செவ்வாய், நவம்பர் 28, 2017

தெரிந்தவற்றில் இருந்தே தெரியாததைக் கற்றுக்கொள்ள வேண்டும்!



தெரிந்தவற்றில் இருந்தே தெரியாததைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

மு.சிவகுருநாதன்

(இன்றைய - 28.11.2017 – ‘தி இந்து’ நாளிதழின் ‘புதிய பாடம் புதிய பாதை’ என்னும் தொடரில் இரண்டாவதாக வெளியான எனது கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.) 

     நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாரிப்பதே பாடத்திட்டத்தின் நோக்கம் என்ற எண்ணமே கல்விசார் சமூகத்தை ஆட்கொண்டிருக்கிறது. இத்தகைய எண்ணங்கள் கல்வியின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிராகிவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது என்பதைப் பாடத்திட்டக் குழுவுக்குப் பொறுப்பாகவுள்ள பள்ளிக்கல்விச் செயலர் உதயச்சந்திரன் உணர்ந்திருக்கிறார். சமூக அறிவியல் பாடத்திட்டத்துக்கான வழிகாட்டு நெறிகளை உள்ளடக்கிய நிலைபாட்டு அறிக்கையே அதற்குச் சான்று.

    மாணவர்களிடம் சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டு அறிக்கை பாராட்டுக்குரியது. கற்றல் செயல்பாடுகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் சிறப்பானது.பாடத்திட்டத் தலைப்புகளை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது என்றபோதிலும் அறிவியல், கணிதவியல் பாடங்களைக் காட்டிலும் மொழி, கலைப் பாடங்கள் எழுதப்படும்போது தொனி மாறவும் வாய்ப்புண்டு

     எனவே, விரிவான வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும். உதாரணமாக பவுத்தம், சமணம் என்ற ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால் அதில் என்ன நோக்கங்கள், கருத்துகள் எழுதப்படும் என்பதையும் அவதானிக்கவே விரிவான பாடத்திட்டம் தேவை. நோக்கங்களுக்கு எழுத்து வடிவம் எப்படிக் கொடுக்கப் போகிறார்கள் என்பது மிகப் பெரிய சவால். பழைய உதாரணங்கள் நம்பிக்கை கொள்ளும்படியாக இல்லை.

தமிழில் வெளியிடுக!

     பாடத்திட்டங்கள் தமிழில் வெளியிடப்படாதது பெருங்கேடு. தமிழில் வெளியிடாத போது சாதாரண மக்கள் இவற்றைப் பார்க்கவோ கருத்துரைக்கவோ இயலாமல் போகும். எல்லா வகுப்புகளிலும் மாணவர்களை வடிகட்டும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். கல்வித் துறையும் அலுவலர்களும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மூலம் திணிக்கும் மன உளைச்சல்களும் தற்கொலைகளும் நிகழாவண்ணம் தடுக்கப் பட வேண்டியது கட்டாயம்.
     அறிவியல் பாடங்களில் சமகாலக் கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்வதில் இருக்கும் ஆர்வம் மொழி மற்றும் கலைப் பாடங்களில் சமகால வரலாறு, இலக்கிய வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு சேர்ப்பதில் இல்லை. குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலைச்சர்களைப் பட்டியலிடுவது மட்டுமே சமகால வரலாறு அல்ல. அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறு செய்வது சமூகத் துரோகம். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வாக்களிக் கத் தகுதியுடையவராகும் இந்த இளைய சமூகத்துக்குப் பாடநூல்கள் எத்தகைய அரசியல், சமூக, பொருளியல் விழிப்புஉணர்வை ஊட்டியிருக்கின்றன எனக் கேட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

எளிமையாகவே சொல்லிக்கொடுக்கலாம்

    போட்டித் தேர்வுகள் மையமான கல்விச் சிந்தனை குழந்தைகளைத் தூரப்படுத்துகிறது. குழந்தை மையமானதெரிந்தவற்றில் இருந்து தெரியாதவற்றுக்குபோன்ற போக்குகளை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக்கொள்வதும் மிக மோசமானது. குறிப்பாக, வரலாற்றின் காலவரிசை முறைப்படி ஆறாம் வகுப்பில் பண்டைய கால வரலாறு, ஏழாம் வகுப்பில் மத்தியகால வரலாறு என அம்மாணவர்களின் வயதுக்கு ஒவ்வாத செய்திகளையும் தத்துவங்களையும் திணிப்பதை விடுத்து, கால வரிசைகளற்ற முறையில், எளிமையான முறையில் சொல்லிக் கொடுக்க முயல்வது நன்மை பயக்கும்.

    பாடநூல்கள் ஐந்திலிருந்து ஆறும் பத்திலிருந்து பதினொன்றும் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும் பெரும் இடைவெளியாகவும் அமைகின்றன. இவற்றைக் குறைக்க உயர்தொடக்க வகுப்புகளுக்கு (6-8) சமூக அறிவியலின் நான்கு பிரிவுகளை ஒன்றாக இணைத்து கருத்து (thematic) அணுகுமுறையுடன் பாடத்திட்டங்களை வடிமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இம்மாதிரியான எளிமையாக்கம் குழந்தைகளை மையம் கொண்டதாக அமையும்.

    பள்ளிகள் சிறைச்சாலைகள் அல்ல; மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டியவர்களும் அல்லர். மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து கல்வி கற்கும் இருவழிப் பாதையே இன்றைய தேவை.

     ஆசிரியருக்கான கையேடுகள், பயிற்சிகள், பள்ளி நூலகத்தைத் தரப்படுத்துதல், ஆசிரியர்களையும் வாசிக்கச் செய்தல் என்னும் பெருந்தடைகளைத் தாண்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர் கல்விப் பாடத்திட்டங்களும் கற்பிக்கும் முறைமைகளும் உடனடியாக மாற்றப்படுவது காலத்தின் கட்டாயம்.

- மு.சிவகுருநாதன், ‘கல்விக் குழப்பங்கள்நூலின் ஆசிரியர்,
தொடர்புக்கு: musivagurunathan@gmail.com

நன்றி: தி இந்து

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகளைக் கொண்ட, இக்காலகட்டததிற்குத் தேவையான பதிவிற்கு நன்றி.

கருத்துரையிடுக