புதன், மார்ச் 04, 2020

மூலாதார நூல்களின் கதை!


மூலாதார நூல்களின் கதை!


மு.சிவகுருநாதன்

       

      பாடநூல்கள் மேற்கோள் அல்லது பார்வை நூல்களைப் பாடத்தின் இறுதியில் பட்டியலிடுகின்றன.  'References , ஆங்கிலத்திலும்  'மூலாதார நூல்கள்' என்று தமிழிலும் குறிக்கப்படுகின்றன.

      மூலம் + ஆதாரம் + நூல்கள்  = மூலாதார நூல்கள்


    சமண ஆகமங்களான சூத்திரங்கள், அங்கங்கள், உப அங்கங்கள் ஆகியன சமணத்திற்கும் வினய, சுத்த, அபிதம்ம பீடகங்கள் எனப்படும் மூக்கூடைகள் போன்றவையும் பவுத்த மூல நூல்களாகச் சொல்ல வேண்டியன. சிந்தாமணி, மணிமேகலை போன்றவற்றைக் கூட சொல்லலாம். ஆனால் இவர்கள் சொல்வது பார்வை நூல்கள்தானே தவிர, மூல நூல்கள் அல்ல.

        
   ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவ சமூக அறிவியல் வரலாற்றுப் பகுதியில்   அலகு - 3  'தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத்  தத்துவங்கள்' எனும் பாடம் இருக்கிறது.

     இதன் பார்வை / சான்று / மேற்கோள் / ஆதார நூல்கள்  பட்டியல் கீழேத்  தரப்படுகிறது.


"மூலாதார நூல்கள்


1. Glimpses of World Religions: Buddhism, Jaico,  2004).
2. Henry Thomas, Dana Lee Thomas, Living  Biographies of Great Religious Leaders, Bharatiya  Vidya Bhavan, 1996.
3. Abraham Early, Gem in the Lotus, Penguin, 2002.
4. P.C. Alexander, Buddhism in Kerala, Annamalai  University, 1949.
5. Times of India, 21 July 2014.
6. The Hindu, 7 September 2014",  (பக்.163)

  
   இவற்றை வாசிக்கும்போது பேரதிர்ச்சியாக உள்ளது.  இவற்றின் அடிப்படையில் தான் இப்பாடம் எழுதப்பட்டுள்ளதா? தமிழ்நாட்டில் சமணம், பவுத்தம், ஆசீவகம் குறித்த நூல்கள் எதுவும் தமிழ் ஆங்கிலத்தில் இல்லையா என்று கேள்வி எழுவதும்  இயல்பானது.

    P.C. Alexander  எழுதிய   'Buddhism in Kerala', என்னும் நூல்தான்  தமிழகத்தில் பவுத்தம் தொடர்பான மூலாதார நூலாம்!  (இவர் தமிழக முன்னாள் ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் அல்ல; பேராசிரியர்.)
  
    உலக மதங்களைப் பற்றிய நூல்களும் கேரளாவில் பவுத்தம், போன்றவற்றையும் நாளிதழ்களின் கட்டுரைகளையும் மூலாதாரமாகக் கொள்வது அறிவுடைமையா?

       'Gem in the Lotus' என்னும் நூலை எழுதிய  Abraham Eraly   Abraham Early  என்று மாற்றுபவர்கள் உண்மையில் அப்புத்தகத்தைப் பார்த்து அல்லது படித்து எழுதியிருக்கக் கூடுமோ!

     'ஆசீவகத் தத்துவம்'  எனும் தலைப்பில் "ஆசீவகப் பிரிவின் தலைவர் கோசலா  மன்காலி புத்தா ஆவார்", (பக்.162) பாடநூல் சொல்கிறது.


    ஆங்கில வழியில், 

       "The head of Ajivika sect  was Gosala Mankhaliputta", (page: 132)

        மற்கலி கோசலர்  என்பது 'கோசலா  மன்காலிபுத்தா' என்று ஏன் திரிகிறது? இப்பெயர் எந்த மூலாதார நூலில் இடம் பெறுகிறது?  இந்துத்துவம்  இவர்களைக்  'காலி'களாகத்தான் கருதுகிறது. அதன் வெளிப்பாடாக இதனை எடுத்துக் கொள்ளலாம் போலும்!

    மற்கலி, மக்கலி, மன்கலி என்பதை  'காலி'  எனத் திரிக்க வேண்டாம். மற்கலி புத்திரர் மற்கலி புத்தர் எனத் திரிந்ததாகவும் சொல்வர்.

   "கல்பசூத்ராவின் ஜைனசரிதா எனும்  சமண நூல் சமண தீர்த்தங்கரர்களின்  வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கமாகக்  கொண்டுள்ளது. குறிப்பாக சமண சமயத்தை நிறுவியவரும் முதல் தீர்த்தங்கரருமான பார்சவநாதர், கடைசியும் 24 வது  தீர்த்தங்கரருமான மகாவீரர் ஆகியோரின்  வரலாறுகள் இதில் இடம் பெற்றுள்ளன.  இந்நூலின் ஆசிரியராகக் கருதப்படும்  பத்ரபாகு, சந்திரகுப்த மௌரியரோடு  மைசூருக்குப் புலம்பெயர்ந்து (ஏறத்தாழ கி.மு.296) பின் அங்கேயே குடியமர்ந்தார்". (பக்.154)

     முதல் தீர்த்தங்கரர் பார்சவ நாதராம்! இவர்களது மூலாதாரப் பட்டியலே எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்குகிறதே! 

    ஆதி பகவன், விருஷபர், விருஷப தேவர் என்றெல்லாம் அழைக்கப்படுபவரே முதல் தீர்த்தங்கரர் ஆவார். பார்சுவநாதர் 23 வது தீர்த்தங்கரர்; மகாவீரர் 24 வது மற்றும் இறுதித் தீர்த்தங்கரர் ஆவார்.  முகலாய அரசர்களில் கடைசி அரசர் ஔரங்கசீப் என்று எழுதியவர்கள் தானே!  

     'திருமலை' சமணப் பள்ளி பற்றிய குறிப்பு இவ்வாறு செல்கிறது.

      "திருமலை சமணக் கோவில் தமிழ்நாட்டின்  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரின்  அருகே அமைந்துள்ள ஒரு குகை வளாகத்தில்  அமைந்துள்ளன. கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச்  சேர்ந்த இவ்வளாகத்தில் மூன்றுசமணக்  குகைகளும், இரண்டு சமணக் கோவில்களும்,  22வது தீர்த்தங்கரரான நேமிநாதருடைய  16 மீட்டர் உயரமுடைய சிலையும் உள்ளன.  நேமிநாதரின் இச்சிலையே தமிழ் நாட்டிலுள்ள  சமணச் சிலைகளில் மிகவும் உயரமானதாகக்  கருதப்படுகின்றது". (பக்.157)

       இங்காவது நேமிநாதர் 22 வது தீர்த்தங்கரர் என்று சொன்னதற்கு மகிழ்ச்சி. இவருடைய திருமேனி 16 மீட்டர் உயரமாம்! மயிலை சீனி. வேங்கடசாமி 16.5 அடி  என்கிறார். (சமணமும் தமிழும்) இதுவே உண்மை. ‘அடி’ ‘மீட்டரா’னது மூலாதார நூல்களின் திருப்பணி போலும்!

   'விக்கிபீடியா' 16 மீட்டர் என்கிறது. அதைக் 'காப்பி'யடிப்பவர்களுக்கு  இந்த ‘மூலாதார நூல்கள்’  என்கிற  'பில்டப்' தேவைதானா?

       16 மீட்டர் என்றால் சுமார் 53 அடி. அச்சிலை  உண்மையில் 16.5 அடி உயரம் கொண்டது; எனவே சுமார் 5 மீட்டர். 

    பாடநூல்கள் உண்மைகளைப் பேசுவது கானல் நீர்தான்!


       விரிவான பதிவு பின்னர்.

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அடி என்பது மீட்டராகிவிட்டது
வேடிக்கை
பாடநூல்களில் கவனமுடன் இருந்திருக்க வேண்டுமல்லவா

Ramesh DGI சொன்னது…

I would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Trending Tamil News | Current News in Tamil | Top Tamil News | Kollywood News

கருத்துரையிடுக