புதன், நவம்பர் 28, 2018

அதிகார, மேதமைப் பெருமித உணர்வு மீண்டும் பிழைகளே உற்பத்தி செய்யும்


அதிகார, மேதமைப் பெருமித உணர்வு மீண்டும் பிழைகளே உற்பத்தி செய்யும்

மு.சிவகுருநாதன்

(6 மற்றும் 9 ஆம் வகுப்பு இரண்டாம் பருவ தமிழ்ப் பாடநூல் குறித்த எனது கட்டுரைக்கான எதிர்வினையும் பதிலும்.)

    இரண்டாம் பருவப் பாடநூற்கள் குறித்த கட்டுரைத் தொடரின் ஏழாவது கட்டுரை குறித்து இரண்டு எதிர்வினை வெளியாகி தொடர்புடைய சில ‘வாட்ஸ் அப்’ குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. ஒன்றில் ‘மாணவர்கள் நலம் விரும்பி’ (இவ்வரியை நீக்கியும் சில குழுக்களில் பகிரப்படுகிறது.) என்றும் மற்றொன்றில் ‘வைகறை வாசகன்’ என்றும் உள்ளது. இவ்வாறு ஒளிந்து கொண்டும், உண்மைப் பெயர்களை மறைத்துக்கொண்டும் ஈடுபடும்  ‘மொட்டைக் கடுதாசி’ பாணி எதிர்வினைகளுக்கு பதில் சொல்வதும் அவசியமற்றது. (‘மொட்டைக் கடுதாசி’ப் புகார்களுக்கு என்ன மரியாதை என்பது அனைவருக்கும் தெரியுந்தானே!)   இருப்பினும் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


  • சுட்டிக்காட்டப்படும் குறைகளை ஏற்கவோ அல்லது மறுக்கவோ வழியின்றி சினம் தலைக்கேறி அவதூறுகள், அதிகாரப் பெருமிதங்கள் ஆகியவற்றில் திளைப்பது மிகவும் மோசமானது.
  • “குடும்பத்தை விட்டு அல்லும் பகலும் உழைப்பது”, பாடநூல் பிழைகளை கண்டுகொள்ளாமலிருப்பதற்கான  மாற்று ஏற்பாடு அல்ல.
  • “பாடப் பொருண்மைக்கு ஏற்ற செயல்பாடுகள் இருக்க வேண்டும்”, என்று சொல்வது  குற்றமாகாது. பொருளியல் பாடத்தில்கூட கடிதம் எழுதும் செயல்பாடு ஏன்? என்று கேட்டால் “உனக்கு ஒன்றும் தெரியாது” என்று ஏளனம் செய்வதும் எதிர்வினையாகாது.
  • படித்ததை எல்லாம் பாடநூலில் தேடவில்லை; மாறாக சாதாரண செய்தித்தாள்களில் வருபவைகூட பாடநூலில் தவறாக இருப்பதுதான் பிரச்சினை.
  • பாடநூல் வேதநூல் என்றோ அகராதி என்றோ நான் நினைக்கவில்லை. எதையும் நாங்கள் எழுதுவதுதான் சரி என்றும் யாரும் நினைக்கவும் வேண்டாம்.
  • ஆசிரியர்கள் தாமாக செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்ளலாம் என்பது எனக்கு தெரியாது என்றே வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் பாடநூலில் ஏன் அபத்தமான செயல்பாடுகள்? 
  • மாகாணம், மாநிலம் பற்றிச் சொன்னது எனது கவலையாம்! அதைப் பிழையாகக் கருதக்கூட உங்களுக்கு மனமில்லை. தஞ்சை மண் வாசனையை  நீக்கியது குறித்து  குறைபட்டேனாம்! அவை உண்மையில் தஞ்சை மண் வாசனையா? தஞ்சைச் சொற்களா?  கிண்டலாகக் குறிப்பிட்டதைக்கூட உணரமுடியவில்லையா?
  • பிழைகளைச் சுட்டுவதும் வழிகாட்டுவதுதான்!
  • பாடநூல் தயாரிப்பு என்பது தனி ஒருவரின் பணியல்ல; குழுவின் பணி. பல கட்டங்களில் நடைபெறும் இப்பணியை உரியமுறையில் எழுதியும் மேலாய்வும் செய்திருந்தால் தொடக்க நிலையிலேயே பல்வேறு பிழைகளைக் களைந்திருக்கலாம்.
  •  எனது கட்டுரை ஒன்றிற்கு பதிலளிக்கப்  ‘பாடநூல் விமர்சகர்கள்’ என்ற பன்மை விளிப்பு ஏன்?
  • பாடநூல் வந்தவுடன் விமர்சனம் எழுத நான் ஒன்றும் ‘நோட்ஸ் வியாபாரி’ இல்லையே, உடனே எழுதுவதற்கு? பாடநூல்கள் வந்த ஒரு வாரத்தில் எப்படி ‘நோட்ஸ்கள்’ வெளியாகின்றன? SCERT இணையதளத்திற்கு வெளியிடுவதற்கு முன்பாக சமூக ஊடகங்களில் பாடநூல்கள் எவ்வாறு பரவுகின்றன? பாடநூலை விமர்சிக்க 3 மாதங்கள் என்ன 3 ஆண்டுகள்கூட எடுத்துக் கொள்வதில் என்ன தவறு?
  • முந்தையப் பாடநூலில் தந்தை பெரியாரின் பெயர் (10 சமூக அறிவியல்) சாதியுடன் 5 ஆண்டுகள் இருந்ததே! எனது ‘இந்து தமிழ்’ கட்டுரைக்குப் (பிப். 05, 2015) பிறகுதானே திருத்தப்பட்டது?
  • உண்மையில் அக். 03, 2018 இல் இரண்டாம் பருவப்பாடநூல்கள் வெளிவந்தன. எனது தொடரில் ஏழாவது கட்டுரை நவ. 22, 2018 இல் முகநூல் மற்றும் வலைப்பூக்களில் வெளியானது. ‘கஜா’ புயல் பாதிப்பால் நவ. 24, 2018 இல் வாட்ஸ் அப்பில் வெளியாயிற்று. 50 நாள்கள் மூன்று மாதமான விந்தை எதுவோ! பாடநூல் ‘நோட்ஸ் வியாபாரிகளிடம்’ சென்று 3 மாதங்கள் இருக்குமோ என்னவோ!
  • Presidency, State என்ற ஆங்கிலச் சொற்களைக் குறிப்பிடவில்லை என்பதால் பாடநூலில் உள்ளது பிழை இல்லை என்று பொருளா? என்னைப் போன்ற பேதையால் சுருக்கமாக எழுத முடியவில்லை. மெத்தப்படித்த மேதைகள் ஏன் இவ்வளவு பிழைகள் உள்ள பாடநூல்களை உருவாக்குகின்றனர்?
  • எனது கட்டுரையில் நிறைய பிழைகள் உள்ளனவாம்! இருக்கலாம். அவற்றை ஏற்றுக்கொள்வதில் எனக்கு யாதொரு தயக்கமும் இல்லை. இப்படிச் சொல்பவர் “பின்னினைப்பாக, ஆரியரின் பணி,  proff reader”, என்றெல்லாம் எழுதுவது ஏன்? தனி ஒருவன் தட்டச்சு செய்யும்போது ஏற்படும் பிழைகளை ஒரு குழு தயாரிக்கும் பாடநூல் பிழைகளுக்கு முட்டுக்கொடுக்கக் கூடாது. (‘நாகசுர வித்வான்’ என்கிறது பாடநூல்
  • தகுதி படைத்த, மெத்தப்படித்த மேதைகளுக்கும் எழுத்து, சொற்றொடர்ப் பிழைகளை நீக்கி எழுதத் தெரியவில்லையே, ஏன்?  
  • பிழையின்றி எழுதுவதற்கு அவர் தனிப்பயிற்சி அளிப்பார் போலும்; ‘நோட்சும்’ வெளியிட்டிருக்கக் கூடும்! இந்த எதிர்வினையைப் படிக்கும்போது அவரிடம் கற்க என் மனம் ஒப்பவில்லை, மன்னிக்கவும்.
  • புதுமைப்பித்தன் கதை (கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்) சாதிப் பெயரால் தவிர்க்கப் பட்டதாம்! வேறுகதைகள் இல்லையோ! சாதியின் பெயர் இருக்கக்கூடாது, சரி. சாதியின் சொல்வழக்குகள் இடம் பெறலாமா?
  • தஞ்சை எழுத்தாளர்களின் முழுப்பட்டியலையும் தருவது பாடநூலின் பணியில்லை என்றால் ஏனிந்த அரைகுறைப் பட்டியல்? “தஞ்சை வட்டார எழுத்தாளர்களை ஆசிரியர் உதவியுடன் பட்டியலிடுக”, என்றுதானே கேட்டிருக்க வேண்டும்.
  • ‘பாடநூல் எழுதித் தோற்றவர்கள்’ என்பது அடிப்படை ஆதாரமில்லாத அவதூறு? நிருபிக்க முடியுமா? இந்த அதிகார மற்றும்  மேதமைப் பெருமித உணர்வைக் கொஞ்சமாவது பாடநூல் உருவாக்கத்தில் காட்டியிருக்கலாம்.
  • விரைவாக எழுதும் உங்களது புலமை குழந்தைகளின் தலையில் குப்பைகளைக் கொட்டுவதாக ஆகிவிடக்கூடாது.
  • உங்களது இடத்தை யாரும் பறிக்கப் போவதில்லை. பயங்கொள்ள வேண்டாம். எனக்குத் தகுதியில்லை என்பது பற்றி நீங்கள் சான்றளிக்க வேண்டாம். உங்கள் தகுதியைச் சரி செய்து கொள்க.
  • பாடநூல் குழுவில் இருப்பதனாலே கொம்புகள் முளைத்துவிட்டதாகவும் உங்களுக்கு மட்டுமே தகுதிகள் இருப்பதாகவும்  எண்ணும் போக்கைக் கைவிட்டு இனியாவது தகுதியை வளர்த்துக்கொள்ளலாம். விமர்சனங்களைப் படித்து உள்வாங்கவும்  முயற்சி செய்யலாம்.  
  • பாடநூல் பிழைகள் இருப்பின்  பாடநூல் எழுதியவர்களுக்கே ஆதரவு அளிக்கும் போக்கு கல்விக்கு எந்த வகையிலும் சிறப்பு சேர்க்காது. பகிர்வுக்குப் பின்னால் வந்த எதிர்வினைகள் உணர்த்துவது இதைத்தான்.


(பிற்சேர்க்கையாக எனது பதிவிற்கு வந்த எதிர்வினைகள் இத்துடன் இணைக்கப்படுகிறது.) 
   

[11/26, 11:14 PM] +91 7**** ***51:

       இன்று காலையில் எழுந்ததும் பாடநூல் குழுவினர், வல்லுநர் என பலரும் சிவகுருநாதன் என்றொருவர் பாடநூல் குறித்து எழுதியதை புலனத்தில் அனுப்பி இருந்தனர். அனுப்பிய அத்தனை பேரும் ஒன்பதாம் வகுப்புப் பாடநூல் குழுவில் பணியாற்றியவர்கள் தாம். எல்லாப் பணிகளையும் ஒதுக்கி விட்டு பாடநூல் என்னும் கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்ப்பதை எல்லாம் இது மாணவர்களுக்கு ஒத்து வருமா? இதனை இந்தப் பொருண்மைக்கு வைத்தால் சரியாக இருக்குமா? இந்த மாதிரியான பயிற்சியை வைத்தால் மாணவர்கள் எந்தத் திறனைப் பெறுவர்? அந்த ஆசிரியர் அன்று கடிதம் எழுதும் திறன் மாணவர்களுக்கு மட்டுமல்ல பொறியியல் முடித்த பட்டதாரிகளுக்குக் கூட கைகூட வில்லை என ஆதங்கப்பட்டார்களே என்றெல்லாம் பலவாறாக சிந்தித்துக் கொண்டு வீடு, பெற்றோர், கணவர், மனைவி, பிள்ளைகள் என எந்த நினைவும் இல்லாமல் இரவு 1மணி, 2மணி என பாடநூல் பணிகளைச் செய்து கொண்டு இன்றைய மாணவர்களுக்கு எது தேவை, எது பிடிக்கும், எது புரியும், இந்த வயதிற்கு எதைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் சிந்தித்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பார்க்கும் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் பெரியவர்களிடமும் பாடங்கள், பாடநூல் குறித்தே கலந்துரையாடிக் கொண்டு இருப்பது பைத்தியக்காரத்தனமோ? என்று எண்ணத் தோன்றியது. 

    பார்க்கும் யாரும் போகிற போக்கில் விமரிசனங்களை அள்ளி வீசி விட முடிகிறது ஊடகங்கள் இருப்பதால்! விமரிசனம் செய்வர்களைக் கூட்டி வந்து இங்கு நடைபெறும் பணிகளைப் பார்க்கச் சொல்ல வேண்டும் என்று எம் பாடநூல் குழுவினர் ஆதங்கப்பட்டனர்.  பாடங்கள் மாணவர்களுக்கு எழுதப் பட்டு உள்ளன. படிப்பவர்கள் அவர்களுக்கு வேண்டுவதைப் பாடநூலுக்குள் தேடும் அவலம் என்று தொலையப் போகிறதோ? கட்டுரை இருந்தால் கடிதம் இல்லை என்பார்கள். கடிதம் இருந்தால் கட்டுரை இல்லை என்பார்கள். படத் தொகுப்பேடு என்பது வகுப்பில் மீத்திறன் மிக்க மாணவனில் இருந்து மெல்லக் கற்கும் மாணவர்கள் வரை அனைவரும் ஈர்ப்போடு செய்வதாக ஆசிரியர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தார்கள். இவர் பாடநூல் குழுவினருக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்லி இருக்கிறார். இவரை வேண்டுமானால் பாடநூல் குழுவினருக்குப் பாடமெடுக்க அழைக்கலாமா? இதைக் கொடுத்திருக்கலாம், அதைக் கொடுத்திருக்கலாம் எனப் பட்டியல் இடுகிறார், பாடநூல் என்பது வேதப்புத்தகம் அல்ல, எல்லாவற்றையும் அளிக்க அது அகராதியும் அல்ல என்பதைத் தவிர வேறென்ன சொல்ல? சில செயல்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன, இதனைப் பின்பற்றி வகுப்பறையில்  மாணவர்களுக்குத் தக்கவாறு ஆசிரியர்கள் பற்பலச் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்ளலாம் என ஆசிரியர் பயிற்சியில் கூறியிருப்பது இவருக்குத் தெரியுமா? இல்லையா? தெரியவில்லை. குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணருவதற்குப் பாடநூல் குழுவினர் எந்த முயற்சியும் செய்யவில்லை, தான் மட்டுமே அதற்கான முழுபொறுப்பில் இருக்கிறோம் என்ற தொனியில் வருத்தப்பட்டிருக்கிறார்? என்னவென்று சொல்ல?  இவருக்குத் தெரிந்த மாகாணம், மாநிலம் செய்திகளையும் எடுத்துச் சொல்லிக் கவலைப்பட்டிருக்கிறார். செய்தி கதையில் தஞ்சை மண்வாசனையை எடுத்த விட்டதாகக் குறைபட்டிருக்கிறார். அதை வைத்திருந்தால் தஞ்சைச் சொற்கள் பிற மாவட்ட மாணவர்களுக்கு எப்படிப் புரியும் என வேதனைப்பட்டிருப்பார். முன்னே செல்லவும் விடாமல் பின்னே இருக்கவும் விடாமல் இவர் போன்றவர்கள் அளிக்கும் இத்தகைய விமரிசனங்கள், பாடநூலை நேர்மறையாக மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் ஆசிரியர்களைத் தொய்வடையச் செய்யுமல்லவா? புதிய புத்தகத்தையும் வடிவமைப்பையும் புரிந்து கொண்டு கற்றல் நோக்கம், மொழித்திறன் போன்றவற்றை உள்வாங்கி அதனை முறையாக மாணவர்களுக்குக் கொண்டு செல்ல ஆசிரியர்களுக்கு வழிகாட்டுமாறல்லவா விமரிசனங்கள் வர வேண்டும். பாடநூல் பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் ஆசிரியர்களை ஈடுபாட்டினைக் குறைத்து கற்பித்தலின் ஆழத்தைக் குறைக்குமல்லவா?  பாடநூல் குழுவினர் முடிந்த அளவு இவ்வாறான  எதிர்மறை விமரிசனங்களைத் தள்ளி வைத்து விட்டு மாணவர் நலன் நோக்கிய பணிகளைத் தொடர்வது நல்லது.

இவண்.   மாணவர்கள் நலம் விரும்பி....

[11/26, 11:15 PM] ‪+91 7***** ***51:

பாடநூல் விமர்சகர்கள் கவனத்திற்கு. ...

கொஞ்சம் விமர்சனம். கொஞ்சம் Additional notes என்று கலவையாக பாடநூல் விமர்சகர்கள் சமூக ஊடகங்களில் நிதானமாக விமர்சனங்களை எழுதிவருகிறார்கள். 

இரண்டாம் பருவ நூல்களுக்கு விமர்சனம் எழுதவே இவர்களுக்கு மூன்று மாதம் தேவைப்படுகிறது. அதற்குள் பாடநூல் குழு அடுத்த பருவ பாடநூலை உருவாக்கிவிடுகிறது. 

சொல்லுதல் யார்க்கும் எளிய என்ற குறளை பாடநூல் விமர்சகர்களுக்கு அர்ப்பணிக்கலாம். 

மாகாணம்  (Presidency ) , மாநிலம்  (state ) என்ற சொற்களின் வேறுபாட்டை உணர்க என்பதைச் சொல்ல ஒரு பத்தி விளக்கமா? அதிலும் Presidency,  state என்னும் ஆங்கிலச் சொற்களைக் குறிப்பிட்டு விளக்கி இருக்கலாம். 

விமர்சனத்தில் நிறைய வாக்கியப்பிழைகள். அடுத்த முறை வாக்கியப்பிழைகள் அதிகமின்றி விமர்சனம் எழுதச் சொல்லவும்

வட்டாரவழக்குக் கதைகளிலும் பழைய கதைகளிலும் வடசொற்கள், திசைச்சொற்கள், வட்டாரவழக்குச் சொற்களை அனுமதித்துவிட்டு - அந்த சொற்களுக்கான தனித்தமிழ் சொற்களைப் பின்னினைப்பாகத் தரலாம் என்ற பரிந்துரையை நான் முன்பே வைத்துள்ளேன். 

சாதிப்பெயர் தவிர்க்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் புதுமைப்பித்தன் எழுதிய  கடவுளும் கந்தசாமி பிள்ளையும் கதையே தவிர்க்கப்பட்டது.

தஞ்சை எழுத்தாளர் பட்டியலில் க.நா.சு,  கு. ப.ரா பெயர்கள் இடம்பெறவில்லை என்பது நியாமான விமர்சனமே -இதை நூல் மேலாய்வாளர்கள் சுட்டிக்காட்டி இருக்கவேண்டும். அதே நேரத்தில் தஞ்சை எழுத்தாளர்களின் முழுப்பட்டியலைத் தரவேண்டியது பாடநூலின் பணியல்ல -பாடம் நடத்தும் ஆரியரின் பணி.

சமையல் சரியில்லை என்று சொல்வதற்கு ஒருவன் சமையல்காரனாக இருக்கவேண்டியதில்லை என்ற சம்பிரதாயத்தின் மன்னிக்கவும் வழக்கத்தின்படி பாடம் எழுத இயலாமல் தோற்றவர்கள் சமூக ஊடகங்களில் பாடநூல் குறித்த விமர்சனங்களை எழுதிவருகிறார்கள். 


இவர்களை proff reader ஆகவாவது பயன்படுத்தலாம். ஆனால்,  Second term book , third term க்குக் கிடைக்கும். பரவாயில்லையா? 

பாடநூல் விமர்சகர்கள் சொல்கிறார்கள் -நாங்கள் பாடநூலை விமர்சிக்கிறோம் என்பதற்காக பாடநூல்கள் மோசமானவை என்று அர்த்தமில்லை என்று.  அந்த விமர்சகர்களை நோக்கி பாடநூல் குழுவும் அலுவலர்களும் சொல்வது. ...உங்கள் விமர்சனங்களை நாங்கள் முழுமையாக ஏற்க மறுக்கிறோம் என்பதாலேயே உங்கள் விமர்சனங்கள் மோசமானவை என்று அர்த்தமல்ல. ஏற்புடைய விமர்சனங்களை ஏற்று பாடநூல் குழு அடுத்த பதிப்பில் திருத்தம் செய்யும். 

விமர்சகர்கள் விமர்சனம் எழுதத்தான் லாயக்கானவர்கள்  (தகுதியானவர்கள் ) என்பதும் பாடநூல் குழுதான் பாடநூல்  எழுத லாயக்கானது என்பதும் கல்வித்துறை கண்டுணர்ந்த உண்மை

வைகறை வாசகன் 25.11.18

[11/27, 8:08 PM] ‪+91 9**** ***83: 

     ஐயா, பாடநூல் குழுவினரின் அயராத - ஆக்கமான உழைப்பை தெளிவான அறிவுடையோர் யாவரும் அறிவர். ஒவ்வொரு பக்கமும் கருத்தும் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டுள்ளமை வியப்பளிக்கிறது. விமர்சனங்கள் எச்செயல்பாட்டிற்கும் வரும். ஊர் வாயை மூட முடியாது.ஏதாவது சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். ஏற்பதும் விடுவதும் நம் கையில் உள்ளது. உண்மை உழைப்பை அனைவரும் அறிவர். பாடங்களை முழுமையாக மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் நம் வெற்றி உள்ளது.
மாணவர்கள் ஆர்வத்துடனே பயில்கின்றனர். மாணவர்களுக்குச் சுமை, புரியாது என்றெல்லாம் நினைப்பதை விட நம்முடைய முயற்சியில் மாணவர்களின் திறமையை வெளிக்கொணர முடியும். அதனால் தாங்கள் சற்றும் கவலை கொள்ள வேண்டாம். ஊக்கத்துடன் செயல்பட்டு வெற்றியடைவோம்.

[11/27, 8:10 PM] ‪+91 9**** ***41: சிறப்பு

[11/27, 8:13 PM] ‪+91 9**** ***53: 

விமர்சனம் என்பது எங்களுக்கு விருந்து சாப்பிடுவது போன்றது... ஐயா அடுத்து என்ன னு போய்ட்டே இருப்போம்... தரமான ஏற்ககூடிய விமர்சனம் இது போன்ற விமர்சனங்களால் வராமலே போய்விடகூடாதல்லவா அதனால் தான் இந்த பதில்.... தாராளமாக விமர்சனம் பண்ணுங்கள்.

[11/27, 8:18 PM] ‪+91 9**** ***83: 

மகிழ்ச்சி. வழி சொல்பவர்களைவிடப் பழி சொல்வோரே மிகுதியாக உள்ளனர். இனியவற்றை ஏற்று நன்மையைத் தொடர்வோம்.

[11/27, 9:22 PM] +91 9**** ***50:

விமர்சனம் வரவேற்கத்தக்கது, அதனாலேயே பாடங்கள் மீண்டும் உன்னிப்பாக உற்று நோக்கப்படுகிறது. மாணவருக்குப் புதிய கருத்துகளைக் கொடுக்க முடியும்.

[11/27, 9:38 PM] +91 9**** ***99

பாடநூல் குழுவினரின் உழைப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.அயராத முயற்சி;அற்பணிப்பான பணி. ஆனால் ஒரே ஒரு  ஓட்டையால் முழு கப்பலும் மூழ்கிவிடுவது போல தேர்ச்சி சதவீதம் என்ற ஒற்றை நோக்கத்தில் பாடநூலின் முழு சிறப்பும் மூழ்கிவிடும் சூழல் உள்ளது.

[11/27, 9:43 PM] +91 9**** ***83: உண்மை.

வெள்ளி, நவம்பர் 23, 2018

‘கஜா’ புயலும் குழந்தைகளும்


‘கஜா’ புயலும் குழந்தைகளும்

மு.சிவகுருநாதன்




     காவிரி டெல்டா மாவட்டங்களை ‘கஜா’ புயல் புரட்டிப் போட்டுள்ளது. இம்மாவட்டங்களின் நிலக்காட்சியே (landscape) மாற்றம் கண்டுள்ளது.
பல்லுயிர்த் தொகுதிகள் அழிந்துள்ளன. தாவரங்களும் விலங்குகளும் அழிவது மனிதர்கள் அழிவது போலத்தான். கோடியக்கரை விலங்குகள் மற்றும் பறவைகள் புகலிடம், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் புகலிடம் ஆகியன இப்புயலால் நிலைகுலைந்துள்ளன. மொத்த உயிரினப் பன்மையே சீர்குலைந்துள்ளது. கணக்கிட முடியாத, கற்பனைக்கெட்டாத வகையில்  சேதம் விளைந்துள்ளது. இதை வெளியுலகம்  மிகத் தாமதமாக அறிந்து தற்போதுதான் நிவாரணப் பொருள்கள் அங்கு விரைகின்றன. அரசின் உதவிகளைவிட தனிநபர் மற்றும் தனியார் அமைப்புகள் அளிக்கும் உதவிகளே அதிகம். இறந்த 46 பேருக்கு மட்டுமே (அரசின் கணக்குப்படி)  நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் மற்றும் வீட்டிற்கான இழப்பீடு அவர்களுக்குச் சென்று சேர ஒரு மாதமாவது ஆகும்.  புயல் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் அரசின் கடைக்கண் பார்வை படாத இடங்களும் உண்டு. காவிரி கடைமடைக்கு தண்ணீர் வர 100 நாள்கள் ஆகும் என்று அமைச்சர்களே சொல்லிவிட்டபிறகு மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் மட்டும் ஒரு வாரத்தில் எட்டுமா என்ன? 

   ‘கஜா’ புயல் வறியோர், வசதி படைத்தோர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் லாரியில் தங்களது குடும்பத்திற்குத் தண்ணீர் பிடிக்கத் தெருவில் காலிக் குடங்களுடன் ஓடும் பெண்களின் நிலை, அவர்களுக்குத் துணையாக ஓடிவரும் சிறுவர், சிறுமியர் என பலதரப்பினரின் நிலையும் மிக மோசமாக உள்ளது. மின்சாரமின்றி தவிக்கும், பாம்புகள், பூரான்கள் போன்ற நச்சு விலங்குகளுடன் உழலும் மக்கள் என சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களில் குழந்தைகள் பாடு அலங்கோலம்.

   கூரை, ஓட்டுவீடுகளில் வசிக்கும் குழந்தைகளின் பாடநூல் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வுகளை எதிர்நோக்கியிருந்த அவர்களை இந்தப் புயல் நிலை குலைய வைத்துவிட்டது. இந்தக் குடும்பங்களில் பெரியவர்களின் மதிப்புமிக்க பொருள்கள் புயலால் சூறையாடப்பட்டது என்றால் இக்குழந்தைகளின் விலைமதிக்க முடியாத எளிய சேகரிப்புகள், நினைவுகள் புயலால்  அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் கடும் உளவியல் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

    வீடு மற்றும் வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தையும் இழந்து இன்று வீதியில் பிறரிடம் கையேந்தும் நிலையில் பெற்றோர்கள் இருக்கும் நிலையில் அதனால் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள உளவியல் பாதிப்புகளை சொற்களால் விவரிக்க இயலாது. அரசு பள்ளிகளை உடன் திறப்பதன் வாயிலாக இயல்பு வாழ்க்கைத் திரும்பிவிட்டது என்கிற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. (திருவாரூர் கல்வி மாவட்டத்திலுள்ள 5 ஒன்றியங்களிலுள்ள பள்ளிகளை 23.11.2018 அன்று கொட்டும் மழையில் திறந்து குழந்தைகளை பெருத்த அவதிக்குள்ளாக்கியது மாவட்ட நிர்வாகம்.)

   சுனாமிப் பேரிடரால் பெற்றோர்களை, அதன் உறுப்பினர்களை இழந்த குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பொதுவாக உயிரிழப்பு ஏற்பட்டால்தான் உளவியல் நெருக்கடி ஏற்படும் என்று நினைப்பது தவறு. புயல்  மூலமாக அவர்கள் அடைந்திருக்கும் இழப்புகள், அதிர்ச்சிகள், பயம் ஆகியனவும் அவர்களை உளவியல் சார்ந்த நெருக்கடிக்குள் ஆழ்த்தும் என்பதையும் உணரவேண்டும். 

   குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இவற்றை மேற்கொள்வதும் அரசு, பள்ளிகள், ஆசிரியர்கள் என அனைவரையும் செய்யத் தூண்டுவதும்  சமூக அக்கறையுள்ளவர்களின் கடமையாகும். 



  1. அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வுகளை ஒத்திவைப்பது தீர்வல்ல; அவற்றை ரத்து செய்யவேண்டும். 1 முதல் 9 வகுப்பு முடிய உள்ள குழந்தைகளுக்கு முதல் மற்றும் மூன்றாம் பருவத்தேர்வுகளைக் கணக்கில் கொண்டால் போதுமானது. 10, +1, +2 ஆகிய வகுப்புகளுக்கு அரையாண்டுத்தேர்வுகள் முடிந்த சில நாள்களிலேயே திருப்புதல் தேர்வுகள் வைப்பது வழக்கம். முதல் திருப்புதல் தேர்வையே அரையாண்டுத்தேர்வாகக் கருதினால் ஒன்றும் குடிமூழ்கிவிடாது. 
  2. சுனாமியின்போது செய்ததுபோன்று புயல் பாதித்த பகுதிகளில் 10, +1, +2 ஆகிய வகுப்புகளின் அரசு பொதுத்தேர்வுகளை ஒத்திவைத்து தனியே நடத்த வேண்டும். 10, +1, +2 மாணவர்களுக்குப் புதிய பாட நூல்களும் கல்வி உபகரணங்களும் மீண்டும் வழங்கப்பட்ட வேண்டும். 1 முதல் 9 வகுப்பு இனி மூன்றாம் பருவப் பாடநூல்களையும் கருவிகளை வழங்கினால் போதுமானது. அதுவரையில் உளவியல் ஆலோசனைகள், விளையாட்டு முறைக் கல்வி போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.
  3. உரிய பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கவேண்டும். இதன் மூலம் அவர்கள் இழப்பிலிருந்து மீளவதைக் கண்காணிக்க வேண்டும்.
  4. பள்ளிகளைத் திறந்துதான் ஆகவேண்டும். அதன்மூலம் குழந்தைகள் தங்களது நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவதன் மூலம் மன உளைச்சல்களுக்கு வடிகால் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் கடுமையான பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து ஆகியவற்றை உறுதிசெய்தபின் பள்ளிகளைத் திறப்பது நல்லது.
  5. நிலமற்ற விவசாயக் கூலிகள், தலித்கள், மீனவர்கள் போன்ற விளிம்புநிலை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது அடிப்படைத் தேவைகளையும் வாழ்வாதாரத்தையும் மீட்டுத்தர ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொள்ளவேண்டும். அவற்றுள் குழந்தைகள் நலன் சார்ந்த செயல்களும் அடங்கும்.
  6. வீடுகள் குப்பைக் காடான நிலையில் பள்ளிகளும் அவ்வாறே உள்ளன. இவற்றை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யாமல் குழந்தைகளை அவற்றில் அடைப்பது சரியல்ல.
  7. கதைகள், நாடகங்கள், விளையாட்டுகள் போன்றவற்றின் மூலம் அவர்களது மன அழுத்தத்தைப் போக்கலாம்.
  8. இயற்கைப் பேரிடர்களைப் பற்றி விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லித்தரலாம்.
  9. குழந்தைகளிடம் தொடர்ந்து உரையாடி, புயல் அனுபவங்களைப் புனைவாக மாற்றச் செய்யலாம்.
  10. குழந்தைகளிடம் மேற்கொள்ளும் தொடர் உரையாடல் மூலம் அவர்களது தேவைகளை உணர்ந்து அவற்றை வழங்க ஆவன செய்யலாம். மழலைகள், முன் – பின் குமரப்பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்ப அரசு, பள்ளி மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் அமையவேண்டும்.  
  11. ‘கஜா’ புயலால் குழந்தைகளது வாழ்விடம் மட்டுமல்ல; பள்ளிகளும் பெருத்த சேதமடைந்துள்ளன. பள்ளிகளிலுள்ள மரங்கள் அனைத்தும் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் உள்ளன.
  12. மரங்களை வளர்க்க வேண்டும் என்று பரப்புரை செய்தவர்கள் இன்று அவற்றை வெட்டியகற்றி தங்களது இல்லங்களைப் பாதுகாக்கும் முயற்சியிலிருக்கும் முரண்பாட்டை அவர்களிடம் உணர வைக்கவேண்டும். சூழலியலைப் பாதுகாக்க அதிகமாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூற வேண்டும்.
  13. கடுமையான நோய்த்தொற்றும்  அபாயம் இருக்கிறது. இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள உரிய நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் அவசியம்.


   சூழல் மற்றும் அப்பகுதிகளின் சிறப்புத் தன்மைகளுக்கேற்ப குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்த வேண்டும். இதற்கு குழந்தை இலக்கியம் படைப்போர், நல ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள் உரிய வரைவை உருவாக்கலாம். அவற்றைச் செயல்படுத்த அரசுக்குத் தேவையான புற அழுத்தங்கள் அளிக்கவேண்டும். இவைகள் உரிய முறையில் நடைபெறும்போது நாமும் குழந்தைகளும் எந்தப் பேரிடரையும் கடந்துவிடலாம். 

(இக்கட்டுரை 'பஞ்சு மிட்டாய்' இணைய இதழிலும் வெளியாகியுள்ளது. நன்றி 'பஞ்சு மிட்டாய்' பிரபு. ஒளிப்பட நன்றிகள்: 'பாரதி புத்தகாலயம்'  சிராஜ்  மற்றும் 'பஞ்சு மிட்டாய்' பிரபு.)