ஒரு மீள்பார்வைக் (Rewind) குறிப்புகள்
மு.சிவகுருநாதன்
12/10/2019
சனிக்கிழமை
தமுஎகச. சார்பிலான இலக்கிய விருதுகள் வழங்கும் விழா மற்றும் ஆய்வரங்கம்.
ஆனந்த் டெல்தும்டேயின் 'மஹத்: முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்' மொழிபெயர்ப்பு நூலுக்கு தோழர் கமலாலயன், குழந்தை இலக்கிய நூலுக்கு (புலி கிலி) நீதிமணி, 'சுளுந்தீ' நாவலுக்கு முத்துநாகு, 'அற்றவைகளால் நிரம்பியவள்', நாவலுக்கு பிரியா விஜயராகவன், 'காலனிய ஆட்சியில் நலவாழ்வும் நம் வாழ்வும்' நூலுக்கு டாக்டர் சு. நரேந்திரன் போன்ற பலருக்கு விருதளிக்கப்பட்டது.
தோழர் கமலாலயன் அவர்களை இரண்டாண்டுகளுக்கு முன்பு சந்தித்தது. அவரது உடல்நலத்தை விசாரிக்க வாய்ப்பாக அமைந்தது. பாரதி புத்தகாலயம் சிராஜுதீன், புலம் லோகநாதன் வந்திருந்தனர். மதியம் பிரியாணி விருந்து.
13/10/2019
ஞாயிற்றுக்கிழமை
கும்பகோணம் கிரீன்பார்க் ஓட்டலில் அ.மார்க்ஸ் 70 நிகழ்வு.
தோழர்கள் வே.மு.பொதியவெற்பன், கல்யாணி, பேரா. சிவகுமார், ஓடை பொ. துரையரசன், உஞ்சை அரசன், கோ.சுகுமாரன், கோ.ராஜாராம், நிகழ் அய்க்கண், தய். கந்தசாமி, தகட்டூர் ரவி, அம்மாசத்திரம் சரவணன், ஜி.பி. இளங்கோவன், மணலி அப்துல் காதர், கொளப்பாடு ச. பாண்டியன், குடவாசல் சார்லஸ், 'பாரதி புத்தகாலயம்' சிராஜுதீன், 'புலம்' லோகநாதன், முருகப்பன், இரா.செங்குட்டுவன், க. குமார், தேவரசிகன் என்று பலர் நிறைந்த அரங்கு நிரம்பி வழிந்த கூட்டம். காலை 11 மணி தொடங்கி இரவு 7 .30 மணி வரை நீண்டது கூட்டம். பங்கேற்பாளர்கள் பலர் பேச நேரம் இல்லை. அ.மா. வின் ஏற்புரையுடன் நிறைவு. மதியம் பிரியாணி விருந்து. மணலி அப்துல் காதர் மற்றும் ச. பாண்டியனுடன் காரில் வீடு திரும்பினேன்.
16/10/2019
புதன் கிழமை
கடுமையான, தாங்க இயலாத வயிற்று வலி. வீடு திரும்பி மருந்துகள் சாப்பிட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக சரியானது.
17/10/2019
வியாழக்கிழமை
தோழர் பொதிகைச் சித்தர் திருவாரூர் வருகை புரிந்தார். திருவாரூர் முத்தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இலேசான வலியுடன் கலந்துகொண்டேன்.
18/10/2019
வெள்ளிக்கிழமை
மீண்டும் கடுமையான வலி; தாங்க இயலவில்லை. மாலை தனியே மருத்துவமனை சென்று நண்பர்கள் உதவியுடன் திரும்பினேன். வலி குறையவில்லை.
19/10/2019
சனிக்கிழமை
Ultrasonic Scan (Ultrasonogram)
மீயொலி ஊடுகதிர்ச் சோதனை
gall bladder polyps with GB wall edema
Mild Acute pancreatic
இலேசான தீவிர கணைய அழற்சி
பித்தப்பையில் சிறு கட்டிகள் என்றது.
தோழர்கள் செ. மணிமாறன், மா. அருள்பாபு போன்றோர் உதவினர். தனது இணையருக்கு ஏற்பட்ட இதே போன்ற பிரச்சினையால் செ. மணிமாறன் கிட்டத்தட்ட பாதி Gastroentrologist ஆகிவிட்டார். பித்தப்பை நீக்கமே ஒரே வழி என வலியுறுத்தத் தொடங்கிவிட்டார். இன்றும் தொடர்ந்து வேறு வழியில்லை என்று சொல்லிக் கொண்டுள்ளார்.
நண்பர்களையும் உறவினர்களையும் சிரமத்திற்குள்ளாக்குவது வேதனையான சூழல்தான். அக்கா என்னுடன் மருத்துவமனையிலும் இருக்கவும் மைத்துனர் மற்றும் அண்ணன்களை உதவிக்கு அழைத்ததும், மாமனார், மாமியார் குழந்தைகளுக்கு உதவிக்கு அழைக்கவும், அதனால் அவர்கள் அலையவும் நேரிட்டது சங்கடமான நிகழ்வு.
20/10/2019
ஞாயிற்றுக்கிழமை
CT Scan (plain & contrast)
A computed tomography (CT or CAT) scan
வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி என்ற கருவி மூலம் ஊடுகதிர் சோதனை
Mild peripatetic and Left latero-conal fat stranding
Cholelithiasis
Gall bladder stone
பித்தப்பைக் கற்கள்
21/10/2019
திங்கள்கிழமை
MRCP Scan
Magnetic Resonance Cholangiopancreatography (MRCP)
காந்த அதிர்வுச் சோதனை
No evidence of Gall stone
Acute pancreatic
Gall bladder sludge
பித்தப்பையில் கசடுகள். இந்த வேறுபாடுகளுக்கு அலோபதியின் விடை எதுவாயிருந்தால் என்ன நீக்கிவிடு என்கிறது. நமக்குத்தான் குழப்பம். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
மருத்துவ மனையில் சில நாள்கள் தங்கி வலியை ஓரளவு குறைத்தாயிற்று. பித்தப்பை இருந்தால்தானே இவ்வாறு நடக்கிறது. எனவே அதை சாவித்துவார அறுவை சிகிச்சை (laparoscopy) மூலம் அகற்றிவிடுவதே ஒரே தீர்வாக அலோபதி மருத்துவமுறை முன்வைக்கிறது. மேலும் மருத்துவக் காப்பீட்டு வசதி இருப்பதால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறது.
பித்தப்பை தேவையற்ற உறுப்பா அல்லது இல்லையா என்பது ஒருபுறமிருக்க மிதமான பாதிப்பிற்கு நீக்கம் தேவையா என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
கணையம் போன்ற முதன்மையான உறுப்பைப் பாதுகாக்க பித்தப்பை இழப்பது தவறில்லை என்பதாக அலோபதி நினைக்கிறது. 'தண்ணி அடித்தால்' கணையம் பாதிக்கும்; அடிக்காவிட்டால் பித்தப்பையினால் கணையம் பாதிக்கும். அதிர்ச்சியாகத்தான் உள்ளது.
பித்தப்பையில் கற்கள் இருக்கும்பட்சத்தில் அவை அவற்றிலிருந்து வெளியேறி கல்லீரல், கணையம், பித்தப்பை ஆகியவற்றின் சுரப்புத் திரவங்கள் செல்லும் பொதுவழியை (common pile duct) அடைத்துக் கடின வலியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
இதுவரையில் ஐந்து குடல் இரைப்பை நிபுணர்களை (Gastroenterologist) பார்த்துள்ளேன். அவர்களது ஆலோசனைகளில் சில வேறுபாடுகள் இருந்தபோதிலும் பித்தப்பையை நீக்குவதில் ஒத்த கருத்து உள்ளது. அதை இன்றே செய்வதா அல்லது நாளை செய்வதா என்பதில்தான்
தற்போது Bile Fix 300 mg என்ற மாத்திரை எடுத்துக் கொண்டுள்ளேன்.
இனி வருங்காலங்களில் இப்பிரச்சினைக்கு ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் போன்ற ஏதேனும் ஒரு மாற்று மருத்துவமுறைகளில் ஒன்றை பரிசீலிக்கலாம் என்று தோன்றுகிறது.
அலோபதி மருத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்காக இதைச் சொல்ல வரவில்லை. வலி கடுமையாக இருக்கும்போது அலோபதியை நாடுவதைத் தவிர வேறு மாற்றுவழி நமக்கு இல்லை. நோய்க்குறிகளின் தன்மையைப் பொறுத்து மருத்துவமுறைகளும் சிகிச்சை முறைகளும் மாறுபடுவதும் இயல்புதானே!
பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் பல நாள்கள் இயல்பு வாழ்க்கை முடங்கித்தான் போய்விட்டது, என்ன செய்வது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக