ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியின் முடிவு.

       களப்பிரர்கள் மீதான வரலாற்று அறிஞர்களின் காழ்ப்பு கொஞ்ச நஞ்சமல்ல. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை, சதாசிவ பண்டாரத்தார், மு.அருணாசலம் பிள்ளை, ஒளவை துரைசாமிப் பிள்ளை, மா.இராசமாணிக்கனார், எம்.எஸ் .ராமசாமி அய்யங்கார் உள்ளிட்ட பலரும் களப்பிரர்கள் பற்றி வெறுப்பை உமிழ்ந்துள்ளதை அவருடைய சொற்களைக் கொண்டு உணரலாம்.

       களப்பிரர்களையும் அவ்வம்சத்து அரசர்களையும் இருண்ட குலம், இருண்ட காலம், இருள் படர்ந்த காலம், காட்டுமிராண்டிகள், கொள்ளைக்காரர்கள், கொடுங்கோலாட்சி செய்தவர்கள், நாகரீகத்தின் எதிரிகள், கலியரசர்கள், கொடிய அரசர்கள், நாடோடிகள், தமிழ் வாழ்வை – மொழியைச் சீரழித்தவர்கள், மக்களைக் கொன்று செல்வங்களைச் சூறையாடியவர்கள், தமிழ் மொழி – பண்பாட்டை அழித்தவர்கள், அரச பாரம்பரியமற்றவர்கள் என்றெல்லாம் இவர்களால் வசைமாரி பொழியப்பட்டது தமிழ் வரலாற்றெழுதியலின் அவலம். மயிலை சீனி வேங்கடசாமி ஒருவரே களப்பிரர்களின் இருண்ட காலத்தை விடியற்காலமாக்கியவர். (களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி வேங்கடசாமி)

      இந்நிலையில் நேற்றைய (08.03.2017) ‘தி இந்து’ நாளிதழில் “களப்பிரர் ஆட்சி குறுகிய காலமே நடந்தது” என்ற செய்தி வெளியாகியுள்ளது. தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி (தினமலர்) தெரிவித்ததாக இச்செய்தி சொல்கிறது. இதற்கு ‘தி இந்து’ நாளிதழ் அளிக்கும் முக்கியத்துவம் நமக்கு வியப்பளிக்கிறது.

      1986 இல் கரூரில் கிடைத்த நான்கு பிராமி எழுத்துகள் கொண்ட நாணயத்தின் வழி ஒட்டுமொத்த களப்பிரர் வரலாற்றை விண்டுரைக்கும் ஆய்வாளர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் பாங்கு உலக மகா அதிசயம்! நாணயவியல் துறையில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. ஆனால் இப்படி ஒரு நாணயத்தைக் கொண்டு களப்பிரர் வரலாற்றை வடிவமைக்கும் போதுதான் நமக்கு அய்யம் எழுகிறது. இந்த நடுநிலையற்ற வெறுப்பாய்வு நமக்கு என்ன சொல்கிறது?

      களப்பிரர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் தமிழகப் பகுதிகளை ஆளவில்லை என்றால் அப்பகுதிகள் யாரால் ஆளப்பட்டது என்பதையும் சொல்ல வேண்டுமல்லவா? களப்பிரர்கள் வழிவந்த முத்தரையர்களும் பல்லாண்டுகள் செந்தலை (தஞ்சாவூர்) யைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வரலாற்று உண்மைகளை எங்கு சென்று புதைப்பது? செந்தலைத் தூண் கல்வெட்டுகள் நமக்கு இதைத்தானே உணர்த்துகின்றன. களப்பிரர்கள் மீதான காழ்ப்புணர்வு என்று முடிவுக்கு வரும்? அறிவியற்பூர்வமான, நடுநிலையான, புறவயமான வரலாற்றாய்வுகளை நோக்கி தமிழுலகம் என்று பயணிக்குமோ என்கிற ஆதங்கமே மிஞ்சுகிறது.

      சிந்துவெளி காளை உருவத்தை குதிரையாக கணினி வரைகலை செய்து புனைவு வரலாற்றெழுதிகளை செய்ததுபோல் களப்பிரர் காலம் என்ற ஒன்று இல்லைவே இல்லை என்று புதிய புனைவுகளை உற்பத்தி செய்யவேண்டியதுதான் பாக்கி.

1 கருத்து:

கருத்துரையிடுக