புதன், நவம்பர் 20, 2019

குழந்தைகள் உயிருடன் விளையாட வேண்டாம்!


குழந்தைகள் உயிருடன் விளையாட வேண்டாம்!

மு.சிவகுருநாதன்


        இன்று (நவம்பர் 19) மாலை அப்பாவின் நினைவு நாளுக்கு ஊருக்குச் சென்று விட்டுப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். திருத்துறைப்பூண்டியிலிருந்து  திருவாரூர் செல்லும் வழியில் பேருந்து கச்சனம் வந்தபோது இரு பயணச்சீட்டு ஆய்வாளர்கள் பயணிகளிடம் சீட்டுக்களை வாங்கி சோதித்துக் கொண்டிருந்தனர்     பேருந்து ஆப்பரக்குடி தாண்டி விளத்தூர் சாலை நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னதாக சென்ற பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ஒன்றின் பின்புறத்தில் வேகமாக மோதி, வேன் பக்கவாட்டில் தூக்கி வீசப்பட்டது

     கணநேரத்தில் திடீர் சத்தத்துடன் நிகழ்ந்த விபத்து. வேனில் சுமார் 20 குழந்தைகள் இருந்திருக்கலாம். எங்கும் அழுகுரல்; குழந்தைகள் பலர் ரத்தம் சிந்தினர்

    உடனடியாக சரிந்து கிடந்த வேனை நிமிர்த்தியும், உடைந்த பின்புற வழியாக குழந்தைகளைப் பொதுமக்கள் மீட்டனர். "தண்ணீர், தண்ணீர்", என்று குழந்தைகளின் அழுகுரல். பக்கத்து வீடு ஒன்றிலிருந்து ஒரு குடம் குடிநீரை எடுத்து வந்து அளித்தேன். அதை ஒரு மாணவர் மட்டுமே குடித்தார். அந்தக் குடிநீரைக் கொண்டு காயங்களைக் கழுவியதால் குடிநீர் சிவப்பானது

     தலையிலிருந்து வழியும் ரத்தத்துடன், "அண்ணே, காதிலிருந்து ரத்தம் வருதா, பாருங்க", என்று சொன்ன ஒரு மாணவரை "இல்லை", என்று சொல்லித் தேற்றினேன்

    குழந்தைகள் அனைவரும் வேனிலிருந்து மீட்கப்பட்டு அருகே இருந்த ஒரு மாடி வீட்டில் பத்திரமாக வைக்கப்பட்டனர். உள்ளூர் மக்களும் பெண்களும் குழந்தைகளை வாரியணைத்துத் தேற்றி, தண்ணீர் அளித்து ஆறுதல் சொன்னது நெகிழ்வான தருணம்

     உடன் போன் செய்தும், 108 வர தாமதம், காவல்துறை வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்தது. அருகிலுள்ள ஒரு குழந்தையின் தாய் நைட்டியுடன் ஸ்கூட்டியில் ஓடி வந்து தனது குழந்தையை வாரியணைத்துக் கொண்டார். குழந்தைகள் அனைவரும் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துவோம்

         குழந்தைகளின் புத்தகப்பைகளை முடிந்த வரையில் மீட்டு மக்கள் அடுக்கி வைத்தனர். இருப்பினும் பாடநூல்கள், குறிப்பேடுகள், காலணிகள், ஷூக்கள் என அனைத்தும் அங்கு சிதறிக் கிடந்தன. வேன் முழுவதுமாக உருக்குலைந்தது. உரிமம் இருக்குமா என்ற அய்யம் ஏற்படும் வகையில் இருக்கிறது அந்த வேனின் தோற்றம். பின்புறம் எண்பலகையைக் காணோம்

          பேருந்தின் முன்புறம் கண்ணாடி உடைந்தது; முன்புறம் நசுங்கியது. மீண்டும் வேறு பேருந்தில் ஏறியபின் கவனித்தேன், எனது விரலில்கூட சிறிய கீறல்

          ஒரு குழந்தையை இறக்கிவிட்ட அந்த வேன் எதிரே ஆடோ, மாடோ வந்ததால் வலப்புறம் கொஞ்சம் ஏறி வந்துள்ளது. இதை கவனிக்காது வேகமாக வந்த பேருந்து கண நேரத்தில் கடுமையாக மோதியது. இரு தரப்பு மீதும் தவறு இருக்கிறது

       வேன், பேருந்து ஓட்டுநர் மட்டுமா இதற்குப் பொறுப்பு?  உரிமம் இல்லாத, அரதப் பழசான இந்த வாடகைக்கு விடுபவர்கள், இதை நம்பிப் பச்சிளம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள், இவ்வாறு சட்டவிரோதமாக இயங்கும் பள்ளி வாகனங்கள், இவற்றை அனுமதிக்கும் வட்டார போக்குவரத்து மற்றும் காவல்துறை, நீதித்துறை எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பும் இக்குற்றத்திற்கும் விபத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இது நடக்குமா

            உரிமம் இல்லாத எண்ணற்ற வாகனங்கள் சாலைகளின் ஓடுகின்றன. ஓட்டுநர் உரிமம் இல்லாத பலர் வாகங்களை வாகனங்களை இயக்குவது இங்கு சர்வ சாதாரணம். 18 வயதுக்குட்பட்டோர் வாகனங்களை இயக்க இங்கு எந்தத் தடையும் இல்லை. இவர்களில் பலர் அதிவிரைவாக வாகனங்களை இயக்குகின்றனர்

          இவையெல்லாம் நீதித்துறை, காவல்துறை, அரசு என அனைத்துத் தரப்புக்கும் தெரியாது இல்லை. இவற்றைக் கண்டுகொள்ளாத போக்கினால் இந்தியாவில் தமிழகம் விபத்துகளில் முதலிடத்திலுள்ளது. நீதிமன்றம் தலைக் கவசம் போட்டால் போதும் என்கிறது. அதைத்தான் அரசும் போக்குவரத்துக் காவல்துறையும் செயல்படுத்துகிறது

         தலைக்கவசம் போட்டிருந்தால் வேறு எதுவும் தேவையில்லை என்கிற நிலைதான். பணவசூல் சிறப்பாக நடக்கிறது

          இம்மாதிரி குழந்தைகளின் உயிருடன் விளையாடுவது எப்போது நிற்கும்? இதற்காக அரசும் உரியவர்களும் ஏதாவது செய்வார்களா?  நாம் எப்போது திருந்தப் போகிறோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக