செவ்வாய், நவம்பர் 12, 2019

தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி குறுகிய காலமா?


தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி குறுகிய காலமா?
(தொடரும் அபத்தங்கள்…)


மு.சிவகுருநாதன்
  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 45) 

       பாடநூல் அபத்தங்களுக்கு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் தொகுதியில் புவியியல் முதல்பாடமான (வரிசை எண்: 06) ‘தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்’ எனும் பாடத்தை எடுத்துக் கொள்வோம்.  இந்த ஒரு பாடத்திலுள்ள எண்ணற்ற அபத்தங்களிலிருந்து ஒரு பத்தை மட்டும் இங்கு காண்போம். 

பதினொன்று:

மிகக் குறுகிய காலம் ஆண்ட களப்பிரர்கள்!


     ‘மாநில உருவாக்கம்’, எனும் தலைப்பில் தமிழகத்தின் வரலாறு கூறப்படுகிறது.  


      “சங்ககாலத்தில் தமிழகத்தை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் வீரம்  மிக்க அதியமான், பாரி போன்ற சிற்றரசர்கள் ஆட்சி  செய்தனர். அதன் பிறகு தமிழகமானது களப்பிரர்  ஆட்சியின் கீழ் ஒரு குறுகிய காலம் இருந்தது. ஆனால்  அவர்களின் ஆட்சி பற்றிய குறிப்புகள் காணப்படவோ அல்லது அறியப்படவோ இல்லை.

     களப்பிரர்களுக்கு பிறகு இந்தியா முழுவதையும்  ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரும் வரை மதராஸ் மாகாணம்  முதலாக இந்தியா முழுவதும் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், மராத்தியர்கள், முகலாயர்கள் மற்றும்  விஜயநகர பேரரசர்களால் ஆளப்பட்டது”. (பக்.96)

Formation of Tamil Nadu

      “During Sangam age, the Tamizham was  ruled by three great emperors – Cheras, Cholas  and Pandyas – and virtuous kings ruling small  kingdoms like Adhiyaman and Pari. For a  short time, the Tamil country was ruled by  the Kalabras, but not much about their time is  recorded or known. After the Kalabras, the Tamil country  came under the control of the Pallavas, Cholas,  Pandyas, Marathas, Mughals and Vijayanagara  empires in succession until the British took  administrative control over the entire country,  starting from Madras”. (Page:86)

    புவியியல் பாடமெழுதுபவர்களுக்கும் களப்பிரர்கள் மீதான வெறுப்பும் காழ்ப்பும் தீரவில்லை என்பதையே இது காட்டுகிறது. தமிழக வரலாற்றில் களப்பிரர்களை தமிழ் மற்றும் தமிழர்களுக்கு எதிரிகளாக (வில்லன்) கட்டமைக்கும் போக்கு இன்றும் நின்றபாடில்லை. தமிழுக்கும் மற்றும் தமிழர்களுக்கும் யார் நண்பர் யார் பகைவர் என்கிற புரிதல் இல்லாத சூழல் இன்றும் நீடிப்பது வரலாற்றின் சோகம். செம்மொழி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி களப்பிரர்கள் தமிழை அழித்தனர் என்றார். இதுவே பலரது வழிமொழிதல். அதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா? 

      பிந்தைய சங்க காலப்பகுதியில் கி.பி 250 – கி.பி 575 காலகட்டத்தில் தமிழகத்தை ஆண்டவர்கள் களப்பிரர்கள். இதைக் குறுகிய காலம் என்றும் ஆதாரங்கள் இல்லை என்பதும் அபத்தமின்றி வேறுண்டோ! கி.பி. 850 இல் விஜயாலயச் சோழன் தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினான். கி.பி 650 – கி.பி 850 காலத்தில் சிற்றரசர்களாக செந்தலை, தஞ்சைப் பகுதியை ஆண்ட முத்தரையர்கள் களப்பிரர்களின் வழித்தோன்றல் என்று கருத இடமுண்டு. 


 • தெளிவற்ற இருண்டகுலம் (obscure)
 • கொள்ளைக்காரர்கள்
 • கொடுங்கோலர்கள்
 • நாடோடிகள்
 • கலியரசர்கள்
 • அரச பாரம்பரியம் அற்றவர்கள்
 • கொள்ளைக் கூட்டத்தார்
 • பழங்குடியினர்
 • குழப்பம் மிகுந்த காலம்
 • இருண்ட காலம்


        என்றெல்லாம் வரலாற்று அறிஞர்கள் (1?) மிக மோசமான வெறுப்பை களப்பிரர்கள் மீது உமிழ்ந்துள்ளனர். மயிலை சீனி வேங்கடசாமி போன்ற அறிஞர்கள் தங்களது ஆய்வின் மூலம் இருண்ட காலத்தை ‘விடியற்காலம்’ ஆக்கியுள்ளனர். எனவே பழம் புராணங்களைப் பாடாமல் நேர்மையான ஆய்வை முன்னெடுப்பது அவசியம்.

செய்ய வேண்டிய ஆய்வுகள்:


 1.    களப்பிரர் கால பாலி, பிராகிருத மொழி நூல்கள் (சமண, பவுத்த நூல்கள்) விரிவான ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.
 2.    சங்க இலக்கியங்கள் மறுவாசிப்புக்கு உள்ளாக வேண்டும்.
 3.   கீழடி அகழ்வாய்வுகள் போன்று இன்னும் பல இடங்களில் ஆய்வுகள் செய்ய வேண்டும்.
 4.  அன்றைய சாகுபடி முறைகள், மன்னர்கள், இனக்குழு மக்களின் வாழ்க்கை முறைகள் ஆகியன மீள்பார்வை செய்யப்பட வேண்டும்.
 5.   சைவ, வைணவப் பார்வையில் வரலாற்றை அணுகாமல் திறந்த மனத்துடன் நடுநிலையான, அறிவியல்பூர்வமான  ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
 6.   பர்ட்டன் ஸ்டெய்ன், பேரா. கா.சிவத்தம்பி போன்றோரின் ஆய்வுகளை இன்னும் விரிவாக்க வேண்டும்.

களப்பிரர்கள் காலத்தில் ஒன்றுமில்லை என்று சொல்வோருக்காக சில  இலக்கிய, மொழி வளர்ச்சி நிலைகள்:-


 1.   தமிழ் பிராமி, தமிழி போன்ற வரி வடிவங்கள் பயன்படுத்தப்பட்டன. பிராமி எழுத்துகள் வட்டெழுத்துகளாக மாறின. பனையோலையும் எழுத்தாணியும் அன்றைய கருவிகள். வட்டெழுத்துகள் கோடாக இருப்பதால் கல்வெட்டில் பொறிப்பது எளிது. ஆனால் ஓலைச் சுவடிகளில் எழுதுவது சிரமம். எனவேதான் வட்டெழுத்துகள் உருவாகின. தமிழ் எழுத்துகளை அச்சுக் கோர்ப்பதில் உள்ள சிரமங்களை உணர்ந்ததால் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தார் என்பதும் இங்கு சிந்திக்கத்தக்கது.
 2.   வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு பாவகைகளில் தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவினங்கள் அமைக்கப்பட்டு 12 வகையான புதுப்பாக்கள் இயற்றப்பட்டன. அவிநயம், காக்கைப் பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காப்பியப் புறநடை, பல்காயம் ஆகிய யாப்பிலக்கண் நூல்கள் எழுதப்பட்டன.
 3.   தமிழர்கள் பாலி, பிராகிருதம் போன்ற வடமொழிகளைப் பயிலவும் சமண, பவுத்தத் தத்துவங்களில் ஈடுபாடு கொள்ளவும் வழி வகுத்தது. இவை கடவுளுக்குப் பதிலாக மனிதம் பற்றிப் பேசின; அறம், ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்தின.
 4.    சமணத்துறவிகளுள் நந்திக்கணம் என்னும் பிரிவைச் சேர்ந்த வஜ்ரநந்தி கி.பி 470 திரமிள சங்கத்தைத் தொடங்கினார். இதுவே திராவிடகணம், தமிழ்ச்சங்கம் என்று சொல்லப்படுகிறது. பிற மொழிகளுடன் இணைந்து தமிழும் வளர்ந்தது.
 5.    சமண, பவுத்த அறிஞர்கள் தமிழில் இலக்கியம் படைத்தனர். பவுத்த நூல்கள் அழிக்கபட்டன, அல்லது அழிந்துபோயின. நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், விளக்கத்தார் கூத்து, சீவக சிந்தாமணி, பெருங்கதை ஆகிய இலக்கியங்கள் படைக்கப்பட்டன.
 6.   இக்காலத்தில் சைவ இலக்கியங்கள் பல எழுதப்பட்டன. பவுத்த, சமண சமயங்களை வீழ்த்த பக்தி இயக்க உத்தி உருவானது. கடவுளை நாயகனாகவும் அடியார்களை நாயகிகளாகவும் பாவிக்கும் வழிபாட்டு முறையை சைவமும் வைணவமும் ஏற்றன. இதற்கு ஆதாரமாக இறையனார் அகப்பொருள் உண்டாக்கப்பட்டது. இதை இறைவனே இயற்றியதாக கதைகள் உருவானது. மனிதக் காதலின் இடத்தில் பக்திக் காதல் வைக்கப்பட்டது. பவுத்த, சமணக் கொள்கைகள் இதற்கு எதிரானவை. எனவே அவை இவற்றை ஏற்கவில்லை.


பனிரண்டு

சென்னை முதல் கன்னியாகுமரி நீண்டுள்ள சோழமண்டலக் கடற்கரைச் சமவெளி!

     வரலாறு தெரியாமல் புவியியல் எழுதினாலும் பரவாயில்லை; புவியியல் தெரியாமல் புவியியல் எழுதுவதை எங்குபோய் சொல்ல? கொஞ்சம் கீழே வாசியுங்கள்.

‘6.5 சமவெளி்கள்’ எனும் தலைப்பில்,

    “தமிழ்நாட்டில் காணப்படும் சமவெளிகள் இரு  பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை:

1. உள்நாட்டு சமவெளிகள்
2. கடற்கரை சமவெளிகள்

     பாலாறு, பெண்ணையாறு, காவிரி  மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகள் உள்நாட்டு  சமவெளிகளை உருவாக்கியுள்ளது. காவிரியாறறுச்  சமவெளி தமிழ்நாட்டிலுள்ள வளமான சமவெளிகளுள்  ஒன்றாகும். காவிரி சமவெளியானது சேலம்,  ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை,  தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய  மாவட்டங்களில் பரவியுள்ளது  தமிழ்நாட்டின் கடற்கரைச் சமவெளியானது  சோழமண்டல் அல்லது சோழமண்டல சமவெளி  (சோழர்கள் நிலம்) எனவும் அழைக்கப்படுகி்றது.  இச்சமவெளி சென்னை முதல் கன்னியாகுமரி  வரை நீண்டுள்ளது. இச்சமவெளி கிழக்கு நோக்கிப்  பாய்ந்து வங்காள விரிகு்டாவில் கலக்கும் ஆறுகளால்  உருவாக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இவை  80 கிலோ மீட்டருக்கும் அதிகமான அகலத்துடன்  காணப்படுகி்றது. இது ஒரு உயரமான கடற்கரை  என்றாலும் சில பகுதிகள் கடலில் மூழ்கி உள்ளன. இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில்  கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல்  குன்றுகள் ‘தேரி’ எனறு அழைக்கப்படுகி்றது.  கிழக்குக் கடற்கரைச் சமவெளிப் பகுதியில் உள்ள  மன்னார் வளைகுடாவில் பவளப்பாறைகள்   காணப்படுகின்றன.

6.5.1 கடற்கரைகள்

     வங்காள விரிகுடாக் கடலையொட்டிய  சோழமண்டலக் கடற்கரை பல அழகான மற்றும்  சிறப்பு வாய்ந்த கடற்கரைகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தங்க மணல் கடற்கரை பகுதியில்  பனை மரங்களும், சவுக்குத் தோப்புகளும் பரவலாகக்  காணப்படுகின்றன. சென்னையின் மெரினா மற்றும்  எலியட் கடற்கரைகளும் கன்னியாகுமரியின் கோவளம் மற்றும் வெள்ளி கடற்கரைகளும்  புகழ்பெற்ற தமிழக கடற்கரைகளாகும்”.  (பக். 101& 103)

    சோழமண்டலச் சமவெளி சென்னை முதல் கன்னியாகுமரி  வரை நீண்டுள்ளதாம்! ‘சோழர்கள் நிலம்’ என்று  அடைப்புக்குறிக்குள் விளக்கம் வேறு.  கோடியக்கரையிலிருந்து கிருஷ்ணா நதியின் கழிமுகம் வரையே சோழமண்டலக் கடற்கரை என்று சொல்லப்படுவது. இந்தப்பகுதியை மட்டுமே சோழமண்டலச் சமவெளி என்று சொல்லமுடியும். கன்னியாகுமரிலிருந்து கோடியக்கரை வரையுள்ள பகுதி சோழமண்டல கடற்கரையோ, சமவெளியோ இல்லை. கிழக்குக் கடற்கரைச் சமவெளியின் இப்பகுதிகளை அந்தந்த பகுதி ஆற்றின் பெயரால் வேண்டுமானால் அழைக்கலாம். தமிழகத்திலுள்ள கிழக்குக் கடற்கரைச் சமவெளிகளை சோழமண்டல் அல்லது சோழமண்டலச் சமவெளி என்று அழைக்கக் கூடாது. 

பதிமூன்று:

கடல்தீவுகளா, ஆற்றுத் தீவுகளா?

     “பாம்பன், முயல் தீவு,  குருசடை, நல்லதண்ணி  தீவு, புள்ளி வாசல், ஸ்ரீரங்கம்,  உப்புதண்ணித் தீவு, தீவுத்திடல்,  காட்டுப்பள்ளித் தீவு, குவிப்பில் தீவு மற்றும்  விவேகானந்தர் நினைவுப் பாறை ஆகியன  தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் ஆகும்”.  (பக்.103)

Do you know

       “Pamban, Hare, Krusadai,  Nallathanni Theevu, Pullivasal,  Srirangam, Upputanni,  Island Grounds, Kattupalli  Island, Quibble Island and  Vivekananda Rock Memorial are some  major islands of Tamil Nadu”.  (Page:92)

     கடல்தீவுகளுடன்  ஆற்றுத் தீவான திருவரங்கமும் (ஶ்ரீரங்கம்) இணைக்கப்படுகிறது. இவற்றைத் தனியே சொல்ல வேண்டாமா? மேலும் மன்னார் வளைகுடா தீவுக்கூட்டங்கள் பல்வேறு குழுவாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றில் சில எடுத்துக்காட்டுகள்: 


 • மண்டபம் குழு: முயல் தீவு, மனோலி தீவு, சிங்கில் தீவு, புள்ளிவாசல் தீவு, மனோலிபுட்டி, பூமரிச்சான் குருசடை தீவுகள்
 • கீழக்கரை குழு:  வாலிமுனை, முல்லி, ஆனையப்பர், பூவரசன்பட்டி, அப்பா, தலையாரி, வாழை ஆகிய தீவுகள்
 • தூத்துக்குடி குழு: காசுவார் மற்றும் காரைச்சல்லி தீவுகள்
 • வேம்பார் குழு: உப்புத்தண்ணி, நல்ல தண்ணி புலுவினிச் சல்லி, ஆகிய தீவுகள்


பதிநான்கு:

நதிகள் இந்துமதப் புனிதங்களா?

    “பெண்ணையாறு இந்து  சமய மக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது.  மேலும் தமிழ் மாதமான தை மாதத்தில் இந்த ஆற்றுப் பகுதியில் (ஜனவரி, பிப்ரவரி) பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன”. (பக்.104)

   “The Ponnaiyar is considered sacred  by Hindus and festivals are held during the 
Tamil month of Thai (January–February)”. (Page:93)

    இந்து மதம் என்றால் என்ன? அன்றைய வேத மதந்தானே இது. வைதீக வேத மதமும் ஆரியர்களும்  நெருப்பைப் புனிதமாகக் கருதினார்களே தவிர நீரையோ, நதியையோ அல்ல. மேய்ச்சல் நாகரிக மனிதர்கள் விளைச்சல் நாகரிகத்தின் நதி, அணைகள் போன்றவற்றை எதிரியாகத்தான் கருதினர். அவர்கள் நெருப்பை மட்டுமே புனிதமாகக் கருதினார்களே தவிர நீரையல்ல. இன்று திராவிட, ஆரியப் பண்பாட்டு கலப்பு ஏற்பட்டதால் தீயும் நீரும் ஒரே வழிபாட்டுப் பொருளாக மாறிவிட்டன. புனித நதிச் சொல்லாடல்கள் பாடநூலுக்கு உகந்ததல்ல. இதைத் தவிர்த்து நதிகளைப் பற்றிச் சொல்ல எவ்வளவோ உண்டு.

பதினைந்து:

 இனி அக்னி நட்சத்திரம், பஞ்சாங்கம் வழி புவியியல் பாடம்? 

 கண்டறிக

“1. அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?” (பக்.105)

Find out

“1. What is Agni Nakshatram?” (Page: 94)

    ‘அக்னி நட்சத்திரச்’ சொல்லாடல் பாடநூலில் எதற்கு? கண்டறிய இதிலென்ன அறிவியலிருக்கிறது? இந்த பஞ்சாங்க விகாரங்களை அறிவியல் ஏற்றுக் கொள்வதில்லை. இனி பஞ்சாங்கத்தின் வழி புவியியல் பாடங்கள் எழுதப்படும் என்று ஐயுற வேண்டியுள்ளது. மண்டல வானிலை ஆய்வு மைய (சென்னை) அலுவலர்கள் பலமுறை ஊடகங்களில் விளக்கமளித்திருக்கிறார்கள். ஆனால் புவியியல் பாடம் அக்னி நட்சத்திரத்தை அறிந்துகொள்ளச் சொல்கிறது. சூரியன், சந்திரன் உள்ளிட்ட ஒன்பது ஜாதகக் கோள்களை அறிய வேண்டுமோ! தமிழ்ப் பல்கலையில் பாடமாக உள்ள சோதிடம் இனி பள்ளிகளிலும் பாடமாக்கப்படுமோ!  

பதினாறு:

சுவருதல் (leaching) என்றால் என்ன?

“2. கூற்று: செம்மண்ணில் அதிக அளவு இரும்பு  ஆக்சைடுகள்  உள்ளன
காரணம்: இது சுவருதலால் உருவாகிறது
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. கூற்று  காரணத்தை விளக்குகிறது
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால்  காரணம் கூற்றுக்கான சரியான  விளக்கமல்ல 
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு
ஈ)  காரணம் சரி. ஆனால் கூற்று தவறு”.  (பக்.117)

“2. Assertion (A): Red soil is rich in iron oxides 
Reason (R): It is formed by leaching
a) Both (A) and (R) are true and (R)  explains (A).
b) Both (A) and (R) are true but, 
(R) does not explain (A).
c) (A) is true but, (R) is false.
d) (R) is true but, (A) is false”.  (Page:105)

    மேற்கண்ட  வினாவிற்கு விடையளிக்க ‘சுவருதல்’ என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். ‘leaching’ என்பதின் மொழியாக்கமாக இவ்வினாவில் மட்டும் ‘சுவருதல்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் தமிழ் வழிப் பாடப்பகுதியில் இல்லை. ஆங்கில வழியில் படித்தால் மட்டுமே இவ்வினாவிற்குப் பதில் எழுத முடியும். தமிழ் மொழிபெயர்ப்பில் இச்சொல் நேரடியாகப் பயன்படுத்தப்படவில்லை. மண்ணிலுள்ள வேதிப்பொருள்கள் நீரால் அடித்துச் செல்லப்படுவதை இது குறிக்கும். சரளை மண்ணில் சத்துகள் இவ்விதம் நீரால் அடித்துச் செல்லப்படுகின்றன. பாடப்பகுதி சொல்வதை கீழே கவனியுங்கள். 

6.8.4 சரளை மண்

        சரளை மண்ணானது அதில் கரைந்துள்ள  சத்துக்கள் அடித்து செல்லப்படுவதால் உருவாகி்றது.  இவை ஒரு வளமற்ற மண்ணாகும். காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், நீலகிரி மலையின் சில  பகுதிகளிலும் இம்மண் காணப்படுகின்றது.  நெல், இஞ்சி, மி்ளகு மறறும் வாழை ஆகியன  இம்மண்ணில் விளைகின்றன. தேயிலை மற்றும்   காபி பயிரிடுவதற்கும்  இம்மண் ஏற்றதாக உள்ளது”.  (பக்.107)

Laterite Soil

      “This soil is formed by the process of  intense leaching. Laterite soils are found in some parts of Kancheepuram, Tiruvallur and  Thanjavur districts and some patches over  the mountainous region in the Nilgiris. Crops  grown in this soil are paddy, ginger, pepper and  plantains. It is also suitable for the cultivation  of tea and coffee plants”. (Page:97)

பதினேழு:

மொழியாக்கக் குளறுபடிகள்:  (எ.கா.) நிலவளமிழப்பு (degradation)

    பாடத்தை எளிமையாகவோ, சுருக்கமாகவோ எழுத வேண்டும் என்ற ‘மெனக்கெடுதல்’ இல்லாத நிலையை என்ன சொல்வது? திரும்பத் திரும்ப ஒரே கருத்துகளைப் பதிவு செய்வதும் எளிமையான சொல்லாக்கங்களை விட்டு கடினச் சொற்களை நாடுவதும் தொடர்கிறது. மேலும் மொழிபெயர்ப்பை மிகக்கடினமாக்கும் கொடுமையும் நடக்கிறது. நேரடியாக தமிழில் பாடங்களை எழுதாத வரையில் இந்த அவலத்தை மாற்றமுடியும் என்று தோன்றவில்லை. அதுவரையில் தமிழில் படிப்பதும் பொருளற்றது. 
 
   ஒரே கருத்து இரு இடங்களில் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. இம்மாதிரி திரும்ப வருவனவற்றை நீக்கினாலே பக்கங்கங்கள் வெகுவாக குறையும். ‘degradation’ என்ற சொல்லுக்கு ‘நில சீரழிவுடையதாதல்’ என்றும்  ‘நிலம் தரம் குறைதல்’ என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இந்த எளிமையை வியக்காமலிருக்க முடியவில்லை! ‘atlas’  ‘நிலவரைபடம்’ மற்றும் ‘தேசப்பட புத்தகம்’ என்றும் மாறுவதையும் காண்க.

     ‘உங்களுக்குத் தெரியுமா?’, அப்பகுதியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழே வாசிக்கலாம்.
  
      “தமிழ்நாடு எதிர்கொள்ளும்  முக்கிய பிரச்சினைகளில் ஒன்று  பாலைவனமாதலாகும். இந்திய  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்  தயாரித்த பாலைவனமாதல் நிலவரைபடத்தின்படி  மொத்த நிலப்பரப்பில் சுமார் 12 சதவீத நிலப் பகுதி  பாலைவனமாதல் மற்றும் நில சீரழிவுடையதாதல்  என்ற இருநிலைகள் கண்டறியப்பட்டுள்ளது.  தேனி, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்கள் இவற்றினால் பாதிப்புக்குள்ளாகின்ற  பகுதிகளாகும். தேனி மற்றும் இராஜபாளையம்  பகுதிகளில் சுமார் 1,2000 ஹெக்டேர் (120 சதுர கிலோமீட்டர்) நிலம் காற்றடி மணல் படிவுகளால்  பாதிக்கப்பட்டுள்ளது”. (பக்.108)

Do you know

     “Desertification is one  of the major problems of  Tamil Nadu. According  to the desertification atlas  prepared by the ISRO. about  12% of the total geographical area is under  desertification and land degradation. Theni, the Nilgiris and Kanyakumari are the worst  affected districts. About 12,000 hectares (120 Sq.km) were affected by sand deposition in  Theni and Rajapalayam”. (Page:96)

     “According to the desertification atlas  prepared by the ISRO, about 12 percent of the  total geographical area is under desertification  and land degradation. Theni, Virudhunagar,  the Niligris and Kanyakumari are the worst  affected districts. To manage the water deficit,  rain water harvesting and water conservation  methods have to be implemented strictly”.  Page: 102)

     “இந்திய விண்வெளி ஆராய்ச்சி  நிறுவனத்தின் தேசப்பட புத்தகத்தின் படி, மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 12  சதவீத நிலப்பரப்பில் பாலைவனமாதல் மற்றும்  நிலம் தரம் குறைதலுக்குள்ளாகியுள்ளன. தேனி, விருதுநகர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்கள் மிகவும் மோசமான பாதிப்புக்கு  உள்ளானவையாகும். நீர் பற்றாக்குறையைக்  கையாளுவதற்கு அல்லது சரி செய்வதற்கு மழை நீர் சேகரிப்பு , நீர்வளப் பாதுகாப்பு முறைகளைத்  தீவிர முறையில் பின்பற்ற வேண்டும். (பக்.113 & 114)

பதினெட்டு:

தமிழகச் சதுப்பு நிலங்கள் (அலையத்திக்காடுகள்)

      பள்ளிக்கரணை (சென்னை), கழுவெளி (விழுப்புரம்), பிச்சாவரம் (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), முத்துப்பேட்டை (திருவாரூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) – (முத்துப்பேட்டை அலையத்திகாடுகள் என்பது நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டத்தின் பகுதிகள் இணைந்த ஒன்று.) 

    பாடநூலில் சத்திரம் என்றொரு பெயர் சொல்லப்படுகிறது. சேதுபாவா சத்திரமா (தஞ்சாவூர்) அல்லது தனுஷ்கோடிக்கு அருகேயுள்ள முகுந்தராயர் சத்திரமா (இராமநாதபுரம்) என்பது விளங்கவில்லை. மேலே சொல்லப்பட்ட ஊர்களை விட சத்திரத்தில் அதிக சதுப்புநிலங்கள் உண்டா என்பதும் தெரியவில்லை. பள்ளிக்கரனை போன்ற சூழலியல் அழிவின் தாக்கம் அதிகம் உள்ள இடங்களை பட்டியலிலிருந்து தூக்கிவிடுவது நல்லதாகப் போச்சு! அங்கு சதுப்புநிலங்கள் உள்ளதை கண்டுகொள்ளாமல் மறைத்தோ, மறந்தோ விடுவதும் சூழலியல் அரசியலே.
  
6.10.4 மாங்குரோவ் காடுகள் 

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள்

       “இவ்வகைக்காடுகள் கடலோரப்பகுதிகள்,  ஆற்றின் டெல்டா பகுதிகள், தீவுகளின் கடைப்பகுதிகள், மற்றும் ஆற்று முகத்துவாரங்களில்  காணப்படுகின்றன. பொதுவாக இத்தாவரங்கள் பசுமையானதாகவும் மிதமான உயரம் உடையதாகவும் தோல் போன்ற இலைகளுடனும் காணப்படுகின்றன. இவ்வகை தாவரங்கள் உவர் நிலங்கள் மற்றும் உவர் நீரில் வாழும்  தன்மையுடையன. ஆசிய மாங்குரோவ், வெள்ளை மாங்குரோவ், காட்டுமல்லி இந்தியன் ப்ரிவெட்  மரங்கள் போன்றவை இங்கு வளரும் குறிப்பிடத்தக்க மரங்களாகும். பிச்சாவரம், வேதாரண்யம்,  முத்துப்பேட்டை, சத்திரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய  பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் இக்காடுகள் அமைந்துள்ளன”. (பக்.109)

Mangroves

Mangrove Forest in Pichavaram

    “This type of forest is found in the coastal  areas, river deltas, tails of islands and over  sea faces where accretion is in progress. The  vegetation is typically evergreen, moderate  in height and has leathery leaves. The  vegetation of this forest is adapted to survive  in tidal mud and salt water. Asiatic mangrove,  white mangrove, wild jasmine/Indian pivot  etc. are some of the notable trees of this  forest. Pichavaram, Vedaranyam, Muthupet,  Chatram and Thoothukudi are the places  in Tamil Nadu where the mangrove forest is  found to a considerable extent”. (Page:96)

பத்தொன்பது:

காட்டுத்தீ உருவாகக் காரணங்கள் என்ன? 

     காட்டுத்தீ உருவாக அதிக வெப்பம் மட்டுமே காரணமாகச் சொல்லப்படுகிறது. இது நியாயமானதா? காட்டுத்தீ இயற்கையானது மட்டுமல்ல; மனிதர்களாலும் பெரும்பாலும் ஏற்படுகிறது என்கிற உண்மையை மறைக்க / மறுக்க வேண்டாம். 

      மின்னல், எரிமலை வெடிப்பு, பாறைகள் விழுவதனால் ஏற்படும் தீப்பொறி, தானாகத் தீப்பற்றுதல் போன்ற நான்கு முக்கியமான காட்டுத்தீ தொடங்குவதற்கான நான்கு முக்கியமான இயற்கைக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. நிலக்கரிச் சுரங்கத் தீயினாலும் காட்டுத்தீ பரவக் கூடும். காய்ந்த மரங்களும் , செடிகளும் அதிக வேகத்தில் உராய்வதனாலும் காட்டுத்தீ பற்றுகிறது. கோடை காலங்களில் காட்டுத்தீ அதிகமாக உருவாகின்றது.

     பல காட்டுத்தீ ஏற்படுவதற்கு மனிதருடைய நடவடிக்கைகள் பெரிதும் காரணமாக இருக்கின்றன. தீவைத்தல், அணைக்காமல் எறியப்படும் சிகரெட்டுத் துண்டுகள், வீசியெறியப்பட்டும் பாட்டில்கள், கருவிகளில் இருந்து உருவாகும் தீப்பொறி, மின்சாரக் கம்பிகளில் ஏற்படும் மின்பொறி ஆகிய காரணங்களும் உண்டு. 

    கால்நடை வளர்ப்பு, வேளாண்மை, நிலமீட்புக்கான எரிப்பு, கவனமின்மை போன்ற மனித நடவடிக்கைகளே பெரும்பாலான காட்டுத்தீக்கள் உருவாகக் காரணமாகின்றன.

     இனி பாடப்பகுதியிலுள்ளவை: 

6.12.5 காட்டுத்தீ

      “தமிழ்நாடு ஒரு வெப்ப  மண்டலத்தில் உள்ள மாநிலம்.  கோடைக்காலத்தில் அதிக வெப்பம்  காரணமாக, இலையுதிர் மற்றும்  முட்புதர் காடுகளில் அவ்வப்பொழுது  காட்டுத் தீ ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் சமீபத்திய காட்டுத் தீ விபத்து (மார்ச்  11ஆம் நாள்) 2018 ஆம் ஆண்டு நடந்தது. சென்னை மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 37 பேர் தேனி  மாவட்டத்தில் உள்ள குரங்கனி மலையில் மலையேற்ற  பயிற்சி முடிந்து திரும்பும் வழியில் இந்தச் சோக சம்பவம்  நடந்தது. காட்டுத் தீயின் மத்தியில் சிக்கிக்கொண்ட  இக்குழுவில் 23 பேர் உயிரிழந்தனர். இந்நிகழ்வுக்குப் பின் தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் ( பிப்ரவரி 15 முதல்  ஏப்ரல் 15 வரை) இரண்டு மாதங்களுக்கு மலையேற்றப் பயிற்சிக்குத் தடை விதித்தது”. (பக்.113 & 114)

6.12.5 Forest Fire

     “Tamil Nadu is a tropical  state. The high temperature  during summer leads to  occasional forest fire in  deciduous and thorn forests.  The recent fire accident  in the state took place in 2018. The tragedy  happened on March 11 when 37 people from  Chennai and Erode regions were returning  after a trekking trip to the Kurangani hills in  Theni district. The groups were struck in the  middle of a forest fire, which ultimately killed  23 people. In the aftermath of the Kurangani  forest fire, Tamil Nadu government has  banned trekking in the state for two months  every year (February15 to April 15)”.  (Page: 102)

இருபது:

தமிழகக் காடுகளின் பரப்பு 20.21% என்பது உண்மையா?

     பாலைவனவாதல் (desertification), நிலவளமழிதல் (degradation) போன்றவை அதிகரித்துள்ள நிலையிலும் ‘கஜா’ புயல் பாதிப்பால் மரங்கள் அதிகளவில் சேதமடைந்ததையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது தமிழகக் காடுகளின் பரப்பு 20.21% என்பதை நம்ப இயலவில்லை. இருப்பினும் இவ்வாண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் இப்புள்ளி விவரம் தரப்பட்டுள்ளது. இது India State of Forest Report (ISFR) Forest Survey of India (FSI) இன் 2017 ஆம் ஆண்டறிக்கை ஆகும். (பிப்.2018 இல் வெளியானது)

    ‘கஜா’வுக்குப் பிந்தைய புதிய ஆய்வறிக்கை என்ன சொல்கிறது என்று தெரியவில்லை. வனத்துறை மரக்கன்றுகள் நட்ட இடங்களெல்லாம் வனங்களாக மாறிவிட்டதாகக்  கணக்கு காட்டுவதுதானே நடைமுறை! மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒருபங்கு, அதாவது 33% காடுகள் இருப்பதை உறுதிசெய்வதே சூழலியலைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகும். அதற்கு இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும். பெருமிதங்களில் தேங்கிவிடாமல், அதை நோக்கி நகர்வதும் அதற்கான நடைமுறைகளை உருவாக்குவதும் நல்லது. 


(அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக