பள்ளிகளில் சாதி, பாலினப் பாகுபாடுகள்: சில குறிப்புகள்
சில நாள்களுக்கு முன்பு ‘தி இந்து’ நாளிதழில் அனைத்திற்கும் ஆதார் எண்ணை கேட்பதால் நெற்றில் பச்சைக் குத்திக் கொண்டதாகச் சொல்லும் கேலிச்சித்திரம் வெளியாகியிருந்தது. ஆதாராவது சமீப நடைமுறை; பல ஆயிரம் ஆண்டுகளாக நமது உடம்பில் பச்சைக் குத்தாமல் உயிராகவே சுமந்து வரும் ஒன்று உண்டு. அதுதான் சாதி.
மு.சிவகுருநாதன்
சில நாள்களுக்கு முன்பு ‘தி இந்து’ நாளிதழில் அனைத்திற்கும் ஆதார் எண்ணை கேட்பதால் நெற்றில் பச்சைக் குத்திக் கொண்டதாகச் சொல்லும் கேலிச்சித்திரம் வெளியாகியிருந்தது. ஆதாராவது சமீப நடைமுறை; பல ஆயிரம் ஆண்டுகளாக நமது உடம்பில் பச்சைக் குத்தாமல் உயிராகவே சுமந்து வரும் ஒன்று உண்டு. அதுதான் சாதி.
“இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறா”, என்று கண்ணை மூடிக்கொண்டு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். சிபிஎம்மின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இயக்கங்கள், சமூக அமைப்புகள் நூற்றுக்கணக்கான தீண்டாமை, சாதி ஒதுக்கல் வடிவங்களைக் கள ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளன.
பள்ளிகளில் மாணவர்கள் தங்களது ஆதிக்க சாதியினை வெளிப்படுத்துவதற்காக கைகளில் கயறுகள் கட்டிக்கொள்வது பல மாவட்டங்களில் தொடர்கிறது. சமூகத்தில் ஏற்படும் சாதிய, மத மோதல்கள் பள்ளிகளிலும் எதிரொளிக்கிறது.
அன்றாட பள்ளி நடைமுறைகளில் பால், சாதி வேறுபாட்டை களைய வாய்ப்பிருந்தும் அதைச் செயல்படுத்த அரசும் கல்வித்துறையும் முனையாதது கவலைக்குரிய நிலைமையாகும்.
- மாணவர்களது வருகைப்பதிவேட்டில் சாதியைப் பதிவு செய்தல்.
- இவற்றில்கூட ஆதிக்க சாதியின் பெயரை ‘அர்’ விகுதியுடனும் ஒடுக்கப்பட்ட சாதிப்பெயரை ‘அன்’ விகுதியுடன் எழுதுதல்.
- ஒவ்வொரு மாதத்திலும் பெயருக்கு நேராக SC, SCA, ST, MBC, BC, BCM என குறிப்பது.
- புள்ளிவிவரங்களை எளிமையாகத் திரட்டுவது என்ற பேரில் அகரவரிசை அல்லது சேர்க்கை எண் வரிசையில் மாணவர்கள் பெயரை எழுதாமல் சாதி வரிசையில் எழுதுவது.
- வகுப்பில் நலத்திட்டங்களுக்காக “SC மாணவர்கள் எழுந்திருங்கள் அல்லது கை உயர்த்துங்கள்”, என்று வெளிப்படையாகச் சொல்லிக் கணக்கெடுப்பது.
பாலினப் பாகுபாடுகள் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பெண்களின் கூந்தல் மற்றும் ஆடைகளில் மட்டும் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் சமூகம் வேறு எப்படி இருக்கும்?
இவற்றையெல்லாம் பொதுவெளியில் சொல்லும்போது நமது ஆசிரியர்கள் கடுமையான எதிர்வினையாற்றுகிறார்கள். குறிப்பாக பெண் ஆசிரியர்களால் இத்தகைய விமர்சனத்தை ஏற்றுகொள்ளவே இயலவில்லை. அவர்கள் சொல்லும் இரண்டு கருத்துகள்: இவற்றில் பாகுபடுத்தல்கள் அறவே இல்லை, மற்றொன்று கலாச்சாரம்.
- ‘ரெட்டைச் சடைக் கொடுமை. இப்பிரச்சினை கேரளாவிலிருந்து மனித உரிமை ஆணையத்தில் வழக்காக பதிவாகியுள்ளது.
- மாதவிடாய் போன்ற உடலியல் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளாமல் வதைப்பது.
- வருகைப்பதிவில் பெண்கள் பெயர்கள் சிவப்பு மையால் எழுதுவது.
- கடுமையான உடைக்கட்டுப்பாடு. சுடிதார் டாப்ஸை கட் செய்யாது நைட்டி போல் அணியக் கட்டாயப்படுத்தும் பள்ளிகள் இங்குண்டு. ‘ஷாலை’ இப்படித்தான் போடவேண்டுமென நீண்ட வகுப்பெடுப்பதும் மாதிரிப் புகைப்படங்கள் வெளியிடுவதும் இங்கு சாதாரணம்.
- 9 ஆம் வகுப்பிலிருந்து ஒரே வளாகத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வகுப்புகள்.
- மாணவிகள் சக மாணவர்களுடன் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிப்பதும் உண்டு.
- குற்ற உணர்ச்சியுடன் தனிமைப்படுத்தி மந்தனமாக புத்தகப்பைகளில் ஒளித்து வைத்துக் கொள்ள வலியுறுத்தி நாப்கீன் விநியோகம்.
இவற்றையெல்லாம் பொதுவெளியில் சொல்லும்போது நமது ஆசிரியர்கள் கடுமையான எதிர்வினையாற்றுகிறார்கள். குறிப்பாக பெண் ஆசிரியர்களால் இத்தகைய விமர்சனத்தை ஏற்றுகொள்ளவே இயலவில்லை. அவர்கள் சொல்லும் இரண்டு கருத்துகள்: இவற்றில் பாகுபடுத்தல்கள் அறவே இல்லை, மற்றொன்று கலாச்சாரம்.
மாணவர்கள் வருகைப்பதிவேட்டில் சாதி அடைப்படையில் எழுதுவது குறித்த பதிவை தோழர் செ.மணிமாறன் முகநூலில் இட்டிருந்தார். அதற்குக் கடுமையான எதிர்வினைகள். இல்லாத ஒன்றைச் சொல்லிருப்பதாக சாடல் அதில் இருந்தது. வருகைப்பதிவேட்டில் ஏன் சாதியை எழுதவேண்டும்? இவ்விவரங்கள் சேர்க்கைப் பதிவேடு உள்ளிட்ட பள்ளிப் பதிவேடுகளில் மட்டுமே இருக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் பார்க்க வாய்ப்புள்ள இடங்களில் இருக்கக் கூடாது என்று சொன்னபோது, “அப்படியென்றால் அரசு கொடுக்கும் சாதிச் சான்றிதழையும் ஒளித்துவைத்துக் கொள்ளுங்கள்”, என்று பதில் வந்தது. தனிப்பட்ட சாதிச்சான்றுதழும் பொதுவான வருகைப்பதிவேடும் ஒன்றா என்ற கேளிவிக்குப் பதில்லை.
வருகைப்பதிவேடு என்பது பொதுவான ஒரு பதிவேடு. இதன் வேலை தினசரி வருகையைப் பதிவு செய்வது மட்டுமே. இதில் சாதியை எழுதுவது மோசமான நடைமுறை. நலத்திட்டங்கள், புள்ளிவிவரங்களுக்குத் தேவையென்றால் அவற்றைத் தனியே எழுதி பராமரிப்பதே நல்லது.
வருகைப்பதிவேட்டை அச்சிடும் தனியார் நிறுவனங்கள் இப்படியான ஒரு படிவத்தை இணைக்கிறார்கள். இவற்றை கேள்வியின்றி பயன்படுத்துவது ரொம்பவும் அபத்தம். ஆசிரியர் பாடக்குறிப்பு நோட்டில்கூட சாதிக்கான இடமிருக்கிறது! பணிப்பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் இருக்கும்போது வகுப்பறைச் செயல்பாடுகள் சார்ந்த குறிப்பேட்டிலும் சாதியை எதிர்பார்ப்பது எத்தகைய மனநிலை? இவற்றில் எல்லாம் சாதியைக் குறிப்பிட வேண்டுமென எந்தச் சட்டமும் அரசாணையும் சொல்லவில்லை.
சாதிச் சான்று வழங்கும் அதிகாரம் வருவாய்துறை அலுவலர்களுக்கானது. அதுவே செல்லுபடியாகும் சான்று. மாற்றுச் சான்றிதழில் சாதி மற்றும் தேர்ச்சி விவரங்களைக் குறிப்பிடாமல் “சாதிச் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியலைப் பார்க்க” என்றுதான் குறிப்பிடப்படுகிறது. (தொடக்க நிலையில் இன்னும் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) வழங்காமல் பதிவுத்தாளை (Record Sheet) வழங்கிவரும் அபத்தம் வேறு கதை!) மாற்றுச் சான்றிதழிலேயே குறிப்பிடாத ஒரு விவரத்தை வருகைப்பதிவேட்டில் குறிப்பது சரியா?
சாதிப்பெயரை எழுதும்போதுகூட சாதிய வன்மத்துடன் ஆதிக்க சாதியின் பெயர்களை ‘அர்’ விகுதியுடனும் ஒடுக்கப்பட்ட சாதியின் பெயர்களை ‘அன்’ விகுதியுடனும் எழுதும் போக்கு உள்ளது. இதற்கென அரசாணை இருந்தும் அதை யாரும் மதிப்பதில்லை. பள்ளிகளில் சாதிச் சான்று வழங்கும் திட்டத்தினால் வருவாய்த் துறை ‘வருவாய்’ போய்விட்டபடியால் ஆசிரியர்களைக் கொண்டே இவை எழுதப்படுகின்றன. எனவே அதிலும் குளறுபடிகள் தொடர்கின்றன.
எதற்கெடுத்தாலும் அரசாணை (GO) இருக்கிறதா என்று வினவும் ஆட்கள் இருக்கிறார்கள். தங்களுக்குச் சாதகமான் ஒன்றிற்கு அரசாணைக் கேட்பதும் மற்றதிற்கும் இருக்கின்ற அரசாணையை மதிக்காத போக்கும் இங்குள்ளது. ஒரு வாட்ஸ் அப் குழுவில் 11 ஆம் வகுப்பு மறுதேர்வில் கட்டாயத் தேர்ச்சியளிக்க அரசாணை இருக்கிறதா? என்று வினவப்பட்டிருந்தது. (கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 –ன்படி 1 முதல் 8 முடிய உள்ள வகுப்புகளுக்கு மட்டுமே கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படுகிறது. கட்டாயத் தேர்ச்சி வழங்க அரசாணை வழங்க முடியுமா என்ன?)
பள்ளிகளில் மதச்சார்பு விழாக்கள் நடத்தக் கூடாது என்று நமது மதச்சார்ப்பற்ற அரசியல் சாசனம் சொல்கிறது. சரஸ்வதி பூசை, ஆயுத பூசை உள்ளிட்ட விழாக்களை நடத்தக்கூடாது என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை மதித்து செயல்படும் பள்ளிகள் எத்தனை தேறும்?
“ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்”, என்னும் சமூகப் பொதுப்புத்தியை பள்ளிகள் பின்பற்ற முடியாது. இன்று பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளுக்கு இதுவே அடிப்படைக் காரணம்.
சென்ற ஆண்டு (2016 – 2017) அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் (RMSA) சார்பில் Gender Sensitization ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. பள்ளிகளில் நடைபெறும் பாலினப் பாகுபாட்டைக் களைவதே இதன் நோக்கம். ரெட்டைச் சடை, சிவப்பு மை விவகாரத்தை விவாதத்திற்காக முன்வைத்தேன். ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக பல பெண் ஆசிரியர்களால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. மாறாக நமது கலாச்சாரப் பெருமை விதந்தோதப்பட்டது. அன்றைய பொழுது முழுவதும் கலாச்சாரப் பெருமை பேசுவதிலேயே கழிந்தது.
குழந்தை நேயப் பள்ளிகள் குறித்த அமர்வு ஒன்றின்போதும் ‘ரெட்டைச் சடை’ப் பிரச்சினை முன்வைக்கப்பட்டது. அங்கும் கடும் எதிர்ப்பு. பெண் குழந்தைகளுக்கு ரெட்டைச் சடை போடும்போது கருப்பை நன்கு விரிவடையும் என்ற அறிவியல்பூர்வமான (?!) விளக்கமளிக்கப்பட்டபோது, வெகுண்ட தோழர் ஒருவர் ஆண்களுக்கு ரெட்டைச் சடை போட்டால் ஏதேனும் விரிவடையாதா? என்று கேட்டு வைத்தார்.
பள்ளிகளில் பாலியல் கல்வி இல்லை. எனவே வளரிளம் பருவ தன்னெழுச்சிகள், முரண்பாடுகள் ஆகியன ‘ஒழுக்கவாத’ப் பார்வையில் மட்டுமே அணுகப்படுகின்றன. உடலியக்கவியல் குறித்த அறிவியல் பாடங்கள் பாலியல் கல்வியாக மாற்றமடையாமல் வெறும் அறிவியலாகச் சுருங்கிப் போயுள்ளது. அவற்றையும்கூட தாண்டிச் (skip) செல்வதும் இங்கு வாடிக்கை.
மாதவிடாய் பெண்களின் உடலில் நடைபெறும் இயற்கையான நிகழ்வு. மனித குலப் பிறப்பிற்கான மூலம், உனது தாய், சகோதரி ஆகியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இது பொதுவான நிகழ்வு. இதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை. தாய், சகோதரிக்கும் பிற்காலத்தில் மனைவிக்கும் நீங்கள் 'நாப்கீன்' வாங்கி பரிசளியுங்கள் என்று சொல்லிக் கொடுக்காத பாழாய்போன கல்வி எதற்கு? ஏன் பெண்களை குற்றவுணர்விற்கு ஆட்படுத்துகிறீர்கள்? நானறிந்த வரையில் பல பள்ளிகளில் இத்திட்டத்தினை ஆசிரியர்கள் செயல்படுத்தும் விதம் பால் வேறுப்பாட்டை பூதாகரமாக்குகிறது.
கல்வி என்பது கற்றுக்கொள்வது மட்டுமல்ல; தேவையில்லாதவற்றை கழித்துக் கட்டுவதும்தான். பல்வேறு மூடநம்பிக்கைகளில் சிக்குண்ட இச்சமூகம் முன்னோக்கிச் செல்ல கல்வி உதவவேண்டும். மாறாக பின்னோக்கி இழுக்கும் வேலையைச் செய்யக்கூடாது. கல்வியில் சாதி, பால் வேறுப்பாடுகள் களையப்படாமல் இருக்குமானால் அவற்றை சமூகத்தில் ஒழிக்க வாய்ப்பில்லமற்போகும். இவை ஒருசில குறிப்புகள் மட்டுமே. இன்னும் நுணுக்கமாக சாதி, பால் வேறுபாட்டுக் களங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்படவேண்டும்.
இறுதியாக ஒரு கொசுறு செய்தி:
ஜூன் 26, 2017 புனித ரமலான் அன்று திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பயணித்தபோது அரசுப்பள்ளி மாணவர்கள் சீருடையில் பள்ளிக்குச் செல்வதைக் காண முடிந்தது. அரசு விடுமுறைகளின்போதும் குறிப்பாக சிறுபான்மையினர் பண்டிகைகளின்போது சிறப்பு வகுப்பு என்கிற பெயரில் பள்ளிகள் நடைபெறுவதைத் தடுக்காத நிலைதான் இங்குள்ளது. சகிப்பின்மைக்கு இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது. இத்தகையச் செயல்பாடுகள் மாணவர்கள், அவர்கள் சார்ந்த சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்? அரசின் ஆணைகளையும் உத்தரவுகளையும் நாம் எவ்வாறு மதிக்கிறோம் என்பதற்கும் இது சிறந்த எடுத்துக்காட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக