திங்கள், டிசம்பர் 02, 2019

தந்தை பெரியார் பற்றி தவறான புரிதல்களை உருவாக்கும் பாடநூல்கள்


தந்தை பெரியார் பற்றி தவறான புரிதல்களை உருவாக்கும்  பாடநூல்கள்

 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்
  
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 50)      தந்தை பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கம் குறித்து வழக்கத்தைவிட கூடுதலாகப் பாடநூல்கள் (10 சமூக அறிவியல் தொகுதி 02) பேசுவது வரவேற்புக்குரியது. சில இடங்களில் தவறான புரிதல்களுடன் எழுதப்பட்டுள்ளன. மேலும் ‘தந்தை பெரியார்’ என்பதை எங்கும் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இதற்கான காரணமும் பின்னணியும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது. வழக்கம்போல சாதிப்பெயருடன் எழுதாமல் விட்டார்களே! என்று மகிழ்ச்சியடையலாம்.

   தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை, “C.ராஜாஜியும் ஈ.வெ.ராமசாமியும் (ஈ.வெ.ரா. பின்னார் பெரியார் என அழைக்கப்பட்டார்) தலைமையேற்று நடத்தினர்” (பக்.68) என்றும்

    “பெண்களின் விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில்  ஒன்றாகும்”, (பக்.88) என்றும் 

     பேசுகிற பாடநூல் பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்ட பட்டம் ‘பெரியார்’ என்பதைச் சொல்ல விரும்பவில்லை. ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டார் எனச் சொல்வதான் சரியாக இருக்கும். “பெரியார், ஒரு பெண்ணியவாதி”, என்று சொல்லும்போதும் கூட மவுனம் காக்கப்படுகிறது. ஈ.வெ.ரா., ஈ.வெ.ராமசாமி, பெரியார் ஈ.வெ.ராமசாமி என்ற பயன்பாடு பலவிடங்களில் காணப்படுகிறது. ‘தந்தை பெரியாரை’ மட்டும் காணவில்லை. தேசப்பிதா (தந்தை?!) காந்தி, தாத்தா இரட்டைமலை (ரெட்டைமலை?!) சீனிவாசன் என்று சொல்லும்போது இதில் மட்டும் ஏன் தடை? 

     சாதிப்பெயர்ப் பின்னொட்டை நீக்கி எழுதும் நடைமுறை ஒன்றை பாடநூல் கடைபிடிக்கிறது. இருப்பினும் அங்கொன்று இங்கொன்றுமாக சாதிப்பெயர் தலை காட்டுகிறது. வடஇந்தியப்பெயர்களில் இதைக் கடைபிடிக்க முடியுமா? தமிழகத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சாதிப்பெயர்களை நீக்குவதை இயக்கமாக முன்னெடுத்தது ஒரு காரணம். இதைப் பாடநூல் சொல்லாமலிருப்பது நல்லதல்ல.  
      
நாற்பத்தாறு:

நாத்திகம் என்றால் என்ன? 

   பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தொகுதி இரண்டில் பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கம் பற்றிய பாடப்பகுதியில், "ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த நடைமுறைகளான, நம்பிக்கை பண்பாடு, மரபு போன்றவற்றை கட்டுடைப்பதற்குப் பெரியார் நாத்திகவாதத்தை (கடவுள் மறுப்பு) முன் வைத்தார்", (பக்.84&85, பாடநூல்) என்று சொல்லப்பட்டுள்ளது.

    நாத்திகம் என்பதை வெறும் கடவுள் மறுப்பு என்பதாக மட்டும் சுருக்கிவிட இயலுமா? டாக்டர் இராதாகிருஷ்ணன் இந்தியத் தத்துவம் முழுமையும்  ஆன்மீகம் என்று சொன்னது போல இருக்கிறது.

    நாத்திகம் என்பது இந்தியாவின் பழங்காலம் தொடங்கி இருந்துவரும் ஒரு தத்துவப் போக்கு. இந்தியத் தத்துவ மரபுகளில் முதன்மையானதும் கூட.

வேத மறுப்பு
வருண (சாதி) மறுப்பு
கடவுள் மறுப்பு

     என்பதாக வேண்டுமானால் இந்திய நாத்திகத் தத்துவத்தைச் சுருக்கலாம். வெறும் கடவுள் மறுப்பு என்பது முற்றிலும் அபத்தமானது. பெரியாரை கடவுள் மறுப்பாளர் என்று எளிமையான வகைப்படுத்துவதும் சரியல்ல.

      ‘சமயம் குறித்து பெரியார்’ எனும் தலைப்பில், 

     “முன்னேற்றமும் நீதியும் வழங்கப்பட வேண்டுமாயின் சமயம் ஒழிக்கப்பட வேண்டியதன்  தேவையைப் பெரியாரின் அனுபவங்கள் அவருக்குக் கற்றுக் கொடுத்தன”. 

    பொதுவாக மதத்தை ஒழிப்பதல்ல அவரது பணி; இந்திய, தமிழகச் சூழலில் இந்து மதத்தில் நிலவும் சாதிக்கொடுமைகள் ஒழிய இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சாதிக்கொடுமையும் இன இழிவும் நீங்க மதமாற்றம், அதாவது இன இழிவு நீங்க இசுலாம் நன்மருந்து என்றார். பவுத்தம் இஸ்லாம் ஆகியவற்றுக்கு ஆதரவாக அவரது நடவடிக்கைகள் இருந்தன.

     “புத்தமதம், அல்லது புத்தக் கொள்கை என்று சொன்னால் அது புத்தருக்கு மட்டுமே சொந்தமான கொள்கை அல்ல. அது அறிவுக்குச் சொந்தமான கொள்கை. அறிவுதான் குரு என்றே அழுத்தமாகக் கூறியிருக்கிறார் புத்தர். ‘உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ அந்தப்படி நட’ –‘அவர் சொன்னார், இவர் சொன்னார், இவ்வளவு பெரியவர் சொன்னார்; அதனால்தான் இப்படி நடக்கிறேன்’ என்பது கூடாது. ‘நான் சொன்னாலும் சரியென்றுபட்டால் மாத்திரம் ஏற்றுக்கொள்’ என்று, அறிவுக்கு உரிமை கொடுத்தே புத்தர் எதையும் சொல்லியிருக்கிறார்”, (பக்.522, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்) என்று சொல்லியும், பவுத்தம் மதமல்ல; அது ஒரு வாழ்நெறி, கொள்கை என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறார். திருக்குறளுக்கும் புத்தருக்கும் மாநாடுகள் கூட்டினார்.
                                                         
     “சமயத்தின் இடத்தில் பகுத்தறிவு வைக்கப்பட வேண்டுமென்றார். ‘‘சமயம் என்றால் நீங்கள் மூட நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று  பொருள்” என உறுதிபடக் கூறினார். பெரியார் தன் வாழ்நாள் முழுவதையும் தான் நிறுவிய  சிந்தனையாளர்கள் அல்லது பகுத்தறிவாளர்கள்  அமைப்புகள் மூலமாக மூடநம்பிக்கைகளுக்கு  எதிராகப் பரப்புரை செய்வதில் செலவழித்தார்”. (பக்.84&85, பாடநூல்)

    பெரியாரது இயங்கு தளம் பரந்து விரிந்தது. அதை கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு என்று மட்டும் குறுக்குவது இதர சமூகக்கொடுமைகளுக்கு துணை செய்வதாக அமையும். சாதி ஒழிப்பு, மதநீக்கம், கற்பிதங்கள் தகர்ப்பு (பெண்மை, ஆண்மை, கற்பு, தாய்மை, தேசம், மொழி), பெண்ணியச் சிந்தனைகள், தொலைநோக்கு போன்ற பல்வேறு கூறுகள் மூலம் அவர் சமூக விஞ்ஞானியாக நம்முன் நிற்கிறார். அவருக்கு வழக்கமான முகமூடி ஒன்றை மாட்டிவிட்டு நழுவிவிட முடியாது. 

நாற்பத்தேழு:

சுயமரியாதை இயக்கம் யாருக்காகப் போராடியது? 

  “சுயமரியாதை இயக்கம் பிராமணர் அல்லாத  இந்துக்களின் நலன்களுக்காக மட்டுமல்லாமல்  இஸ்லாமியர்களின் நலனுக்காகவும் போராடியது.  இஸ்லாமின் மேன்மை மிகுந்த கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை சுயமரியாதை இயக்கம் பாராட்டியது. இந்து  சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தில் இணைவதன் மூலம்  சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும்  அடைகிறார்கள் என்று கருதியது”. (பக்.82&83, பாடநூல்) 

     வருணதர்ம இந்துமதமும் சாதியமும் ஒழியவேண்டும் என்று போராடியவரையும் அவரது இயக்கத்தையும், “பிராமணர் அல்லாத  இந்துக்களின் நலன்களுக்காக மட்டுமல்லாமல்  இஸ்லாமியர்களின் நலனுக்காகவும் போராடியதாகச்”,  சொல்வது அபத்தமன்றி வேறென்ன? கொஞ்சம் அவர் சொல்வதைப் பார்ப்போம்.  

  “சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்டு பார்க்கும்போது தென்னாட்டில் திராவிடர் என்றும் – திராவிடர் அல்லாதார் என்றும் இரண்டு பிரிவான மக்கள் வாழ்ந்து வருவது புலனாகிறது. இவர்களில் திராவிடர்கள் என்று குறிப்பிடப்படும் மக்களின் நன்மைக்காகப் பாடுபட்டு வரும் கழகம்தான் திராவிடர் கழகம் ஆகும்”. (பக்.903, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்)

     “திராவிடர்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும்; அதில் முதன்மையாக, திராவிடன் இழிவு நீங்க வேண்டும் என்கின்ற ஆசையும் கவலையுமே தவிர, வேறு ஒன்றுமே எனது கவலையாக இல்லை. என் வாழ்வைப் பற்றி எனக்குக் கவலையில்லை; எனக்கு வேறு அடைய வேண்டிய சாதனமும் இல்லை. இன்று திராவிடனுக்கு உள்ள இழிவு என்னவென்றால், அவன் சூத்திரனாய் இருக்க வேண்டியிருக்கும் ‘இந்துவாய்’ இருப்பதைத் தவிர வேறில்லை”. (பக்.52, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்)

     “நமது வியாதி – நோய் (‘சூத்திரர்கள்’, ‘வேசிமக்கள்’ என்ற நோய்) பெரிது, மிகமிகப் பெரிது. இது புற்று (Cancer), தொழுநோய் போன்றது; வெகுநாளைய நோய். இதற்கு ஒரே ஒரு மருந்துதான் – அது இசுலாம்தான்! இதைத் தவிர வேறு மருந்தில்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். தூக்க மருந்தும் போதி மருந்தும் கொண்டு, நோய் இம்சை தெரியாமல், நாமும் பிணம் போல் கிடக்க வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க, இன்றைய நிலையில் இசுலாம் (‘இந்து மதத்தை விடுவது’ எனும்) மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும், வீரம் கொடுக்கும், நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்”. (பக்.53, மேலது)  
 
நாற்பத்தெட்டு:

சமய அறிவைப் பெற்ற ‘தனி நபர்கள்’ யார்? 

     “கோவில்களில் நிலவிய பரம்பரை அர்ச்சகர்கள்  முறையை அவர் எதிர்த்தார். சாதி அடிப்படையில்  இல்லாமல், முறையான சமய அறிவைப் பெற்றுள்ள தகுதியுடைய தனி நபர்களும் அர்ச்சகர் ஆகலாம்  என அவர் வாதிட்டார்”. (பக்.84&85, பாடநூல்) என்று பாடநூலில் உள்ளது. அது என்ன ‘பரம்பரை அர்ச்சகர்கள்  முறை’? அரசுரிமை போன்ற பரம்பரை உரிமைகளா? பிறப்பின் அடிப்படையில் இருபிறப்பாளர்களில் ஒரு பிரிவான பிராமணர்களுக்கு மட்டுமே அர்ச்சகராகும் உரிமையை இந்துமதமும் வேதங்களும் வழங்கின. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதே சுயமரியாதை இயக்க நிலைப்பாடு. இதற்கான சட்டத்தை உச்சநீதிமன்றம் சிதைத்துவிட்டது. ‘தனிநபர்கள்’ என்ற சொற்பயன்பாடு எதனைக் குறிக்கிறது? ‘பிராமணர்கள்’ தனி நபர்களல்ல; பிற சாதியினர் ‘தனிநபர்கள்’ என்பது எத்தகைய வன்முறை?   

நாற்பத்தொன்பது:

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் பண்பாட்டின் மேம்பாட்டிற்காகவா? 

    இறுதியில் பாடச்சுருக்கத்தில் கீழ்க்கண்ட தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
        
சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான பெரியார் ஈ.வெ. ராமசாமி, அடிப்படைவாதத்தின்  நிறை குறைகளை மதிப்பிட்டார்”.

“தமிழ் மொழியின் பண்பாட்டின்  மேம்பாட்டிற்காக விரிவான முறையில் மொழிச் சீர்திருத்தங்களைச் செய்தார்”. (பக்.89)

    சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியா பெரியார்? சாதி, இன, சமூக இழிவுகள் நீங்கவேண்டும், நாட்டு விடுதலையைவிட சுயமரியாதை முதன்மையானது, என்று சொல்லி சுயமரியாதை இயக்கத்தை நிறுவியவரல்லவா பெரியார்! இந்துமத அடைப்படைவாதத்தின் நிறைகளாக அவர் எதனையாவது சுட்டிருப்பதற்கு ஆதாரம் காட்டமுடியுமா?

   அவர்கள் பண்பாடு என்ற பெயரில் நிலவுகின்ற அசிங்கங்களை வெறுத்தார். சாதி, மத, இன, மொழி, தேச வெறிகளைச் சாடினார். அதற்காக பல்வேறு இதழ்களையும் நூல்களையும் சொந்தமாக அச்சிட்டுப் பரப்புரை செய்து வந்தார். இந்த நடைமுறையில் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகளைக் களைய தமிழ் எழுத்துகளை சீரமைக்க வேண்டிய தேவையை உணர்ந்தார்.

     தமிழ் எழுத்துகளைச் சீரமைக்கவும் எண்ணிக்கையைக் குறைக்கவும் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தார். பின்னாளில் அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் தமிழக அரசு ஏற்று  நடைமுறைப்படுத்தியது. ‘ஐ’, ‘ஒள’ வரிசை ஒழிப்பு உள்ளிட்டவற்றை ஏற்கவில்லை. இதில் அவர் எங்கும் பண்பாட்டைப் பற்றிப் பேசவில்லை; அதற்கு இடமுமில்லை.

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய அவரது சில சிந்தனைகள் சில:  

    “எப்படியும் தமிழ்மொழி எழுத்துகள் குறைக்கப்பட்டாக வேண்டும்; அச்சுக்கோப்பதற்கும், டைப் அடிப்பதற்கும் ஆங்கிலத்தைப்போல் இலகுவாக்கப்படவேண்டும் என்பதும், கற்கும் பிள்ளைகளுக்கும் 3 மாதத்தில் படிக்கத் துவங்கலாம் என்பதுதான் நமது ஆசை”. (பக்.1746, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பதிப்பு: வே.ஆனைமுத்து)

   “எழுத்துகள் உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது, புதிய எழுத்துகளைச் சேர்ப்பது என்பது போலவே சில எழுத்துகளை, அதாவது அவசியமில்லாத எழுத்துகளைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகும். உதாரணமாக, உயிரெழுத்துகள் என்பவைகளில் ஐ. ஒள என்கின்ற இரண்டு எழுத்துகளும் தமிழ் பாஷைக்கு அவசியமில்லை என்பதே எனது வெகுநாளைய அபிப்பிராயமாகும்”. (பக்.1728 & 1729, மேலது)

   “இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தகுதியுள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்ன செய்வது? என்னைக் குறைகூறவோ, திருத்தவோ முயற்சிப்பதன் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன்.
  
     ஆனாலும், நான் அம்முறையிலேயே இரண்டு, மூன்று பத்தரிக்கைகள் நடத்துகிறேன்; அம் முறையிலேயே 10, 20 புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது”. (பக்.1753, மேலது) 
 
ஐம்பது: 

 கடவுளுக்குச் சேவை செய்யச் பெண்கள் மட்டுமா?

    “கடவுளுக்கு இறைப்பணி செய்யும்  சேவகர்களாக இளம் பெண்களை இந்து  கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம்  இருந்தது அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்டோர் தேவதாசி என்று அறியப்பட்டனர். கடவுளுக்குச்  செய்யப்படும் சேவை எனும் நோக்கில்  அமைந்திருந்தாலும் நாளடைவில் இம்முறை பெரும் ஒழுக்கக்கேட்டிற்கும் பெண்களைத்  தவறாகப் பயன்படுத்துவதற்கும் இட்டுச்சென்றது.  இத்தேவதாசி முறையை ஒழிப்பதற்காகச் சட்டம்  இயற்றப்பட வேண்டும் என்பதற்காக நடைபெற்ற இயக்கத்தில் டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் முதலிடம் வகித்தார். ‘மதராஸ் (அர்பணிப்பைத்  தடுத்தல்) தேவதாசி சட்டம் 1947’ எனும் சட்டம்  அரசால் இயற்றப்பட்டது”. (பக்.88)

    இந்து மதத்தில் திருமணம் செய்யாமல் துறவு பூணும் நடைமுறை வலியுறுத்தப்படவில்லை. சமண, பவுத்த சமயங்களின் தாக்கத்தால் துறவு என்பதைப் பிற்காலத்தில் இந்து மதத்தில் புகுத்துகின்றனர். அதில் பெண்களுக்கு இடமில்லை. பவுத்தம், கத்தோலிக்க கிறித்தவம் போன்றவை பெண் துறவிகளை ஏற்கிறது. கோயில்களில் பூசை செய்யும் அர்ச்சகர்களில் பிராமணப் பெண்களையும் அனுமதிப்பதில்லை.  

    இந்து மதத்தினர் மனிதவாழ்வை ஆசிரமம் என நான்காகப் பிரிக்கின்றனர். பிறப்பிலிருந்து 16 வயது வரை உள்ள குழந்தைப்பருவம் தவிர்த்து பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம் என்றும் இந்துமதம் வரையறுக்கிறது. இங்கு பிரம்மச்சரியம் என்பது 16 – 24 வயதுக்குள், அதாவது திருமணத்திற்கு முன்பு மட்டுமே. அதன்பிறகு 56 வயது வரை குடும்ப வாழ்க்கை (கிரகஸ்தம்). 56 வயதிற்குப் பிறகு துறவுக்கான ஆயத்தநிலை (வனப்பிரஸ்தம்). இறுதியாக சந்நியாசம் (துறவுநிலை).

     இந்நிலையில் ‘இறைப்பணி’ செய்ய பெண்களை மட்டும், அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களை மட்டும் அர்ப்பணிக்க வேண்டிய அவசியமென்ன? “கடவுளுக்குச்  செய்யப்படும் சேவை எனும் நோக்கில்  அமைந்திருந்தாலும் நாளடைவில் இம்முறை பெரும் ஒழுக்கக்கேட்டிற்கும் பெண்களைத்  தவறாகப் பயன்படுத்துவதற்கும் இட்டுச்சென்றது”, என்று இம்முறையை நியாயப்படுத்துவதை ஏற்க இயலாது. “நாம் நமது சகோதரிகளை கொடிய வேட்கைக்குப் பயன்படுத்திவிட்டு அதற்குக் கடவுள் பெயரையும் வைப்பது நாம் இழைக்கும் இரட்டைக் குற்றம்.” என்று டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.  

     "1930இல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் “சென்னை மாகாணத்தில் இந்து  கோவில்களுக்குப் பெண்கள் அர்பணிக்கப்படுவதை தடுப்பது” எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம் மசோதா, இந்து கோவில் வளாகங்களிலோ அல்லது வேறு  வழிபாட்டு இடங்களிலோ “பொட்டுக் கட்டும் சடங்கு” நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானதாகும் என அறிவித்தது.  தேவதாசிகள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டபூர்வமான அனுமதியை வழங்கியது. மேலும் தேவதாசி  முறைக்கு உதவிசெய்கிற தூண்டிவிடுகிற குற்றத்தை செய்வோர்க்கு குறைந்த பட்சம் ஐந்தாண்டு சிறை தண்டனை என ஆணையிட்டது. இம்மசோதா சட்டமாக மாறுவதற்கு 15 ஆண்டுகள் காத்திருந்தது". (பக்.88)

   ‘பொட்டுக் கட்டுதல்’ எனும் தேவதாசி முறை எதிர்ப்பில் பெரியார் உறுதியாக இருந்தார். இதை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் தனது சுயசரிதையில் மறைப்பதைப்போல பெரியாரின் பங்கைப் பாடநூலும் மூடி மறைக்கிறது. இந்த மசோதா அறிமுகம் செய்யப்படும் காலத்திலே, திருமணமாகாத சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள்   தேவதாசிப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு, சுயமரியாதை இயக்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதைப் பின்பற்றி குத்தூசி குருசாமி குஞ்சிதபாதம் அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டது போன்ற எண்ணற்ற திருமணங்கள் நடைபெற்றன.
 
    இம்மசோதா சட்டமாக ஏன் 15 ஆண்டுகளுக்கு மேல் ஏன் காத்திருந்தது என்பதைச் சொல்ல வேண்டாமா? இதையாவது சொல்ல வேண்டாம். தேவதாசி முறை ஒழிப்பில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி முன்னணியில் இருந்தார் என்றால் இம்முறையைத் தொடரவேண்டும் என்று பின்னணியில் சதி செய்தது யார் என்பது வெளிப்படையான வரலாறுதானே! அந்நாளைய சட்டமன்றக் குறிப்புகள் இதை எடுத்துக்காட்டுமே. ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றோர் இதற்கென வெளிப்படையாகப் பேசியதும் டாக்டர் முத்துலெட்சுமி அவர்கள் இதனை எதிர்த்துக் கடுமையாகப் போராடியதை நாடறியும். இதற்காக பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் செயலாற்றிய வரலாற்றை யாரும் குழி தோண்டி புதைக்க இயலாது.    

 (அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக