புரட்சியா
கலகமா?
(தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத்
தொடர்: 53)
ஐம்பத்தேழு:
புரட்சியா கலகமா?
1806 வேலூர் கலகம், 1857 முதல் இந்திய சுதந்திரப்போர் அல்லது பெரும்
புரட்சி என்று இதுகாறும் பாடநூல்கள் எழுதப்பட்டு வந்தன. ஆனால் இம்முறையில்
இரண்டையும் பெருந்தலைப்பில் மட்டும் புரட்சி என்று போட்டுவிட்டு, உள்தலைப்புகளில்
கலகம், கிளர்ச்சி என்று எழுதும் முறை எட்டாம் வகுப்பு முதல் பருவப் பாடநூலில்
தொடங்கி வைக்கப்பட்டது. இதைப் பற்றி இத்தொடரில் விளக்கமாக எழுதியுள்ளேன். (தொடர்
எண்:06)
“1806ல் நடந்த வேலூர் கலகத்தை, 1857ல் நடைபெற்ற ‘முதல் இந்திய
சுதந்திரப் போரின் முன்னோடி’ என வி.டி.சவார்க்கர் குறிப்பிடுகிறார்”. (பக்.192, 8
சமூக அறிவியல், முதல் பருவம் )
“வி.டி.சவார்க்கர் ‘முதல் இந்திய சுதந்திர போர்’ என்ற தனது நூலில் 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப்போர்’ என விவரிக்கிறார்”. (பக்.196, அதே பாடநூல்)
“பிரிட்டிஷ் அரசு என்னை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமானால், நான் பிரிட்டிஷ் அரசுக்கு உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்”.
“பிரிட்டிஷ் அரசமைப்பை ஏற்றுக் கொண்ட எனது மாற்றம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் என்னை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிற ஏராளமான இளைஞர்களை சரியான திசைவழிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும்”.
“வி.டி.சவார்க்கர் ‘முதல் இந்திய சுதந்திர போர்’ என்ற தனது நூலில் 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப்போர்’ என விவரிக்கிறார்”. (பக்.196, அதே பாடநூல்)
“பிரிட்டிஷ் அரசு என்னை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமானால், நான் பிரிட்டிஷ் அரசுக்கு உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்”.
“பிரிட்டிஷ் அரசமைப்பை ஏற்றுக் கொண்ட எனது மாற்றம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் என்னை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிற ஏராளமான இளைஞர்களை சரியான திசைவழிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும்”.
“மேன்மைக்குரிய பிரிட்டிஷ் அரசு விரும்புகிற எந்த வழியிலும் நான் பணிபுரிவேன்”, என்றெல்லாம் அந்தமான் சிறையிலிருந்து கருணை மனுக்கள், மன்னிப்புக் கடிதங்கள் பல எழுதி விடுதலையான வி.டி.சவார்க்கர் (நல்ல வேளை வீர சவார்க்கர் என்று எழுதவில்லை!) எழுத்துகளைக் கொண்டு வேலூர் புரட்சி மற்றும் பெரும் புரட்சிக்கான மதிப்பீடுகளை எழுதுவது மிக மோசமானது. இவர்தான் முதலில் அவ்வாறு சொன்னதான் தொனி இப்பகுதியில் கிடைப்பதையும் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.
காரல் மார்க்ஸ் 1853 – 1857 காலகட்டம் குறித்து நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் ஏட்டில் எழுதிய கட்டுரைகள், இந்திய வரலாறு பற்றிய குறிப்புகள் ஆகியவற்றில் இந்தியப் புரட்சி என்றே குறிக்கிறார்.
காரல் மார்க்ஸின் ‘இந்தியா பற்றி…’ என்ற மொழிபெயர்ப்பு நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து சிலவரிகள் இங்கு தரப்படுகிறது.
“போகப்போக, மேலும் பல செய்திகள் வெளிவரும். இது இராணுவ கலகமல்ல, மாறாக தேசியப் புரட்சியாகும் என்பதை இச்செய்திகள் அனைவருக்கும் தெளிவாக்கும்”, (பக். 162, இந்தியா பற்றி.. , காரல் மார்க்ஸ், விடியல் பதிப்பக வெளியீடு:அக். 2012)
“இந்தியப் புரட்சி, ஐரோப்பியப் புரட்சியின் சிறப்பியல்புகளையே மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது வினோதமானதாகும்”, (பக். 171, மேலே குறிப்பிட்ட நூல்)
இதுகுறித்து காரல் மார்க்ஸ் ‘இந்திய வரலாறு பற்றிய குறிப்புகளில்’ பின்வருமாறு எழுதுகிறார்.
“ஜூலை 1807: வேலூரில் (சென்னை ராஜதானி) சிப்பாய்கள் கலகம்; அவ்வூரின் கோட்டையில் தான் திப்புவின் புதல்வர்கள் கைதிகளாக (வைக்கப்பட்டிருந்தனர்) அவர்களின் சார்பில் அவர்களது மைசூர்க்கார ஊழியர்கள் கலகம்; அவர்கள் திப்புவின் போர்க்கொடியை உயர்த்தினர்; கர்னல் கில்ஸ்பீ, ஆர்க்காட்டின் துப்பாக்கி ஏந்திய குதிரைப்படையுடன் சென்று, கலகக்காரர்களில் பலரைக் கொன்று, அவர்களை ஒடுக்க்கினார் – ஆயினும் மிண்டோ பிரபு அவர்களைக் ‘கௌரவமாக’ நடத்தினார். (பக். 469,470, இந்தியா வரலாற்றுக் குறிப்புகள்: 664 – 1858, காரல் மார்க்ஸ், நூல்: இந்தியாவைப் பற்றி…, விடியல் பதிப்பக வெளியீடு, அக். 2012, விலை: ரூ. 390)
இதன் ஆங்கில வடிவம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.
“Mutiny at vellore (Madras Presidency) in fort of which Tipu’s sons (were held) captive; mutiny in their behalf by their Mysorean suite; They hoisted Tipu’s Standard; colonal Gillespie, with dragoon regiment of Arcot, Quelled them, Killing many – Lord Minto, however, gave them ‘genteel’ treatment”. (Notes on Indian History – K.Marx, தமிழர் வரலாறு – சில கேள்விகளும் தேடல்களும் – பக். 143, என்னும் தேவ.பேரின்பன் நூலின் மேற்கோளிலிருந்து எடுக்கப்பட்டது.)
."குஜராத்திலும், சத்தாராவிலுள்ள பண்டரிபுரத்திலும், நாகபுரிப் பிரதேசத்தில் ஹைதராபாத்திலும், கடைசியில் தென்புலத்து மைசூர் வரையிலும், பொது ஜனப் புரட்சி செய்வதற்கான முயற்சிகள் முன்பே நடைபெற்றன. எனவே பம்பாய், சென்னை ராஜதானிகளது அமைதி முற்றிலும் உறுதியான ஒன்று என்று எவ்வகையிலும் கொள்ள முடியாது,” (பக். 195, இந்தியா பற்றி.. , காரல் மார்க்ஸ், விடியல் பதிப்பக வெளியீடு:அக். 2012)
எட்டாம்
வகுப்பைப் போலவே பத்தாம் வகுப்புப் புதிய பாடநூலிலும் இதே கூத்து நிகழ்கிறது. இங்கு 1806 வேலூர்
புரட்சி என்று 1857 பெருங்கலகம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே 1806 வேலூர்
புரட்சி என்று சொல்லாததற்காக 1857 பெருங்கலகம் என்று வீம்புக்குச் சொல்வது
போலுள்ளது. வரலாற்றெழுதியலில் இவற்றிற்கு இடமில்லை.
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் அலகு 06 இல் ‘ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில்
நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்’ (பக். 08) என்னும் தலைப்பிலான பாடத்தின்
உள்தலைப்புகள் கீழே தரப்படுகின்றன.
- வேலூர் புரட்சி 1806
- புரட்சி வெடித்தல்
- புரட்சியின் பின்விளைவுகள் (பக்.09)
- புரட்சியைப் பற்றிய மதிப்பீடு (பக்.10)
இப்படிச் செல்லும் பாடம் திடிரென ‘கலவரம்’ என்கிறது.
“கலவரத்தை அடக்குவதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பரிசுத்
தொகையும் பதவி உயர்வும் வழங்கப்பட்டது”. (பக்.09)
1857 யுடன் ஒப்பிடும்போதும் கலகம், புரட்சி என எழுதுவதைக் கவனிக்கவும்.
“1857ஆம் ஆண்டு பெரும் கலகத்திற்கான அனைத்து முன் அறிகுறிகளையும், எச்சரிக்கைகளையும் வேலூர் புரட்சி கொண்டிருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், கலகத்தைத் தொடர்ந்து எந்த உள்நாட்டுக்
கிளர்ச்சியும் ஏற்படவில்லை. 1806ஆம்
ஆண்டு புரட்சியானது வேலூர் கோட்டையுடன்
முடிந்துவிடவில்லை. பெல்லாரி, வாலாஜாபாத்,
ஹைதராபாத், பெங்களூரு, நந்திதுர்க்கம்,
சங்கரிதுர்க்கம் ஆகிய இடங்களிலும் அது
எதிரொலித்தது”. (பக்.11)
அடுத்த பாடம் (அலகு 07) “காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின்
தோற்றமும்”. இதன் உள்தலைப்புகளில் சில.
- 1857ஆம் ஆண்டின் பெருங்கலகம்
- கலகம் (பக்.20)
- மீரட் கிளர்ச்சி
- உள்நாட்டு கிளர்ச்சி
- கிளர்ச்சி அடக்கப்படுதல் (பக்.21)
பட விளக்கமாக உள்ள வாசகங்கள்:
- பொது இடங்களில் புரட்சியாளர்களைத் தூக்கிலிடுதல்
- புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்களை பீரங்கிகளில் கட்டி சுடுதல் (பக்.24)
கற்றல் நோக்கங்களுள் ஒன்று:
“1857இல் பெரும்கலகம் வெடிப்பதற்கான காரணிகளும் அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும் தங்கள் அணுகுமுறையில் ஏற்படுத்திக்கொண்ட
மாற்றங்களும்”, (பக்.15)
“1857ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சிக்கு
பெரும் சவால் ஏற்பட்டது. தொடக்கத்தில் வங்காள
மாகாணத்தில் சிப்பாய் கலகமாக உருவெடுத்த இந்த கலகம் பின்னர் குறிப்பாக விவசாயிகள்
உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்றதை அடுத்து நாட்டின் இதர
பகுதிகளுக்கும் பரவியது. 1857-58ஆம் ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் கீழ்க்கண்ட
காரணங்களால் முக்கியத்துவம் பெற்றன:
1. இராணுவ வீரர்களுடன் ஆயுதமேந்திய படைகளும் இணைந்து நடந்த முதல் மாபெரும் புரட்சி இதுவேயாகும்.
2. இருதரப்புகளிலும் தூண்டப்பட்டதால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கிளர்ச்சியில் வன்முறை வெடித்தது.
3. கிழக்கிந்திய கம்பெனியின் பணியினை
புரட்சி முடிவுக்குக் கொண்டுவந்ததுடன் இந்திய துணைக் கண்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசு
கையில் எடுத்தது”. (பக்.20)
மேலே சொல்லப்பட்ட பத்தியில் சிப்பாய் கலகம் கலகம் எனத் தொடங்குகின்றனர்.
மூன்று புள்ளிகளும் புரட்சி, கிளர்ச்சி, புரட்சி என்று உருமாற்றமடைகின்றன.
ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் எழுதியிருக்கக் கூடுமோ! இப்பாடப்பகுதியை படிக்கும்
எவரும் எப்படி உணர்வர்? புரட்சியா, கலகமா?
ஐம்பத்தெட்டு:
1937 வரை இந்து வகுப்புவாதிகள் எங்கிருந்தனர்
தெரியுமா?
“இந்து வகுப்புவாதம், முஸ்லிம்
வகுப்புவாதம் மற்றும் இந்திய தேசியம் காங்கிரஸை ஒரு இந்து அமைப்பு
என்று குறைகூறிய முஸ்லிம் லீக், இந்தியாவில் முஸ்லிம்களின் ஒரேயொரு பிரதிநிதியாக தாம்மட்டுமே விளங்குவதாக அது தெரிவித்தது. அதே போன்று இந்து
மகா சபா மற்றும் ராஷ்டிரிய சுவயம்
சேவக் சங் (R.S.S) ஆகியன முஸ்லிம்களுக்கு எதிரான
நிலைப்பாட்டை எடுத்தன. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் நலன்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை மற்றும் எதிரானவை என்று இந்து மகா சபையும் முஸ்லிம் லீக்கும் கோரின. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கையின் சில நடவடிக்கைகளான வங்கப் பிரிவினை, தனித் தொகுதிகள் ஆகியவை மத வேறுபாடுகளைத் தூண்டி தங்கள் நலன்களைப் பாதுகாக்கும் செயல்களுக்கு ஊக்கம் கொடுத்தன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான
ரஹ்மத் அலி 1933இல் பஞ்சாப், காஷ்மீர், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து மற்றும் பலுச்சிஸ்தான் ஆகிய மாகாணங்களை இணைத்து பாகிஸ்தானை உருவாக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினார். இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த முஹம்மது இக்பால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து
பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இந்திய தேசியத்தை வலியுறுத்திவந்த
காந்தியடிகள், நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் இதர தலைவர்கள் நாட்டை
இரண்டாகப் பிரிக்கும் கருத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்தனர். (பக்.50)
இந்து மகா சபா 1915 லும்
ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (R.S.S) 1925 யிலும் தொடங்கப்பட்டது. ( அது என்ன, ராஷ்டிரிய சுவயம் சேவக் சங்? - Rashtriya
Swayamsevak Sangh ஐ அப்படியே ஒலிபெயர்க்கிறார்களாம்! கொடுமை!!)
காங்கிரசில்
இருந்துகொண்டே இந்து மகா சபா, ராஷ்டிரிய சுயம் சேவக் சங் ஆகிய இந்து அடிப்படைவாத அமைப்புகளில் செயல்படுவது
தொடர்ந்தது. இவர்களது பேச்சுகள், செயல்பாடுகள் ஆகியன பிற சிறுபான்மை மக்களுக்கு
பெரும் அச்சத்தை ஊட்டின. நாட்டின் பிரிவினைக்கு இது முதன்மையான காரணம் என்பதை
மறுக்க இயலாது. இது ‘இந்துக்கள் நாடு’ என்றளவிற்கு இவர்களது பேச்சுகள் நீண்டன.
பிள்ளையார், பாரதமாதா போன்ற குறியீடுகள் சிறுபான்மையினரை அச்சுறுத்தின.
ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை போன்ற இந்துத்துவ அமைப்புகளைத் தொடங்கிய
அனைவரும் காங்கிரஸ்காரர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. இரு அமைப்புகளில் அங்கம்
வகிக்கக் கூடாதென 1936-ல் காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் கொண்டுவரும்வரை இந்நிலையே
நீடித்தது. இந்நிலையில் தனிநாடு கோரிக்கை முஸ்லீம் லீக்கால் வலியுறுத்தப்பட்டதாகச்
சொல்வது அபத்தமே. 1915 களில் இந்து மகா சபா தொடங்கிவைத்த பிரிவினையை 1940
களில்தான் முஸ்லீம் லீக் கைகளில் எடுத்தது.
ஐம்பத்தொன்பது:
எங்கும், எதிலும்
நிறைக்கப்படும் ராஜாராம் மோகன்ராய்!
“இருந்தபோதிலும் காலனிய விவாதங்களில் சில நியாயங்கள் இருப்பதை உணர்ந்த அவர்கள் சீர்திருத்திக் கொள்ளவும்
தயாராயினர். இச்செயல்பாட்டின் முன்னோடிகளுள் ராஜாராம் மோகன்ராயும் ஒருவராவார். ராய் மற்றும் அவரைப் போன்ற பலரும் சமூகச் சீர்திருத்தவாதிகள் என அறியப்பட்டனர்”. (பக்.77)
இந்திய சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி மற்றும் விடிவெள்ளி என்று ராஜாராம்
மோகன்ராய் போற்றப்படுகிறார். இதை கல்வி, சமயச்சார்பின்மை போன்ற எல்லா
களங்களுக்கும் நீட்டிப்பது ஏன்?
கல்விக்குப் பங்களிப்பு செய்தவராகவும் கூறப்படுகிறார். இவரது கல்விப்
பங்களிப்புகள் என்ன என்பதைக் கூற வேண்டுமல்லவா! மகாத்மா ஜோதிபா புலே (1827-1890)
மற்றும் சாவித்திரிபா புலே (1831-1897) போன்றோரின் கல்விப் பங்களிப்புகள்
மருந்துக்குகூட எடுத்துக் காட்டப்படுவதில்லையே, ஏன்?
“சமயப்பரப்புக்
குழுவினரைத் தவிர, வங்காளத்தைச் சேர்ந்த இராஜா ராம்மோகன்ராய், மதராஸின் பச்சையப்பர், டெல்லியைச் சேர்ந்த
பிரேசர்
போன்ற சமயப்பரப்புக்குழு அல்லாதவர்களும் கல்விக்காக தங்களின் பங்களிப்பைச் செய்தனர்”. (பக்.104, 8
சமூக அறிவியல்)
இதைப்போலவே சமயச்சார்பின்மைக்கு இராஜராம் மோகன்ராயின் பங்கு பற்றியும்
தெரிவிக்கப்படுகிறது.
“இராஜராம் மோகன்ராய், சர் சையது அகமதுகான், இரவீந்திரநாத் தாகூர்,
மகாத்மா காந்தி
மற்றும் B.R. அம்பேத்கர் போன்ற குறிப்பி்டத்தக்க பெரும் மரியாதைக்குரிய தனிநபர்கள் இந்தியச்
சமூகத்தின் பல்வேறு
நிலைகளில் சமயச்சார்பின்மையை நிலை நாட்ட பங்களித்துள்ளனர்”. (பக்.148 & 149, 8 குடிமையியல்)
அறுபது:
வாஞ்சியின் உண்மையான நோக்கம் என்ன?
வாஞ்சியா, வாஞ்சிநாதனா?
‘ஆஷ் கொலை’ எனும் தலைப்பில் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் தொகுதி
கீழ்க்கண்டவற்றைச் சொல்கிறது.
“1904இல் நீலகண்ட
பிரம்மச்சாரியும் வேறு சிலரும் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கினர். ஆங்கில அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் மக்களிடையே
நாட்டுப்பற்று உணர்வைத் தூண்டுவதே இவ்வமைப்பின் நோக்கமாகும். செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் இவ்வமைப்பால் உள்ளுணர்வு
தூண்டப்பட்டார். அவர் 1911 ஜுன் 17இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட்
W.D.E. ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்றார். அதன் பின்னர் தன்னைத்தானே சுட்டு கொண்டார். மக்களிடமிருந்து பிரிந்துநின்ற இந்த இளம் புரட்சியாளர்கள் தேசபக்தி உடையவர்களாக இருந்தபோதிலும், மக்களை ஊக்கப்படுத்தவும் அணிதிரட்டவும்
தவறிவிட்டனர்”. (பக்.65)
ஆங்கில வழியில், ‘Ashe Murder’,
“In 1904 Nilakanta Brahmachari and others started Bharata Matha
Society, a secret society. The objective was to kill British
officials and thereby kindle patriotic fervour among V.V.
Subramanianar the people. Vanchinathan of Senkottai, was influenced
by this organisation. On 17 June 1911 he shot dead Robert W.D’E. Ashe,
Collector of Tirunelveli in Maniyachi Junction. After this he shot
himself. Divorced from the people these young revolutionaries, despite
their patriotism, failed to inspire and mobilize the people”. (Page: 58
& 59)
“Vanchinathan
of Senkottai, was influenced
by this organization”, என்பதை “செங்கோட்டையைச்
சேர்ந்த வாஞ்சிநாதன் இவ்வமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார்” என்று விசித்திரமாக
மொழியாக்கக் காரணமென்ன? இங்கு உள்ளுணர்வு எப்படி வந்தது?
‘Robert W.D’E. Ashe’ தமிழில் ‘ராபர்ட் W.D.E. ஆஷ்’ ஆகிறார். ‘ராபர்ட்
வில்லியம் டி’ எஸ்கார்ட் ஆஷ்’ (Robert William
D' Escourt Ashe) என்பதைத்தான்
‘Robert W.D’E. Ashe’ என்று ஆங்கிலத்தில் எழுதும்போது தமிழில் ‘ராபர்ட் W.D’.E. ஆஷ்’ என்றுதானே எழுதவேண்டும்?
“The objective was to kill British officials and thereby kindle
patriotic fervour among V.V. Subramanianar the people”.
இவ்வரியிலுள்ள ‘V.V. Subramanianar’ (வ.வே.சு.அய்யர்) மொழிபெயர்ப்பில் காணாமற்போகிறார்,
ஆஷ் கொலை வழக்கைப்போல.
இது போகட்டும். ஆஷ் கொலையில் ஈடுபட்டவர்களின் உண்மையான நோக்கமென்ன? வாஞ்சியில்
சட்டைப்பையில் கிடைத்த கடிதம் பின்வருமாறு இருக்கிறது.
“ஆங்கில சத்துருக்கள் நமது
தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம்
செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய
ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து
வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்
இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்
கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து
கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த
உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து
கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று
இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vandhi Aiyar of Shencotta” (பக். 150, 151 ஆஷ் கொலையும் இந்திய புரட்சி
இயக்கமும், ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு வெளியீடு:டிச. 2009)
சனாதன தர்மத்திற்கு எதிராக ஆங்கிலேயர் இருக்கின்றனர் என்பதும் மாட்டுக்கறி,
தீண்டத்தகாதவன் (பஞ்சமன்) என சினங்கொள்ளும் சாதிய வன்மமும் இதில் வெளிப்படுகிறது. இச்சதிச்செயலில்
ஈடுபட்டோர் குற்றாலம், செங்கோட்டைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களது சனாதன
மனப்போக்கை உறுதிசெய்யும் விதமாக பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று
கீழே தரப்படுகிறது.
“இம்மாவட்டத்திலுள்ள (திருநெல்வேலி) சில
அருந்ததியப் பெரியவர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட தகவல்களைக் கூறுகின்றனர்.
ஆஷ்துரை என்ற ஆங்கிலேய ஆட்சியாளர் சாதிப்பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக
நடத்தினார். தனது அலுவலகத்தில் நிலவிய சாதிப்பாகுபாட்டை நீக்கி, அனைவரும் ஒரே
இடத்தில் மதிய உணவு எடுக்கவேண்டும், ஒரே குடத்திலிருந்து தண்ணீர் குடிக்கவேண்டும்
என்று உத்தரவிட்டார். குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தெய்வங்கள்தான் குளிக்கும்.
அந்த நீரில் அடித்தட்டு மக்கள் குளிக்கக் கூடாது. பிராமணர்கள் தெய்வத்திற்கு பூஜை
செய்வதால் அவர்கள் மட்டும் குளிக்கலாம் என்று இருந்த நிலையை மாற்றி அனைவரும்
குளிக்கலாம் என்று உத்தரவிட்ட ஆஷ்துரை அதற்கு முன்னுதாரணமாகத் தானே குளித்தார்.
அதுபோல திடீரென்று ஏற்பட்ட பேறுகால வேதனையால் யாரும் உதவிக்கு வராத சூழ்நிலையில்
பொது வழியில், தனியாகத் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு அடித்தட்டு இனத்தைச்
சார்ந்த பெண்ணை அப்பக்கமாக வண்டியில் வந்த ஆஷ்துரையும், அவரது மனைவியும் தூக்கி,
வண்டியில் கிடத்தி, பிராமணர்களின் தெரு வழியே சென்று மருத்துவமனையில் சேர்த்து
உதவினர். இதைப் போன்று சாதி வித்தியாசம் பாராமல் அடித்தட்டு மக்களையும்,
உயர்சாதியினர் போல் சமமாக நடத்தியதால், தங்களது சாதிய அந்தஸ்து குறைவதாக எண்ணி
கோபம் கொண்ட பிராமணர்களும் வெள்ளாளர்களும் திட்டமிட்டு ஆஷ்துரையைக் கொன்றனர்.
இவ்வாறு சாதி உணர்வினால் ஆஷ்துரையைக் கொன்ற வாஞ்சிநாதனை தேச உணர்வினால் கொலை
செய்தார் என்று ஆதிக்க சாதியினர் தூக்கிப் பிடிக்கின்றனர் என்றனர். (அருந்ததியர்
வாழும் வரலாறு – மாற்கு, தமிழினி வெளியீடு, ஏப்ரல் 2001)
‘R. வாஞ்சி அய்யர் என்று தமிழிலும் ‘R. Vandhi Aiyar of Shencotta’ என்று
ஆங்கிலத்திலும் அக்கடிதத்தில் வாஞ்சி எழுதியிருக்கிறார்.
பாரதியார் பின்னாளில் எழுதிய கட்டுரை ஒன்றில் (Political Evolution in
Madras Presidency) வாஞ்சி அய்யர் என்றுதான் குறிப்பிடுகிறார்.
"It was at this favourable juncture of
affairs that an unfortunate 'incident' (or should I say 'accident' - for the
like of it never once recurred in our province) occurred, in the
southernmost district of India, at the Maniachi Railway Station, Mr. Ashe,
collector of Tinnevelly, was shot dead by an Indian, Vanchi Iyer".
(இந்த மேற்கோள் 'ஆஷ் கொலையும்
இந்தியப் புரட்சி இயக்கமும்' என்ற ஆ.சிவசுப்பிரமணியன் நூல் பிற்சேர்க்கையிலிருந்து
எடுக்கப்பட்டது.)
அனைத்து
ஆவணங்களிலும் ‘R. வாஞ்சி அய்யர்’ (R. Vanchi Iyer) என்றிருக்கும்போது
‘வாஞ்சிநாதன்’ என்ற பெயர் எப்படி நுழைந்தது என்பது வரலாற்று வியப்பு! வாஞ்சி என்றோ
அல்லது உ.வே.சா. வை உ.வே.சாமிநாதர் என்று சாதிப்பெயர் நீக்கிச் சொல்வதைப் போல
வாஞ்சியார் என்று அழைப்பதுதானே பொருத்தமானது!
(அபத்தங்கள் தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக