சமூக அறிவியல் பாடங்களில் கடைபிடிக்கப்படும் 'நவீன தீண்டாமை'
மு.சிவகுருநாதன்
சரித்திரம், பூகோளம் என இருந்த நிலை மாறி வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என
நான்கு பிரிவாகவும் மானுடவியல், தொல்லியல், சமூகவியல், வணிகவியல், மக்கள் தொகையியல்,
சூழலியல், நிலவரைபட இயல், மண்ணியல், பேராழியியல் போன்ற பலதுறைகளின் கூறுகளையும்
ஒன்றிணைத்து இன்றைய சமூக அறிவியல் பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய கலைத்திட்டம் 2005 இல் சமூக அறிவியலின் முக்கியத்துவம்
விளக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்
உருவாக்கத்தின்போது சமூக அறிவியல் பாடத்திற்கு நிலைப்பாட்டு அறிக்கை
வெளியிடப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தகுந்தது.
ஆனால் நடைமுறையில் இதற்குரிய முக்கியத்துவம் தரப்படுவது இல்லை. எந்தப்பாடத்திற்கும்
சிறப்பிடம் வழங்கத் தேவையில்லைதான். ஒவ்வொரு பாடமும் அதனதன் அளவில்
முக்கியமானவையே. எல்லாப் பாடத்திற்கும் உரிய இடமும் பங்கும் கிடைக்க வேண்டுமல்லவா!
சமூக அறிவியல் பாடம் அந்தக்காலம் தொட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நமது
பொதுப்புத்தியில் இருக்கும் தப்பெண்ணங்கள், கற்பிதங்கள், அரசின் சட்டங்கள்,
விதிகள், ஆணைகள் ஆகியன இதற்குக் காரணமாக இருக்கின்றன.
பள்ளிக்கல்வியில் சமூக அறிவியல் பாடத்திற்கு அழைக்கப்படும்
பாரபட்சங்கள் சிலவற்றைத் தொகுத்துக்கொள்வோம்.
- வாரத்திற்கு ஐந்து பாடவேளைகள்.
- பாடவரிசையில் கடைசி இடம்; இறுதித் தேர்வுகள் இறுதிப் பாடவேளைகள். (இது நகைப்பிற்கிடமாக தோன்றலாம். மேற்கு வங்க மாநிலம் (West Bengal) ஆங்கில நெடுங்கணக்கின் படி இறுதியாக அழைக்கப்படுவதால் 'பங்கா' (Banka) பெயர்மாற்றம் செய்ய முனைவதை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.)
- சமூக அறிவியல் பாடங்களைப் பற்றிய பொதுப்புத்தியில் உள்ள தப்பெண்ணங்கள்; கற்பிதங்கள். (புவியியல், வரலாறு படித்த சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு இடையே கூட இம்மாதிரியான தப்பெண்ணங்கள் மற்றும் கற்பிதங்கள் உண்டு.)
- வரலாறு, புவியியல் படித்தவர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்புகள் மறுக்கப்படும் சூழல்.
- சமூக அறிவியல் பாடத்திற்கு ஆசிரியரே தேவையில்லை என நினைக்கும் மனப்பாங்கு.
- உலகமயத்திற்குப் பின் வரலாறு போன்ற மனிதாயத் துறைகளின் இன்றைய நிலை.
- வரலாறு போன்ற துறைகளில் வணிகக் கூறுகளை நுழைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் புறக்கணிப்புகள். (பயன்பாட்டுப் படிப்புகள் மற்றும் சுற்றுலா)
அரசுப்
பள்ளிகளில் 25 க்கும் மேற்பட்ட விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால்
மாணவர்கள் மிகவும் வெறுக்கும் ஒன்றான தேர்வுகள் மட்டும் விலையில்லாத ஒன்றாக இல்லை.
பள்ளிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு மற்றும் மூன்று பருவத்தேர்வுகளுக்கும் மாணவர்களிடம்
உரிய தொகை வசூலிக்கப்பட்டே நடத்தப்படுகின்றன.
இந்த வினாத்தாள்கள் மிக மோசமான தரத்திலும் பிழைகள் மலிந்தும்
காணப்படுகின்றன. பிற பாடங்களை ஒப்பிடும்போது சமூக அறிவியல் பாடத்தின் நிலை மிக
மோசமாக உள்ளது.
மிக மோசமான தாள், படிக்க வசதியற்ற
நிலையில் நான்கு பக்கங்களில் மிக நெருக்கமாக அச்சிடுவதையும், இரண்டே பக்கங்களில் குறுக்குவதையும் அதற்காக சில வினாக்களையே விட்டுவிடுவதையும் அனுமதிப்பது அநியாயம். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது வேதனை தரும் உண்மை.
பத்தாம் வகுப்பு வரலாறு, புவியியல் 'பொருத்துக' வினாப்பகுதியில் ஐந்திற்கு
ஏழு விடைக்குறிப்புகள் அளிக்கப்பட வேண்டும். பக்க நெருக்கடியில் இவற்றைக்
குறைப்பதை எங்ஙனம் ஏற்றுக்கொள்வது?
தற்போது நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் வரலாற்றில் ஐந்திற்கு ஐந்து
மட்டுமே தரப்பட்டுள்ளது. புவியியலில் ஏழு உள்ளது. இரண்டாம் திருப்புதல் தேர்வில்
இரண்டு பொருத்துக வினாவிலும் 6 விடைக்குறிப்புகளே உள்ளன. இதில் அரசுப் பொதுத்தேர்வுக்கு
இணையான தேர்வு மற்றும் பயிற்சிப் பம்மாத்துகளுக்கு எள்ளளவும் குறைவில்லை.
பத்தாம்
வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடந்து முடிந்துள்ளது. திருவாரூர் மாவட்ட சமூக அறிவியல் பாட வினாத்தாள்கள்
வரிக்குவரி பிழைகள் நிறைந்து காணப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல்
தேர்வு (பத்தாம் வகுப்பு சமூக அறிவியல், திருவாரூர் மாவட்டம்)
வினாத்தாள்களில் குவிந்துள்ள பிழைகளை சிலவற்றை மட்டும் இங்கு
எடுத்துக்காட்டுகிறேன். அவற்றின் சரியான திருத்தங்களையும் அடைப்புக்குறிக்குள் இணைத்துள்ளேன். வல்லெழுத்து
மிகும், மிகா இடங்கள், ஒருமைப் பன்மை மயக்கம் போன்றவை ஏராளம். அவற்றை இங்கு பட்டியலிட இடமில்லை.
முதல் திருப்புதல் தேர்வு, பத்தாம்
வகுப்பு, சமூக அறிவியல் – திருவாரூர் மாவட்டம்
- மொரோக்கோ (மொராக்கோ)
- தீர்வேன் (தீருவேன்)
- காராக்கோரம் (காரகோரம்)
- அனுசக்தி (அணுசக்தி)
- திணைப் பயிர் (தினைப் பயிர்)
- ஈரப்பத காலநிலை (ஈரப்பதக் காலநிலை)
- எல்நீனோ (எல்நினோ)
- பீடபூமியில் செரிந்து (பீடபூமியில் செறிந்து)
- கார்ஃப் (காரிஃப்)
- பாராதீப் (பாரதீப்)
- மாங்கரோவ் காடுகள் (மாங்ரோவ் காடுகள்)
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் -
இரண்டாம் திருப்புதல் தேர்வு – திருவாரூர் மாவட்டம்
- சீராப்புராணம் (சீறாப்புராணம்)
- பலிக்காட் ஏரி (புலிக்காட் ஏரி)
- கொல்லேலு ஏரி (கொல்லேறு ஏரி)
- திணைவகை (தினை வகை)
- 74.40% (74.04%)
- பாதுகாப்பு ஏற்ப்படுத்துதல் (பாதுகாப்பு ஏற்படுத்துதல்)
- அனுசோதனைத் தடைச் சட்டம் (அணுச்சோதனைத் தடைச்சட்டம்)
- சொளரி சௌரா (சௌரிசௌரா)
- உத்திரபிரதேசம் (உத்திரப்பிரதேசம்)
- சானக்கியர் (சாணக்கியர்)
- அமேரிக்க ஐக்கிய நாடு (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
- தோ:டடப்பயிர்கள் (தோட்டப்பயிர்கள்)
- கானப்படும் (காணப்படும்)
- உயிரின பன்மை (உயிரினப்பன்மை)
- வாணிலை (வானிலை)
- தலித்துக்கள் (தலித்கள்/தலித்துகள்)
- மவிண்ட்பேட்டன் (மவுண்ட்பேட்டன்)
- இமையமலை (இமயமலை)
- பம்பாய் ஹை (மும்பை ஹை)
- பார்க் நீர் சந்தி (பாக் நீர்ச்சந்தி)
- மைசூர் (மைசூரு)
எழுதுக, தருக என வினாச்சொற்கள் இல்லாமல் வினாக்கள் கேட்கும்போதும் வினாக்குறி
இடுவது பாடநூலிலும் வழக்கமாகிவிட்டது. அவ்வழக்கம் இப்போது வினாத்தாளிலும்
எதிரொலிக்கிறது.
பொருத்தமற்ற, சிறிய நிலவரைபடஙகளை சமூக அறிவிலுக்கு அளிக்கும் போக்கு
நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. பல்லாண்டுக் கோரிக்கை தற்போது சரிசெய்யப்பட்டு
இயல்பான அளவு நிலவரைபடஙகள் அளிக்கப்படுவது பாராட்டிற்குரியது; மகிழ்ச்சி.
இருப்பினும் அச்சுத் தாளின் தரம் மிக மோசம் என்பதையும் இங்கு பதிவு செய்தாகவேண்டும்.
அறிவியல் பாடத்திற்கு 75 மதிப்பெண்களுக்கு 4 பக்க வினாத்தாள்
அச்சிடுகிறார்கள். அதற்கான தேவை இருக்கும்போது சமூக அறிவியல் பாடத்திற்கு மட்டும்
ஏன் பாரபட்சம்? இன்று சமூக அறிவியல் வினா வடிவமைப்பும் எவ்வளவோ மாறியுள்ளது.
வெறும் குறுகிய, விரிவான விடையளிக்கும் பழைய முறை பெரிதும் மாற்றம் பெற்றுள்ளது.
வெறும் அதிகாரங்கள் மட்டுமல்ல, நமது மனப்பான்மை மாற்றமே இப்போது தேவை. அது
நடந்தால் எந்தச் சிக்கலுமில்லை. மேலும் குற்றம், குறைகளை பரிவுடன் கேட்கும்,
ஆலோசிக்கும், நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளும் இதனுள் அடங்கியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக