வியாழன், ஆகஸ்ட் 31, 2017

மநுநீதிச் சோழர்கள்

மநுநீதிச் சோழர்கள்
 
                                                            மு.சிவகுருநாதன்



        பிற்காலச் சோழர்கள் அனைவருமே மநுநீதிச் சோழர்கள்தான் என்கிற குறிப்பை முன்பு எழுதியிருந்தேன். அவர்கள் யார் என்று தெரியவேண்டுமல்லவா! இதோ பட்டியல். பிற்காலச் சோழர்களை மட்டும் இவ்வாறு சொல்வது தகுமா என்ற கேள்வி எழலாம். மநுநீதிப் பல்லவர்கள், மநுநீதிப் பாண்டியர்கள் என பலர் உண்டே!

       இருப்பினும் வேறெவரைக் காட்டிலும் மிகத் தீவிரமாக மநுநீதியை அமல் செய்தவர்கள் என்கிற வகையில் பிற்காலச் சோழர்களுக்குத் தனியிடமுண்டு. அதனையொட்டித்தான் இங்கு மநுநீதிச் சோழன் தொன்மம் இங்கு உற்பத்தியானது. வருணாஸ்ரமம் இத்தகைய புனைவுகளை மக்கள் மனதில் இருத்துவதில் மாபெரும் வெற்றியும் பெற்றது. இதோ பட்டியல்.


1. விஜயாலய சோழன் (கி.பி. 846 – கி.பி. 881)

2. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871 – கி.பி. 907)

3. முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 – கி.பி. 953)

4. கண்டராதித்த சோழன் (கி.பி. 950 – கி.பி. 957)

5. அரிஞ்சய சோழன் (கி.பி. 956 – கி.பி. 957)

6. இரண்டாம் பராந்தக சோழன் (கி.பி. 957 – கி.பி. 970)

7. உத்தம சோழன் (கி.பி. 970 – கி.பி. 985)

8. முதலாம் ராஜராஜ சோழன் (கி.பி. 985 – கி.பி. 1014)

9. முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1012 – கி.பி. 1044)

10. முதலாம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1018 – கி.பி. 1054)

11. இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1051 – கி.பி. 1063)

12. வீர ராஜேந்திர சோழன் (கி.பி. 1063 – கி.பி. 1070)

13. அதி ராஜேந்திர சோழன் (கி.பி. 1067 – கி.பி. 1070)

14. முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 – கி.பி. 1120)

15. விக்கிரம சோழன் (கி.பி. 1118 – கி.பி. 1136)

16. இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133 – கி.பி. 1150)

17. இரண்டாம் ராஜராஜ சோழன் (கி.பி. 1146 – கி.பி. 1163)

18. இரண்டாம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1163 – கி.பி. 1178)

19. மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 – கி.பி. 1218)

20. மூன்றாம் ராஜராஜ சோழன் (கி.பி. 1216 – கி.பி. 1256)

21. மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246 – கி.பி. 1279)



                                                             சில குறிப்புகள்:

        பல அரசர்களுக்கு அவர்கள் இளவரசுப் பட்டம் ஆண்டிலிருந்து காலகட்டம் குறிக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்க.

      ஏழாம் வகுப்பு சமூக அறிவியலில் ‘தென்னக அரசுகள்’ என்னும் பாடத்தில் 18 மன்னர்கள் பட்டியலிடப்படுகிறார்கள். அதில் ஆதித்தன் (ஆதித்த கரிகாற் சோழன்) (கி.பி. 956 – கி.பி. 966) என்று உள்ளது. இரண்டாம் பராந்தக சோழனின் (கி.பி. 957 – கி.பி. 970) மகனான ஆதித்த கரிகாலன் (கி.பி. 966 – கி.பி. 969) கி.பி. 966 இல் இளவரசு பட்டமேற்று மூன்றாண்டுகளில் கி.பி. 969 இல் படுகொலை செய்யப்பட்டவன். எனவே இவரை அரசர் பட்டியலில் கொள்வது தவறன்றோ! மேலும் ஆண்டுகூட கி.பி. 956 – கி.பி. 966 என்று தவறாகவே உள்ளது.

      ஆதித்த கரிகாலனை (கி.பி. 966 – கி.பி. 969)கொலை செய்தது சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்கிற நான்கு உடன்பிறந்தோர் என்றும் அவர்களுள் இருவர் பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருந்தபடியால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்த அந்தணர்கள் என்று தி.வை.சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுவார். (பிற்காலச் சோழர் வரலாறு)

       இந்தக் கொலைகாரப் பிராமணர்களுக்கு மநு தர்மப்படி முதலாம் ராஜராஜ சோழன் (கி.பி. 985 – கி.பி. 1014) தண்டனை வழங்குகிறான். அவர்களது சொத்துக்களை சிவன் கோயிலுக்கு உடைமையாக்கி அவர்களை நாடு கடத்துவதுதான் தண்டனையின் சாரம்சம். இதுதான் மநுதர்மம் என்பதை சொல்லவும் வேண்டுமோ!

      குற்றவாளிகள் பார்ப்பனர் என்பதால் மநு தர்மப்படி, அவர்களுக்கு உடலை வருத்தும் தண்டனைகள் வழங்கப்படவில்லை. மாறாக அவர்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்த பணத்தில் காட்டுமன்னார்கோயில் சிவன் கோயிலில் பார்ப்பனர்களுக்கு உணவு வழங்க உத்தரவிடப்பட்டான். சத்திரிய அரசாட்சி என்கிற பெயரில் மநு தர்ம ஆட்சியே என்று நடந்தது எனபதை இத்தகைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

       மேலும் பிற்காலச் சோழர்களின் மெய்கீர்த்திகளில் வரும் 'மனுவாறு விளங்க', 'மனுநெறி', 'மனுவொழுக்கம்' என்ற சொல்லாட்சி வாயிலாக சோழர்கால மநுதர்ம ஆட்சியை விளங்கிக் கொள்ளலாம்.



       இந்தப் பட்டியலில் முதல் 13 அரசர்கள் விஜயாலய சோழன் (கி.பி. 846 – கி.பி. 881) முதல் அதி ராஜேந்திர சோழன் (கி.பி. 1067 – கி.பி. 1070) ஈறாக 13 பேர்,ஆண் வழிச் சமூக அமைப்பில் விஜயாலய சோழன் மரபாகச் சொல்லப்படுகின்றனர்.

      முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 – கி.பி. 1120) வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தனுக்கும் முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1012 – கி.பி. 1044) மகள் அம்மங்காதேவிக்கும் பிறந்தவன். இவனும் இவனுக்குப் பின்னால் வரும் மொத்தம் 8 அரசர்கள் கீழை சாளுக்கிய மரபினர் ஆவர். இதைப் பெரிய குறையாகக் கருதிய வரலாற்று ஆசிரியர்கள் தங்களுக்குள்ளாக பல்வேறு சமாதானங்களைச் சொல்லிக்கொண்டனர்.

      “குலோத்துங்கள் உடலில் பெருமளவு ஓடியது சோழர்குலக் குருதிதான்”, என்று மரபணு ஆய்வு செய்யும் (!?) டாக்டர் கே.கே.பிள்ளை அவர்களின் வரிகள் இதனை மெய்ப்பிக்கும். (காண்க: பக். 290, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, டாக்டர் கே.கே.பிள்ளை) முதலாம் குலோத்துங்களுக்கு சுங்கம் தவிர்த்த சோழன், கரிகாலன், திருநீற்றுச் சோழன் என்பனவற்றோடு மநுகுலதீபன் என்னும் பட்டப்பெயரும் உண்டு. இதிலிருந்து மநுநீதிச்சோழன் என்பது பிற்காலச் சோழர்களுக்கு பலருக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் என்பது விளங்கும். இருப்பினும் ‘மநுகுலதீபன்’ காலத்தில்தான் தமிழ்மொழி தனக்குரிய இடத்தைப் பிடிக்கத் தொடங்கியது என்பதையும் மறக்க இயலாது.


     அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை (கி.மு. 205 இல் இருந்து கி.மு 161) மநுநீதிச் சோழனாக சித்தரிக்கும் வழக்கமும் உண்டு.

     கி.பி. 1123 இல் விக்கிரம சோழன் கல்வெட்டைக் கொண்டு மநுநீதிச் சோழன் கதையை வரலாறாக்க குடவாயில் பாலசுப்பிரமணியன் முனைகிறார். இந்தக் கல்வெட்டைக் கொண்டு விக்கிரம சோழன் (கி.பி. 1118 – கி.பி. 1136) இந்த தேர் வடிவ கற்கோயிலை கட்டியிருக்க வேண்டுமென சொல்வதற்கு ஆதாரமில்லை.

     அண்மையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் வந்தபோது கல் தேர் கோயிலைப் பார்வையிட, உடனே ஊடகங்கள் 1000 ஆண்டுகள் பழமையான கல் தேர் என்று சேதி சொல்லின. வரலாற்றைத் திரிப்பது இவர்களுக்கு கைவந்த கலையாயிற்றே! குடவாயில் பாலசுப்பிரமணியன் சொல்கிற கி.பி. 1123 இல் கட்டப்பட்டது என்றால் எப்படி ஆயிரம் ஆண்டுகள் ஆனது? தஞ்சைப் பெரிய கோயில் காலத்தைவிட அதிகமாகவோ அல்லது அதனோடு இதனையும் இணைக்க வேண்டிய தேவை என்ன?

      முதலில் இதை கல்தேர் என்று சொல்வதே தவறு. இது வீதிகளில் இழுக்கப்படும் தேர் என்றுகூட நினைத்துக் கொள்வோர் உண்டு. தேர் வடிவக் கற்கோயில் என்றே சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக