வியாழன், டிசம்பர் 05, 2019

சிதைக்கப்படும் தமிழ்ப்பெயர்களின் முன்னெழுத்துகள்


சிதைக்கப்படும் தமிழ்ப்பெயர்களின் முன்னெழுத்துகள் 


 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)


மு.சிவகுருநாதன்

  
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 51)


 ஐம்பத்தொன்று:

தமிழ்ப்பெயர்களின் முன்னெழுத்துகளைச் சிதைக்கலாமா?
 
(பெயரின் முன்னெழுத்துகளை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டுமா!)

      நாம் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் தொகுதி குடிமையியல் பகுதியில் தமிழக முதல்வர்கள் பட்டியலில் பெயர் முன்னெழுத்துகள் ஆங்கிலத்தில் எழுதும் முறையை பின்பற்றியுள்ளது பற்றி எழுதியிருந்தேன் (தொடர் எண்: 13). அதைப் பொதுவிதியாகப் பாடநூல் குழு பயன்படுத்த நினைக்கிற்து. இதன் அபத்தங்களை கொஞ்சம் பார்ப்போம். 

   பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் முழுதும் இவ்வாறு முதலெழுத்துகளை ஆங்கிலத்தில் எழுதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக சிலவற்றை கீழேக் காண்க.

B.R. அம்பேத்கர், M.C. ராஜா (பக்.46)

M.N. ராய், M.P.T. ஆச்சார்யா, S.A. டாங்கே, M. சிங்காரவேலர்
S.V. காட்டே,  டாக்டர் G. அதிகாரி,  P.C. ஜோஷி, S.S. மிராஜ்கர் (பக்.47)

B.K. தத்  (பக்.48)

A.V. அலெக்ஸாண்டர் (பக்.53)

T.முத்துசாமி, G.சுப்பிரமணியம், M.வீரராகவாச்சாரி, P.ரங்கையா (பக்.62)

V.S.சீனிவாச சாஸ்திரி, P.S.சிவசாமி, V.கிருஷ்ணசாமி, T.R.வெங்கட்ராமனார், G.A.நடேசன், T.M.மாதவராவ், K.T.தெலாங், P.அனந்தாச்சார்லு, S.சுப்பிரமணியனார் (பக்.63)

V.சர்க்கரையார் (பக்.64)

G.சுப்பிரமணியர், V.V.சுப்பிரமணியனார், M.P.ஆச்சாரியா, T.S.S.ராஜன், ராபர்ட் W.D.E.ஆஷ், G.S. அருண்டேல், B.P.வாடியா, C.P.ராமசாமி (பக்.65)

C.நடேசனார், T.M.நாயர், P.தியாகராயர், A.சுப்புராயலு, S.சத்தியமூர்த்தி (பக்.67)

V.கல்யாணசுந்தரம் (திரு.வி.க.), C.ராஜாஜி (பக்.68)

M.A.அன்சாரி, S.சீனிவாசனார், S.N.சோமையாஜுலு, C.சாமிநாதர், K.சந்தானம், T.பிரகாசம், K.நாகேஸ்வர ராவ், N.M.R.சுப்பராயன், O.K.S.R.குமாரசாமி, L.N.கோபால்சாமி, K. காமராஜ் (பக்.75)

F.W.எல்லீஸ் (பக்.78)

      இதில் இந்திய, தமிழகத் தலைவர்கள், ஐரோப்பியர்கள் உள்ளிட்ட அனைவரும் அடக்கம். மொழிபெயர்ப்பவர்களுக்கு இலகுவாக உள்ளது என்பதைத்தவிர வேறு காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. ஆங்கிலத்தில் எழுதுவோர் அல்லது பிறமொழிப் பெயர்களை வேண்டுமானால் இவ்வாறு எழுதிவிட்டுப் போகட்டும். ம.சிங்காரவேலர், கு.காமராஜ், டாக்டர் சி. நடேசன், திரு.வி.கல்யாணசுந்தரம், வ.வே.சு. அல்லது வ.வே.சுப்பிரமணியன் என்பது போன்ற தமிழில் பயன்பாட்டில் உள்ள பெயர்களை சிதைப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அவற்றை மாற்றவும் யாருக்கும் உரிமையில்லை.

     மேலும் பாடநூலில் இந்தத் தலைவர்களின் பெயர்கள் பக்கத்திற்கு பக்கம் மாற்றி எழுதப்படுகிறது. இதைப் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் குழப்பத்திற்கு உள்ளாவர். சில எடுத்துக்காட்டுகளை கீழே காணலாம்.

M.சிங்காரவேலர் (பக்.79) /  ம.சிங்காரவேலர் (பக்.87)
கு.காமராஜ் (பக்.71) / கு.காமராஜர்  (பக்.73) / K. காமராஜ் (பக்.75)
G.சுப்பிரமணியம் (பக்.63) / G.சுப்பிரமணியர் (பக்.65)
C.நடேசனார் (பக்.66) / C.நடேசன் / டாக்டர் சி. நடேசனார் (பக்.80) / டாக்டர் நடேசனார் (பக்.81)
S.சீனிவாசனார் / S.சீனிவாசனார் (பக்.75)
B.R.அம்பேத்கர் (பக்.47) / B.R.அம்பேத்கார் ((பக்.84)
M.C. ராஜா (பக்.46) / எம்.சி.ராஜா / மயிலை சின்னதம்பி ராஜா (பக்.86)

     அம்பேத்கர் என்பதை அம்பேத்கார் என்று நீட்டி எழுதுவது எப்போது ஒழியுமோ என்று தெரியவில்லை. சாதிப்பெயரை நீக்கிவிட்டு மரியாதைக்காக ‘அர்’ விகுதியை இணைப்பதற்கும் ஏதேனும் சிறப்புத்தகுதிகள் வேண்டுமோ என்னவோ. சிலருக்கு அம்மரியாதை வழங்கப்படுவதில்லை.

(எ.கா.).

உ.வே.சாமிநாதர், சி.வை. தாமோதரனார், பி.சுந்தரனார் (பக்.78) ச.வையாபுரி (பக்.79)

ஐம்பத்திரண்டு:

சாதிப் பின்னொட்டை நீக்கி எழுதுதல்.

    “பாடநூல்களில் சாதிப்பெயரைப் பயன்படுத்துவதில்லை என்கிற ஒரு நல்ல நிலைப்பாட்டை பாடநூல்களை உருவாக்குவோர் இதுகாறும் பின்பற்றி வந்தனர். இதுவும் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தந்த கொடையிது. பெரும்பாலான பிற மாநிலப்பெயர்களில் சாதி இல்லாத (surname) நிலையைப் பார்க்க முடியாது. காந்தி, முகர்ஜி, மோடி என சாதிப்பெயர்கள் நீளும். இவற்றை நீக்கி எழுதுவது சாத்தியமில்லை. ஆனால் சுயமரியாதை இயக்க முன்னோடி முயற்சியால் சாதிப்பெயரை இணைக்காமல் பெரும்பாலான பெயர்கள் அமைந்தன. வெகுசில சாதி அடைமொழிகளுடன் உள்ள பெயர்களைப் பாடநூல்களில் பயன்படுத்தும்போது அவற்றை நீக்கி எழுதும் முறை பொதுவிதியாகவே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. (எ.கா.) உ.வே.சாமிநாதர், நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார், கவிமணி தேசிக விநாயகனார், வ.உ.சிதம்பரனார், இராஜாஜி, வாஞ்சிநாதன்”,  (தொடர் எண்: 08) என்று முன்பு எழுதியிருந்தேன்.

     ஏழாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் பசும்பொன் முத்துராமலிங்கருக்கு அளித்த விதிவிலக்கு இங்கு இன்னும் சிலருக்கு நீட்டிக்கப்படுகிறது.  

     'பண்டிதர்' என்னும் சொல்லுக்கு  தமிழ் அகராதிகளில், புலவன், மருத்துவன், சுக்கிரன், புதன், நாவிதன், வரிக்கூத்து வகை, ஓர் அலுவலன்  என்று பல பொருள்கள் சொல்லப்படுகின்றன. 

     தமிழறிஞரும் சித்த மருத்துவருமான  அயோத்திதாச பண்டிதர் சாதிப்பெயர் நீக்கத்தில் அயோத்திதாசர் ஆகிறார். சில இடங்களில் பண்டித அயோத்திதாசர் என்றும் எழுதப்படுகிறது.  இசைப் பேரறிஞரும் தமிழறிஞரும் சித்த மருத்துவருமான ஆபிரகாம் பண்டிதர்  என்றே குறிக்கப்படுகிறார். வெறுமனே ஆபிரகாம் என்றோ பண்டித ஆபிரகாம் என்றோ சொல்லப்படவில்லை.

     'பண்டிதர்' என்னும் ஒற்றைச் சொல் ஒருவருக்குச் சாதியைக் குறிப்பதாகவும் பிறிதொருவருக்கு அவரது ஆளுமையைக் குறிப்பதாகவும் மாறியது எப்படி? பாடநூல் எழுதுபவர்கள் இவ்வாறு சாதிய வன்மத்திற்கு ஆட்படலாமா?

பண்டிதர் அயோத்திதாசர் (பக்.79)
ஆபிரகாம் பண்டிதர் (பக்.79 & 87)
Pandithar Iyotheethassar  (Page: 71)

    கீழ்க்கண்ட பெயர்களில் சாதியப் பின்னொட்டு இல்லை என மறுக்க முடியுமா?

சுரேந்திரநாத் ஆரியா (பக்.64&65)
சுப்பிரமணிய சாஸ்திரி (பக்.69)
V.S.சீனிவாச சாஸ்திரி (பக்.63)
அரவிந்த கோஷ் (பக்.65)
K.நாகேஸ்வர ராவ் (பக்.75)
T.M.மாதவராவ் (பக்.63)
T.M.நாயர் (பக்.67)
வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி (பக்.79)
கே.கே. பிள்ளை (பக்.92)

    தமிழ்ப்பாடநூலில் ரா.பி.சேது என்று எழுதியவர்கள் இங்கு சிலருக்கு மட்டும் சாதிப்பெயரை அல்லது பட்டததி நீக்குவது எப்படி? இதை எல்லாருக்கும் பொதுவிதியாக்க வேண்டாமா?   கே.கே. பிள்ளை (பக்.92) ஐ கோலப்ப கனகசபாபதி (பிள்ளை) என்றல்லவா எழுத வேண்டும்.  

    வட இந்தியப் பெயர்களோடு ஒன்றாகக் கலந்திருக்கும் சாதியை என்ன செய்வது என்று தெரியவில்லை. இங்கு ஒரு ‘சுயமரியாதை இயக்கம்’ இருந்தது’ பெரியார் இருந்தார். எனவே சாதிப்பட்டம் நீங்கியது சாத்தியமாயிற்று.

  கீழ்க்கண்ட பிற மாநிலப் பெயர்களில் உள்ள சாதியை என்ன செய்வது? அதற்கும் உரிய வழிகண்டால் நன்றாகயிருக்கும்.  

M.N. ராய்,
அபானி முகர்ஜி,
M.P.T. ஆச்சார்யா,
M.N. ராய், S.A.
டாங்கே, S.V. காட்டே, 
டாக்டர்.G. அதிகாரி,  
P.C. ஜோஷி,  (பக்.47)
B.K. தத்  (பக்.48)
ஜெயப்பிரகாஷ் நாராயண்
ஆச்சார்ய நரேந்திரதேவ் (பக்.49)
பகத்சிங்
சுகதேவ்
சூர்யா சென் (பக்.48)
பட்டாபி சீத்தாராமய்யா (பக்.50)
உஷா மேத்தா
ராமாநந்த் மிஷ்ரா (பக்.51)
தேஜ் பஹதூர்
புலாபாய் தேசாய் (பக்.52)
ராஜா ராம்மோகன் ராய் (பக்.90)
அல்லூரி சீதாராம ராஜு (பக்.45)
   
ஐம்பத்து மூன்று:

கிண்டலடிப்பதா வரலாறு? 

     சென்ற சமச்சீர் பத்தாம் வகுப்புப் பாடத்தில் மகாத்மா காந்தி படுகொலை பற்றி பாடத்தில் எவ்விதக் குறிப்பும் இல்லை. இருப்பினும் ‘காலக்கோட்டிற்கான’ பகுதியில் 1948 காந்தி மறைவு என்று குறித்திருப்பார்கள். காந்தி படுகொலை என்றல்லவா எழுத வேண்டும் என்ற அதிர்ச்சியடைந்த காலமுண்டு. இப்போது இந்தியாவில் “காந்தி தற்கொலை செய்து கொண்டார்”, என்றுகூட பாடங்கள் எழுதப்பட்டு வருகின்றன. 

    1865 வனச்சட்டத்தை எதிர்த்துப் பழங்குடிகள் போரட்டத்தை ஒருங்கிணைத்த  அல்லூரி சீதாராம ராஜு  பற்றிய குறிப்பில் இறுதிப்பகுதி கீழே தரப்படுகிறது. “அல்லூரி சீதாராம ராஜு தியாகி ஆனார்” (பக்.45) என்று முடிகிறது. அவர் ஆங்கிலேயர்கள் படிக்கப்பட்டு மே 07, 1924 மரத்தில் கட்டப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இப்படுகொலைச் சொல்லாமல் ‘தியாகி ஆனார்’ கிண்டலடிப்பதா வரலாறு? இது என்ன வகையான வரலாற்றெழுதியல்?

    “அல்லூரி சீதாராம ராஜு  அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட  ஆதிவாசிகள் கடுமையான வறுமையில்  வாடினார்கள். மான்யம் (என்றழைக்கப்பட்ட வனப்பகுதியில்) காவல்துறை, வனத்துறை  மற்றும் வருவாய் துறை அதிகாரிகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். ராம்பா பகுதி  ஆதிவாசிகளின் நலன் காப்பதற்காக ஊழல்  அதிகாரிகளுடன் அல்லூரி சீதாராம ராஜு  போராடியதால் அவரது உயிரைக் குறிவைத்து  ஆங்கிலேய அரசு நடவடிக்கை எடுக்கத்  தொடங்கியது. ராம்பா ஆதிவாசிகளின்  கிளர்ச்சியை அடக்குவதற்காக (1922-24)  மலபார் காவல்துறையின் சிறப்புக்குழு அனுப்பி  வைக்கப்பட்டது. வனவாசிகளின் நலனுக்காகப்  போராடிய அல்லூரி சீதாராம ராஜு தியாகி ஆனார்”. (பக்.45)

ஐம்பத்து நான்கு:

இருவர் ஒருவரான அதிசயம்!

   “T.பிரகாசம், K.நாகேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையில் சத்தியாகிரகிகள் சென்னைக்கு அருகேயுள்ள உதயவனம் என்ற இடத்தில் ஒரு முகாமை அமைத்திருந்தனர்”, (பக்.71) என்று ‘தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்’ பாடம் சொல்கிறது.

    ஆனால், “சரியான விடையைத் தேர்வு செய்யவும்”, பயிற்சியில்  6 வது வினா கீழ்க்கண்டவாறு உள்ளது.

“சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?
அ) K. காமராஜ்
ஆ) C.ராஜாஜி
இ) K.சந்தானம்
ஈ) T.பிரகாசம்”, (பக்.75)

     பாடப்பகுதியில் உள்ள இருவர் ஒருவரான மாயந்தான் நமக்கு விளங்கவிலை!

     தண்டி யாத்திரைக்குப் பிறகு தமது வேதாரண்யம் யாத்திரை மட்டுமே பேசப்படவேண்டும் என்கிற தன்முனைப்பு ராஜாஜிக்கு இருந்ததாக ஒரு கருத்துண்டு. வரலாற்றின் வெளிவராத பக்கங்கள் இவை.

    “Similar  attempts at Uvari, Anjengo,  Veppalodai, Thoothukudi  and Tharuvaikulam were stopped”. (Page: 64)

     தமிழகத்தின் பிற பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களையும் ருக்மணி லட்சுமிபதியின் பங்கையும் பாடநூல் கவனப்படுத்திருப்பதைப் பாராட்டலாம். உவரி, வேப்பலோடை, தூத்துக்குடி, தருவைக்குளம் ஆகிய ஊர்கள் தற்போது தமிழகத்திலும் (மன்னார் வளைகுடா) அஞ்செங்கோ கேரளாவிலும் (அரபிக்கடல்) உள்ள பிரிட்டனின் ஆட்சிப்பகுதியாகும். இவை தனியே பிரித்துக் காட்டப்பட வேண்டும்.  

ஐம்பத்தைந்து:

‘ரிவோல்ட்’ ஆங்கில இதழ் அல்லவா! 

‘தொழிலாளன்’ தமிழ் மாத இதழே!

  “குடிஅரசு(1925), ரிவோல்ட் (1928), புரட்சி (1933), பகுத்தறிவு (1934), விடுதலை (1935) போன்ற பல செய்தித்தாள்களையும் இதழ்களையும் பெரியார் தொடங்கினார்”, (பக்.84) என்று எல்லவற்றையும் ஒரே கதம்பமாக்குவது ஏன்? ‘Revolt’ ((ரிவோல்ட்) என்பது ஆங்கில இதழல்லவா!  இருப்பினும் ஒரு சின்ன மகிழ்ச்சி! சென்ற பாடநூலைப் போல ‘New India, Young India, Coral Mill’, போன்றவற்றை ‘புதிய இந்தியா, இளம் இந்தியா, பவள ஆலை’, என்றெல்லாம் மொழிபெயர்க்கவில்லை என்பதே அது. 
 
   ம.சிங்காரவேலரைப் பற்றிச் சொல்லும்போது, “தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளைப் வெளிப்படுத்துவதற்காக தொழிலாளன் (Worker) என்ற பத்தரிக்கையை வெளியிட்டார்”, (பக்.87) என்று பாடநூல் குறிப்பிடுகிறது. அடைப்புக்குறிக்குள்  ‘Worker’ என்று எழுத வேண்டிய தேவையென்ன? இது ஆங்கில இதழ் என்கிற தொனி இதனால் ஏற்படுகிறது.

     “He published a Tamil newspaper, Thozhilalan (Worker) to  address the problems of the working class. (Page: 78)

     இப்போது புரிகிறதா? ஆங்கிலத்தில் தமிழ்ப்பெயர்களைக் குறிப்பிடும்போது விளக்கத்திற்காக இம்மாதிரி அடைப்புக்குறிக்குள் எழுதுவது வழக்கம். அதை தமிழில் மொழிபெயர்க்கும்போது அப்படியே காப்பியடிக்கிறார்கள்.

    ‘Tamil newspaper’ என்பதை ‘பத்தரிக்கை’ என்று மொழிபெயர்த்து அடைப்புக்குறிகுள் ‘Worker’ வேறு. ‘’Newspaper’ என்பது நாளிதழைக் குறிக்கும் சொல். சிங்காரவேலர் நடத்திய ‘தொழிலாளன்’ என்பது தமிழ் மாத இதழ். ‘Labour and Kissan Gazette’ என்னும் ஆங்கில மாத இதழையும் அவர் நடத்தினார். 

    கீழ்க்கண்ட வரிகளில் சொற்பயன்பாட்டைக் கொஞ்சம் கவனிக்கவும்.

   “The association started publishing three  newspapers: Dravidian in Tamil, Justice in  English and Andhra Prakasika in Telugu, to  propagate the ideals of the Party”. (Page: 73)
      “Many journals  were started to propagate Swadeshi ideals.  Swadesamitran and India were prominent  journals”.  (Page: 58)

     “Periyar understood the relevance of  mass communication in spreading rationalist 
thought. He started a number of newspapers  and journals such as Kudi Arasu (Democracy)  (1925), Revolt (1928), Puratchi (Revolution)  (1933), Paguththarivu (Rationalism) (1934), and Viduthalai (Liberation) (1935). Kudi Arasu was the official newspaper of the Self-Respect Movement. (Page: 75)

    ‘Dravidian’, ‘Justice’, ‘Andhra Prakasika’ ஆகியன ‘newspapers’ ஆகிறது. ‘Swadesamitran’, ‘India’ ஆகியவை ‘journals’ என்றாகிறது. 

   ‘Kudi Arasu’, ‘Revolt’, ‘Puratchi’, ‘Paguththarivu’,  ‘Viduthalai’ ஆகிய இதழ்கள் ‘newspapers  and journals’ என்றால் நமக்கு இயல்பாக வரும் குழப்பம், ‘newspapers’ இன்னா என்ன?,  ‘journals’ இன்னா என்ன? இறுதி வரியில் ‘குடியரசு’ ‘newspaper’ எனப்படுகிறது. பிற இதழ்களனைத்தும் ‘journals’ போலும்!

   ‘newspapers  and journals’ என்பதை மட்டும் செய்தித்தாள்களையும் இதழ்களையும் என மொழிபெயர்ப்போர் பிற இடங்களில் ‘newspapers’ மற்றும்  ‘journals’ ஆகியவற்றைப்  ‘பத்தரிக்கைகள்’ என மொழிபெயர்ப்பதும் நடக்கிறது.

     கீழ்க்கண்ட பத்தியிலும், பத்தரிக்கை, செய்திப் பத்தரிக்கை, இதழ், பருவ இதழ் ஆகியவற்றைக் காணலாம். கடைசி வரி மொழிபெயர்ப்பைக் கவனிக்கவும். “தி இந்து, சுதேசமித்திரன் ஆகிய  பத்திரிகைகள் தொடங்கப்பட்டது.” என்ற சொற்றொடரின் இறுதியில் கால்புள்ளி இருப்பது நல்லது. தனித்தனிச் சொற்றொடராக்கினால் இரண்டும் பொருளற்றதாகும்.
 
     “ஒரு இந்தியர் நீதிபதியாக  பணியமர்த்தப்பட்டதை சென்னையைச் சேர்ந்த அனைத்துப் பத்திரிகைகளும் விமர்சனம்  செய்தன. எதிர்ப்பு தெரிவித்த அனைத்துப் பத்திரிகைகளும் ஐரோப்பியர்களால்  நடத்தப்படுவதை கல்விகற்ற இளைஞர்கள்  உணர்ந்தனர். இது குறித்து இந்தியரின் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு செய்திப் பத்திரிகை தேவை என்பது உணரப்பட்டது.  G.சுப்பிரமணியம், M.வீரராகவாச்சாரி மற்றும்  இவர்களின் நண்பர்கள் நால்வர் ஆகியோர் இணைந்து 1878இல் ‘தி இந்து’ எனும் (The Hindu) செய்திப் பத்திரிகையைத் தொடங்கினர்.  மிக விரைவில் இச்செய்திப் பத்திரிகை தேசியப் பிரச்சாரத்திற்கான கருவியானது.  G.சுப்பிரமணியம் 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும்  தொடங்கினார். 1899இல் அவ்விதழ் நாளிதழாக  மாறியது. தி இந்து, சுதேசமித்திரன் ஆகிய  பத்திரிகைகள் தொடங்கப்பட்டது. இந்தியன் பேட்ரியாட் (Indian Patriot) சவுத் இந்தியன் மெயில்  (South Indian Mail), மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் (Madras Standard), தேசாபிமானி, விஜயா, சூர்யோதயம், இந்தியா போன்ற உள்நாட்டுப் பத்திரிகைகள்  தொடங்கப்படுவதற்கு ஊக்கமளித்தது”. (பக்.62)

    “The press opposed his appointment  and the educated youth realized that the  press was entirely owned by Europeans. The  need for a newspaper to express the Indian  perspective was keenly felt. G. Subramaniam, M. Veeraraghavachari and four other friends  together started a newspaper The Hindu in 1878. It soon became the vehicle of nationalist  propaganda. G. Subramaniam also started a  Tamil nationalist periodical Swadesamitran in 1891 which became a daily in 1899. The  founding of The Hindu and Swadesamitran  provided encouragement to the starting  of other native newspapers such as Indian Patriot, South Indian Mail, Madras Standard,  Desabhimani, Vijaya, Suryodayam and India”. (Page: 56)

 (அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக