ஞாயிறு, நவம்பர் 03, 2019

இலக்கில்லாப் பயணத்தில் கல்வித்துறை

இலக்கில்லாப் பயணத்தில் கல்வித்துறை


மு.சிவகுருநாதன்



       நாள்தோறும் ஏதேனும் அறிவிப்புகளை வெளியிட்டு தாங்கள் மட்டுமே செயல்படுவதாக 'பம்மாத்துகள்' அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

     10, +1, +2 வகுப்புப் பொதுத்தேர்வை மூன்று மணி நேரமாக்கி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இம்மாதிரியான அபத்தங்கள், வன்கொடுமைகள் என்று ஒழியுமோ தெரியவில்லை. 3:15 மணி நேரத்திற்கு மேலாக இயற்கைக்கு கூட வழிவிடாது ஓரிடத்தில் அடைத்து வைப்பதை வேறு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை.

     பொதுத்தேர்வுகளைப் போட்டித்தேர்வுகளாக்கும் நடைமுறைகளில் எங்கே சென்று முட்டிக்கொள்வது எனத் தெரியவில்லை.

     மாணவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரிடமிருந்து கோரிக்கைகள் வந்ததால் இந்த அறிவிப்பாம்! இப்படியான கோரிக்கைகளை யார் வைத்தது என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். பெரிய ஜனநாயகத் தன்மையுடன் செயல்படுவதாகக் காட்டிக் கொள்வதில் மட்டும் குறைச்சலில்லை.

     +1, +2 வகுப்புகளைப் போன்று 10 ஆம் வகுப்பிற்கும் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கி 90 மற்றும் 70 மதிப்பெண்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் கல்வித்துறையை எட்டாதது ஏன்?

     மாணவர்கள் 3 மணி 15 நிமிடங்கள் தேர்வறையில் இருந்தாக வேண்டும். இந்தக் கொடுமைக்கு கோரிக்கைகள் வேறு கேடா?

     முன்பு பழைய முறையில் 200, 150, 100, 80 மதிப்பெண்கள் தேர்வு முறைக்கு மொத்தமாக 3 மணி 15 நிமிடங்கள் தேர்வறையில் அடைத்து வைக்கும் முறை இருந்ததது.

      இப்போது +1, +2 ஆகிய வகுப்புகளுக்கு அனைத்துத் தேர்வுகளும் 90, 70 என மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பிற்கு மட்டும் 100, 75 என்பதாக மதிப்பெண்கள் உள்ளன. இதை ஓர்மையாக்க எந்த நடவடிக்கையுமின்றி மந்தைகளைப் பட்டியில் அடைக்கும் வேலை மட்டுமே நடக்கிறது.

     எவ்வளவு சிந்தித்து எழுதுவதற்கும் 2:30 மணி நேரம் போதுமானது. ஏற்கனவே 15 நிமிடங்கள் கூடுதல் நேர ஒதுக்கீடு இருக்கும்பொது 3:15 மணி நேரம் அமரவைப்பது மிகக் கொடியது.

    புதிய பாடநூல்கள், புதிய வினாக்கள் போன்றவற்றில் சிந்திக்க ஒன்றுமில்லை. எல்லாம் மனப்பாடத்தை முதன்மைப் படுத்துவதே. சிந்தனை, அறிவு என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டமே.

     அதிக மதிப்பெண்களுக்குத் தேர்வு எழுதுபவர்கள் 10 ஆம் வகுப்பு மாணவர்களே. இவர்களுக்கு மட்டும் அதிக சுமை, அதிக நேரம் என்பதும் அபத்தம். 10, +1, +2 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் ஒரே விதமான தேர்வு முறையை அமல் செய்வதில் கல்வித்துறைக்கு உள்ள தடைகள் என்ன? அதைக் கடக்க என்ன தான் செய்ய வேண்டும்?

     இந்த 3:15 மணிநேரக் கொடுமை 5 மற்றும் 8 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளுக்கும் அமலாக்கப்படுமோ என்கிற அச்சம் மேலோங்குகிறது.

      6 - 8 வகுப்புகளில் 60 மதிப்பெண்கள் தேர்வுகளுக்கு 2:30 மணி நேரம் குழந்தைகளை அடைத்து வைக்கும் அவலம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் கல்வியில் மாற்றம் சாத்தியமில்லை. 60 மதிப்பெண்கள் தேர்விற்கு ஏன் 2:30 மணி நேரம் என்று இதுவரை யாரும் கேள்வி கேட்பதில்லை? ஆசிரியர்களுக்கு உள்ள இடையூறுகள் ஒருபுறமிருக்க, குழந்தைகளின் உரிமையை யார் நிலைநாட்டுவது?

      எல்லாரும் பங்கேற்கும் , தேர்ச்சியடையும் எளிமையான தேர்வுகள், வடிகட்டி வெளியேற்றாத தேர்வுமுறைகளைப் பற்றிச் சிந்திக்காமல், குழந்தைகளை மந்தைகள் போல் அடைப்பதைத் தேர்வுகள் என்று சொல்வதுகூட அறிவீனமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக