புதன், அக்டோபர் 25, 2017

பள்ளிக் கல்வியில் பாலினப் பாகுபாடுகள்


பள்ளிக் கல்வியில் பாலினப் பாகுபாடுகள்

(விவாதத்திற்கான சில குறிப்புகள்)

மு.சிவகுருநாதன்

   நமது அரசியல் சட்டம், கல்வித்திட்டம், கல்விக் குழுக்கள் என அனைத்தும் பாலின சமத்துவத்தை வலியுறுத்துகின்றன. பாலின சமத்துவம் என்பது வெறும் ஆண் – பெண் சமத்துவம் மட்டுமல்ல; மூன்றாம் பாலினமான மாற்றுப் பாலினத்தவருக்குமான (திருநங்கைகள், திருநம்பிகள்) சமத்துவமே நமது இலக்கு. ஆனால் இத எட்டுவதற்கு நமது கல்வி, பள்ளிகள், பாடத்திட்டம், ஆசிரியர்கள், அரசுகள் எல்லாம் தடையாக இருப்பதுதான் நடைமுறை உண்மை. 

   “இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறா”, என்று சொல்லும் ஆதிக்க சாதி மனோபாவத்திற்கு இணையானது இந்த பாலினப் பாகுபாடுகள். இன்னும் நூற்றுக்கணக்கான தீண்டாமை வடிவங்கள் நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன. அதைப் போல பல்வேறு பாலினப் பாகுபாடுகள் நாட்டில் இருப்பதும் யதார்த்த நிலவரம். கல்வியில், பள்ளிகளில் இந்த பாகுபாடுகள் ஒரு மிகப் பெரிய சமூக அவலம். 

   கந்துவட்டித் தடுப்புச் சட்டம் கொண்டு வந்துவிட்டதாலே அது ஒழிக்கப்பட்டுவிட்டதாக கற்பனை செய்யும் அரசுகள் மற்றும் துறைகள் அவற்றைத் தாண்டிச் செயலளவில் சிறு துரும்பையும் அசைப்பதில்லை. அடிப்படை மனநிலை மாறாத வரையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தில் (RMSA) ஆண்டுதோறும் நடத்தும்  (Gender Sensitization) பயிற்சிகளால் யாதொரு பலனுமில்லை. பெண்களுக்கே இந்த நிலை என்றால் மாற்றுப் பாலினத்தவரை நாம் எப்படி அணுகுவோம் என்பது வெளிப்படை.

  அன்றாடப் பள்ளிச் செயல்பாடுகளில் காணப்படும் பாலினப் பாகுபாடுகள் சிலவற்றைத் தொகுத்துக் கொள்வோம்.



  • ரெட்டைச்சடை. பெண்களின் தலைமயிரை இரண்டாகப் பிரித்து இறுகக் கட்டி வைப்பதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் மருத்துவரீதியாக நிருபிக்கப்பட்டும் கூட இன்னும் தொடர்வது எதைக் காட்டுகிறது? நமது அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து குழந்தை உரிமை ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையங்களில் இது வழக்காக பதிவாகியிருக்கிறது. அதன் தீர்ப்பு வரும் வரை இக்கொடுமை தீரப்போவதில்லை. இம்முறை குறித்த மூடநம்பிக்கைகளுக்கு அளவில்லை. (கருப்பை நன்கு வளருமாம்!)  ஆண் குழந்தைகளுக்கு இதன் மூலம் ஏதேனும் நடக்குமா? மூடநம்பியாளார்கள்தான் விளக்க வேண்டும். 
  •  வருகைப் பதிவேட்டில் பெண்களின் பெயர்களை சிவப்பு மையால் எழுதுவது. பொதுவாக சிவப்பு நிறம் எச்சரிக்கைக்கும் (நில், நிறுத்து) மதிப்பீடு செய்வதற்கும் பயன்படுவது. மாணவர் வருகைப் பதிவேட்டில் இந்த நிற வேறுபடுத்தல்கள் எதைக் காட்டுகிறது? இப்பதிவேட்டில் சாதியை எழுதும் கொடுமை இன்னொரு புறம். சாதியம், தீண்டாமை, பாகுபடுத்தல்கள் ஆகியவற்றுக்கும் தொடர்பிருப்பது புலனாகிறது. 
  • குற்ற உணர்வூட்டும் நாஃப்கீன் விநியோகம். தரமற்றதாக இருப்பினும் பள்ளிகளில் நாஃப்கீன் வழங்குவது பாராட்டிற்குரியது. ஆனால் இதை மாணவிகளுக்கு வழங்கும் முறை மிகக் கொடுமையானது; பாலினப் பாகுபாட்டை அதிகப்படுத்துவது. மாணவிகள் வகுப்பிலிருந்து புத்தக்கப் பையுடன் வர அழைப்பு விடுக்கப்படும். நாஃப்கீனை புத்தகப் பையுக்குள் ஒளித்து வைத்துக் கொள்ள கட்டளைகள் பிறப்பிக்கப்படும். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வகுப்புகளுக்கு அனுப்பப்படுவர். “நீ வயசுக்கு வந்திட்டியா?”, என்று கேள்வி கேட்கப்பட்டும் அதன் பின்னர் வழங்கப்படுவதும் உண்டு. எல்லாருக்கும் வழங்கினால் வீட்டில் யாரேனும் பயன்படுத்திவிட்டுப் போகட்டுமே. சாதி, வருமானச் சான்றைப் போல இதற்கும் மருத்துவச் சான்று வழங்க வேண்டுமா என்ன? நமது ஆசிரிய சமூகம் ஏன் இப்படி அணுகுகிறது? முறையான பாலியல் கல்வி இல்லாத சூழலில் இம்மாதிரியான நடவடிக்கைகளின் விளைவுகள் எவ்வாறாக இருக்கும்? நமது கல்விமுறை பாலினப் பாகுபாட்டை நடைமுறைப் படுத்த ஏன் தவறுகிறது?
  • பணிப்பங்கீடு. பெண் குழந்தைகளுக்கு துப்பரவு, தண்ணீர் எடுத்தல் போன்ற பணிகள் ஒதுக்கப்படுகின்றன. 
  • விளையாட்டுகளில் பாகுபாடு. உலக அரங்கில் கிரிக்கெட் போன்ற கார்ப்பரேட் விளையாட்டுக்களைத்  (!?) தவிர்த்து பிற அனைத்து விளையாட்டுகளிலும் பாலினப் பாகுபாடு காட்டப்படுவதில்லை. பள்ளிகளில் மட்டும் ஏனிந்தப் பாகுபாடு?
  • ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனி பள்ளிகள். இது மிகவும் மோசமான அவலம். இந்தச் சமூகத்தில் ஆணோ, பெண்ணோ கலந்து வாழவேண்டிய நிலையில் வகுப்பறையை, பள்ளிகளை பாலினம் வாரியாக பிரிக்கும் கொடுமைக்கு முடிவு காணப்பட வேண்டும்.
  • இரு பாலர் பள்ளிகளிலும் குறிப்பாக 9, 10 வகுப்புகளில் ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனி வகுப்புகள். இதற்கு பள்ளிகள், ஆசிரியர்கள் சொல்லும் காரணங்கள் மிக அபத்தமானவை. வளரிளம்பருவச் சிக்கல்களை எதிர்கொள்ள இது சரியான முறையல்ல. முறையான பாலியல் கல்வி, வன்முறையற்ற ஆலோசனைகள், உளவியல் அணுகுமுறை ஆகியன இதற்கு தீர்வாக அமையும்; தனி வகுப்புகள் அல்ல. தனி கழிவறைகள்தான் தேவையே தவிர தனி வகுப்பறைகள் அல்ல. 
  • ஆண்கள், பெண்கள் பேசிக்கொள்ள தடை விதிக்கும் பள்ளிகளும் உண்டு.
  • மதிய உணவு இடைவேளைகளில் இரு பாலரையும்  தனித்தனி இடங்களில் அமரவைத்தல்.
  • சீருடைகளிலும் கட்டுப்பாடு. இப்படித்தான் ஆடைகள் அணிய வேண்டும், கலர் ரிப்பன், ஹேர் பாண்ட், ஹேர்ப்பின், கொலுசு போன்றவற்றிலும் ஆசிரியைகள் சொல்வதைத்தான் அணிய வேண்டும்; அல்லது அணிந்து வரக்கூடாது. 
  • விழாக்களில் வரவேற்பு போன்ற பணிகளுக்கு பெண்களை மட்டுமே பயன்படுத்துதல்.
  • வரவேற்பு, நடனம், பாரத மாதா வேடம் பூணுதல் போன்றவற்றிற்கு நிறம் அடிப்படையில் பெண்களைத் தேர்வு செய்யும் போக்கு.
  • தமிழ்த் தாய் வாழ்த்து, நாட்டுப்பண் பாட பெண்களை மட்டுமே பயன்படுத்துதல்.  
  • ஏதேனும் சிறு தவறுகள் நடக்கும்போது “பொம்புளப் புள்ள இப்படி செய்யலாமா”, என்று கேட்பதன் மூலம் ஆண் முழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற எல்லையற்ற சுதந்திரமளித்தல். 
  • ஆண்களை மையப்படுத்தி, பெண்களை ஓரங்கட்டும் நமது பாடத்திட்டங்கள் மற்றும் பாடநூல்கள்.

     
    நுணுகி ஆராயும்போது இன்னும் நூற்றுக் கணக்கான பாகுபாடுகள் காணக் கிடைக்கும்.  கல்வி சார் சமூகத்தின் மனத்தடைகள் அகல்வதும் அதற்கான வழிமுறைகளைக் கண்டடைவதுமே இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல இடுகை அய்யா. விவாதத்திற்கான குறிப்புகள் என்று குறித்துள்ளீர்கள். ஆனால், இதில் ஓரிரெண்டை தவிர மற்ற அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வது சரி என்று நினைக்கிறேன். அவற்றை விவாதிக்கவே தேவையில்லை :-).
2017ல் வாழும் நாம் இன்னும் இது போன்ற இழிவுகளையும் மூடத்தனங்களையும் போராடி ஒழிக்கவேண்டியுள்ளதை எண்ணி வருந்துகிறேன். இருந்தாலும் இவைகளை களைவது நம் கடமை.
தங்கள் மேலான கருத்துக்களை தொடர்ந்து பதிக்க வாழ்த்துகள்.

மு.சிவகுருநாதன் சொன்னது…

தங்களது கருத்துக்கு மிக்க நன்றி தோழர்...

மாறுபடும் ஒன்றிரண்டை சொன்னால் விவாதிக்க வசதியாக இருக்குமே, தோழர்?

நன்றி...

கருத்துரையிடுக