செவ்வாய், மார்ச் 03, 2020

தமிழ் வழியில் படிப்போரை விரட்டும் பாடநூல்கள்!

தமிழ் வழியில் படிப்போரை விரட்டும் பாடநூல்கள்!

 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 65) 
  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: 



     பாடநூல்கள் எழுதும்போது மொழிபெயர்ப்பிற்கு பெரும் கொள்கைகளை வைத்திருப்பார்கள் போலும்! ‘Remote Sensing’ என்பதை யாவரும் பயன்படுத்தும் ‘தொலை உணர்வு’ என்று மொழிபெயர்க்க மாட்டார்கள். மாறாக ‘தொலை நுண்ணுணர்வு’ என்பர். கலைச்சொல்லாக்கத்தில் இதுதான் என்றும் தொடரும் நிலை. ஆங்கில வழியில் மிக எளிமையானச் சொற்களால் படிக்கவும் தமிழில் மட்டும் கரடுமுரடான கடினச் சொற்களைத் திணிக்கவும் பழக்கியுள்ளோம். இது மாணவர்களை கல்வியை விட்டு விரட்டவோ அல்லது ஆங்கில வழிக்குத் தள்ளவோ செய்கிறது. 

   எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவ சமூக அறிவியல் புவியியல் பகுதியில் அலகு 3  ‘புவிப்படங்களைக்  கற்றறிதல்’. இப்பாடம் ஆங்கில வழியில்  ‘Map Reading’ என்றுள்ளது. (நல்லவேளை! ‘புவிப்படங்களைப் படித்தல்’ என்று மொழிபெயர்க்கவில்லை!!) ‘Map’ ஐ முன்பும் வேறு வகுப்புகளிலும் ‘நிலவரைபடம்’ என்று சொன்னோம். இப்போது அது ‘புவிப்படம்’ ஆகியுள்ளது. படம், வரைபடம் இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் சுருக்கம் கருதி வரவேற்போம். கற்றல், அறிதல் இரண்டில் ஒன்று போதாதா? அறிதல் கற்றலில் ஒரு நிலைதானே! ஏன் ‘கற்றறிதல்’ என நீட்ட வேண்டும். மீள்பார்வையில் ‘புவிப்படக் கற்றல்’ இருக்கிறது. (பக்.207)

    ஆங்கில வழியில் ‘GLOSSARY’ பின்வருமாறு உள்ளது.

“Map - வரைபடம்
Cartography Cartography - நிலவரைபடவியல் 
Map Scale - புவிப்பட அளவை
Cadastre - நில எல்லை பதிதல்”,  (Page: 173)

  தமிழ் வழியில் ‘கலைச்சொற்கள்’ இப்படி இருக்கிறது!

“புவிப்படம் - Map
புவிப்படவியல் - Cartography Cartography
புவிப்பட அளவை - Map Scale
காணிப்புவிப் பதிவேடு - Cadastre”,  (Page: 173)

  தமிழ் வழியில் ஒன்றாகவும் ஆங்கில வழியில் வேறொன்றாகவும் கலைச்சொற்கள் இருக்க வேண்டிய தேவையென்ன?  ‘Cadastre’ என்பது நில எல்லை பதிதல், காணிப்புவிப் பதிவேடு என்றும் மாறவேண்டுமா?

   “கீழ்க்கண்டவை ஒரு புவிப்படத்தின் அடிப்படைக் கூறுகளாகும்.

1. தலைப்பு (Title), 
2. புவிப்பட அளவை (Scale),
3. புவிப்பட  விளக்கம் அல்லது திறவு விசை (Legend or key), 
4. திசைகள் ( Directions), 5. புவிப்படமூலம்  (Source),
6. புவிப்பட கோட்டுச் சட்டம் மற்றும்  அமைவிட குறிப்பு (Map projection and Locational  information),
7. மரபுக் குறியீடுகள் மற்றும்  சின்னங்கள் (conventional signs and symbols). (பக்.199)
 
   அப்பாடா! அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுத்துவிட்டார்கள்.
‘Legend or key’ புவிப்பட  விளக்கம் அல்லது திறவு விசை என்று இங்கும் பிற இடங்களில்  ‘புவிப்படத்தின்திறவுகோல்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

   “புவிப்படத்தை பற்றிய விவரங்களை  புரிந்து கொள்வதற்கு புவிப்பட விளக்கம்  அல்லது திறவுவிசை புவிப்படத்தில்  கொடுக்கப்படுகின்றது. இவை புவிப்படத்தின் கருத்தை அறிந்துகொள்ள தேவையான  விவரங்களை தருகின்றன. புவிப்படத்தில்  பல்வேறு குறியீடுகள் மற்றும் வண்ணங்கள்  பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் எவற்றை குறிக்கின்றன என்பதை திறவுவிசை விளக்குகின்றன. திறவுவிசை படங்களாகவோ,  சின்னங்களாகவோ அல்லது குறியீடுகளாகவோ  புவிப்படத்தில் பயன்படுத்தப்படுகின்றன”. (பக்.202)



  “III. பொருத்துக
. 
அ. புவிப்பட விளக்கம் - 1. 45°
ஆ. வடகிழக்கு - 2. கருத்துப்படங்கள்
இ. சம உயரக்கோடு - 3. பழுப்பு நிறம்
ஈ. காணிப்படங்கள் - 4. புவிப்படத்தின்திறவுகோல்
உ. நிழற்பட்டைப் படம் - 5. வரி விதிப்பு”,  (பக்.208)

 matches“III. Choose the option which the following correctly 
a. Legend - 1. 45º 
b. North East - 2. brown colour
c. Contour Line - 3. thematic map
d. Cadastral map - 4. key of a map
e. Choropleth - 5. Taxation”, (Page: 174)


  “2. கூற்று: மரபுக் குறியீடுகளும், சின்னங்களும்  வரைபடத்தின் திறவுகோல் ஆகும்.

காரணம்: இவை குறைந்த அளவிலான  படத்தில் அதிக விவரங்களைத் தருகின்றன”.  (பக்.208)

    “ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள்  மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களை  காண்பிக்க காணிப் புவிப்படங்கள்  பயன்படுகின்றன”. (பக்.204)
   ‘Cadastral maps’ என்பது  ‘காணிப் புவிப்படங்கள்’ என்று பெயர்கிறது. காணி, புவி என்பன நிலத்தைக் குறிப்பன. எனவே  ‘காணிப்படங்கள்’ என்று சொன்னால் போதுமானது.

     மேலும் மதிப்பீட்டுப் பகுதியில் இவர்கள் மொழியாக்கத் திறன் புகுந்து விளையாடுகிறது, கண்டு களியுங்கள்!
“I. சரியான விடையைத்  தேர்ந்தெடுக்கவும். 

1. புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும்  பாடப்பிரிவு ஆகும்.

அ) மக்களியல்
ஆ) புவிப்படவியல்
இ)இயற்கையமைப்பு
ஈ) இடவியல்

2. ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக்  காட்டும் புவிப் படம்.

அ) நிலக்கனிய புவிப்படம்
ஆ) நிலத்தோற்ற புவிப்படம்
இ) கால நிலையியல் புவிப்படம்
ஈ) மூலாதார புவிப்படம்

(…)

4. பிளான்கள் என்று அழைக்கப்படும்  புவிப்படங்கள் ஆகும்.

அ) நிலக்கனிய புவிப்படங்கள்
ஆ) தலப்படங்கள் 
இ) சம அளவுக்கோட்டுப் படங்கள் 
ஈ) போக்குவரத்துப் படங்கள்”,  (பக்.208)


ஆங்கில வழியில்,

“Evaluation
 Choose the best answer
1. The subject which deals  with map making process  is _____.
a) Demography
b) Cartography
c) Physiography
d) Topography 
2. A map that shows the physical features of  an area is called ____. 
a) Cadastral map b) Relief map
c) Climatic map d) Resource map
(…)
4. The maps which are known as plans are. 
a) Cadastral maps
b) Topographical maps
c) Isoline maps
d) Transport maps”, (Page: 174)

  சரியான விடையைத் தேர்வு செய்யும் வினா 1 இல் ‘Physiography’ ‘இயற்கையமைப்பு’ என்றாகிறது. வினா எண்கள் 2, 4 ஆகியவற்றில் ‘Cadastral map’ ‘நிலக்கனிய புவிப்படங்கள்’ என்று சொல்லாக்கம் பெறுகின்றன.

   ‘காணிப்படங்கள்’ என்று எளிமையாகச் சொல்ல வேண்டியதை ‘காணிப் புவிப்படங்கள்’ என்று பாடத்தில் உள்ளேயும் மதிப்பீட்டில் ‘நிலக்கனிய புவிப்படங்கள்’ என்று மொழியாக்கம் செய்யும் புலமையைப் பாராட்டாமல் இருக்க இயலவில்லை! 

   இவ்வளவு ஆழ்ந்தகன்ற புலமையுடையோர்  'plans' / 'பிளான்கள்' என்று ஒலிபெயர்ப்பதும் நடக்கிறது.

    இது மொழிபெயர்ப்புச் சீரழிவிற்கு ஒரு எடுத்துக்காட்டுதான். பாடநூலின் பக்கங்கள் தோறும் இதே நிலைதான். குழந்தைகளுக்கு எழுதப்படும் பாடங்கள் என்பதை முதற்கண் நினைவுபடுத்துக் கொள்வதும் இப்பாடங்களை முதலில் தமிழில் எழுதுவதும் இச்சீரழிவுகளைத் தடுக்கும்  முயற்சியின் தொடக்கமாக அமையும்.


(அபத்தங்கள் தொடரும்…)

1 கருத்து:

prabhu சொன்னது…

பாடநூல்கள் தயாரித்தல் ஏதோ சோப்பு கம்பேனி போல நடத்துவதால் வந்த விபரீதம்

கருத்துரையிடுக