செவ்வாய், ஜூன் 13, 2017

பாடத்தோடு இணைந்த நூல் வாசிப்புபாடத்தோடு இணைந்த நூல் வாசிப்பு

மு.சிவகுருநாதன்

(ஜூன் 10, 2017 ‘தி இந்துதலையங்கத்திற்கு எனது எதிர்வினை. இது வெளியாகவில்லை. எனவே இங்கே பதிவிடுகிறேன்.) 

    புத்தக வாசிப்பை முன்னிலைப்படுத்தி 'தி இந்து' எழுதும் தலையங்கங்கள் பாராட்டிற்குரியவை.

    இதனோடு சில அம்சங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  பள்ளிகளில் வாரத்திற்கு 40 பாடவேளைகள் மட்டுமே உள்ளன. அதில் பாட ஒதுக்கீடு போக சில பாடவேளைகளே மிஞ்சுகிறது. அதில் உடற்கல்வி, மதிப்புக்கல்வி, ஓவியம், இசை, கணினி போன்றவற்றிற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவற்றைக்கூட பிற பாடங்களுக்குப் பயன்படுத்தும் சூழலே இங்குள்ளது. 

   இந்நிலையில் வேளாண்மை, பாலியல் கல்வி, சுழலியல், மனித உரிமைகள், சினிமா ரசனை, யோகா போன்றவற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டுமென நீண்ட பட்டியலே உள்ளது. இவை நடைமுறையில் சாத்தியமற்றவை. 

  இதற்கு மாற்றுவழியை யோசிக்க வேண்டும். பாடத்துடன் இவை இணைக்கப்பட வேண்டும். அதற்குரிய திட்டங்களோ, பாடங்களோ இல்லை என்பதே உண்மை. உதாரணமாக இனப்பெருக்க பெருக்க மண்டலம் உள்ளிட்ட மனித உடலியங்கியல் குறித்த பாடங்கள் வெறும் அறிவியலாக நின்றுவிடுகிறதே தவிர பாலியல் கல்வியாக மாறவில்லை. 

  மொழிப்பாடத்திற்கு இரு தாள்கள், 200 மதிப்பெண்கள் என்பதெல்லாம் வெறும் தேர்வுக்காக உள்ளதே தவிர நூல் வாசிப்பு மற்றும் படைப்பாற்றலை துளியும் வளர்க்கக்கூடியதாக இல்லை. 

  நூல் வாசிப்புப் பழக்கம் ஆசிரியர்களிடம் அறவே இல்லை. எனவே இது மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. அனைத்துப் பாடங்களுடன் இணைந்த நூல் வாசிப்பே பலனைத்தரும். வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் அரசியல் வேறுபாடுகள், ‘கமிஷன்கள்’ இன்றி தயாரிக்கப்படவேண்டும். 

  பள்ளி நூலகங்களில் இதுவரையில் குவிக்கப்பட்டுள்ள பெருமளவு புத்தகங்கள் குப்பைகள். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (RMSA) கீழ் ஆண்டுதோறும் ரூ. 10,000 மதிப்பிலான நூல்கள் வாங்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் படிப்பதற்கு லாயக்கற்றவை. இவை தரம் அடிப்படையிலன்றி ‘கமிஷன்’ அடிப்படையில் வாங்கப்பட்டவை. 

   போட்டிகளில் தேர்வுபெறும் மாணவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்குவது வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்கும் ஒரு சிறு முயற்சி. ஆனால் இங்கு நடப்பதென்ன? ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் தேர்வாகும் மாணவர்கள் திரும்பத் திரும்ப திருக்குறள், அக்னி சிறகுகள் போன்ற ஒரே நூல்களை அளிக்கும் போக்கு உள்ளது.

    நண்பர் ஒருவர் இம்மாதிரி ஆண்டுதோறும் வழங்கப்படும் திருக்குறள் நூலை பள்ளியில் திரும்ப ஒப்படைத்துவிட்டதாகக் கூறினார்.  இவற்றைத் தாண்டியும் தமிழில் வாசிக்க நூல்கள் உள்ளன என்பதை கல்விசார் சமூகத்திற்கு உணர வைப்பதே முதல்படி.

1 கருத்து:

couponsrani சொன்னது…

வணக்கம் நண்பரே
உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
வாழ்த்துக்கள்
discount coupons

கருத்துரையிடுக