வெள்ளி, மே 05, 2017

‘கல்விக் குழப்பங்கள்’ வாசிப்பு முகாம் அனுபவங்கள்



‘கல்விக் குழப்பங்கள்’  வாசிப்பு முகாம் அனுபவங்கள்

மு.சிவகுருநாதன்

        எனது முதல் நூலான பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ரன் வெளியிட்ட ‘கல்விக் குழப்பங்கள்’ நூலின் முதல் நூல் விமர்சனக் கூட்டம் வாசிப்பு முகாமாக நேற்று (04.05.2017) ஈரோடு சத்தியமங்கலம் மைசூரு சாலையில் திம்பம் அருகே கொள்ளேகால் சாலையில் உள்ள அரேபாளையத்தில் நடைபெற்றது. காங்கேயம் வாசகர் வட்டமும் சுடர் தொண்டு நிறுவனமும் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தன. 


   தோழர்கள் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சு.மூர்த்தி, கனகராஜ், சுடர் நட்ராஜ் ஆகியோர் வெகு சிரத்தையுடன் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த முகாம் இரண்டு நாள்கள் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் கோவை சதாசிவம் அவர்களின் ‘ஆதியில் யானை இருந்தது’ (விலை ரூ.40) என்ற நூலும் இரண்டாம் நாள் எனது ‘கல்விக் குழப்பங்கள்’ (விலை ரூ. 140) நூலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. விடுமுறை நாள்களில் அவர்களது சொந்தப்பணிகளையெல்லாம் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு ரூ. 180 மதிப்புள்ள இவ்விரு நூல்களை வாசித்து விவாதிக்க சில ஆயிரங்களைச் செலவு செய்து 25 பேர்கள் இம்முகாம்களில் பங்கேற்றது  பாராட்டிற்குரியது. இவர்களில் பெரும்பாலானோர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை, திருப்பூர், பல்லடம், சேலம்,  கோவில்பட்டி, அந்தியூர், கரூர், திருச்சி போன்ற தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். 



    இயற்கையோடு இணைந்து நிகழ்ந்த முதல் நாளில் என்னால் பங்கேற்க இயலாமல்போனது வருத்தமே. பண்ணாரியிலிருந்து 27 கொண்டை ஊசி வளைவுகளின் முடிவில்  திம்பம் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1150 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனைத் தாண்டி இயற்கை வனப்புமிக்க அரேபாளையம் மைராடா  பயிற்சி மையத்தில்  நிகழ்வு மிக அருமையான நடந்தேறியது. மலையிலிருந்து காட்டின் வனப்பை ரசிப்பது ஒருபுறம், அணிவகுத்து நின்ற சரக்கு வாகங்களிடையே வளைவுகளிலும் முந்திச் சென்று, நான் வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் மேலும் திகைப்பூட்டினார்.ஒரு வளைவில் சரக்கு வாகனம் தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு வெளியே உள்ள மரத்தில் மோதி நிற்கிறது. இந்த மரம் இல்லையேல் வாகனம் பள்ளத்தாக்கில் வீழ்ந்திருக்கும்! இதைப்போல நிறைய விபத்துகளின் அடையாளமாக தடுப்புச்சுவர்கள், உலோகத்தடுப்புகள் உடைந்து கிடக்கின்றன. அவை சீரமைக்கப்படாமல் இருப்பது நமதி பீதியை இன்னும் கூட்டுகிறது. இவ்வழியே செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அதிக பட்ச எடை வரையறை உண்டு. பண்ணாரி சோதனைச்சாவடிகளில் இதற்குரிய ‘மாமூல்’ வசூலிக்கப்பட்டு முறைகேடாக இவை அனுமதிக்கப்படுகின்றன. இதனால் சாலைகள் பாதிப்பதும் விபத்துகளும் அன்றாட நிகழ்வு. 



   மாலை காரில் திரும்புகையில், வெள்ளைக்காரன் இந்தப்பகுதியில் தேயிலை, காப்பி , ரப்பர் தோட்டங்களை ஏன் அமைக்கவில்லை? என்று தோழரொருவர் கேட்டார். அதற்கு இப்பகுதியில் காலநிலை இடம் கொடுக்கவில்லை போலும்! என்றேன் நான். 



    நேற்றே (03.05.2017) ‘கல்விக் குழப்பங்கள்’ நூல் வாசிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் அய்ந்து குழுக்களாகப் பிரிந்து தலா 10 தலைப்புகளை வாசித்து விவாதித்து நிறை குறைகளை மதிப்பிட்டனர். மதிய உணவிற்குப் பிறகு குழுத்தலைவர்களது விமர்சனமும் கலந்துரையாடலும் நடைபெற்றது. தோழர்கள் சு.மூர்த்தி, சுடர் நட்ராஜ் பசுபதிப்பாளையம் கோவி ரவி, திருச்சி தெய்வகுமார், சௌந்தர்ராஜன், கோவை சதாசிவம், கனகராஜ், வே. சங்கர், எஸ். கவிதா, பல்லடம் கணேசன், சேலம் நடராஜன் போன்ற பலர் கருத்துரைத்தனர். இறுதியில் அதிகம் பேச கால அவகாசமில்லை. சுருக்கமாக சிலவற்றைப் பகிர்ந்துகொண்டு விடைபெற்றோம். பசுபதிப்பாளையம் கோவி ரவி முத்தாய்ப்பாக படிக்க வேண்டிய 72 நூல்களில் பட்டியலை அனைவருக்கும் அளித்தார். 

    ‘கல்விக் குழப்பங்கள்’ நூல் குறித்த பகிரப்பட்ட கருத்துகள் சில:

பாராட்டுரையாக சில கருத்துகள்:


  • அறச்சீற்றம் உள்ளது.
  • நியாயமான கோபம்.
  • சரளமான எழுத்து நடை சிறப்பு
  • சுருக்கம், கருத்து அடர்த்தி.
  • இன்னும் விரிவாக மூன்று தொகுதியாகக் கூட வெளியிட்டிருக்கலாம்.
  • சமூக அறிவியல், தமிழ், அறிவியல் போன்ற பல பாடக்கருத்துகள் உள்ளன.
  • மறைநீர் பற்றிப் பேசப்படுகிறது; இன்னும் விரிவாக பேசவேண்டும்.
  • கடலில் கலக்கும் வீணாவது அல்ல என்பதைச் சொன்னது நன்று.


விமர்சனக் கருத்துரைகள்:


  • நூல் தலைப்பிற்கும் கட்டுரைகளுக்கும் தொடர்பில்லை.
  • நூலில் வெறும் எதிர்மறைக் கருத்துகளே உள்ளன.
  • இந்துத் தத்துவங்களில் (தலைப்பு: 05)  மட்டுமே நேர்மறைக் கருத்துகள் உள்ளன.
  • வரலாறு, தமிழ்ப் பாடக் கருத்துகளே மிகுதியாக உள்ளன.
  • ‘ஆயிஷா’ நடராசனின் ‘வன்முறையில்லாத வகுப்பறை’யைப் போல மோசமாக, ஆசிரியர்களை அதிகம் குறை சொல்ல்கிறது.
  • அரசுப்பள்ளி ஆசிரியரிடமிருந்து இத்தகைய கருத்துகளை எதிர்பார்க்கவில்லை.
  • மார்க்சிய தாக்கம் அதிகம்.
  • நூலில் தீர்வுகளே இல்லை; ‘கல்வித் தீர்வுகள்’ என்ற இன்னொரு நூல் எழுதப்படவேண்டும்.
  • ‘சங்கம்’ என்ற சொல்  தமிழிலிருந்து ஏன் பாலி மொழிக்குச் சென்றிருக்கக் கூடாது?
  • ராகுல சாங்கிருத்தியாயனின் கருத்துகள் இந்நூலில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
  • படையெடுப்புகளில் புதிய செய்திகள் இல்லை.
  • பாபரில் தொடங்கி  அவுரங்கசீப் ஈறாக நடத்திய கொடுமைகளை மதன் தனது வரலாற்று நூலில் விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியுள்ளார். இந்நூல் விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
  • அவரங்கசீப் என்ற கொடிய மன்னரை நல்லவராகச் சித்தரிக்கும் போக்கு சமீபத்தில் திடீரென்று அதிகரிப்பது ஏன்?
  • அனந்தவர்மன், அனந்தபன்மன் போன்ற பெயர்சிக்கலே இல்லை!  நமது முன்னோர்கள் பெயர்கள் குறித்தே ஆய்வு செய்யவேண்டும்.
  • படிப்போரை காயப்படுத்தும் விதமாக உள்ளது.
  • கடுஞ்சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
  • இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறது; இழிவு செய்கிறது.
  • ‘சிவகுருநாதன்’ என்பதே இந்து மதக் கடவுளின் பெயர்தானே!
  • தமிழ் மொழிப் பெருமையைக் கிண்டல் செய்கிறது; இந்தியத் தேசியப் பார்வையை வலியுறுத்துகிறது.
  • என் மொழி, கலாச்சாரம் ஈடு, இணையில்லாதது. இது யாருக்கும் இல்லை; பெருமை பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை.
  • கும்பிட்டு வணக்கம் சொல்வதைத் தீண்டமை என வரையறுப்பது மிக மோசமானது.
  • மதச்சார்ப்பற்ற பள்ளிகள் பற்றிய கட்டுரையில் உள்ளது போல் எந்தப் பள்ளிகளிலும் இல்லை.
  • கிருஸ்தவ மதத்தை உயர்த்திப் பிடிக்கிறது.
  • துறவறம் குறித்து சொன்னதும் சரியல்ல.
  • சனாதனி என்ற சொல்லே புரியவில்லை.
  • நீதிபோதனை குறித்த பயிற்சிகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதில் சொல்லப்படும் கதைகளை யாரும் சொல்வதும் இல்லை.
  • பாலியல் கல்வியை சொல்லிக் கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது.
  •  இறுதியாக கால அவகாசமின்மையால் சில கருத்துகளை மட்டும் பகிர்ந்து விடைபெற்றோம். அவற்றுள் சில:
  • தீர்வுகள் ஒரு புள்ளியில் இல்லை. கச்சத்தீவை மீட்டு விட்டால் மீனவர் பிரச்சினை தீர்ந்து விடும் என்றோ, கங்கை – காவிரி இணைப்பு நடத்துவிட்டால்  நீர்பஞ்சம் தீரும் என்றோ ஒரு வரியில் தீர்வு சொல்ல நம்மால் இயலாது. அனைவரும் கூடி பன்மைத் தன்மையுள்ள தீர்வுகளை உருவாக்க வேண்டும். பிரச்சினையை உணர்வதே முதல்படி.
  • சாதி, மத, இன, மொழி, கலாச்சார ரீதியான அனைத்து  விதமான வெறுப்பரசியல் ஒழிக்கப்பட்டு, பிஞ்சு மனங்களில் இதன் தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே நமது கரிசனம்.
  • மொழியின் பெருமைகளை பேசினால் மட்டும் போதாது. மாறாக செயல்பாடுகள் வேண்டும். நமது தலைவர்கள் வெறும் பேச்சின் மூலம் வெறியூட்டுவதே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அறிவுசார் சமூகம் இதைத் தாண்டிச் செல்லவேண்டியத் தேவையிருக்கிறது.  
  • நமது கலாச்சாரம் என்று சொல்வதில் நிறைய சிக்கலுண்டு.  எவ்வித பகுத்தாராய்தல் இன்றி எல்லாவற்றையும் கலாச்சாரமாக சுமைக்க வேண்டிய அவசியமில்லை.
  • இந்தியத் தத்துவங்களனைத்தும் ‘இந்து’த் தத்துவங்களல்ல. மாறாக அவைதீக மரபுகளை இந்துத் தத்துவமாகச் சொல்வது தவறு.
  • தேர்வுகளை நல்ல முறையில் எழுத பயிற்சி அளிப்பதுதான் நமது வேலையேத் தவிர, கோயிலுக்கும் அழைத்துச் செல்வதும்  சிறப்பு வழிபாடு நடத்துவதும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் பணியாக இருக்க முடியாது. பெற்றோரது பணிகளை நாம் அபகரிக்கக் கூடாது. இது மதச்சார்பற்ற, நமது அரசியல் சட்டத்தை மீறுவதாகும்.
  • எக்காரணம் சொல்லியும் தொட மறுப்பது தீண்டாமையே. கும்பிடுவதும் இதில் விதிவிலக்கல்ல. நீங்கள் கலாச்சாரம் என்று சொல்வதும் தீண்டாமைக் கலாச்சாரமே. தொடுவது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட தூர எல்லைக்குள் (64, 32, 16, 8 அடிகள்) வருவேதே இங்கு தீட்டாக வரையறுக்கப்பட்டதை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் புலையர்கள் பட்ட பாடுகள் அய்யன் காளியின் போராட்டங்கள் ஆகியன இங்கு மறைக்கப்பட்ட வரலாறு. இந்த வரலாறு ஏன் மறைக்கப்பட்டது என்பதும் அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பதும் பல்லாண்டுகளாக இங்கு நடந்துவரும் போராட்டம்.
  • இந்துத்துவத்தைப் போன்றே தமிழ் தேசியமும் பாசிசமயமானது. இங்குதான் வெறுப்பரசியல் உற்பத்தியாகிறது. இளம் பிஞ்சுகளை பாசிச மயப்படுத்துவது நல்லதல்ல.
  • எனது பெயர் இந்துப் பெயராக இருப்பது குறித்து, பெரியார் ஈ.வே.ராமசாமி  சொன்ன பதில்தான் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
  • மத அடிப்படையில் மன்னர்களை மதிப்பிடுவது நமது வரலாற்று எழுதியலின் துயரம். நடுநிலையாகச் செயல்பட்ட மராட்டிய மன்னர் சிவாஜியை இந்துத் திருவுருவாக மாற்றியதும் இத்தகைய அரசியல் செயல்பாடுதான் காரணம்.
  • 1992 பாபர் மசூதி இடிப்பு, 2002 குஜராத்தில் மாநில அரசால் கட்டவிழ்த்துவிட்ட வன்செயல்களுக்கு பிந்தைய காலகட்டத்தைப் புரிந்துகொள்வது அவசியம். அவுரங்கசீப் பற்றிய ஆய்வுகள் முன்பே வெளியானதுதான். புதுதில்லியில் அவுரங்கசீப் மார்க்கை அப்துல்கலாம் மார்க்காக மாற்றப் பட்டபோது மீண்டும் ஒருமுறை பேசவேண்டிய கட்டாயம் ஜனநாயக சக்திகளுக்கு  ஏற்பட்டது.
  • காலம் காலமாக எவ்வித கேள்வியுமின்றி சில கருத்துகள் நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆய்வுக்குட்படுத்துவதும் மாற்றைத் தேடவும் விரிவும்  ஆழமான வாசிப்பு தேவைப்படுகிறது.
  • எதையும் அறிவியற்பூர்வமாக புறவயமாக அணுகும் முறை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சாதி, மத, மொழி, இன, தேச தன்னிலை மறந்த / அழிந்த  சிந்தனைப் போக்கு இங்கு வளர்த்தெடுக்கப்படவேண்டும்.




இறுதியாக சொல்ல மறந்த ஒன்று:

    மதனின்  நூல் கல்கியின் நாவலைப் போன்றதே. அதைத் தாண்டி அதில் ஒன்றுமில்ல்லை. இவற்றில் காணப்படும் உண்மைகளைவிட காழ்ப்பும் வெறுப்புணர்வும் மிகுதி. இங்கு நமது வாசிப்புத் தேர்வு முக்கியம். வரலாற்று நூல்கள் என்ற போர்வையில் இங்கு குப்பைகள் மிக அதிகம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக