வாழ்த்துகள் மணிமாறன்!
மு.சிவகுருநாதன்
இன்று (02.09.2017) மாலை சென்னையில்
நடைபெறும் விழாவில் புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெறுபவர்களில் திருவாரூர் மாவட்டம்
கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்விப்பணியாற்றும்
தோழர் செ.மணிமாறனும் ஒருவர்.
1990 களின் இறுதிப்பகுதியில் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அரசு மேனிலைப்பள்ளியில்
7, 8 வகுப்புகளில் என்னிடம் பயின்ற மாணவர் தோழர் மணிமாறன். அன்றும் இன்றும் மிகச் சராசரி
ஆசிரியனான என்னை நினைவில் வைத்திருக்கும் அவர், மரபான கல்வி பற்றிய புரிதலிருந்து வேறுபட்டு முழு வீச்சுடன்
கல்விப்பணியாற்றி வருகிறார். அவருக்கு வாழ்த்துகள்.
இடைநிலை ஆசிரியாகப் பணியாற்றி, தற்போது அறிவியல் பட்டதாரி ஆசிரியரான போதும்
குழந்தைகளுக்கு மிக நெருக்கமான ஒருவராக இருந்து,
புதிய சிந்தனைகளை மாணவர்களிடம் விதைத்துவரும் அவருக்கு எனது பாராட்டுகளும் அன்பும்.
புதிய தலைமுறை ஊடகம் கடந்த மூன்றாண்டுகளாக கீழ்க்கண்ட 9 தலைப்புகளில் தலா ஒருவருக்கு
இவ்விருதினை வழங்கி வருகிறது.
- புதுமைகள்
- கிராமசேவை
- பழங்குடிமேம்பாடு
- பெண்கல்வி
- செயலூக்கம்
- மொழித்திறன் மெம்பாடு
- அறிவியல் விழிப்புணர்வு
- படைப்பாற்றல்
- சிறப்புக்குழந்தைகள்
இவ்வாண்டில் (2017) செயலூக்கம் என்னும் தலைப்பின் கீழ் தோழர் மணிமாறன் விருது
பெறுகிறார். ‘தி இந்து’ நாளிதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டுக் காட்டும் வகையில் திறம்பட
பல்வேறு பணிகளை ஆற்றிவருபவர் இவர்.
பொதுவாக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் விருதுகளின் தரம் குறித்து விமர்சனம்
இருக்கும் நிலையில் உண்மையான கல்விப்பணி செய்பவர்கள் இம்மாதிரி பாராட்டப்படுவது வரவேற்கத்தக்கது.
மத்திய அரசு ஆசிரியர் தினத்தை 15 நாள்கள் கொண்டாட வலியுறுத்தியுள்ளது. இது ஆசிரியர்கள்
மீதான அன்பு, நம்பிக்கை ஆகியவற்றால் அல்ல. வருணாஸ்ரம, மநு தர்மத்தை நிலைநாட்ட ‘குரு
உத்சவ்’ என்ற பெயரில் இத்தகைய கூத்துக்களை அரங்கேற்றுவதையும் நாம் காணலாம். குழந்தைகள்
தினம் கொண்டாடப்படுவதை விரும்பாத அரசாகவும் இது இருப்பதைப் புரிந்துகொள்வது எளிது.
எளிய, அடித்தட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்காக தங்கள் எல்லைகளை மீறி ஏதாவது செய்யத்
துடிக்கும் மணிமாறன் போன்றவர்கள் இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டப்படவேண்டும். ‘நீட்’
போன்ற தர அளவுகோல்களுடன் தரமற்ற பள்ளிகள் என்று வகைப்படுத்தித் தனியாரிடம் ஒப்படைக்கும்
‘நிதி ஆயோக்’ தந்திரங்கள் மநு தர்மங்களுக்குள் அடங்குபவை. இவற்றிற்கு எதிராக போராடுவது
ஒருபுறம், இன்னொரு புறம் அமைப்பிலிருந்து அதை மாற்றுவதற்காக இயங்குவதும் பாராட்டுக்குரிய
ஒன்று.
1 கருத்து:
அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
கருத்துரையிடுக