செவ்வாய், ஜூன் 05, 2018

பன்முகப்பட்ட, அறிவியல் – அறவியல் சிந்தனையே இன்றைய தேவை


பன்முகப்பட்ட, அறிவியல் – அறவியல் சிந்தனையே இன்றைய தேவை
மு.சிவகுருநாதன்
(முதல்கட்டமாக ஒரு பருந்துப்பார்வை; தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் புதிய பாடநூல்கள் குறித்த விமர்சனப்பதிவு.)




   

     QR Code உள்ளிட்ட நவீன மின்னணு உலக சாத்தியப்பாடுகளைக் கொண்டு 1,6,9 மற்றும் 11 வகுப்புகளின் புதிய பாடநூல்கள் வெளியாகி மாணவர்களின் கைகளில் தவழ்கின்றன. பள்ளிக்கல்வித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன் அவர்களது ஈடுபாடும் பலரது உழைப்பும் ஒருசேர இந்த மாற்றத்தை நிகழ்த்தியுள்ளன. ஆனால் இந்த மாற்றம் ஒரு துளிதான். பாடநூல்கள் பல இடங்களில் பழைய பாடநூல்களைப் போலவே உள்ளது வியப்பூட்டுகிறது.


    ஆனால் இந்த உச்சபட்ச நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு மட்டுமே சிறந்த பாடநூற்கள் உருவாகிவிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பாடப்பொருள் உள்ளடக்கம், கருத்தியல், புதிய சிந்தனைகளை ஏற்கும் மனப்பக்குவமின்மை, ‘நிரம்பி வழியும்’ அறிஞர்கள் போன்ற பல்வேறு காரணிகள் தரத்தைக் குறைக்கின்றன.
    த.உதயச்சந்திரன் போன்ற கல்வி மற்றும் பாடத்திட்டம், பாடநூல் பற்றிய புரிதலுள்ள அலுவலர்கள் இருக்கும்போதே இந்நிலை என்றால் வருங்காலங்களில் இதைவிடச் சிறப்பான பாடநூல்கள் உருவாகும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது. 
    பாடநூலின் இறுதி வடிவம் கிடைத்தபிறகு அவற்றைப் வரைவுப் பாடத்திட்டத்தைப்போல் வரைவுப் பாடநூலாக வெளியிட்டு, திருத்தங்கள் செய்து பின்னர் இறுதியாக்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான பாடநூல்கள் உருவாவதைத் தடுக்க முடியாது.
    மந்தனத் தன்மைக்காக இவ்வாறு செயல்படுபவதாக இருப்பினும் அதை ஏற்க இயலவில்லை. 15 நாள்களுக்கு முன்னதாகவே சில பாடநூல்கள் (6 தமிழ் – ஆங்கிலம், 9 தமிழ் – ஆங்கிலம், 11 தமிழ் ஆகிய பாடநூல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகிவிட்டன. இரண்டாம், மூன்றாம் பருவப் பாடநூல்களையாவது முன்கூட்டியே வரைவுகளாக வெளியீட்டுத் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். 
    நாலாந்தர திரைப்படங்களுக்கும், குப்பை நூல்களுக்கும் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதும் வார, மாத, நாளிதழ்கள் வருங்கால சமூக உருவாக்கத்தில் முதன்மைப்பங்காற்றும் பள்ளிப் பாடநூல்களைக் கண்டுகொள்வதில்லை என்கிற நெடுநாளைய ஆதங்கம் ‘தி இந்து’ மூலம் தீர்ந்துள்ளது, மகிழ்ச்சி. பாராட்டுகள். சென்ற வாரம் பாடநூல்கள் பற்றிய 4 கட்டுரைகள் வெளிவந்தன. 

6 சமூக அறிவியல்
  
       மார்ச் 29, 2018 இல் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு அம்பேத்கர் பெயரின் நடுவே ராம்ஜியை சேர்த்து எழுத ஆணையிட்டது. அதை நமது பாடநூல் வல்லுநர்கள் உடனே செயல்படுத்தியுள்ளனர். டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் (பக். 224), பி.ஆர்.அம்பேத்கார் (பக். 225) என்று எழுதுபவர்கள் அம்பேத்கர் என்று எழுதுவது எந்நாளோ! அம்பேத்கர் என்று எழுதினால் அதை அம்பேத்கார் என்று திருத்தம் செய்ய பெருங்கூட்டமே காத்திருக்கிறது. 
    சர்வதேசம், தேசம் போன்ற சொல்லாடல்களின் பின்புலம் வேறு பொருளை நோக்கி பயணிப்பவை. உலகம், நாடு என்று பயன்படுத்தத் தடையேது? (சர்வதேச மலைகள் தினம், பக். 197) 
          வல்லினம் மிகும், மிகா இடங்கள் பற்றியத் தெளிவு இல்லை. பெயர் காரணம், விளையாடி பார், ஆந்திர பிரதேசம், புவி சார்பசைவு, நீர் சார்பசைவு, வேதி சார்பசைவு, கோழி கறி (அறிவியல் பாடங்கள்) என்று விலகி இருக்கும் இடங்கள் ஏராளம். இரப்பர், இரத்தம் என்று எழுதுவதிலுள்ள கவனம் பிழைகள், வல்லினம் மிகுதல் ஆகியவற்றில் இல்லை என்பது பெருங்குறையே. அச்சுப்பிழைகள் அநேகம். இவற்றைக் களைய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். வாயு பறிமாற்றம், குவாஷியோர்கள் என்றெல்லாம் இருக்கிறது. 
    வரைபடத்தில் குறிக்க வேண்டிய இடங்களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகியன உள்ளது. மாநிலப் பகுதிகள் டெல்லி, சென்னை போன்ற இடங்களான பொருள் விளங்கவில்லை. (பக். 130)
   குடும்பம், ஊர், பள்ளி, கிராமம் பற்றிய விவரங்களைச் சேகரித்து அவற்றின் வரலாறுகளை எழுதி வரலாற்று ஆசிரியராக ஆவதும், ‘நானும் ஒரு வரலாற்று ஆசிரியன்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுவதும் ஒன்றல்லவே! (பக். 129) 
     மொழி பற்றிய அறிவியல் படிப்பு மொழியியல் என்று விளக்கம் தரப்படுகிறது (பக்.219). மொழியை அறிவியல் முறைப்படி ஆராய்வதல்லவா மொழியியல்!
ரக்‌ஷபந்தன் (பக். 215) தவறாக உள்ளது. ஒருமை, பன்மை மயக்கங்கள் நிறைந்துள்ளன. மொழிப்பாடம் தவிர்த்த பிறபாடங்களில் இலக்கணப் பிழைகளைக் கண்டுகொள்ளாத வழக்கமான போக்கு ஒன்று உள்ளது. பாடநூலில் இது அறமல்ல. 
    இந்திய மக்கள் தொகை 2001 கணக்கீட்டின்படி மொழி பேசும் மக்கள் தொகைப் பட்டியல் உள்ளது (பக். 215). 2011 கணக்கில் இந்த அம்சம் சேர்க்கப்படவில்லையாம்! பல மொழிகளை இணைத்து இந்தி 41.03% என்று கட்டமைப்பதன் பின்னணி, அதைப் பாடநூலில் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்த வினா எழுவது இயல்பானது. 
    ஒன்பதாம் வகுப்பில் வறண்ட நிலப்பகுதி பாலை (பக். 58) என்று விளக்கம். ஆறாம் வகுப்பில் மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை (பக். 195) என்ற வரையறை. இது எந்த அளவிற்குப் பொருத்தமானது? கடலோரங்களில் மணல் சார்ந்த நிலப்பரப்புகள் உண்டு. அவை பாலையாகுமா? “குறிஞ்சியும் முல்லையும் தம் இயல்பில் திரிதல் பாலை”, என்கிற பழைய வரையறையும் இப்போது பொருந்தாது. நாநிலங்களும் பாலையாகும் சூழல் இங்குண்டு. 
    “சமணர் அமைத்த பள்ளிகளில் சமண மாணவர்களும் புத்த விகாரங்களில் புத்த மாணவர்களும் பயின்றனர்”, (பக். 170) யுவான் சுவாங் இங்கு கல்வி கற்க அனுமதிக்கப்பட்டது மத அடிப்படையிலா? என்கிற அய்யம் வருகிறது. சமணப்பள்ளிகளும் புத்த விகாரைகளும் கல்வி நிலையங்களாகச் செயல்பட்டதை சொல்ல நினைத்து அந்தந்த மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்றதாக கற்பிதம் செய்யலாமா? 
9 சமூக அறிவியல்
    லெமூரியா கண்டக் கோட்பாட்டின் பொருத்தமின்மை பற்றிய குறிப்பு வரவேற்புக்குரிய ஒன்று (பக். 14). சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான பாடப்பகுதி நன்றாக வந்துள்ளது. பசுபதி/சிவன் என்ற வழக்கமான கதையாடலை நிகழ்த்தாமல் அணுகியிருப்பதும் நன்று. படங்கள், ஆய்வுகள் பற்றிய தரவுகள் இதற்கு முன்னர் இல்லாத ஒன்று. 
    விரிவான வாசிப்பிற்கு என துணை நூல்கள் பட்டியலிடப்படுவது இனிமையானது. ரொமிலா தாப்பர், நொபரு கரஷிமா போன்றோரின் நூல்கள் இப்போது தமிழில் கிடைக்கின்றன. அவற்றையும் குறிப்பிட்டிருக்கலாம். 
     பண்டைய தமிழகத்தில், சோழர்கள் காலத்தில் குறிப்பிடத்தக்கச் சிறப்பு வாய்ந்த ‘குடவோலை முறை’ இருந்தது (பக். 175), தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் குடவோலை என்னும் வாக்களிக்கும் முறை வழக்கத்தில் இருந்தது (பக். 184) ஆகிய வரிகள் சங்ககால, பிற்காலச் சோழர்கள் ஆட்சியிலும் இருந்ததாகச் சொல்கிறது. பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் பிரம்மதேயங்களில் குறிப்பிட்ட சாதிக் குடும்பங்களின் தலைமையை திருவுளச்சீட்டு எடுக்கும் முறையை வாக்களிக்கும் முறை, சிறப்பு வாய்ந்த குடவோலை முறை என்று புனைவு எழுத வேண்டிய அவசியமென்ன? குடவோலை முறையில் எப்படி வாக்களிக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டுமல்லவா? NOTA, VVPAT போன்றவற்றோடு குடவோலை வாக்களிப்பையும் செருகுவதுதான் நமது ஆசிரியப் பெருந்தகைகளின் தலைசிறந்த பணியாக உள்ளது!
    +1 வரலாறு பாடத்தில் ‘உள்ளாட்சித் தேர்தலும் உத்தரமேரூர் கல்வெட்டும்’ என்றொரு பெட்டிச்செய்தி உள்ளது (பக். 187) பிராமணக் குடியிருப்புகளில் செயல்பட்ட வாரியங்களின் தலைவர்கள் சாதிமுறைப்படி திருவுளச்சீட்டு மூலம் நடந்த தேர்ந்தெடுப்பை இவர்கள் தொடர்ந்து நமது தேர்தல் முறைகளுடன் ஒப்பிடும் தீங்கிழைத்து வருகின்றனர். 
  நாம் அடிக்கடி சொல்வதைப்போல ஆசிரியர்களும் பேராசிரியர்களும் பாடநூல் எழுத லாயக்கற்றவர்கள் என்பதையே இது உணர்த்துகிறது. இவர்களது பங்களிப்பு மிகையாகும்போது இதுபோன்ற அபத்தக்கூத்துகள் அரங்கேறுவதைத் தடுக்க முடியாது. 
     சமணப்பிரிவுகள் இரண்டு சொல்லப்படுகிறது (பக். 83). ஸ்தானவாசிகள் என்கிற ஒரு பிரிவும் உண்டு. இவர்கள் உருவ வழிபாட்டை எதிர்த்து சமண ஆகமங்களை வைத்து வழிபடக்கூடியவர்கள். இஸ்லாமைப் போல உருவ வழிபாட்டை ஒதுக்கும் மரபு இருந்ததை அறிமுகம் செய்யலாமே!
   புத்தம் என்பதை பவுத்தம் எனலாமே! சில இடங்களில் மாற்றிச் சொல்வது ஏன்? இதில் ஓர்மை வேண்டும். 
    ‘நான்கு பெரும் காட்சிகள்’ (பக். 84) புத்தர் கதையை எவ்வளவு காலந்தான் சொல்லிக் கொடுப்பது? நதிநீர்ச் சிக்கலை பெட்டிச்செய்தியாகவாவது இணைக்கலாமே!
    ஆண், பெண் பவுத்தத் துறவிகள் முறையே பிக்கு, பிக்குணி என்று தமிழ் மொழிக்கேற்றவாறு பயன்பாட்டில் இருக்கும்போது பிட்சு, பிட்சுணி (பக். 85) என்று எழுதுவது கொடுமையாக உள்ளது. 
    பிற அவைதீகப் பிரிவுகளில் ஆசிவகம் பற்றி ஒரு பத்தி இணைக்கப்பட்டிருப்பது நன்று (பக். 86). நாளந்தா பல்கலைக் கழகம் பற்றிச் சொல்லும்போது கோவில்களும் கல்விப்பணி செய்தன (பக். 92) என்று போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. அது எத்தகைய கல்விப்பணி என்பதை விளக்க வேண்டாமா? 
    கலைச்சொற்கள் பட்டியல் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. கூடவே மொழியாக்கத்திலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். புத்தரின் போதனைகளை ‘அட்டசீலம்’ எண்வழிப்பாதை என்றும் Hails ஐ கல்மாரி மழை (9 அறிவியல்) என்றும் மொழி பெயர்க்கப்படுகிறது. எண்வழி, கல்மாரி அல்லது கல்மழை என்று பெயர்க்காமல் இரட்டைகிளவிகள் எதற்கு என விளங்கவில்லை. (கல்மாரி என்று அட்டவணையில் உள்ளது. உள்ளே கல்மாரி மழைதான்!) 9 அறிவியல் பாடத்தில் pesticides ஐ ‘பூச்சிக்கொல்லி மருந்துகள்’ (பக். 220) என்று மொழியாக்கம் செய்யப்படுகிறது. ‘பூச்சிக்கொல்லி’ என்று சொல்வதில் என்ன சிக்கல்? அது என்ன ‘பூச்சிக்கொல்லி மருந்து’? ‘பூச்சி மருந்து’ என்கிற தவறான சொல்லாடல் மாறி ‘பூச்சிக்கொல்லி’யாக நடைமுறையில் வந்துவிட்ட பிறகு இன்னும் ஏன் பழஞ்சொல்?
    இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ‘கீழவை’, ‘மேலவை’ என்ற சொல்லாக்கங்களையே பயன்படுத்திக்கொண்டிருக்கப் போகிறோம்? (பக். 177). நகர்மயம் நகர் மையம் ஆகியிருக்கிறது (பக். 68). தினைப்புனம் ‘திணைப்புனம்’ (பக். 60) ஆகியுள்ளது. 
    இரசாயனச் சிதைவு (பக். 122), இரசாயன மாற்றம் (பக். 125) என்பதை வேதிச்சிதைவு, வேதி மாற்றம் என புழக்கத்தில் வந்து பல்லாண்டாகிவிட்டதே! இன்னும் ஏன்? இதைப்போன்ற இடங்களில் பாட நூல் ஆசிரியர்களின் வாசிப்பு ஐயுற வைக்கிறது.
    பாரத் சஞ்சார் நிகம் லிட். என்பதை அப்படியே சொல்வதில் என்ன தடை? மத்திய அரசின் திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் இந்தி மயந்தானே! பாரத தொலைபேசி நிறுவனம் என பெயர்க்க வேண்டிய தேவையென்ன? (பக். 212).
    9 -ம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் video conference காணொலிக் கூட்டம் (பக். 121) என்றுள்ளது. காணொளி, காணொலி என பல இடங்களில் மாற்றிப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் எது சரியானது? . கலைச் சொல்லாக்கங்கள் மிகவும் செயற்கையாக இருப்பது மாணவர்களை கல்வியிலிருந்து தூரப்படுத்தவே செய்யும். 
     அழுத்தக்குழுக்களை இணைத்திருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்ச் சங்கம் என பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடுவது சரியல்ல. இருக்கின்ற செயல்படும் அமைப்புகளைக் குறிப்பிடுவதே நன்று. (பக். 190) மேலும் தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு உதாரணமே அளிக்கவில்லை. (பக். 188) தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இருக்க வேண்டுமல்லவா! இதில் அரசியல் வந்துவிடும் என்று என்று அச்சப்படத் தேவையில்லை. 
    மனிதவளக் குறியீட்டு எண் பற்றி பேசப்படுகிறது. உலகத்தில் இந்தியாவில் இடம் சொல்லாமல் மறைக்கப்படுகிறது (பக். 201)
     தமிழ்நாட்டைப் பிற மாநிலங்களுடன் ஒப்பீடு செய்யும் அட்டவணை உள்ளது (பக். 201). அமர்த்தியா சென் புத்தகங்களிலிருந்து சில பத்திகள் அளிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு (பக். 205). சூரிய சக்தி மின்னுற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலம் (பக். 203) என்று உள்ளது. முன்னணிக்கும் முதலிடத்திற்கும் வேறுபாடு உண்டே! 
     9 ம் வகுப்பு அறிவியலில் +2 க்குப் பிறகு என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. இதை ஒவ்வொரு பாடத்திலும் அந்தப் பாடம் சார்ந்த படிப்புகள், வேலை வாய்ப்புகளைச் சேர்த்திருக்கலாம். இதைப் பார்க்கும்போது வழக்கம்போல அறிவியல் பாடத்திற்கு முன்னுரிமை என்கிற தமிழகக் கருத்தே வலுப்படும். 
    மேலதிக வாசிப்பிற்கு ஏன் தமிழ்ப் பாடநூல்களில் இடமில்லை? தமிழாசிரியர்களோ, மாணவர்களோ எதையும் படிக்கத் தேவையில்லை என்ற எண்ணமா? ‘நூல் வெளி’ என்று தலைப்பு வைத்துவிட்டு, அதை வெறும் ஆசிரியர் குறிப்பாக சுருக்குவது ஏன்? 
    +1 வரலாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள் களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்டதாகக் கூறுகிறது (பக். 88). திருக்குறள், நாலடியார் இவை இரண்டும் அக்காலத்தில் இயற்றப்பட்டவில்லை என்பதுதான் உண்மை.
    பாடக்கருத்துகளால் பாடங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது நல்ல நோக்கம். அந்த இணைப்பின் அவலம் உதாரணத்திற்கு ஒன்று மட்டும். 
டெல்டா
    ஆற்றின் முகத்துவாரத்தில் படிவுகள் முக்கோண வடிவில் படிய வைக்கப் படுகின்றன. இவ்வாறு முக்கோண வடிவில் படிவுகளால் உருவாக்கப்பட்ட நிலத்தோற்றம் டெல்டா என அழைக்கப்படுகிறது.டெல்டாக்களில் உள்ள வண்டல் படிவுகள் மென்மையானதாகவும், தாதுக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. (உதாரணம்) காவிரி டெல்டா – தமிழ்நாடு (பக். 128, 129: 9 சமூக அறிவியல்)
டெல்டா உருவாதல்
    ஆற்றுநீர் கடல் நீருடன் கலக்கும் இடத்தில் உருவாகும் நில அமைப்பு டெல்டா எனப்படுகிறது. களிமண் துகள்களும், கடல் நீரின் கூறுகளும் கூழ்மமாகத் திரிந்து வண்டல் படிவதே டெல்டா எனப்படுகிறது. இந்தியாவில் உள்ள டெல்டாக்கள் – குறிப்பாக சுந்தரவனக்காடுகள் பற்றி மேலும் படித்துத் தெரிந்து கொள்ளவும். (பக். 116, 9 அறிவியல்)
    முன்னது டெல்டா பற்றியும் பின்னது சதுப்பு நிலங்கள் பற்றியும் பேசுகிறது. இரண்டும் ஒன்றல்லவே! ஏன் இரண்டையும் ஒன்றாக்கி இவர்களும் குழம்பி மாணவர்களையும் குழப்பவேண்டும்? இதுதான் நாம் பலமுறை வலியுறுத்தும் ‘கல்விக்குழப்பங்கள்’. இது புதிய பாடநூலிலும் தொடர்வது கொடுமை. பன்முகப்பட்ட, அறிவியல் - அறவியல் சிந்தனையே இன்றைய தேவை என்பதையும் மாற்றுகள் மீதான கரிசனத்தையும் நாம் மீண்டும் வலியுறுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

1 கருத்து:

கருத்துரையிடுக