ஞாயிறு, நவம்பர் 03, 2019

சகிப்பின்மையின் உச்சம்!

சகிப்பின்மையின் உச்சம்!


மு.சிவகுருநாதன்


     இவ்வாண்டு தீபாவளி ஞாயிறன்று (27.10.2019) வந்தபோதும், முதல்நாள் சனி (26.10.2019) விடுமுறை அளிக்க முடியாது என தமிழக அரசும் கல்வித்துறையும் பிடிவாதம் பிடித்தன. உடன் ஆசிரியர்களுக்கும் இயக்கங்களுக்கும் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

     தமிழக அரசு அலுவலகங்களுக்கு எப்போதும் போல் சனி, ஞாயிறு வார விடுமுறை. தீபாவளி முந்தைய நாளான சனியன்று தமிழக அரசு அலுவலகங்களுக்கு ஏன் பணிநாளாக அறிவிக்கவில்லை என்று கேள்வி கேட்க அனைவரும் மறந்தனர். மாறாக விடுமுறைக் கோரிக்கைகள் பலமுனைகளில் விடப்பட்டன.

   தமிழக அரசும் கல்வித்துறையும் மிகுந்த கருணையோடு சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்துப் பெருமைத் தேடிக்கொண்டது! இத்தோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம்!

    பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் சென்ற திரும்ப முறையான ஏற்பாடுகளைச் செய்ய இயலாத தமிழக அரசின் பெருந்தன்மை தீபாவளியைத் தாண்டி திங்களன்றும் நீண்டது விநோதம்!

    28.10.2019 திங்கள் அன்று ஈடுசெய்யும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நாளை ஈடு செய்ய 09.11.2019 சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்தனர்.
10.11.2019 ஞாயிறு மிலாது நபி. 09.11.2019 சனி மிலாது நபி பண்டிக்கைக்கு முதல்நாள்.

    தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறையை ஈடு செய்ய மிலாது நபிக்கு முதல் நாள்தான் கிடைத்ததா?

      சகிப்புத்தன்மைக்கு முன்னுதாரணமாகச் செயல்பட வேண்டிய அரசு, இவ்வாறு சிறுபான்மை மக்களின் மீதான சகிப்பின்மைக்கும் காழ்ப்பிற்கும் காரணமான உத்தரவுகளை இடுவது மிக மோசமானது.

     இவர்களது முந்தைய ஆட்சியில் மொகரம் போன்ற சிறுபான்மையினரின் பண்டிகைகளுக்கு விடுமுறைகள் ரத்துசெய்யப்பட்ட வரலாறும் உண்டு.
உடனடியாக 09.11.2019 ஈடுகட்டும் விடுமுறையை ரத்து செய்து, மிலாது நபி பண்டிகைக்கு இடையூறு செய்வதை நிறுத்த வேண்டும்.

    தீபாவளி விடுமுறைக்காக சிறுபான்மையினர் பண்டிக்கைகளை குலைக்கும் போக்கையும் கைவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக