கொஞ்சம் முன்கதைச் சுருக்கம்
மு.சிவகுருநாதன்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூர்
ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் எனது மாணவத் தோழருமான செ.
மணிமாறனின் மாணவர் விடுப்புக்கு உண்மைக் காரணத்தை எழுதியது, 'ஆனந்த விகடன்' இணைய இதழிலும் YouTube சேனலிலும் 'வைரலான' செய்தி
பகிரப்பட்டிருந்தது. தோழர் மணிமாறனுக்கு அந்தக் குழந்தைக்கும் எனது வாழ்த்துகள். இங்கு சென்ற ஆண்டு 'வைரலான' ஒன்றையும் குறிப்பிடாமல் இருக்க
முடியவில்லை.
அது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் அஜித் படத்தின் முதல்கட்சி
பார்க்க விடுப்பு/அனுமதிக் கடிதம் தொடர்பாக, உடன் அவர்களது பெற்றோரை அழைத்துவரச் சொன்ன குறிப்புடன் அக்கடிதம்
இணையங்களில் உலா வந்தது. (அஜித்தின் 'விஸ்வாசம்' படம் என்று நினைக்கிறேன்.)
1990 களின் பாதியில் பணிக்கு வந்த நான் அதன் இறுதியில் விடுப்பு விண்ணப்பத்தில் உண்மையான காரணத்தைச் சொல்லக்
கேட்டதுண்டு. 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களில் பலர் அதைப் பின்பற்றி, உடல் நலமில்லை என்ற வழக்கமான காரணத்தை விட்டுவிட்டு, சினிமாவிற்கு செல்ல, மாமா வீட்டுக்குச் செல்ல,
டிரஸ் எடுக்க என்று உண்மையைச் சொல்லத் தொடங்கினர்.
குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்துகொள்வது என்பதில்
மிகத்தெளிவாக இருப்பர். வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி இது அவர்களுக்கு
அத்துப்படி. ஆனால் இந்த உண்மைக் காரணக் கடிதம் ஒரு மரபுவழி ஆசிரியரிடம் சிக்கினால்
தொலைந்தது. அக்குழந்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது.
இந்தக் கடிதம் மணிமாறனிடம் அல்லாமல் வேறு ஒருவரிடம் கிடைத்தால் என்ன நடக்கும்?
அந்தக் காலகட்டத்தில் ஒருமுறை எனக்கு வகுப்பு மாற்றம். புதிய
வகுப்பில் வகுப்புத் தலைவன், "விடுப்பு எடுத்தால் கட்டாயம் கடிதமளிக்க
வேண்டும். இல்லாவிட்டால் தண்டம் (penalty/fine)
கட்ட வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு ரூபாய்; அரை நாளுக்கு 50 பைசா", என்று
முந்தைய நடைமுறையை என்னிடம் விளக்கினான். நான், " வேண்டாமே", என்றேன்.
இந்தத் தொகையைக் கொண்டு, “கரும்பலகைத் துடைப்பான் (duster), விளக்குமாறு
வாங்குவோம்”, என்று சொல்லி வலியுறுத்தினர். நான் அவர்கள் விருப்பத்திற்கே
விட்டேன்.
சில நாள்கள் கழிந்தது. ஒரு நாள் ஒரு மாணவன், "நா
மத்தியானம் வரமாட்டேன்; இந்த 50 காசு", என கொடுத்துவிட்டுச் சென்றதுதான் புகார். அத்தோடு தண்டத்தொகை வசூலிப்பது நின்று
போனது. முற்றுப்புள்ளி வைக்க காரணமான மாணவனை இப்போது நினைவில்லை. அவனுக்கு எனது
நன்றிகள்.
நடைமுறையில் உண்மையைச் சொல்வது
எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். மாணவர்களை விடுங்கள். ஆசிரியர்கள்
விடுப்பிற்கு உண்மைக் காரணங்களை சொல்ல வாய்ப்புண்டா?
தற்செயல் விடுப்பில்
காரணமே தற்செயல் தானே! பிறகு ஏன் தனிக்காரணம்? வெறும் உடல்நலக்குறைவு
என்று சொல்லாமல், குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டது ஒரு உதவி பெறும்
பள்ளியில் விபரீதமானது கதையும் நடந்தது.
மருத்துவச் சான்றின்
பேரிலான ஈட்டா விடுப்பிலும் இதே நிலைதான். மருத்துவ விடுப்பை வேறு
தருணங்களிலும் துய்ப்பதுண்டு. இரண்டு நாள்களுக்கு நாள் விடுப்புத் தேவைப்பட்டால்
மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு; வேறு வழியில்லை.
உண்மையிலேயே மருத்துவக்
காரணங்களுக்கான விடுப்பு என்றாலும்கூட, நாம் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்
மருத்துவர் சான்று வழங்குபவராக இருக்க மாட்டார். வேறு ஒரு மருத்துவரிடம் வாங்க
நேரிடும். அவர் ஏதோ ஒரு உடல்நலக்குறைவு என்று எழுதித் தருவார். அது ஒரு ஆவணம்
அவ்வளவே!
இதே நிலைதான் பல
இடங்களிலும், தருணங்களும். வருங்கால வைப்பு நிதியில் (GPF) முன்பணம், பகுதி
இறுதித் தொகை ஆகியவற்றுக்கும் காரணம் தேவை. ஆணுக்கு மனைவிக்கான மருத்துவச் செலவு,
பெண்ணுக்குக் கணவருக்கான மருத்துவச் செலவு என மாற்றி மாற்றிப் போட்டுக் கொள்ள
வேண்டியதுதான்.
ஒரு ஆண் தனது
தாய், தந்தையரின் மருத்துவச் செலவிறகு தொகை பெறலாம். ஆனால் மணமான ஒரு பெண்
தனது தாய், தந்தையருக்கு தொகை பெறமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் தன்னுடன்
வைத்து பராமரிக்கும் மாமனார், மாமியாருக்குச் செலவு செய்ய சட்டத்தில் இடமில்லை.
அதனால்தான் என்னவோ இப்போது யாரும் இந்த பராமரிப்பு வேலையை எடுத்துக்கொள்வதில்லை!
எனக்குத் தெரிந்த
ஓர் உண்மை விளம்பி ஆசிரியை. உண்மையில் அந்தத் தொகை மாமியாரின் மருத்துவச் செலவு
செய்யவேப் பயன்படுகிறது என்பதால் உண்மையை எழுதிவிட்டு பணத்திற்காகக்
காத்திருந்தார். பணம் கிடைக்கவில்லை; பட்டியல் தணிக்கை (Audit)
செய்யப்பட்டுத் திரும்பியதுதான் மிச்சம். பிறகு பொய்க் காரணத்தைச் சொன்ன பிறகே
தொகை கைக்கு வந்து சேர்ந்தது!
“பொய்மையும்
வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”. (திருக்குறள்: 292)
நன்மை பயக்கும் எனின்”. (திருக்குறள்: 292)
என்றெல்லாம் திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார்
என்று அமைதியடைய வேண்டியதுதான்! ஆனால் எல்லா இடங்களிலுமா எனும்போது அயர்வாகத்தான் உள்ளது.
சமூகம், விதிமுறைகள், சட்டங்கள் ஆகியன பொய்மைக்கு ஆதரவாகவும் வாய்மைக்கு எதிராகவும்
இருப்பது சற்று விநோதம்.
மக்களின்
பொதுப்புத்திகள் மாறவேண்டும். அதுவும் குறிப்பாக ஆசிரியப் பெருமக்கள் தங்களது பொதுப்புத்திகளை
மாற்றிக் கொள்ளவேண்டும். அதுமட்டும் போதுமா? கல்வியமைப்பு பெரும் மாற்றங்களையும் புதிய
சிந்தனைகளையும் உள்வாங்கவேண்டும். அதுவரையில் பாவ்லோ ஃபிரெய்ரே, மாற்றுக்கல்வி, பின்லாந்து
என்று பேசுவதெல்லாம் வெறுங்கனவாகவும் மாயையாகவும் மட்டுமே இருக்கும்.
கொசுறாக பொதுப்புத்திக்கு ஒரு சிறிய
எடுத்துக்காட்டு:
பள்ளிக்கு செல்லாத 1-3 வயதுக் குழந்தைகள் கைகாட்ட
(‘டாட்டா’ சொல்ல) கற்றுக்கொள்ளும்; நாமும் சொல்லிக் கொடுப்போம். அப்படிக்
கைகாட்டும்போது அனைத்துக் குழந்தைகளுக்கும் என்னமோ இடக்கைதான் எளிதில் வரும். அக்குழந்தைகளை
வைத்திருக்கும் அம்மா, அப்பா மற்றும் உறவினர்கள் எவரும் இடக்கையைப் பிடித்து
இழுத்து, “அந்தக் கையால சொல்லு”, என்பார்களே! நீங்களும் பார்த்திருக்கக் கூடும்;
அல்லது செய்திருக்கக் கூடும். அப்போது அக்குழந்தைகளுக்கு தான் ஏதோ தவறு செய்துவிட்டதைப்
போல அதிர்ச்சி ஏற்படுமல்லவா!
அண்ணல் காந்தி தனது இரு கைகளாலும் எழுதக்கூடியவர். நாம் யாராவது இரு
கைகளாலும் எழுதக்கூடிய பயிற்சியோ, திறனோ பெற்றிருக்கிறோமா! எழுதுவது போன்ற
வேலைகளுக்கே இடக்கையை பயன்படுத்துவதில்லை என்பது போன்ற தணிக்கைச் செயல்பாடுகளும் பொதுப்புத்தியில்
(common sense) அடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக