இவர்கள் தரவுகளை
எங்கிருந்துப் பெறுகின்றனர்?
(தொடரும் அபத்தங்களும்,
குளறுபடிகளும்…)
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம்
கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 52)
ஐம்பத்தாறு:
அடுக்கடுக்காய் அபத்தங்கள்!
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்
பாடநூலில் பண்டித அயோத்திதாசர், மகாத்மா
ஜோதிபா புலே, அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, ம. சிங்காரவேலர்,
பெரியார் போன்ற தமிழ்ச் சமூகம் கவனிக்க மறந்த பெரும் ஆளுமைகளை
அறிமுகப்படுத்துகிறது
என்று மகிழ்ச்சியடைய இயலவில்லை. இவர்களைப் பற்றித் தவறான வகையிலும் பிழையான
செய்திகளும் அளிக்கப்படுவது மிகக்கொடுமையானது.
இதற்கான தரவுகளை இவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள் என்கிற வியப்பு ஏற்படுகிறது!
அயோத்திதாசர் பற்றி முதல் தொகுதியிலுள்ள தவறுகளை ஏற்கனவே சுட்டியுள்ளேன். (தொடர்
எண்:11)
‘இரட்டைமலை சீனிவாசன்’ என்னும் தலைப்பில் பாடநூல் கீழ்க்கண்ட
தரவுகளை முன்வைக்கிறது.
“இரட்டைமலை சீனிவாசன் (1859-1945) தாத்தா எனப் பரவலாக அறியப்பட்ட இவர் 1859ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார்”. (பக்.85)
“Rettaimalai Srinivasan
(1859–1945), popularly known as Grandpa
(Thatha), was born in 1859 at Kanchipuram”. (Page: 76)
‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ எனும் அவரது சுயசரிதையில் அவரே பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“நான் செங்கல்பட்டு கிராமங்களிலொன்றில் 1860 –ம் ௵
பிறந்தேன்”. (பக்.28, மேலது நூல்)
செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகேயுள்ள கோழியாளம் எனும்
கிராமமே இரட்டைமலை சீனிவாசன் பிறந்த ஊர். அது எப்படி காஞ்சிபுரமானது? காஞ்சிபுரம்
மாவட்டத்திலுள்ள ஒரு ஊரில் பிறந்தார் என்று சொன்னால்கூட ஏற்கலாம். 30 ஆண்டுகளுக்கு
முன்பு செங்கல்பட்டு மாவட்டமாக இருந்து பின்னர் காஞ்சிபுரம் மாவட்டமாக மாறி
தற்போது மீண்டும் செங்கல்பட்டு மாவட்டமாக மாறியிருக்கிறது.
“அவரது சுயசரிதையான ஜீவிய
சரித சுருக்கம் 1939இல் வெளியிடப்பட்டது. இந்நூல் முதன்முதலாக எழுதப்பெற்ற
சுயசரிதை
நூல்களில் ஒன்றாகும்”. (பக்.85)
“His autobiography, Jeeviya Saritha Surukkam (A Brief Autobiography), published in 1939, is one of the earliest autobiographies”. (Page: 76)
என்ன கூத்து பாருங்கள்!
‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ என்ற அவரது சுயசரிதை நூலின் பெயரைக் கூடச் சரியாகக்
குறிப்பிட முடியவில்லை.
“தீண்டாமையின் கொடுமைகளை அனுபவித்த இரட்டைமலை சீனிவாசன்
உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். 1893இல்
ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கினார்”. (பக்.85)
“Rettaimalai Srinivasan who had experienced the horrors of untouchability worked for the progress of the deprived castes. He founded the Adi Dravida Mahajana Sabha in 1893”. (Page: 76)
1892 இல் இரட்டைமலை ஆர். சீனிவாசன் உருவாக்கிய அமைப்பு 'பறையர் மகாஜன சபை' ஆகும். தனித்த சாதி
அடையாளத்திலிருந்து பொது அடையாளம் நோக்கி நகரும் பொருட்டுப் பின்னாளில்,
'ஆதிதிராவிடர் மகாஜன சபை' எனப் பெயர் மாற்றமடைந்தது.
1893 இல் இவர் நடத்திய மாத இதழ் 'பறையன்' என்பது. சில
மாதங்களில் வார இதழாகி மாறி தொடர்ந்து ஏழாண்டுகள் 1900 வரை வெளியாயிற்று.
அயோத்திதாசரால் தொடங்கப்பட்ட 'ஒரு பைசாத் தமிழன்', இதழ் ' தமிழன்' என்ற பெயர்
மாற்றத்துடன், இதுவும் ஏழாண்டுகள் வெளியானது.
1891 இல் பண்டித அயோத்திதாசர் அவர்களால் தொடங்கப்பட்ட
அமைப்பிற்கு 'திராவிட மகாஜன சபை' என்று பெயர். இது 'சாதியற்ற திராவிட
மகாஜன சபை' என்றும் அழைக்கப்பட்டது.
“ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை மாகாண
ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் கூட்டமைப்பு ஆகிய
அமைப்புகளின் தலைவராகப் பணியாற்றினார்”.
(பக்.85)
“He served as president of the Scheduled Castes’ Federation and the Madras Provincial Depressed Classes’ Federation”. (Page: 76)
1928 இல் 'The Madras
Provincial Depressed
Classes Federation' என்ற அமைப்பு 1936 இல்
'The Madras Provincial Scheduled Castes Party' எனவும், 2938 இல் 'The Madras Provincial Scheduled Castes Federation' என்று மாற்றம் பெற்றபோதும் தொடர்ந்து
இரட்டைமலை சீனிவாசனே தலைவராக நியமிக்கப்பட்டார். இவருடன எம்.சி. ராஜா, எல்.சி.
குருசாமி போன்றோர் இணைந்து செயல்பட்டனர்.
“1923இல் சென்னை மாகாணசட்டசபை உறுப்பினரான
அவர் நீதிக்கட்சியில் தனது செல்வாக்கினை ஏற்படுத்தி
ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகப்
பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் உரிமைகளையும்
பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார்”. (பக்.85)
“He became a member of the Madras Legislative Council in 1923 and influenced the Justice Party to take affirmative action to safeguard the interests of the depressed and deprived sections of the society”. (Page:
77)
அன்று மாகாண சட்டமன்றத்திற்கு தலித்கள் போட்டியிடும் நிலை
இல்லை. எனவே சென்னை மாகாண சட்டமேலவைக்கு
எம்.சி. ராஜா 1920 இல் முதல் நியமன உறுப்பினரானார். 1923 முதல் 15 ஆண்டுகள்
தொடர்ந்து சட்ட மேலவை நியமன உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றினார்.
“B.R. அம்பேத்காரின் நெருக்கமானவரான அவர், லண்டனில் (1930
மற்றும் 1931) நடைபெற்ற முதல், இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்டு
சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் கருத்துக்களுக்காகக் குரல் கொடுத்தார். 1932 இல் செய்துகொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுள் அவரும் ஒருவர்”. (பக்.85 & 86)
“A close associate of Dr B.R. Ambedkar, he participated in the first and second Round Table Conferences held in London (1930 and 1931) and voiced the opinions of the marginalised sections of the society. He was a signatory to the Poona Pact of 1932”. (Page:
77)
1932 இல் நடைபெற்ற மூன்றாம் வட்டமேசை
மாநாட்டில் இவர் கலந்துகொள்ளவில்லை என்பதை
மறைமுகமாகவாவது சொன்னதற்காகப் பாராட்டலாம்.
காந்தியின் வறட்டுப் பிடிவாதம்,
சாகும்வரை உண்ணாவிரதம் என்ற நிலையில் இரக்கத்திற்குரியவராக மாறிய நிலை ஆகியவற்றால்
பூனா ஒப்பந்தத்தில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, கையெழுத்திட
வேண்டியதாயிற்று என தன்னுடைய சுயசரிதையில் விளக்குகிறார்.
“ஏராவாடா சிறைச் சாலையிலிருக்கும்போது
தாழ்த்தப்பட்டாருக்கு தனித்தொகுதி யேற்பட்டாதால் தன்னுயிரை மாய்த்து கொள்ளுவதாக உண்ணாவிரதம்
ஆரம்பித்தார். சிறைச்சாலையில் மூன்றுதரம் கண்டேன். வாதாடி வெற்றி பெறுவதை இவர்
தவிர்த்து உண்ணாவிரத மிருப்பது வீரத்தன்மையிழந்து இரக்கத்தைத்தேட வேண்டியவரானார்
என்பதைக் கண்டு என் மனதிரங்கி பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டேன்”, (பக்.47, ‘ஜீவிய
சரித்திர சுருக்கம்’)
உதவியவை:
ஜீவிய சரித்திர சுருக்கம் - இரட்டைமலை
ஆர். சீனிவாசன் பதிப்பாசிரியர்: ஸ்டாலின் ராஜாங்கம், காலச்சுவடு வெளியீடு.
(அபத்தங்கள் தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக