திங்கள், ஜூன் 25, 2018

மொழிப் பாடநூல்களின் அரசியல் (இரண்டாம் பகுதி)


மொழிப் பாடநூல்களின் அரசியல் (இரண்டாம் பகுதி)


மு.சிவகுருநாதன்


         (முந்தைய பதிவின் தொடர்ச்சி.)


11 ஆம் வகுப்பு தமிழ்


     “கற்றது தமிழ்! பெற்றது புகழ்” பகுதி நன்று. இருப்பினும் தமிழைப் பாடமாக எடுத்துப் படித்த / படிக்காத பலர் எழுத்தாளாராக இருப்பதைச் சுட்டுவது அவசியம். வேலை வாய்ப்பைப் பெறுவது மட்டுமே கல்வியல்லவே! மொழியாளுமை மிக்க படைப்பாளிகள் இந்த மொழி வாழ்விக்கின்றனர். அதைப்போலவே போலந்து வார்சா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிய அனைவரும் எழுத்தாளர்களாகவும் உள்ள தமிழறிஞர்கள் என்பதையும் தெரிவிக்கலாம். இந்திரா பார்த்தசாரதி, தி.சு.நடராசன் ஆகிய இருவர் மட்டுமல்ல; தமிழவன், கி.நாச்சிமுத்து, அ.ராமசாமி போன்றோரையும் குறிப்பிடலாமே! கி.நாச்சிமுத்து ஆலோசனைக் குழுவில் இருந்தபடியால் தவிர்ப்போ? பிறரது பங்களிப்பைக் கருத்தில் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். 

     மொழி, இயற்கை / வேளாண்மை / சுற்றுச்சூழல், பண்பாடு, அறிவியல் / தொழில்நுட்பம், கல்வி, நாகரிகம் / தொழில் / வணிகம், கலை / அழகியல் / புதுமைகள், நாடு / சமூகம் / அரசு / நிருவாகம், அறம் / தத்துவம் / சிந்தனை, மனிதம் / ஆளுமை ஆகிய 10 பொருண்மைகளில் 11 ஆம் வகுப்புத் தமிழ்ப்பாடம் நம்முன் விரிகிறது. இதற்கு முன்னர் இல்லாத தன்மை; பாராட்டியே ஆகவேண்டும். 

    முதல்பாடமான இந்திரனின் ‘பேச்சுமொழியும் கவிதைமொழியும்’ மரபுத் தமிழாசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது. புதுக்கவிதை மனப்பாடப்பகுதியா என்ற அடுத்த அதிர்ச்சி சு.வில்வரத்தினத்தின் ‘யுகத்தின் பாடல்’. அந்தப்பகுதியில் இடம்பெற்றுள்ள படமே நமக்கு அதிர்ச்சியளிப்பது. தமிழன்னை என்று கற்பிதம் செய்யப்பட்ட படம் இங்கு ஏன்? ‘கடவுள் வாழ்த்தை’ விரட்டியடித்தப் பெருமிதத்தில் இருக்கும்போது இவ்வாறு பேரிடி தரலாமா? சு.வில்வரத்தினம் எழுதிய பல்லாண்டு வாழ்த்து, தமிழ்த்தாய்க்கு எங்ஙனம் பொருந்துகிறது? என்று சிறுவினாவும் கேட்டாகிவிட்டது. இதற்கு கடவுள் வாழ்த்தே வைத்திருக்கலாம்? 

      “திருவள்ளுவர் பற்றிய அறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை” என்று சொல்லிவிட்டு ஊரெங்கும் சிலைகள், படங்கள் வைப்பது பற்றி மாணவர்களுக்கு எத்தகைய புரிதல்கள் உண்டாகும்? வேணுகோபால் சர்மாவின் ஓவியம் திருவள்ளுவராக மாறிய கதையையாவது அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். 

    புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’ முன்னுரை,  பிரபஞ்சனின் ‘பிம்பம்’ சிறுகதை, ஆத்மநாம், பிரமிள் கவிதை, இன்குலாப் கவிதைகள், நர்த்தகி நட்ராஜ் செவ்வி, ஜெயமோகனின் யானை டாக்டர், ஆ.பாலகிருஷ்ணனின் மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு, சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் என ஒரு புதிய அனுபவம் மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கும் கிடைக்கும்.  

   பிரான்சு என்றெல்லாம் பெயர்ச்சொற்களை எழுதவேண்டிய அவசியம் குறித்து சிந்திக்க வேண்டும்.  அதுவும் பல இடங்களில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்திவிட்டு சிற்சில இடங்களில் மட்டும் இவ்வகைத் தீண்டாமையை ஏன் பின்பற்ற வேண்டும்?  இராசேந்திரன் (இந்திரன்) ராசேந்திரன் (மீரா), சங்கரதாசு சுவாமிகள் டி.கே.எஸ். சகோதரர்கள் (பக். 193) இராமேசுவரம், இரசவாதம், சோதி என்றெல்லாம் எழுதுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டுகிறேன்.

  இரசாயன உரம், இரசாயன பூச்சிக்கொல்லி என்றும் வேதியுரம், வேதிப் பூச்சிக்கொல்லி என்று மாறிமாறிப் பயன்படுத்திவிட்டு, மொழிக்கு முதலில் வராது என்று இரசூல் கம்சதோவ், இரயில், இரசிகமணி என்றெல்லாம் எழுதுவது நன்றாகவா இருக்கிறது. தொடரி அல்லது தொடர்வண்டி என்று எழுதிவிட்டுப் போங்களேன்! வேட(ஷ)ம்  (பக். 215) என்று அடைப்புக்குறிக்குள்  தரும்போது, கிரந்தம் குறித்த கவலை எங்கே போனது?  

   ஏ.ஆர்.இரஹ்மான் என்று எழுதுவது பெரும் வன்முறை. இது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவது. அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திடுவது குறித்த அரசாணை உண்டு. திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை கிடைக்கும். அதைப்போல அரசு ஏதேனும் திட்டத்தை அறிவிக்கலாம். தமிழில் பெயரிடச்சொல்லி சட்டம் இயற்ற இயலாது. ஒருவருக்கு கிரந்த எழுத்தைப் பயன்படுத்திவிட்டு, மற்றவருக்கு பயன்படுத்த மறுப்பது பாரபட்சமல்லவா! மொழிக்கு முதலில் வராது என்று பெயரை மாற்றுவது அறிவுடைமையாகாது. குறைந்தபட்சம் அவர்கள் பயன்படுத்தும் எழுத்துகளில் பெயரை எழுதும் பண்பாடு வேண்டும், அல்லது இதை எல்லோருக்கும் பொதுவாக ஆக்கவேண்டும். செயலலிதா, இசுடாலின் என்ற எழுத முன்வராதபோது பிற பெயர்களை மட்டும் மாற்றி எழுதும் சுதந்திரம் எப்படி வந்தது? 

   இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்  போன்ற பெயர்களில் கிரந்த எழுத்து இருக்கிறது. ஆனால் மொழிக்கு முதல் பிரச்சினை என்று பார்க்கப்படுகிறது. சங்கரதாசு சுவாமிகளுக்கு உள்ள ‘கிரந்த’ச் சிக்கல் ஏன் மேலேயுள்ள பெயர்களுக்கு இல்லை?  ஹெச்.ஜி.ரசூல், இரசூல் கம்சதோவ் என்று எழுதுவதன் அபத்தம் நமக்கு விளங்கவில்லை. பாடநூல் எழுதுவது பலரது கூட்டுச் செயல்பாடு. இருப்பினும் அவற்றை தொகுத்தும்போது அவற்றில் முடிந்த அளவிற்கு ஓர்மை இருப்பது நலம் பயக்கும். இந்த முரண்பாடுகளைச் சுட்டுவதை கிரந்த ஆதரவு என்று மிக எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடாது.

   நாவல் என்று சொல்வதில் ஏன் அச்சம்? புதினம், குறும்புதினம் (குறுநாவல் என்று சொல்வார்களாம்!) என்றே பண்டிதப் பெருமக்கள் உரைப்பர்! புதினம் என்ற சொல்லைக் கல்விப்புலத்திற்கு வெளியே கேட்கமுடியாது. அப்படியிருக்க நாவல் என்ற சொன்னால் தமிழ் கெட்டுவிடுமா? குறும்பு தினம் என்று பிரித்து எழுதாமல் விட்டால் சரி. இத்தகைய மொழியரசியல் வளர்ச்சிக்கு உதவாது. 

   ‘இனிக்கும் இலக்கணம்’ இனிக்காமல் போவதன் புதிரென்ன? பயன்பாட்டு இலக்கணமாக எளிமையாக அமையவில்லை என்பதால்தானே!

    உடன்பட்டும் மறுத்தும் பேசுக (பக். 74) நன்று. ஆனால் உண்டு, இல்லை என்று கட்சி கட்டுவதைவிட பன்முகப்பார்வைத் திறப்புகளை உருவாக்க முயல்வே அழகு. அறிவியல் முன்னேற்றம் வளர்ச்சியா? வீழ்ச்சியா? விவாதிக்க.  (பக். 92) என்ற பட்டிமன்ற பாணி விவாதங்கள் வெற்றுப் பேச்சாகவே அமையும். எதில் வளர்ச்சி, எங்கு வீழ்ச்சி எனத் தேடல் விரிவடைந்து செல்வதே நல்லது; மாறாக மறுதலிப்பது ஏற்றதல்ல. 

    ‘நிற்க அதற்குத் தக’, (பக். 75) அட்டவணை பாலின சமத்துவத்தை பேச வைக்குமா? வெறும் கட்டங்களைப் பூர்த்து செய்வதோடு நின்று விடுமா? இங்கு விவாத்திற்கான இடம் அளிக்கப்படும் என்று நம்ப முடியவில்லை. தலைப்பு கூட இருக்கின்ற அமைப்பை ஏற்க வலியுறுத்துவது போன்ற தொனி உள்ளது.

     படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க (பக். 81) என்று தவத்தைச் சித்தரிப்பது பொருத்தமாக இல்லை. 

    நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) உளவியல் மொழியியலாளர் (பக். 89) என்று குறிப்பிடப்படுகிறது. psycholinguist என்பதற்கு  உள மொழியியலாளர் என்று சொல்வதே பொருத்தமானது. Biochemist என்பதை உயிர் வேதியியலாளர் என்றுதான் சொல்கிறோம். உயிரியியல் வேதியியலாளர் என்று சொல்வதில்லையே! மேலும் நோம் சாம்ஸ்கி பல்துறை அறிஞர். ஒரு துறையில் குறுக்குவது சரியா? 

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத் தயாரிப்பில் சுஜாதா பங்களிப்பு மிகுதி என்று குறிப்பிடப்படுகிறது. பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனம் உருவாக்கிய  எந்திரத்தில் சுஜாதாவின் பங்கைத் தெளிவாக குறிப்பிட்டிருக்கலாமே! 

   19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜகதீச சந்திரபோஸ் (பக். 94) எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றுகூட சொல்லக்கூடாதா? தொடர் புறக்கணிப்பிற்கு உள்ளாகும் விஞ்ஞானிகளை கூடுதலாக அறிமுகப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.

   அப்துல் கலாம் (அக்னி சிறகுகள்) (பக். 112) நூல் பள்ளி வளாகங்களில் அதிக புழங்கிய நூலாக இருக்கும். அறிவியல் சார்ந்த பாடத்தில் அவை சார்ந்த நூல்கள் இடம்பெறுவதே இயல்பு. அப்துல் கலாமை எங்கும்  நிறைக்கவேண்டும் என்கிற ஆவலைக் குறைப்பது நாட்டுக்கு நல்லது! 

  தரங்கம்பாடியில் முதலில் தமிழ் நூலை அச்சடித்தவர் சீகன் பால்கு என்பதைச் சொல்ல மறந்தது / மறைத்தது ஏனோ? (பக். 117) 

   2010 –ல் நடைமுறைக்கு வந்த கட்டாய இலவசக் கல்விக்கு முன்னோடியாக மும்பை மாகாண சட்டமன்றத்தில் 1911 கோகலே கொண்டுவந்த மசோதா குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆனால் குறிப்பிடவில்லை. (பக். 118)

  புதுக்கவிதையை நயம் பாரட்ட முடியாதா என்ன? என்கிற நமது ஆதங்கம் இறுதியில்தான் பூர்த்தியாகிறது. ஹெச்.ஜி.ரசூல் (பக். 264) கவிதை ஒன்று நயம் பாராட்டலில் உள்ளது.

  கலைச்சொற்களைத் தரப்படுத்தவேண்டும் (பக். 191) என்று இலக்கணம் வகுத்துவிட்டு Disaster என்பதை பேரழிவு (பக். 196) மொழியாக்கம் செய்யப்படுகிறது. பேரிடர் என்பதே  பொதுவானப் பயன்பாட்டில் உள்ளது. சமணர் படுக்கை,  சமணர் படுகை (பக். 196) ஆகியுள்ளது. 

   ‘மொழியை ஆள்வோம்’ மயிலை சீனி.வேங்கடசாமி (பக். 217) நகராட்சிப் பள்ளி ஆசிரியர் என்பதை இடைநிலை ஆசிரியர் என்று குறிப்பிடுவது சரி. 

    Debate (விவாதம்) என்பதற்கு  பட்டிமன்றம் என்ற சொல் எந்த அளவிற்குப் பொருத்தமானது? செங்கை மருத்துவக் கல்லூரி செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரியாதல் நலம். 

   பிறமொழி இதிகாசங்கள் போரினை முதன்மைப்படுத்திப் பேசும். ஆனால் தமிழ்க்காப்பியங்கள் போருக்கு முதன்மைக் கொடுக்கவில்லை. (பக். 231) பொதுவாக மன்னனைப் பாடுவதே காப்பிய இயல்பு. ஆனால் சிலம்பதிகாரம் கோவலன் – கண்ணகி என்னும் சாமான்ய  குடிமக்களைப் பாடியது, மணிமேகலையின் பவுத்தச் சார்பு ஆகிய போரினை முதன்மைப் படுத்தாமைக்கு காரணங்கள். இதை யார் சொல்லிக் கொடுப்பது? 

  “அறமும், தத்துவமும் எக்காலத்திற்கும் பொருந்தும் – விவாதிக்க”, (பக். 232) என்ற செயல்பாடு அளிக்கப்பட்டுள்ளது. தத்துவம் பல கிளைகள் கொண்டது. அதில் அறமும் ஒன்றெனக் கொள்ளலாம். ‘அறமும் தத்துவமும்’ என்பது பொருத்தமாக இல்லை.

   நர்த்தகி நட்ராஜ் செவ்வி பாட இறுதியில்  திருநங்கைகள் பிரியா பாபு, லிவிங் ஸ்மைல் வித்யா, ரோஸ் போன்ற தமிழகத் திருநங்கைகளை அறிமுகப்படுத்தியிருக்கலாமா? 

  பல இடங்களில் வடமொழி சமஸ்கிருதம் மட்டுமே என்பதான தொனி நிறைந்துள்ளது. பாலி, பிராகிருதம் ஆகியவற்றை மறைக்கலாமா? 

   “போதனா முறையைத் தாண்டி வாழ்வியலைக் கட்டமைப்பதில் உறுதியாக விளங்கிய”,   (பக். 116) குருகுலக்கல்வியின் பெருமை பேசப்படுகிறது. குருகுலக்கல்வி எத்தகைய வாழ்வியலைக் கட்டமைத்தது? அது யாருக்கான கல்வி? இன்றைய கல்வியுடன் அதன் தொடர்பு என்ன? மெக்காலேக் கல்வியை தூற்றுபவர்கள் குருகுலக்கல்வியை உயர்த்திப் பிடிப்பது வழக்கம். பாடநூல் குருகுலக்கல்வியை உயர்த்திப்பிடிக்க வேண்டிய தேவையில்லை. தேவையிருப்பின் அதற்கான காரணங்களைப் பட்டியலிட ஏன் தயக்கம்? 


11 –ம் வகுப்பு சிறப்புத்தமிழ்

     கவிதையியல், கதையியல், அரங்கவியல், இலக்கணவியல், ஊடகவியல், கணித்தமிழியல் என்ற ஆறு பொருண்மைகள் கொண்டதாக 11 –ம் வகுப்பு சிறப்புத்தமிழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி, இளம்பிறை, லிவிங் ஸ்மைல் வித்யா ஆகிய கவிஞர்கள் பல தமிழாசிரியர்களுக்கு அறிமுகம் ஆகாதவர்கள். இந்தப் பாடநூல்கள் வழி அந்த நல்ல காரியம் நடந்துள்ளது. சுகந்தி சுப்பிரமணியன், குட்டி ரேவதி, லீனா மணிமேகலை போன்ற பலர் விடுபட்டிருப்பது இதிலுள்ள அரசியலை நமக்குக் காட்டுவது.  இதைப்போன்று ந.பிச்சமூர்த்தி, நகுலன், பிரமிள், இன்குலாப், ஞானக்கூத்தன் ஆகிய கவிஞர்களும் பள்ளிப்பாடநூலில் இடம்பெறுவது நல்லது.  

   புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், மணிக்கொடிக் காலம் ஆகிய நூல்கள் கவிதை பற்றிய நூல்கள் (பக். 14) அல்லவே! இவை கவிதை ஆய்வு நூல்கள் தானே! குழப்பத்தைப் போக்க அடைப்புக்குறிக்குள் குறிப்பிடலாம். 

   சித்தர் மரபின் முக்கிய கண்ணி வைதீக மறுப்பு. வைதீக மறுப்பு என்பது வருண / சாதி, கடவுள், வேத மறுப்பாகும். அறிவு, ரசவாதம், மூச்சு, யோகம், மூடநம்பிக்கை எதிர்ப்பு என்றெல்லாம்  சொல்கிறபோது வைதீகத்தை மறுத்த அவைதீக மரபின் தொடர்ச்சியாக நாம் சித்தர்களை அறிமுகம் செய்யவில்லையே, ஏன்? 

    “மிகநவீனமான புனைவு நடையைக் கொண்டவர் சுஜாதா”, (பக். 34), “சுஜாதாவின் பங்களிப்பு மிகுதி”, என ஒரு சிலரை மட்டும் உயர்த்திப்பிடிக்கும் போக்கு பாடநூலின் இயல்பாக இருக்கக்கூடாது. 

   5 தலைமுறைகளாக எழுத்தாளர்களை வகைப்படுத்தியும் ஆங்காங்கே சிலரைச் சொல்லிவிட்டு பலரை விடுவது நியாயமல்ல. கதைத்தேர்வில் கவனம் செலுத்தியிருக்கலாம். அயலக எழுத்துகளை இன்னும் சிறப்பாக அறிமுகம் செய்ய வாய்ப்பிருந்தும் வீணடிக்கப்பட்டுள்ளது. புதுவகை எழுத்துகளை இன்னும் சிறப்பாக அறிமுகம் செய்ய வேன்டியது அவசியம். இங்கொன்றும் அங்கொன்றுமாக சமரசம் செய்யும்விதமான தேர்வுகளும் சில சார்புகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இங்கொன்றும் அங்கொன்றுமாக பெயர்களை அள்ளித் தெளிக்கும் போக்கு சரியல்ல. 

    பாஸ்கரதாஸ் என்றும் எழுதும்போது சங்கரதாஸ் என்று எழுதுவதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை. (பக். 110)

    அடுத்த வகுப்புகளில் நவீன அரங்கவியல் இடம்பெறும் என்று நம்புவோம். ஞாநி, முத்துசாமி, ராமானுஜம், ராமசாமி, வேலு சரவணன், ச.முருகபூபதி போன்ற பலர் அதில் இடம் பெற்றால் நல்லதுதான். 

   பேச்சுக்கலை இன்று சீரழிவின் குறியீடாக உள்ளது. இந்த நிலைமைக்கு பட்டிமன்றங்களும் பள்ளி இலக்கிய மன்றங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. இதை மாற்ற முயல்வது நலம். மீண்டும் அந்த சுழலுக்குள் சிக்காமல் காக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. 

  தமிழ்ச்சிற்றிதழ்களில் கலைமகள், சுபமங்களா ஆகியவற்றைச் சேர்த்திருக்க வேண்டியதில்லை. இடைநிலை இதழ்கள் என்னும் புதுப்பிரிவில் இன்று வெளிவந்துகொண்டிருக்கும் காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, அம்ருதா, கணையாழி, குமுதம் தீராந்தி, காக்கைச்சிறகினிலே, விகடன் தடம், பேசும் புதிய சக்தி, புதிய புத்தகம் பேசுது, உங்கள் நூலகம் போன்ற இதழ்களை அறிமுகம் செய்யவேண்டும். சிறுவர் இதழ்களை எந்த வகுப்பிலும் அறிமுகம் செய்யாமலிருப்பது சரியா? இது ஆசிரிய சமூகத்திற்கே தேவையான ஒன்று. சிற்றிதழ்களில் நிகழ் இதழ் குறிப்பிடப்படுகிறது. பெரும் தாக்கத்தை உண்டாக்கிய நிறப்பிரிகை இதழை மறைப்பது சரியல்ல. அரசியல், கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளத்தில் நிறப்பிரிகை இதழின் வீச்சு அதிகம். 

   இறுதியாக… புதிய பாடநூலை ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும்  எவ்வாறு கொண்டு செல்லப்போகிறோம்? 

   புதிய பாடநூல்களில் எவ்வளவுதான் நல்ல அம்சங்கள் இருப்பினும் அவற்றை முறையான பயிற்சிகள் இல்லாமல் வகுப்பறைக்குள் கொண்டு செல்வது எளிதான காரியமல்ல. பாடங்கள் எழுதுதல், பயிற்சி எதுவாகினும் இங்கு அதிகாரப் படிநிலை வரிசை (hirerchy) ஒன்று பின்பற்றப்படும். இப்ப்போதும் அம்முறையே கடைப்பிடிக்கப்பட்டால் பலனிருக்காது. 

   இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் - ஆசிரியப் பயிற்றுநர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்லூரிப் பேராசிரியர்கள் - மாவட்ட கல்வி  மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் என்கிற முறையில் பயிற்சி தந்தால் போதுமென்று எண்ணுவது தவறு. இம்முறை பாடநூல் உருவாக்கத்தில் கல்விப்புலப் பணியாளர்கள் அல்லாத படைப்பாளிகள் பலர் ஈடுபடுத்தப்பட்டனர். 

   அதைப்போல ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதிலும் மொழி. இலக்கியம், கவிதை, சிறுகதை, பாடநூல் பற்றிய புரிதலுள்ள படைப்பாளிகள், கல்வியாளர்கள், கல்விப்புலம் சாராத அறிஞர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். முந்தைய பல பயிற்சிகளில் உள்ளூர் வளங்கள் என்கிற போர்வையில் பட்டிமன்றப் பேச்சாளிகள் (வாய் வியாபாரிகள்), கல்லூரிப் பேராசிரியர்கள் ஆக்ரமித்துக்கொண்டதுதான் நடந்தது. மீண்டும் அதுபோன்று நடவாமல் இருக்க முறையான திட்டமிடல் அவசியம். 

   “புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை, கடைசி நேரத்தில் தொலைபேசியில் அழைத்தார்கள், வேறு ஆட்கள் இல்லாததால் சென்று வந்தோம், பயிற்சிக் கட்டகம் ஒன்றும் அளிக்கவில்லை, இதிலுள்ள செய்திகள் எங்களுக்கே புரியவில்லை”, என்றெல்லாம் பயிற்சிகள் பலவற்றில் கருத்தாளர்கள் கூறுவது வழக்கம். அது மாதிரி இதிலும் நடக்கக்கூடாது என்கிற தவிப்பில் பேசவேண்டியுள்ளது. 

    அன்றாடச் செய்தித்தாள்கள் கூட வாசிக்காத பெரும்பான்மை ஆசிரியச் சமூகம் வெறும் நோட்ஸ்களை நம்பிக் களத்தில் இறங்குவது தவிர்க்க முடியாது. பாடநூல் இறுதி வினாக்கள் தவிர்த்துப் புதிய சிந்தனையைத் தூண்டும் பிற வினாக்களும் இருக்கும் என்பது நோட்ஸ் வியாபாரிகள் காட்டில் பெருமழைதான்! பெரும்பாலான ஆசிரியர்கள் மத்தியில் கூடுதலான பாடப்பகுதிகள், சிந்தனைகள் இருப்பதற்கு எதிரான மனத்தடை உள்ளது. இவைகளை உரிய பயிற்சிகள் மூலமே களைய முடியும். 

   100% தேர்ச்சி என்னும் கூண்டிலிருந்து ஆசிரியர்களை அவ்வளவு எளிதில் வெளியே கொண்டுவந்துவிட முடியாது. தேர்ச்சி தேவை என்பதையும் மறுக்க இயலாது. அதற்குத் தகுந்த வகையில் தேர்வு அமையவேண்டும். படிக்கும் மாணவர்கள் அனைவரையும் போட்டித்தேர்வுக்குத் தயார் செய்திட வேண்டிய அவசியமில்லை. +1,+2 வகுப்புகளில் உள்ளதைப்போல அறிவியல், கலை உள்ளிட்ட அனைத்துப் பாடங்களுக்கும் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குவதை பத்தாம் வகுப்பிற்கும் நீட்டிக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைவதற்கும் மீத்திறம் கொண்டவர்கள் உரிய போட்டித்தேர்வை எழுதும் தகுதி பெறுவதற்கும் கல்விச்சூழல் சாதகமாக  அமைய வேண்டும். வழக்கம்போல திணிப்பு, ஆசிரியர்கள் மாணவர்கள் எவருக்கும் மனவுளைச்சலைத் தராத வகையில் தேர்வுகள் அமைவது அவசியம். 

     கல்வியில் வணிகம் முற்றாக ஒழியவேண்டும். அதற்கு தனியார் சுயநிதிப்பள்ளிகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் இன்றி கல்விச்சிக்கல்கள் தீரப்போவதில்லை. இருப்பினும் புதிய பாடநூல் அமலாக்கம் வழியே ஒரு கோரிக்கை வைப்போம். தற்போது மெட்ரிக் பள்ளிகள் இல்லாத நிலையில், அரசுப் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் அப்பள்ளிகள் 1 முதல் 9  முடிய உள்ள வகுப்புகளில் இதர தனியார் பாடநூல்களை அளித்து இரட்டைச்சுமையளிக்கின்றன.  இதற்கு முடிவு கட்டப்படவேண்டும். அதுவும் குறிப்பாக தொடக்கநிலைகளில் (1 – 5 வகுப்புகள்) அரசுப் பாடநூலுடன் இதர தனியார் பாடநூல்களும் இந்தி போன்றவையும் கற்பிக்காத தனியார் சுயநிதிப்பள்ளிகளே தமிழகத்தில் இல்லை என்பதே உண்மை. எங்காவது சில விதிவிலக்குகள் இருக்கலாம். அரசுப் பாடநூல்களை மட்டும் பயன்படுத்துதல், குறிப்பாக ஒன்பதாம் வகுப்பில் ஆண்டுமுழுவதும் அந்த வகுப்பிற்குரிய பாடங்களை மட்டும் சொல்லித்தருதல் போன்றவை கட்டாயமயமாக்கப்படல் வேண்டும். இல்லையென்றால் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தில் பொருளில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக