வெள்ளி, மே 26, 2017

வரவேற்போம்! ஆனால்…?



வரவேற்போம்!   ஆனால்…?

மு.சிவகுருநாதன்


       தமிழகப் பள்ளிக் கல்வித்துறை சில குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வலிமையான, துணிச்சலான முதல்வர்கள் எடுக்கத் துணியாத செயல்களை இவர்கள் எடுத்துள்ளனர். இவற்றை வரவேற்போம்; பாராட்டுவோம். 

    வழக்கமாக பலமான அரசுகள் வேண்டும் என்கிற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது. மகாத்மா காந்தி போன்றவர்கள் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் இல்லாத, அதிகார பரவலாக்கம் பெற்றவையாக அரசுகள் இருக்க வேண்டுமென்று விரும்பினர். கருத்தியல் ஏதுமின்றி தனிநபர் தலைமை, கதாநாயகத் தன்மை ஆகியவற்றைக் கொண்டே முன்முடிவுகளுடன் மதிப்பிடுவது போன்ற அவலச்சூழல் இங்குண்டு. 

   சமூகம், மாணவர்கள் பால் அக்கறையுள்ள கல்வியாளர்கள் பல்லாண்டுகளாக முன்வைத்த கோரிக்கைகளில் சில ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மனநிறைவைத் தருகிறது. இருப்பினும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம். 

   +1, +2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, அகமதிப்பீட்டு மதிப்பெண்கள், தேர்வு நேரம் குறைப்பு போன்ற வரவேற்கத்தக்க அறிவிப்புகளை பத்தாம் வகுப்பிற்கும் விரிவு படுத்தவேண்டும். 

   தொல்.திருமாவளவன் போன்றவர்கள்  +1, +2 வகுப்புகளுக்கு இரு பருவமுறை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  பத்தாம் வகுப்பிற்கும் இதேபோல் இரு பருவமுறை பற்றியும் யோசிப்பது இன்றைய நிலையில் மிகவும் அவசியமானது. பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில்தான் மாறப்போகிறது. +1, +2 போன்று 10 ஆம் வகுப்புக்கும் இவ்வாண்டே தேர்வு முறைகளை மாற்றியமைக்க வேண்டும். 

    மூன்றாண்டுகள் தொடர்ந்து பொதுத்தேர்வுகள் எனும்போது அவை ஒரே மாதிரியாக இருப்பது நல்லது. மேலும் இதை அமல் செய்வதில் எவ்வித சிக்கலும் இல்லை. 

   இனி +1 பாடத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால் 9 ஆம் வகுப்புப் பாடம் கற்பிக்கப்படுவதை எவ்வாறு உறுதி செய்யப் போகிறார்கள்? இம்முறைகேட்டைச் சரிசெய்திருந்தால், +1 க்கு பொதுதேர்வே தேவைப்பட்டிருக்காதே! 9 வகுப்பு முடிய உள்ள வகுப்புகளுக்கு 60 மதிப்பெண்கள்: 2.30 மணி நேரத் தேர்வு போன்ற இங்கு அபத்தங்கள் இங்கு அதிகம். இப்போதைய கல்வித் துறை அணி அவற்றையெல்லாம் களையும் என நம்புவோம்.  

     6 முதல் 10 ஆம் வகுப்பு முடியுள்ள வகுப்புகளில் தகவல் தொழில் நுட்பக்கல்வி அறிமுகம் செய்யப்படுவதாக அரசாணை வெளியாகியுள்ளது. இதையும் வரவேற்போம். ஆனால் நான் பலமுறை எழுதியுள்ளது போல் அரசுப்பள்ளி கட்டிடங்கள் மாதிரி மிக மோசமான தரத்தில் எந்தத் துறையிலும் இல்லை என்கிற உண்மை பலருக்குத் தெரிவதில்லை. இங்கு பொருத்தப்படும் மின்னியல் கருவிகள், ஒயரிங் போன்றவை துளியும் தரமற்றவை. இந்தக் கட்டமைப்பு வசதிகளைச் சரிசெய்யாமல் கணினி போன்ற உபகரணங்களை பயன்படுத்த வழியில்லை. 

    இந்த அரசாணையில் சொல்லப்பட்ட ஓரம்சத்தைக் கவனிப்போம். “தமிழர்களின் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் குறித்த பெருமித உணர்வுகளை மாணவர்கள் பெறுவதுடன் அவர்கள் தன்னம்பிக்கையுடன் அறிவியல் தொழில் நுட்பத்தை கையாளச் செய்வது”, என்று சொல்லப்பட்டுள்ளது. (தி இந்து மே 24, 2017 – திருச்சி)

    இம்மாதிரியான வெறியூட்டும் வேலைகளைச் செய்ய நிறைய இயக்கங்களும் தலைவர்களும் இருக்கிறபோது பள்ளிக் கல்வித்துறையும் இதை செய்ய வேண்டுமா? இதன் பலன் ஆண்டுக்குப் பலர் தீக்குளித்து இறப்பதுதான். தற்போதைய நமது பாடநூல்கள் இம்மாதிரி வெறியூட்டும் பணி செய்வதை எனது ‘கல்விக் குழப்பங்கள்’ (பாரதி புத்தகாலயம் வெளியீடு, மார்ச் 2017) நூலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன். 

     பள்ளிக் கல்வியில் தமிழைப் படிக்க வேண்டியதில்லை, தமிழ் கட்டாயப் பயிற்று மொழியாகவும் இல்லை. தமிழ்ப் பல்கலைக் கழகம், செம்மொழி ஆய்வு நிறுவனம் போன்றவை உரிய நிதி வசதியின்றி முடங்கியிருப்பது,  தரமான தமிழ்ப் படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டு, வணிக எழுத்துகள் கொண்டாப்படும் விநோதம், பள்ளி நூலங்களில் நூல்கள் என்கிற போர்வையில் குப்பைகள் வாங்கிக் குவிக்கப்பட்டிருப்பது போன்ற பல்வேறு அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்க,  தமிழின் பெருமை என்ற பேரில் வெறியூட்டும் வேலையை மட்டும் செய்வொம் என்பது சரியல்ல. முதல் வகுப்பிலிருந்து +2 வகுப்பு முடிய உள்ள தமிழ்ப்பாடங்களே தமிழுக்கு எதிரானவை. ஒரு நடுநிலையான குழு  அமைத்து உண்மையைக் கண்டறியலாம். இதையெல்லாம் செய்யாமல் தொன்மை என மொழிவெறியூட்டுதல் தயவு செய்து வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக