சனி, நவம்பர் 09, 2019

அபத்தக் களஞ்சியங்களாகப் புதிய பாடநூல்கள்


அபத்தக் களஞ்சியங்களாகப் புதிய  பாடநூல்கள்


மு.சிவகுருநாதன்


  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 44) 


 
      பாடநூல்களிலுள்ள அபத்தங்களுக்கு அளவில்லாமற் போகிறது. இந்தத் தவறுகளை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாத பேராசிரிய, ஆசிரியப் பெருந்தகைகளின் நிரம்பி வழியும் அறிவும், மற்றும் இதற்குப் பொறுப்பான  அமைப்புகளிடம் இருக்கும் நிரம்பி வழியும் அதிகாரமும்  பிழைகளைக் களைவதற்குப் பதிலாக அவற்றைத் தொடர்ந்து உற்பத்தி செய்ய பேருதவி புரிகின்றன. எனவே இவை அரேபிய இரவுக் கதைகளைப் போல முடிவின்றி நீள்கின்றன. தற்போது வெளியான புதிய பாடநூல்களில் உள்ள அபத்தங்கள் சிலவற்றைச் சுருக்கமாகக் காண்போம். 
 
     7, 8 வகுப்புகளின்  பாடநூல் தொகுதி 3 அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை உள்ளடக்கியதாக உள்ளது. ஆனால் அட்டைப்படம் அறிவியல் பாடத்தை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்துகிறது. சமூக அறிவியலுக்கான அடையாளங்கள் ஏதுமில்லை? இது ஏன்?   

ஒன்று: 

தற்போது தண்டவாளங்கள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன? 

       எட்டாம் வகுப்பு அறிவியல் இரண்டாம் பருவத்தில் ‘வெப்பம்’ என்ற பாட உள்ளது. அதில் திடப்பொருள் வெப்பத்தால் விரிவடைதல் பற்றிச் சொல்லப்படுகிறது. மீண்டும் பழங்கதை? அறிவியல் சிந்தனை எப்போது புதுப்பிக்கப்படும்?  


     “இரயில் தண்டவாளங்களில்  சிறிது இடைவெளி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது  ஏன் என்று தெரியுமா?  இரும்பினால் செய்யப்பட்ட தண்டவாளங்கள்  கோடை காலங்களில் வெப்பத்தின்  தாக்கத்தினால் விரிவடைகின்றன. ஆனால்  அவ்வாறு விரிவடையும் போது  தண்டவாளத்தில் இடைவெளி விடப்பட்டு  உள்ளதால் எந்தவித பாதிப்பும் அதில்  ஏற்படுவதில்லை”. (பக்.02,  எட்டாம் வகுப்பு அறிவியல், இரண்டாம் பருவம்)

     ஒன்பதாம் வகுப்பு முதல் பருவப் பாடநூலில் இதே கருத்து சொல்லப்பட்டிருந்தது. அப்போதைய எனது எதிர்வினையை கீழே தருகிறேன். 

      “வெயில் காலங்களில் அதிக வெப்ப ஆற்றல் இரயில் தண்டவாளங்களை விரிவடையச் செய்கின்றது. எனவேதான் இரயில்பாதைகளில் சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கும் நீங்கள் இதனைப் பார்த்திருப்பீர்கள்” (9, பக்.02) சொல்லிப் பழைய படத்தையும் வெளியிடுகிறார்கள்.


      வெப்பம் விரிவடைதலுக்கு ரயில் தண்டவாள இடைவெளி (பக்.13, ஆறாம் வகுப்பு மற்றும் பக்.02, ஒன்பதாம் வகுப்பு) சுட்டப்படுகிறது. இப்போது தண்டவாளங்கள் அவ்வாறு இடைவெளி விட்டு அமைக்கப்படுவதில்லை. அவை துண்டுகளின்றி ‘வெல்டிங்’ முறையில் இணைக்கப்படுவதை மாணவர்களே பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. பாடநூல்கள் எப்போது நடைமுறை மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளும் என்பது புரியாத புதிர்! ("அறிவியல்  சிந்தனைகள் இன்னும் மேம்பட வேண்டும்", எனும் கட்டுரையில் குறிப்பிட்டவை.)


இரண்டு:

பேரிடர்கள் (Disaster) இடர்களாக (Hazards) மாறிய மாயமென்ன?  

சுற்றுலாத் தலமாக அறிவித்துவிட்டால் கதிரியக்கம் நின்று போகுமா?


    எட்டாம் வகுப்பு அறிவியல் இரண்டாம் பருவப் பாடநூலில் ‘இடர்கள்’ என்றொரு பாடம். பேரிடர்களை இடர்களாக குறைத்துவிட்டார்கள். எல்லாம் திறமையான பேரிடர் மேலாண்மையால் சாத்தியப்பட்டிருக்கும் போல! இப்பாடத்தில்  ‘உங்களுக்குத் தெரியுமா’ பகுதியில் செர்னோபில் அணு உலை விபத்து குறித்து கீழ்க்கண்ட செய்திகள் திணிக்கப்படுகிறது.

   “செர்னோபில் அணு பேரழிவு இடம் (பிரிப்யாட் அருகில்) அதிகாரபூர்வமான  சுற்றுலா தலமாகும்.

முன்னர்:

• செர்னோபில் (அப்போதைய சோவியத் யூனியன்) அணு உலை விபத்து ஏப்ரல் 26, 1986 அன்று நிகழ்ந்தது.

• 1945இல் ஹிரோஷிமா (ஜப்பான்) மீது வீசப்பட்ட  அணுகுண்டை விட 400 மடங்கு அதிகமான  கதிர்வீச்சு இதிலிருந்து வெளிப்பட்டது. இந்த
விபத்து உலக வரலாற்றில் மிகப் பெரிய அணு விபத்தாக பதிவாகியுள்ளது.

• இப்பகுதியிலிருந்து 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள்
அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நிரந்தர மனித  குடியேற்றத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இன்றும் அந்த இடத்தில் பின்பற்றப்படுகிறது.

தற்பொழுது: 

• தற்போது உக்ரைன் மற்றும் பெலாரசைக்  கொண்ட இப்பகுதியில் விபத்து நடந்து 33 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான விலங்குகள்
மற்றும் இருநூற்றுக்கும் அதிகமான பறவை  இனங்கள் வசிக்கின்றன.

• 2016ஆம் ஆண்டு உக்ரைன் நாடு ‘கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல்  உயிர்கோளப்பெட்டகம்’ என அந்நாட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது”. (பக்.143 சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, இரண்டாம் பருவம்)



     அரசு சுற்றுலாத் தலமாக அறிவித்துவிட்டால் அங்கு கதிரியக்கமே இல்லை என்றாகிவிடுமா?  அந்த விபத்துகளில் கதிரியக்கம் வெளியாகவே இல்லையா?  அரை ஆயுட்காலம் என்றெல்லாம் ஒன்று கிடையாதா? எல்லாம் கற்பனைக் கதைகளா?

      ஏனிப்படி பாடநூல்கள் அணுசக்திக்கு ஆதரவான பரப்புரையில்  ஈடுபடவேண்டும்?  மாணவர்களது சுயசிந்தனையை மழுங்கடிப்பது  ஏன்?  அறிவியல் சிந்தனைகளையும் மனப்போக்கையும் வளர்ப்பதற்குப் பதிலாக ஆளும் வர்க்கத்திற்கு காவடி தூக்கப் பழக்குவது கல்வியின் பணியாக இருக்க முடியாது.

     நாளை ஜப்பானின் புகுஷிமாவிற்கு இதே நிலை தானா? அங்கு அணுக்கழிவோ, கதிரியக்கமோ இல்லையென அரசு சொல்லிவிட்டால் போதுமா?  கூடங்குளம் அணு உலைப் பூங்கா என்று சொல்கின்றனர். அங்கு என்ன மரம் நடும் தொழிலா நடக்கிறது?  பூங்காக்களில் எப்படி அணுக்கழிவு ஏற்படும் என்று அறிவுப்பூர்வமாக (!?)  பாடங்கள் எழுதத்தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை போலிருக்கிறது! 

     1984 இல் நடந்த போபால் யூனியன் கார்பைடு நச்சுவாயுக் கசிவில் கூட இன்னும் நிவாரணம் வழங்கப்படாதது, குற்றவாளிகள் தண்டிக்கப் படாதது மட்டுமல்ல, அந்த நச்சுக் கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. அதையும் இன்னும் கைவிடப்பட்ட அபாயகரமான கழிவுகள் உள்ள வளாகங்களை சுற்றுலாத் தலமாக மாற்ற பாடநூல் குழுவினர் அரசுக்கு பரிந்துரைக்கட்டும்!  சுற்றுலாவும் மேம்படும்; மக்கள்தொகையும் குறையும்.


மூன்று:

கோலார் தங்கச்சுரங்கம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா? 


  ஏழாம் வகுப்புப் புவியியல் பாடப்பகுதியில் ‘வளங்கள்’ என்ற முதல் பாடம் உள்ளது. அதில் தங்கம் பற்றி சொல்லப்படுவன:

    “கர்நாடகா இந்தியாவில் தங்கத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலமாகும். 'கோலார் தங்க வயல்' உலகின் ஆழமான தங்கச்சுரங்கங்களுள்  ஒன்றாகும்”. (பக். 165, 7 புவியியல், இரண்டாம் பருவம்
 
     கர்நாடகாவிலுள்ள கோலார் தங்கச்சுரங்கம் தற்போது செயல்படுகிறதா? அங்கிருந்து தங்கம் வெட்டியடுக்கப்படுகிறதா? தற்போதும் தங்கம் அதிகமாக உற்பத்தியாகும் மாநிலம் கர்நாடகாவா? 

      ஆழமான சுரங்கம் என்பதால்தான் அணுக்கழிவுகளை புதைக்க அவ்விடத்தைத் தேர்வு  செய்தனர். கடும் எதிர்ப்பால் இம்முயற்சி  இல்லையென மறுக்கப்பட்டுள்ளது.

   2001 மார்ச் 01 கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டது. அதன்பிறகு அங்கு உற்பத்தி இல்லை. உலகில் இரண்டாவது பெரிய சுரங்கமான கோலார் இன்று தங்கம் தோண்டுவது இல்லைதானே!  

   நெய்வேலி நிலக்கரி சுரங்கம் (பக். 168)  என்ற படத்துடன் சொல்லப்படுகிறது. திறந்த வெளி சுரங்கம், மூடிய சுரங்கம் பற்றிய தெளிவை அளிக்க வேண்டாமா? 


நான்கு:

இந்து, இஸ்லாம், கிறித்தவம் மட்டுமே இங்குள்ள சமயங்களா? 


     ஏழாம் வகுப்புப் புவியியல் பாடப்பகுதியில் ‘சுற்றுலா’ என்ற இரண்டாவது பாடத்தில், சுற்றுலாவின் வகைகள் விளக்கப்படுகின்றன. அதில் சமயச் சுற்றுலா பகுதியில் இந்து, இஸ்லாம், கிறித்தவம் ஆகிய மதங்கள் மட்டுமே சொல்லப்படுகின்றன. சமண, பவுத்த சமயங்களை இருட்டடிப்பு செய்வதேன்? திருவாரூர் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மாவட்ட நிலவரைபடத்தில் தீபங்குடியைக் காணவில்லை.

    கழுகு மலை, சமணர் மலை, யானை மலை, சித்தன்ன வாசல், எண்ணாயிரம், சிதறால், தீபங்குடி போன்ற பல இடங்களில் சமணத்தடங்களும் பூம்புகார், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவலஞ்சுழி, உறையூர், திருப்பாதிரிப்புலியூர், மதுரை, அழகர்மலை, திருப்பரங்குன்றம் போன்ற பவுத்தத் தடங்களும் உண்டு. அதைக் காணாமல் மறுப்பது ஏன்?


    “எந்த மாவட்டத்தில் குற்றால நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது” (அ) தருமபுரி  (ஆ) திருநெல்வேலி (இ) நாமக்கல்  (ஈ) தேனி”, (பக்.189, ஏழாம் வகுப்பு) என்று வினாக்கள் தயாரிப்பதை கொஞ்சம் மாற்றினால் நல்லது. இப்போது குற்றாலம் தென்காசி மாவட்டத்திற்குப் போய்விட்டதல்லவா! எனவே “எந்த மலையில்  அருவி உள்ளது என்றுகூட கேட்கலாம். ‘நீர்வீழ்ச்சி’ என்று மொழிபெயர்க்காமல் ‘அருவி’ என்றால் ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடாது!

ஐந்து:

ஆளுநர், முதல்வர் பதவிக்குரிய தகுதிகள்தான் என்ன?

    ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவ  குடிமையியல் பாடப்பகுதியில் ‘மாநில அரசு’ என்றொரு பாடம் உள்ளது. உரையாடல் வடிவில் எளிமையாக எழுதப்பட்ட இப்பாடத்தில் ஆளுநரின் தகுதிகள் விளக்கப்படுகின்றன. அவை,



  • “இந்தியக் குடிமகனாய்  இருக்க வேண்டும்.
  • 35 வயது  நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
  • வாழ்வில்  சிறந்த நிலையில் இருக்க வேண்டும்”.  (பக்.198, குடிமையியல், ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம்)


“வாழ்வில்  சிறந்த நிலையில் இருக்க வேண்டும்”, என்பதன் பொருள் என்ன? மத்தியில் ஆளும் கட்சியிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலோ உறுப்பினராக இருக்க வேண்டுமா? அதுதான் வாழ்வின் சிறந்த நிலையோ! (எ.கா.) பன்வாரிலால் புரோகித், தமிழிசை. மனநலம் உடையவராக இருத்தல் வேண்டும் என்றாவது குறிப்பிட்டிருக்கலாம்.

     மேலும் இப்பகுதியில் முதல்வரின் தகுதிகளும் சொல்லப்படுகின்றன. அவை,   


  • “முதலமைச்சராக ஆக விரும்பினால், 25 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். (அது என்ன, முதலமைச்சராக  ஆக!?)
  • சட்டமன்ற உறுப்பினராக (...) இருக்கவேண்டும்.  (பக். 198, குடிமையியல், ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம்)


   முதலமைச்சாராக சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வான 6 மாதங்களுக்குள் ச.ம.உறுப்பினரால போதுமே! பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லத் தேவையில்லையோ!


     இந்த ‘மாநில அரசு’ பாடத்தில், “தேர்தலுக்காக நாடு மக்கள்தொகையைப் பொருத்துப் பல தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன”,  (பக்.197, குடிமையியல், ஏழாம் வகுப்பு, இரண்டாம் பருவம்)  என்று கூறப்படுகிறது. இது மத்திய அரசைப் பற்றிய பாடமல்ல; மாநில அரசைப் பற்றிய பாடம். எனவே நாடு மாநிலமாகட்டும்.


ஆறு:

முகலாய மன்னர்களில் கடைசி அரசரா ஔரங்கசீப்?

  ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பகுதியில் ‘முகலாயப் பேரரசு’ என்ற பாடத்தில் ‘ஔரங்கசீப் (1658-1707)’ பற்றி கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது.

     “முகலாய மாமன்னர்களில் கடைசி அரசரான ஔரங்கசீப் தம் தந்தையைச் சிறைப்படுத்தி ஆட்சியைத் தொடங்கினார்.  ஆலம்கிர் (உலகைக் கைப்பற்றியவர்) என்னும்  பட்டத்தை சூட்டிக் கொண்டார். இவர் தம் தாத்தா ஜஹாங்கீரைப்போல கலைகளின்மீது  ஆர்வம் கொண்டவராகவோ தந்தை ஷாஜகானைப் போல் கட்டிடக் கலையில் நாட்டங்கொண்டவராகவோ இல்லை. தமது மதத்தைத் தவிர ஏனைய மதங்களை அவர் சகித்துக்கொள்ளவில்லை. இந்துக்களின் 
மீது மீண்டும் ஜிசியா வரியை விதித்தார்.  இந்துக்களை அரசுப் பணிகளில் அமர்த்துவதைத் தவிர்த்தார்”.  (பக். 131&132, 7 வரலாறு)

     முகலாய மாமன்னர்களில் ஔரங்கசீப் எப்படி கடைசி அரசரானார்? 1857 இல் நடந்த இந்தியப் பெரும் புரட்சியின்போது, புரட்சியாளர்கள்  தில்லி மன்னராக  அறிவிக்கப்பட்டு, புரட்சியின் தோல்விக்குப்பின் பர்மாவின் (மியான்மர்) ரங்கூனில் (யாங்கன்) சிறைவைக்கப்பட்டு, அங்கேயே மரணடைந்த இரண்டாம் பகதூர்ஷா அல்லவா முகலாயர்களின் கடைசி அரசர்! இதைக் கூட அறியாமல் வரலாறு எழுத அபாரத் துணிச்சல் வேண்டும்!

     தொடரும் வழக்கமான வெறுப்பரசியல் குழந்தைகளிடம் விதைக்கப்படுகிறது. இது பற்றி நிறைய சொல்லியாகிவிட்டது. கலை, கட்டடக்கலைகளில் நாட்டமில்லாதவர் (!?) என்று சொல்லப்படும் தேர்ந்த வீணையிசைக் கலைஞர் என்பதும் உண்மை. எளிமை, சிக்கனம் என்பதாக அவரது வாழ்வும் அரசாட்சியும் இருந்ததைக் கூட குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டலாம். பல்வேறு புதிய ஆய்வுகள் வந்துள்ள  நிலையில்  சகிப்புத்தன்மை இல்லாத இஸ்லாமிய  மதவெறி கொண்டவராக சித்தரிக்கும் போக்கு ஆபத்தான அவலம்.     



ஏழு:

தமிழ் வழிக்கு ‘லோக் அதாலத்’ தேவையில்லையா? 


   “லோக் அதாலத் பற்றி எழுதுக”, (பக்.,202, ஏழாம் வகுப்பு, குடிமையியல், இரண்டாம் பருவம்) என்று வினா மட்டும் கேட்கப்படுகிறது. லோக் அதாலத் பற்றி எங்கும் தகவலோ, குறிப்போ இல்லை. பிறகேன் வினா மட்டும்?

 ஆனால்,

 “Lok Adalat (people’s court) also have been established by the Government of India to settle dispute through conciliation and compromise”, (page: 167, Civics, 7 th std. II Term) 

    என்று ஆங்கில வழியில் மட்டும் உள்ளது. தமிழ் வழியில் படிப்போருக்கு இது அவசியமில்லை என்று மொழியாக்கத்தில் நீக்கப்பட்டுள்ளது.

எட்டு:

ஆத்திகமா? நாத்திகமா?

  எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியலில் ‘சமயச் சார்ப்பின்மையைப் புரிந்து கொள்ளுதல்’ பாடத்தில் கீழ்க்கண்ட விளக்கம் காணப்படுகிறது. (இது குறித்து ‘தினமணி’யில் எழுதியிருந்தனர்.)

ஆத்திகம்: கடவுள் அல்லது கடவுள்கள்  மீது நம்பிக்கையற்றிருத்தல்.

சமயச்சார்பின்மை: அரசோ, சமயமோ ஒன்று மற்றொன்றின் விவகாரங்களில்  தலையிடாதிருத்தல் (பக். 149, எட்டாம் வகுப்பு சமூக அறிவியல், இரண்டாம் பருவம்)

ஆங்கில வழியில் பின்வருமாறு உள்ளது:

“Atheism - is a lack of belief in god and gods.
Secularism - is non – interference of the state  in religious affairs and vice-versa”. (Page: 130, VIII Social Science)

    ‘Atheism’ என்பது நாத்திகம் என்னும் தத்துவ மரபு; இது வெறும் கடவுள் நம்பிக்கையற்று இருத்தலை மற்றும் குறிப்பதல்ல; மாறாக வேத, வருண (சாதி), கடவுள் மறுப்பை முதன்மைப் படுத்தும் அவைதீகத் தத்துவம். இதற்கு மாற்றான வழிமுறை ஆத்திகம் (Theism) என்பது.

    இங்கு நாத்திகத்தை ஆத்திகம் என்று மாற்றிச் சொல்வது மட்டுமல்ல; சமயச்சார்பினமையோடு ஏன் இணைக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது? நாத்திகம், ஆத்திகம் இரண்டையும் உரிய முறையில் விளக்கிவிட்டு சமயச்சார்பின்மையை சொல்லலாம்.  நாத்திகம்,  சமயச்சார்பின்மை ஆகியவற்றை முரணாகக் கட்டமைக்க்கூடாது.

  “நமக்கு ஏன் சமயச்சார்பற்ற கல்வி தேவை?” என்று வினா கேட்டு விளக்கமளிக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று,  

“பொருள் முதல்வாத  கொள்கை மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கி்ணைக்கவும் தேவைப்படுகி்றது”. (பக்.152) என்று சொல்கிறது.

     பொருள் முதல்வாத  கொள்கை, ஆன்மீக கொள்கை ஆகியவற்றை ஏன் ஒருங்கிணைக்க வேண்டும்? சமயச்சார்பின்மை எவ்வாறு இவற்றை ஒருங்கிணைக்கிறது?  சமயச்சார்பின்மையின் பணி இதுதானா? சமயங்களிலிருந்து விலகியிருப்பதா, அல்லது ஆன்மீகத்தை ஒருங்கிணைத்து சமயங்களுடன் இணைந்திருப்பதா? என்றெல்லாம் எழும் கேள்விகள் தவிர்க்க முடியாதவை.



ஒன்பது:

சாலை விதிகளில் பாதசாரிகளின் நிலை? 


 ‘விபத்துகளுக்கான காரணிகள்’, என்ற தலைப்பில்,

ஆ. பாதசாரிகள் - கவனமின்மை,  கல்வியறிவின்மை, தவறான இடங்களில்  சாலையைக் கடப்பது, சாலையில் நடப்பது மற்றும் போக்குவரத்து விதிகளை கவனிக்காமல் சாலையின் குறுக்காக செல்பவர்”. (பக்.169, எட்டாம் வகுப்பு சமூக அறிவியல், இரண்டாம் பருவம்)

‘பாதுகாப்பு நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில்,

     “பாதசாரிகளுக்காக: பாதசாரிகள் கடக்கும் பாதையில் (வரிக்கோடு) மட்டுமே சாலையை கடக்க வேண்டும். போக்குவரத்து சமிக்ஞைகளில் செலவிடும் இரண்டு நிமிட நேரம் உஙகள் வாழ்க்கைக்கு மிகவும் மதிப்புள்ளதாகும். சிவப்பு மற்றும் மஞ்சள் விளக்கு ஒளிரும்போது சாலைக் கடக்கக்கூடாது. சாலையின் நடுவில் நடப்பதைத் தவிர்த்து சாலையின் ஓரத்தில் நடக்கவும்”. (பக்.170)

    ஓட்டுநர் உரிமம் பெற எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற மோட்டார் வாகனச்சட்டம் திருத்தப்பட்டு, கல்வித் தகுதி தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் பாதசாரிகளுக்கு கல்வியறிவைத் தகுதியாக நிர்ணயிக்கும் அபத்தத்தை என்ன சொல்ல?

    கீழ்க்கண்ட வினா ஒன்று நமது அதிர்ச்சியை அதிகமாக்குகிறது.

“பொருந்தாத ஒன்றை கண்டுபிடி (சாலை  பாதுகாப்பு விதிகள்).
அ) வளைவுகளில் மெதுவாக செல்.
ஆ) வேக கட்டுப்பாட்டு அளவினைக்  கடைபிடி.
இ) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப்  பேசியைப்  பயன்படுத்து.
 ஈ) சாலைகளில் நடப்பதைத்  தவிர்க்கவும்”. (பக். 178 & 179)

   “வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப்  பேசியைப்  பயன்படுத்து”, என்பது பொருந்தாத ஒன்று என்றால் இதர மூன்றும் சரியென்றாகிறது. எனவே இனி யாரும் சாலைகளில் நடக்க வேண்டாம்!

    சாலையின் ஓரத்தில் நடக்க வேண்டும் என்று சொல்வது வேறு; சாலையில் நடக்க வேண்டாம் என்றால் வேறு எங்கு நடப்பது? சாலையில் நடக்க பாதசாரிகளுக்கு விதிகள் உண்டுதானே! அதைச் சரியாகச் சொல்லிக் கொடுக்காமல் இம்மாதிரி மிரட்டுவது ஏன்?

    நடைமேடைகள் இல்லாத இடங்களில் எதிரே வரும் வாகனத்தைப் பார்த்தவாறு சாலையின் வலப்புறத்தில் நடக்க வேண்டும் என்ற விதியைச் சொல்லிக் கொடுப்பதில்லை. வாகன ஓட்டிகளுக்கு உள்ள இடப்புறம் என்ற விதியை பாதசாரிகளுக்குச் சொல்லிக் கொடுத்து பல தலைமுறைகளை மழுங்கடித்துள்ளோம். இதைக் கற்றுத்தர பாதசாரிகளுக்கு கல்வியறிவு தேவையில்லை; பாடநூல் எழுதுபவர்களுக்கு இருந்தால் போதும்.



பத்து:

 வரலாற்றைத் திரிக்காதீர்கள்!
புனைவுகளை உற்பத்தி செய்யாதீர்கள்!!
வெறுப்பரசியலை விதைக்காதீர்கள்!!!


      அக்பர் (1556-1605) அரியணை ஏறுதல்’, எனும் தலைப்பில்,

“1556 இல் ஹூமாயூன்  இயற்கை எய்திய பின்னர்,  அவருடைய பதினான்கு  வயது மகன் அக்பர் அரசராக  முடிசூட்டப் பெற்றார். அக்பர்
சிறுவனாக இருந்ததால், பைராம்கான் பகர  ஆளுநர் பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி  புரிந்தார். ஆனால், சூர் வம்சத்தைச் சேர்ந்த ஹெமு  என்னும் தளபதி 1556 இல் டெல்லியையும்  ஆக்ராவையும் கைப்பற்றிக் கொண்டார்.  அதே ஆண்டில் பைராம்கான் பானிப்பட் போர்க்களத்தில் (இரண்டாம் பானிப்பட் போர் 1556) ஹெமுவைத் தோற்கடித்துக் கொன்றார்.  நாட்டின் அன்றாட ஆட்சி விவகாரங்களில்  பைராம்கானின் மேலாதிக்கத்தை அக்பரால்  சகித்துக்கொள்ள இயலவில்லை. அவருடைய  தூண்டுதலின் காரணமாக பைராம்கான்  குஜராத்தில் கொல்லப்பட்டார். இதனால், அக்பரால் அரசை முழுமையாகக் கட்டுப்படுத்த  முடிந்தது. படையெடுப்பின் மூலமாகவும் நட்புறவின் மூலமாகவும் அக்பர் இந்தியாவின் பெரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வந்தார்”. (பக்.131, ஏழாம் வகுப்பு சமூக அறிவியல், இரண்டாம் பருவம்)

ஆங்கில வழியில்,

Akbar (1556–1605)   Accession to Throne

       “After the death of Humayun in 1556, his  14-year-old son Akbar was crowned the King.  Humayun’s trusted general Bairam Khan  became the regent and ruled on behalf of Akbar,  as the latter was a minor.  Hemu, a general of Sur dynasty, soon captured Agra and Delhi in 1556. In the same year, Bairam Khan defeated and killed Hemu in the battle at Panipat (Second Battle of Panipat, 1556). As Bairam Khan was murdered in Gujarat, allegedly at the instance of Akbar who could not tolerate his dominance in day-to-day governance  of the kingdom, Akbar assumed full control of the government. Akbar brought  most of India under his control through conquests and alliances”.  (Page: 110 & 111, VII Social Science)

    “பைராம்கானை அக்பர் கொலை செய்தார்”, என்று இவர்களால் எப்படி வரலாறு  எழுத முடிகிறது? மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’, போன்ற அரிய (?!) வரலாற்றாய்வு நூல்களை ஆதாரமாகக் கொண்டால் இவ்வாறுதான் எழுதமுடியும்! ஆனால் மூலாதார நூல்களில் சதீஷ் சந்திராவின் ‘மத்திய கால இந்திய வரலாறு’ இருக்கும். ஆனால் குப்பை நூல்கள், நோட்ஸ்களை ஆதார மூலமாகக் கொண்டு பாடங்கள் எழுதப்படும்.

   பைராம் கானிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற அக்பர் சில நடவடிக்கைகளை எடுத்தார். அவர் ஹஜ் பயணம் செல்ல வாய்ப்பளிக்கப்பட்டது. அப்படிச் செல்லும் வழியில் அகமதாபாத் அருகே பதானில் ஒரு ஆப்கானியரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையாளியின் தந்தை பைராம்கானால் ஒரு போரில் கொல்லப்பட்டவர். இது தனிப்பட்ட பகை என்பதும் தெளிவாகும். இதில் அக்பரைத் தொடர்புப் படுத்துபவர்கள் ஆதித்ய கரிகாலன் கொலையில் முதலாம் ராஜராஜனை ஏன் தொடர்புப் படுத்துவதில்லை?

‘அக்பர் பெண் ஆட்சியாளர்கள்மீது படையெடுப்பு, எனும் தலைப்பில்,

    “அக்பர் மாளவத்தையும் மத்திய  இந்தியாவின் சில பகுதிகளையும் 
கைப்பற்றினார். மத்திய இந்தியப் பகுதியைச்  சேர்ந்த ராணி துர்க்காவதியை பாபர் தோற்கடித்தார். இதனை, மற்றவர்கள்  விரும்பவில்லை. ஏனெனில், அவர் அக்பருக்குத் தீங்கேதும் செய்யவில்லை இருந்தபோதிலும்  பேரரசை உருவாக்கும் ஆசையால் உந்தப்பட்ட  அக்பர், ராணியாரின் நல்லியல்பைக் கணக்கில்  எடுத்துக்கொள்ளவில்லை. அதைப்போலவே,  தென்னிந்தியாவில் அகமதுநகர் அரசின் பகர ஆட்சியாளராக இருந்த புகழ்பெற்ற ராணி  சந்த் பீவியின் மீதும் அக்பர் படையெடுத்தார்.  ராணியார் காட்டிய வலுவான எதிர்ப்பால்  பெரிதும் வியந்துபோன முகலாயப்படை,  அவ்வம்மையார்க்குச் சாதகமாக அமைதி  உடன்படிக்கை செய்து கொண்டது”. (பக்.131, ஏழாம் வகுப்பு சமூக அறிவியல், இரண்டாம் பருவம்)

     (நேற்று – 08.11.2019, நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் அக்பருக்குப் பதிலாக பாபர் என்றிருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.)

Conquests of Women Rulers

     “Akbar conquered Malwa and parts of  Central India. His defeat of Rani Durgavati, a  ruler in the Central Province, is not appreciated,  since the brave Rani did him no harm. Yet urged  by his ambition to build an empire, Akbar had no consideration for the good nature of the  ruler. Similarly, another woman ruler Akbar  had to confront in South India was the famous  Rani Chand Bibi, regent of Ahmednagar. The fight this woman put up impressed the Mughal  army so much that they gave her favourable  terms of peace”.  (Page:112, VII Social Science)

     இது குறித்து சதீஷ் சந்திராவின் ‘மத்திய கால இந்திய வரலாறு’ நூலில் சொல்லப்படுவன:

     “அளவற்ற செல்வம் மற்றும் ராணியின் பேரழகு குறித்து கேள்விப்பட்ட கதைகள் அலகாபாத்தின் மொகலாய ஆளுநரான ஆசாஃப்கானின் தூக்கத்தைக் கெடுத்தன. ஆகவே, 10,000 குதிரை வீரர்களுடன் பந்தல் கண்ட் பக்கமிருந்து முன்னேறினார். கர்காவின் (Garha) அரை-விடுதலை பெற்ற ஆட்சியாளர்கள் சிலர், கோண்டுகளின் நுகத்தடியை தூக்கி எறிய இதுவே சரியான நேரம் என்று கண்டு கொண்டனர். ராணி ஒரு சிறிய படையுடன் வெளியேறினார். அவர் காயம் அடைந்திருந்த போதிலும் வீரத்துடன் போராடினார். ஆனால் போர் இழக்கப்பட்டு தான் பிடிபடும் ஆபத்தில் இருப்பதைக் கண்டு கொண்டதும் தன்னைத் தானே குத்திக் கொண்டு மரணடைந்தார். ஆசாப்ஃகான், இப்போதைய ஜபல்பூருக்கு அருகே இருந்த தலைநகர் சௌராகஜ்ஜை (Chauragazh) சூறையாடினார். இப்படி நகைகள், தங்கம் என்று மற்றும் உள்ள விலை மதிப்பான சூறையாடப்பட்ட பொருள்களின் ஒரு சிறு பகுதியைக் கூட கணக்கிடுவது இயலாத செயல் என்று அபுல் பாசல் (Abul Fazl) கூறுகிறார். “இப்படிக் கொள்ளை அடித்த மொத்தத்தில், இருநூறு யானைகளை மட்டும் அரசவைக்கு ஒப்படைத்துவிட்டு மீதி அனைத்தையும் தானே வைத்துக்கொண்டார். ராணியின் இளைய சகோதரி கமலாதேவியும் அரசவைக்கு அனுப்பப்பட்டார்.

   உஸ்பெக் பிரபுக்களின் கலகத்தை அக்பர் கையாண்டதும் ஆசாப்ஃகானைச் சட்டவிரோதமாக அடைந்த ஆதாயங்கள் அனைத்தையும் ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தினார். பின்னர் மால்வாவைச் சுற்றியிருந்த பத்து கோட்டைகளை எடுத்துக்கொண்டு சங்ரம் ஷாவின் இளையமகன் சந்திர ஷாவுக்கு கர்-கதங்கா (Garh-Katanga) ஆட்சியை மீட்டுக் கொடுத்தார்”. (பக். 292 & 293, மத்திய கால இந்திய வரலாறு, சதீஷ் சந்திரா, பாரதி புத்தகாலயம்)  

      வரலாற்றைத் திரித்து இளம் பிஞ்சுகளின் உள்ளத்தை நஞ்சையும் வெறுப்பரசியலை விதைப்பதை முற்றாகக் கைவிடவேண்டும் என்பதே பாடநூலெழுதிகளுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள்.


(அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக