ஞாயிறு, நவம்பர் 22, 2020

பதநீர்ச் சோறு அல்லது பதநீர்ப் பொங்கல்

 பதநீர்ச் சோறு அல்லது பதநீர்ப் பொங்கல்

 

மு.சிவகுருநாதன்  

 



 

      இன்று (21/11/2020) சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றி படுக்கையில் இருக்கும் அம்மாவைப் பார்க்கச் சென்றிருந்தேன்.

     "என்னுடைய அப்பா, அம்மா இருந்தால் என்னை நல்லா பாத்துப்பாங்க...", என்றார். 1994 இல் காலமான ஆத்தாவிற்கும் 2001 இல் காலமான தாத்தாவிற்கும் இன்று 100 வயதைக் கடந்திருக்கும். 80 ஐ 100 கள் எப்படிக் கவனிக்க முடியும்?

      வயது ஆக ஆக குழந்தையாகவே மாறிவிடுவோம் போல. எனவே இந்த 80 வயதுக் குழந்தையின் நம்பிக்கை இப்படி இருக்கிறது. குழந்தைகளின் ஒரே நம்பிக்கை தாய் தந்தை மட்டுந்தானே!

    பதநீர்ச் சோறு நினைவில் வந்து போயிருக்கும் போல. அதைப் பற்றியும் செய்முறையையும் சொன்னார்; கேட்டுக்கொண்டேன்.

    சிறுவயதில் பலமுறை செய்து கொடுத்துள்ளார்; ருசித்துச் சாப்பிட்டுள்ளோம். அம்மா எது செய்தாலும் ருசிதானே! அதில் அறுசுவையுடன் கூடவே அன்பும் கலந்திருக்கும் அல்லவா!

      லிட்டர் கணக்கில் பதநீரை வாங்கிச் சூடாக்கித் தெளிய வைத்து, வடிகட்டி அதையே உலைநீராகப் பயன்படுத்தி, அரிசி போட்டுப் பொங்கினால் பதநீர்ச் சோறு ரெடி. இனிப்பு கூட தேவையில்லை. அவ்வளவு அமிர்தம்! தேவையெனில் கூடுதலாக இனிப்பைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    உங்களுக்கு இந்த அநுபவம் உண்டா?

வியாழன், நவம்பர் 19, 2020

மூன்றாம் வகுப்பாசிரியருடன் சினிமா பார்த்த கதை!

 மூன்றாம் வகுப்பாசிரியருடன் சினிமா பார்த்த கதை!

 

 மு.சிவகுருநாதன்



 

       எங்களூரில் ‘டூரிங் டாக்கீஸ்’ எனப்படும் சினிமாக் கொட்டகை இல்லை. அப்போது கிராமங்களில் கீற்றுக் கொட்டகையில்தான் சினிமா. பக்கத்து ஊரான துளசியாப்பட்டினத்தில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது; பெயர் கதிரவன் திரையரங்கம். இது இஸ்லாமியர் ஒருவரால் நடத்தப்பட்டது. 

 

       கும்பகோணம்  ஶ்ரீகிருஷ்ணா பள்ளி  தீ விபத்தால் பள்ளிகளில் கீற்றுக் கொட்டகைகள் இல்லாமல் ஆக்கப்பட்டதுபோல், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ஒரு திரையரங்கில் நடத்த தீவிபத்தால் கீற்றுக் கொட்டகைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. 29.07.1979 இல் தூத்துக்குடி லூர்து அம்மாள்புரம் லட்சுமி டூரிங் டாக்கீஸில் சிவாஜிகணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, தேவிகா நடித்த ‘பாவ மன்னிப்பு’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 115 பேர் கருகி மாண்டனர். அதன் பிறகு கீற்றுக் கொட்டகைகளுக்கு உரிமம் ரத்தானது. எனவே 1979 இல் ஆறு வயதுடன் எனது டூரிங் டாக்கீஸ் அனுபவம் முற்றுப்பெற்றது.

 

     எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் நிறைய இங்குதான் பார்த்திருக்கிறோம். மணல் தரையில் மேடாக்கி உட்கார்ந்து பாதிப்படம் பார்த்து, மீதிப்படத்தில் தூங்கி, படம் முடிந்ததும் எழுந்து வந்திருக்கிறோம். தரை டிக்கெட் 25, 50 பைசா அளவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

 

      சினிமாவிற்குச் செல்ல அப்பாவிடம் ஒருவழியாக அனுமதி வாங்கி, கிளம்புவதற்குள் 'நலந்தானா...' பாடல் ஒலிக்கத் தொடங்கிவிடும். இது திரைப்படம் தொடங்குவதற்கான ஒரு குறியீடு; இப்பாடல் முடிந்தபிறகு திரைப்படம் போடப்படும். சில நாள்களில் நீயுஸ் ரீல் (News Reel) போடுவார்கள். அதில் உலகப்போர் பற்றிய படங்களே அதிகமிருந்ததால் மக்கள் அதை வார் ரீல் (War Reel) என்றே சொன்னார்கள்.

 

    எங்கள் வீட்டிலிருந்து முக்கால் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திரையரங்கின் போடும் ரெக்கார்டு ஒலி நன்றாகக் கேட்கும். ஓட்டமும் நடையுமாக விரைந்து டிக்கெட் பெற்று அந்த அரங்கில் நுழைவோம். 

 


 

 

      எங்கள் பக்கத்து வீட்டில் அஞ்சல்காரராகப் பணிபுரிந்த திரு சந்திரன் அங்கு சீட்டுக் கிழிப்பார். அஞ்சல் துறையின் புறநிலை ஊழியர்களுக்கு அன்று வெகு சொற்ப ஊதியம். அதனால் அவர்கள் அந்த வேலை தவிர்த்த நேரங்களில் பிற பணிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம். இன்றும் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை.

 

        எப்போதும் தரை டிக்கெட்தான். பெஞ்சுகள் மற்றும் ஒரு வரிசை நாற்காலிகள் இருக்கும். எப்போதும் தரை டிக்கெட்டுக்குதான்  வீட்டில் பணம் கிடைக்கும்.

 

        தாத்தா, பாட்டி, அம்மா, அக்கா, அண்ணன்களுடன் இங்கு படம் பார்த்த அனுபவம் உண்டு. அப்பாவுடன் படம் பார்த்ததில்லை. அவர் எங்களுடன் வரமாட்டார்; தனியாகவும் செல்லவும் மாட்டார். கோயில் திருவிழாக்களுக்கும் எங்களுக்கு பணம் கொடுத்தனுப்புவார். அவர் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பார் அல்லது எங்காவது வெளியூர் சென்றுவிடுவார்.  அவர் ஊதியமாகப் பெற்றுவரும் புதிய 1,2 மற்றும் 5 ரூபாய் புதிய நோட்டுகளை திருவிழா செலவிற்கு அளிப்பார். அந்தப் புதிய நோட்டைச் செலவளிக்க மனமின்றிப் பத்திரப்படுத்துவோம்.

  

         முத்துப்பேட்டை சின்னம்மா வீட்டிற்குச் செல்லும்போது வேதநாயகி திரையரங்கில் படம் பார்த்திருக்கிறோம். திருவாரூர் மாமா வீட்டிற்கு வரும்போது அம்மையப்பா, செங்கம் தியேட்டரில் படம் பார்த்த அனுபவங்கள் உண்டு. இப்போதைய நடேஷ் திரையரங்கம்தான் அப்போதைய அம்மையப்பா. அன்று செங்கம் தியேட்டரில் தமிழ்ப் படங்கள் ஓடின.

 


     ஒருமுறை அப்பா திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் இருந்தபோது நண்பர் திரு வை.அன்பழகனுடன் பார்க்க வந்தேன். அப்போது பணம் கொடுத்து தியேட்டருக்கு அழைத்துச் செல்லச் சொன்னார் அப்பா. அன்று திருத்துறைப்பூண்டி வாசன் தியேட்டரில் கமல்ஹாசனின் ‘காக்கிச்சட்டை’யைப் பார்த்தோம். 

 

       மிகவும் கண்டிப்பான அந்த மூன்றாம் வகுப்பாசிரியர், எங்கள் வீட்டிலும் ஆசிரியராகத்தான் இருந்தார். எனவே அம்மாவுடன்தான் நாங்கள் நெருக்கமாக இருந்தோம். 

 

        தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தபோதிலும் குறைவான ஊதியம், பெரிய குடும்பம் என்பதால் வசதிகள் மிகக் குறைவாகவே இருந்தன. அதிக எண்ணிக்கையிலான உடைகள் இருக்காது. ஆண்டுக்கு இருமுறை புதுத்துணி கிடைக்கும். 1980 களின் இறுதியில் தான் டி.வி., கிரைண்டர் ஆகியன கிடைத்தன. அதுவரையில் ஆட்டுக்கல்லில் அம்மாவுக்கு உதவியாக மாவாட்டுவோம். 

 

      ஒரு சமயம் தீபாவளி சமயத்தில் அம்மா உடல்நலக்குறைவால் இருந்ததால், 2018 இல் காலமான பெரியப்பா வீட்டு அண்ணன் சந்தானகிருஷ்ணனுடன் சேர்ந்து மாவரைத்து, இட்லி, புரோட்டா என பலகாரங்கள் செய்தது நினைவுக்கு வருகிறது.

 

      கிரைண்டரில் மாவரைக்கத் தொடங்கியாயிற்று. ஆனால் டி.வி.யில் உடனே படம் பாத்துவிட முடியுமா என்ன? தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிலையங்கள் சென்னை, கொடைக்கானல் ஆகிய இடங்களில் இருந்தன. கும்பகோணம், நாகப்பட்டினம் (சிக்கல்), காரைக்கால் ஒளிபரப்பு மையங்கள் அப்போது கிடையாது. 

 

   சென்னை ஒலிபரப்பு இங்கு கிடைக்க வாய்ப்பில்லை. கொடைக்கானல் ஒளிபரப்பும் வெறும் புள்ளிகளாகத் தெரியும். அதற்கு மிக உயரமான ஆன்டெனா அமைக்க வேண்டும். 60 அடி உயரத்தில் ஆண்டெனா அமைக்க முடிவாயிற்று. டி.வி. ரிப்பேரிங் கடை வைத்திருக்கும்  'ஊசி' என்று பிரியமாக அழைக்கப்பட்ட திரு இராஜேந்திரனை அழைத்துக் கொண்டு நாங்கள் மூவரும் பட்டுக்கோட்டை சென்று ஒன்றுக்குள் ஒன்றாக பொருந்துமாறு வடிவமைக்கப்பட்ட 20 அடி இரும்புக்குழாய்கள் மூன்று வாங்கினோம்.  மாலை நேரம் மெக்கானிக்கை மட்டும் ஊருக்கு அனுப்பி விட்டோம்.

 

       அதை ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பேருந்தின் மேல் ஏற்றித்தான் கொண்டு செல்ல வேண்டும். அரசுப் பேருந்துகளில் ஏற்ற இயலாது. விடியற்காலை வேளையில் தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக வேதாரண்யம் வரும்  'குருவி' எனும் தனியார் பேருந்தில்தான் ஏற்றிச் செல்ல வேண்டும். அதற்கான முன்னேற்பாட்டுடன்தான் கிளம்பியிருந்தோம். 

 

      கடல் நீல வண்ணத்தில் இருக்கும் குருவி சோப் அப்பகுதியில் பிரபலம்; டிடர்ஜெண்ட் அல்ல, சோப்பு. அந்த நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான  இரண்டு பேருந்துகள் இருந்தன. ஒன்று இவ்வழியாகவும் மற்றொன்று புதுக்கோட்டைக்கும் சென்றுகொண்டிருந்தது. 

 

       நள்ளிரவு 12 மணிக்கு மேல் தஞ்சாவூரில் கிளம்பும் இப்பேருந்து 1:30 வாக்கில் பட்டுக்கோட்டை வந்து 2:30 க்கு மேல் கிளம்பி சுமார் 4:00 மணியளவில் எங்களூரை அடையும். இதன் பணியாளர்கள் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் குட்டித்தூக்கம் போட்டுப் பணியாற்றுவார்கள்.

 

      ஆண்டெனாவிற்கு வாங்கிய  இரும்புக் குழாய்களை பேருந்து நிலையம் ஏற்றி வந்தாகிவிட்டது. நள்ளிரவு 2:00 மணிக்குப் பேருந்தில் ஏற்றும் வரை அதற்குக் காவல் காக்க வேண்டியதுதான். 

 

       அருகிலுள்ள அன்னப்பூர்ணா தியேட்டரில் 'கோபுர வாசலிலே...' என்ற படம் ஓடிக்கொண்டிருந்தது. டீ குடித்துவிட்டு அப்பா இரவுக்காட்சி பார்ப்பதற்குக் கிளம்பினார். நான் காவல்; பின்னிரவுக் காட்சியில் நான் படம் பார்க்க வேண்டும்; அப்போது அவரது காவல்.

 

      இரவு 10 மணிக்கு மேல் அதிக கூட்டமிருக்காது. நான் தனியே நிற்க வேண்டியிருக்கும். அதனால் நான் முதலில் சென்று திரும்பி விடுகிறேன். டிபன் சாப்பிட்டு விட்டு நீ செல்லலாம் என்றார் அப்பா. 

 

     அதன்படி அப்பா முதலில் படம் பார்த்துவிட்டு வந்தார். இருவரும் டிபன் சாப்பிட்டோம். பிறகு என்னிடம் பணம் கொடுத்து இரண்டாம் காட்சிக்கு அனுப்பினார்.

 

    ‘கோபுர வாசலிலே…’ 1991 மார்ச்சில் வெளியான படம். நாங்கள் சென்றது ஏப்ரல் மாதமாக இருக்கலாம். பிரியதர்ஷன் இயக்கத்தில் பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவில் கார்த்திக், பானுப்பிரியா, விசித்ரா, மோகன்லால், ஜனகராஜ், சார்லி, வீ.கே.ராமசாமி, நாகேஷ் என பெரும் பட்டாளமே நடித்திருந்த நன்றாக ஓடிய படமிது. படம் முடிந்து வந்ததும் படம் நல்லாயிருந்ததா எனக்கேட்டார்; தலையாட்டினேன்.

 

    விடியற்காலை  பேருந்தில்  ஏற்றி வீட்டில் இறக்கி, ஒரு வழியாக கொடைக்கானல் ஆண்டெனாவைப் பொருத்தினோம். புள்ளிகளுடன்தான் படம் தெரிந்தது. வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், சில படங்கள், தூர்தர்ஷன் செய்திகள் என்பதாக அன்றைய தொலைக்காட்சிப் பார்வைகள் இருந்தன. 

 

    இலங்கைத் தமிழ் தொலைக்காட்சியான ‘ரூபவாகினி’ மிகத் தெளிவாகத் தெரியும். மாலையில் தமிழ் நிகழ்ச்சிகள் போடுவார்கள். 6:30 க்கு தமிழ்ச் செய்திகள். தெளிவாக இருப்பதால் சிங்கள நிகழ்ச்சிகளையும் மலையாள மொழி போலப் பார்த்து ரசித்ததுண்டு. 

 

    அப்பா அடிக்கடி சென்னை செல்வார். அப்போது இந்தப் புள்ளியாட்டத்திலிருந்து தப்பிக்க Hitachi VHS Player வாங்கி வந்தார். கூடவே கல்யாணப் பரிசு, மனோகரா, வீரப்பாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடல், ஒளியும் ஒலியும் என ராஜ் வீடியோ விஷனிலிருந்து நிறைய அள்ளி வந்தார். அதையும் கொஞ்சநாள் பார்த்து ரசித்தோம். பெரும்பாலும் அவர் இல்லாத நேரங்களில்தான்  ரேடியா கேட்பதும் டி.வி. பார்ப்பதும் நடைபெறும்.

 

     இந்த உயரமான ஆண்டெனா மழைக்காற்றில் திரும்புவதும் உடைவதும் வாடிக்கை. ஒரு முறை நண்பர் க.அண்ணாதுரையுடன் (அன்புடன் ஜீயே) பழுது பார்க்கும்போது அண்ணன் இராமநாதன் கைவிரலில் பைப் நழுவி விழுந்து பெருங்காயம் ஏற்பட்டு கூரையில் மயங்கி விழுந்தார். மெதுவாக அவரை தரை இறக்கினோம். பிற்காலத்தில் சிக்கல் ஆண்டெனா வைத்து ஓரளவுத் தெளிவான ஒளிபரப்பைப் பார்த்தோம். 

 

     வீட்டில் மிகவும் கண்டிப்பாக இருப்பார் அப்பா. அவர் வீட்டுக்கு வரும்போது வீடே அமைதியாகிவிடும். அனைவரும் கொல்லைப்புறம் சென்றுவிடுவோம். ஆனால் வெளியே  செல்லும்போது மட்டும் வெகு இயல்பாக பல்வேறு செய்திகள், கதைகளைப் பேசிக்கொண்டே வருவார். தஞ்சாவூர், திருச்சி, ஒட்டன்சத்திரம், கோயம்புத்தூர், சென்னை என நீண்ட பயணங்களில் பல கதைகளைக் கேட்டுள்ளேன். குழந்தையாக இருந்தபோது அப்பாவின் மரணம், அவரது இளமைப்பருவம், படிப்பை நிறுத்தி மீண்டும் தொடர்தல், தஞ்சாவூரில் ஆசிரியப் பயிற்சி, சிவகங்கை பூங்காவில் சுற்றியது என்பதாக எண்ணற்ற நிகழ்வுகளை விவரித்துள்ளார்.

 

      எங்கள் வீட்டில் அப்பாவுடன் சேர்ந்து யாரும் படம் பார்த்தார்களா என்பது தெரியவில்லை. அன்று தனித்தனியே இருவரும் படம் பார்த்தோம்.

 

        ஒருமுறை அப்பாவுடன் சேர்ந்து சினிமா பார்த்த நிகழ்வும் நடந்தது. ஆடுதுறையில் ஆசிரியர் பயிற்சியில் படித்த சமயம், முதலாமாண்டு (1990-91) விடுதி திறக்கபடாததால், ஆடுதுறை தரங்கம்பாடி சாலையில் ஒரு பழைய நாட்டு ஓடு வேயப்பட்ட வீடு ஒன்றில் சுமார்  10 மாணவர்கள்  சேர்ந்து தங்கியிருந்தோம். 

 

     அப்போது இரவில் என்னைப் பார்க்க வந்த அப்பா இரவு ஊருக்குச் செல்ல இயலாததால் எங்களுடன் தங்கினார். எனது நண்பர்கள் தியாக சுந்தரம், பன்னீர் செல்வம், மகேஸ்வரன், அகோரமூர்த்தி, ராஜகோபாலன் (அருகே வேறொரு அறையில் தங்கியிருந்தோர்)  மிகவும் மகிழ்ச்சியாக உரையாடிப் பொழுது போக்கினார். இரவு டிபனுக்குப் பிறகு அவர்களது அறைக்குச் சென்று உரையாடினோம். 

 

    இரவு கொசுக்கடி, புது இடம்  தூங்க இயலாது. எனவே தியேட்டருக்குப் போகலாம், என்றார். அருகே இருந்த ஆர்.சி.ஏ. என்ற தியேட்டரில் டாக்டர் ராஜசேகரின் தெலுங்கு டப்பிங் படம் ‘மீசைக்காரன்’ ஓடிக்கொண்டிருந்தது. ஒன்றுமில்லாத சுமாரான படம். அப்படத்தை நண்பர்கள் அனைவரும் நேற்றுதான் சென்று பார்த்திருந்தோம். எனவே நண்பர்கள் யாரும் உடன் வரவில்லை. வேறு வழியின்றி நானும் அப்பாவும் சென்று அப்படத்தைப் பார்த்துத் திரும்பினோம்.  

 

    அப்பாவிற்காக அப்படத்தை மீண்டும்  பார்த்தேன். அந்தப்பட ஷூட்டிங்கில் விபத்து (15.11.1989) நடந்த இடம் என்று ஓரிடத்தில் படத்தில் சுட்டிக் காட்டுவார்கள். இவரது டப்பிங் படங்கள் அமோகமாக ஓடிய காலமது.

 

     அப்பாவுடன் சேர்ந்து பார்த்த முதலும் கடைசியுமான படமது. அதற்கு முன்போ, பின்பே அத்தகைய வாய்ப்பு ஒன்று அமையவேயில்லை. இன்று அப்பா இல்லை; அந்த நினைவுகள் மட்டும் பசுமையாய் படர்ந்திருக்கிறது.  

 

(இன்று நவம்பர் 19 (19/11/2020) அப்பாவின் 15 வது நினைவு நாள்.)   

வியாழன், நவம்பர் 12, 2020

'ஏ.ஜி.கே. எனும் போராளி’ தொகுப்பு நூல் வெளிவந்துவிட்டது!

 '.ஜி.கே. எனும் போராளி’ தொகுப்பு நூல் வெளிவந்துவிட்டது!

 


 

      மூன்றாண்டுகளாக முயற்சி செய்து பல்வேறு தோல்விகளுக்குப் பிறகும் ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’  என்ற ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் குறித்த விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு ஒரு வழியாக இன்று (12/11/2020) வெளியாகியுள்ளது.

 

     கீழத்தஞ்சையின் அடையாளங்களுள் ஒன்றாக போராடி வாழ்ந்து மறைந்த தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் சித்திரத்தை பல்வேறு கோணங்களில் இந்நூலிலுள்ள கட்டுரைகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

 

     தியாகு, வ.கீதா, பொதிகைச்சித்தர், சி.அறிவுறுவோன், நாகை மாலி, ஐ.வி.நாகராஜன், சாம்ராஜ், பாவெல் சூரியன், பசு.கவுதமன், மு.இளங்கோவன், தெ.வெற்றிச்செல்வன், கோ.சுகுமாரன், தய்.கந்தசாமி, செ.சண்முகசுந்தரம், இரா.மோகன்ராஜன், மலையூர் ஆறுமுகம், துவாரகா சாமிநாதன், த.ரெ.தமிழ்மணி, ஏ.ஜி.வி.ரவி, ஏ.ஜி.கே.அஜிதா, கோ.கலியமூர்த்தி, மு.சிவகுருநாதன் போன்றோரின் 29 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. இவற்றில் 17 கட்டுரைகள் இதுவரையில் பிரசுரமாகாதவை; இத்தொகுப்பிற்கென எழுதப்பட்டவை.  


 

 

    இதழ்களில் வெளிவந்த ஏ.ஜி.கே. மறைவிற்கு எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்புகள், ‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ நூல் விமர்சனக்குறிப்புகள் ஆகியனவும் இந்நூலில் இடம்பெறுகின்றன.

 


     பின்னிணைப்பாக தியாகுவின் தொடரிலிருந்து இரு அத்தியாயங்கள், வெண்மணி குறித்த பெரியாரின் அறிக்கை, ஏ.ஜி.கே. வாழ்க்கை மற்றும் நூல் குறிப்புகள் என பல்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. 

 


 

 

    ‘பன்மை’யின் முதல் வெளியீடாக இந்நூல் வெளியாகியுள்ளது. சென்னையில் பாரதி புத்தகாலயத்தில் இந்நூல் விற்பனைக்குக் கிடைக்கிறது. பக்கங்கள்: 296; விலை 290. நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். அலைபேசி எண்கள்     9842402010, 9842802010

 

 

நூல் குறிப்புகள்:

 

ஏ.ஜி.கே. எனும் போராளி - கட்டுரைகள்

 

தொகுப்பு : மு.சிவகுருநாதன் 

 

முதல் பதிப்பு: நவம்பர், 2020

 

பக்கங்கள்: 296 

 

விலை: 290

 

சலுகை விலை: நேரில்: 200, அஞ்சலில்: 220, கூரியரில்: 250

 

வெளியீடு : 

 

பன்மை,

நிலா வீடு, 

2/396, பி, புரட்டாசி வீதி,

கூட்டுறவு நகர், 

தியானபுரம் - விளமல்,

மாவட்ட ஆட்சியரகம் - அஞ்சல்,

திருவாரூர் - 610004.

அலைபேசி:      9842402010, 9842802010

 

மின்னஞ்சல்: 

 

panmai2010@gmail.com | panmai@live.com

 

இணையம்: www.panmai.in   

 

புதன், நவம்பர் 11, 2020

அந்தக் காலத்தில் கூரைகள் இருந்தன!

 

அந்தக் காலத்தில் கூரைகள் இருந்தன!

 

மு.சிவகுருநாதன்

 

 

      இன்று (09/11/2020)  குழந்தைகள் கவிநிலா, கயல்நிலா இருவருக்கும் நான் படித்த தொடக்கப்பள்ளியைச் சுற்றிக் காட்டினேன். நான் இங்குதான் ஒன்று முதல் அய்ந்து முடிய 5 ஆண்டுகள் (1978 - 1983) என மொத்தம் 7 (1976 - 1983)  ஆண்டுகளைக் கழித்த இடமாகும். 

 

     கூடுதலாக ஏன் இரண்டாண்டுகள் என்ற அய்யம் ஏற்படலாம். 5 வயதில் பள்ளியில் சேர்வதற்கு முன்பாகவே மூன்று வயதிலிருந்தே அக்கா மு.மங்கையர்க்கரசி, அண்ணன் மு.இராமநாதன் ஆகியோருடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். மூன்றாம் வகுப்பைத் தவிர  பிற வகுப்புகளில் அந்த இரண்டாண்டுகள் கழிந்தது. 

 

       நான் பிறப்பதற்கு முன்பு வரையில்  எங்களது குடும்பம் பள்ளி அருகே இருந்தது. எனவே எங்கள் அனைவருக்கும் பள்ளியும் வீடும் ஒன்றுதான்; பெரிதான வேறுபாடுகள் இல்லை.  அப்பா வீட்டிலும் பெரும்பாலும் ஆசிரியராகவே இருந்தார். 1972 வாக்கில் எங்கள் குடும்பம் அண்ணாப்பேட்டையிலிருந்து திருக்குவளைக்கட்டளை வேதாரண்யம் பட்டுக்கோட்டை சாலையை ஒட்டி  முனியன் கோயில் அருகே குடிபெயர்கிறது. 

 

         மூன்றாம் வகுப்பில் மட்டும் ஏன் உட்கார்வதில்லை என்றால் அவ்வகுப்பாசிரியர் மீதான பயம்தான்! இன்னொன்றையும் சொல்ல மறந்தேன்.  அந்த மூன்றாம் வகுப்பாசிரியர், அப்பள்ளியின் நிறுவனரும்  அப்போதைய மேலாளருமான திரு ச. முனியப்பன் அவர்கள்தான் எனது தந்தையார்.  1952 இல் தொடங்கப்பட்ட இந்த வ.உ.சி. உதவித் தொடக்கப்பள்ளிக்கு  01/11/1954 இல் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

    அப்போது தலைமையாசிரியராகவும் அய்ந்தாம் வகுப்பாசிரியராகவும் இருந்த திரு சிங்காரம் அவர்கள் தகட்டூரில் இருந்து வருவார். நாள்தோறும் வண்ண மிட்டாய்களை தாளில் மடித்து வாங்கி வந்துத்தருவார்.  இன்றுள்ள நவீன சாக்லெட்டுகள் அன்று கிடையாதல்லவா! அக்கா, அண்ணன் வகுப்புகள்  என இரண்டாண்டுகள் ஓடின. 

 

        முதலிரண்டு வகுப்புகளுக்கு மருதூர்  திரு சி.வீராச்சாமி அவர்கள் ஆசிரியராக இருந்தார். நான்காம் வகுப்பாசிரியர் திரு இல. கணேசன் அவர்கள். 5 வகுப்புகளில் 4 ஆசிரியர்கள்; இவர்களில் எனது தந்தையும் திரு வீராச்சாமி அவர்களும் இன்று உயிருடன் இல்லை. 

 

        அன்று  சுமார் 200 மாணவர்கள் படித்தோம்; இன்று மாணவர் எண்ணிக்கை சுமார் 80 இருக்கும். இரண்டு கூரைக்கட்டிடங்களுடன் இப்பள்ளி இயங்கியது. கூரையில் தென்னங்கீற்றுக்கு மேலாக வைக்கோல், பனை மட்டை வேயப்பட்டதாக இருந்தது. தற்போது  ஓட்டுக் கட்டிடமாக உள்ள இப்பள்ளியை  எனது அண்ணன் திரு மு.செந்தில்நாதன் நிர்வகித்து வருகிறார். அரசு உதவிபெறும் தமிழ் வழி மட்டுமே; சுயநிதி வகுப்புகள் கிடையாது. 

 

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கரியாப்பட்டினம் என்னும் ஊரில் பிறந்த எனது தந்தையார் அன்றிருந்த இறுக்கமான சாதீயச் சூழலில் தொடக்கப்பள்ளி (1938 - 1943) முடித்து 6,7 மற்றும் 8 வகுப்புகளுக்காக ஆயக்காரன்புலம் அரசுப்பள்ளிக்குச் செல்ல இயலவில்லை.  தனது ஊரில் 6 ஆம் வகுப்பு தொடங்கும் வரையில் மூன்றாண்டுகள் (1943 - 1946) வீட்டிலேயே இருக்க நேரிட்டது.  

 

       பிற்காலத்தில் நான் அதே ஆயக்காரன்புலம் பள்ளியில் +1, +2 வகுப்புகளை  (1988 - 1990) நிறைவு செய்தேன். வேறு வழியின்றி பள்ளிகளில் நாங்கள் படிக்க அனுமதிக்கப்பட்டோமே தவிர, இறுக்கமாக சாதீய ஆதிக்கம் தொடரவேச் செய்தது. இதை நாங்கள் நேரடியாக உணர்ந்தோம். 

 

       எடுத்துக்காட்டாக, ஏதேனும் ஒன்றிற்காக எந்த ஊர் என்று வினவப்பட்டு, அண்ணாப்பேட்டை என்று கூறியவுடன் ஏன் இங்கு படிக்க வந்தீர்கள்? முத்துப்பேட்டை செல்ல வேண்டியதுதானே! என்று கேட்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன்.

 

        அன்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் ஆகியன இல்லை; எல்லாம் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமே.  வேதாரண்யம் வட்டம் மேற்கே துளசியாப்பட்டினம்  வளவனாற்றங்கரை  வரையில் உள்ளபோதும், வாய்மேட்டைத் தாண்டி கணக்கில் கொள்ளாத காலமது. 

 

       அன்று (1988 - 1990)  சரபோஜிராஜபுரம், தாணிக்கோட்டகம், தகட்டூர், இடும்பாவனம்,  தில்லைவிளாகம்   ஆகிய ஊர்களில் மேனிலைப்பள்ளிகள்  இல்லை. சில இடங்களில் உயர்நிலைப்பள்ளிகள்  கூட கிடையாது. 

 

        அண்ணாப்பேட்டையிலிருந்து ஆயக்காரன்புலம் 12 கி.மீ.; ஒரே ஒன்றியம், வட்டம். முத்துப்பேட்டைக்கு 20 கி.மீ.; மேலும் வேறு ஒன்றியம், வட்டம். மேலும் அன்று விலையில்லா பேருந்துப் பயண அட்டையெல்லாம் கிடையாது. அரசுப்பேருந்துகளில் பணம் கொடுத்துத் தான் சென்றோம். காலையும் (08:30) மாலையும் (05:30) பட்டுக்கோட்டையிலிருந்து மதுக்கூர்  வழியாக வேதாரண்யம் செல்லும் ஒரு தனியார் பேருந்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டணச் சலுகை அளித்தனர். அன்று SPT என்றழைக்கப்பட்ட ஸ்ரீபெரியநாயகி அம்மாள் டிரான்ஸ்போர்ட் பேருந்தில்தான் பள்ளி சென்றோம்.  ஏன் முத்துப்பேட்டை போகவில்லை என்பது சாதியாதிக்கத்தின் குரலாகத்தான் இருந்தது.  எனது அப்பா காலத்தில் வகுப்பறையிலிருந்து மாணவர்களை விரட்டியடிக்கும் நிலை இருந்தது. இன்று சூழல் சற்று மாறியுள்ளது; இருப்பினும் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் அதிகம்.

       

 

   அன்று பிற்பட்ட வகுப்புகளிலும் ஆதிக்கச் சாதி அடக்குமுறைகளால்  கல்வி எட்டாக்கனியாக இருந்தது. இந்த நிலையில் தலித் மக்களின்  எவ்வளவு பேருக்குக் கல்வி கிடைத்திருக்கும்? ஏதோ ஒரு வழிகளில் இத்தகைய ஒடுக்குமுறைகள் தொடர்வது பெருங்கொடுமையல்லவா! 

 

 

    07/03/1931 அப்பாவின் உண்மையான பிறந்த நாள்; பள்ளிச்சான்றுகளின் படி 07/03/1933.  மூன்று ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு மூன்றாண்டுகளில்  (1946 - 1949)  எட்டாம் வகுப்பை முடித்து, தஞ்சாவூரில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி (அப்போது   தொழிற்கல்வியுடன் கூடிய ஆதார ஆசிரியர் பயிற்சி) முடிக்கிறார் (1949 - 1951). 

 

      அன்றுள்ள சூழலில் இப்பகுதிகளில் உள்ள பிற உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்ற விருப்பமில்லாத நிலையும், தன் அனுபவமும் தன் முனைப்பும் உந்தித்தள்ள அவரது அக்கா கண்ணம்மா ஊரில் (அண்ணாப்பேட்டை) 1952 இல் பள்ளி தொடங்குகிறார். 

 

      மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் தலித்களும் நிறைந்த இவ்வூரில் பள்ளி தொடங்கியது அவர் அனுபவித்த கொடுமைகள் மற்றும் மறுப்புகளின் பாதிப்பால் நிகழ்ந்தது. பெரியளவில் இல்லாவிட்டாலும் அப்பகுதிக் குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வியாவது அளிக்க முடிந்தது. 

 

    அன்று பள்ளியில் கிளை அஞ்சலகமும் செயல்பட்டது. அதன் தலைவராகவும் எனது தந்தையார் இருந்தார்.  காலையிலும் பள்ளி இடைவேளை நேரங்களிலும் கிளை அஞ்சலகம் செயல்படும்.  மதிய உணவு இடைவேளையில் அரக்கு உருக்கி சீலிடும் வாசனை எங்கும் நிறையும். அஞ்சல்காரராக  திரு கோவிந்தசாமி இருந்தார். அவரும் காலமாகிவிட்டார். 

 

       பழம் நினைவுகளுடன் குழந்தைகளுடன் சுற்றிப்பார்த்துப் படமெடுத்துக் கொண்டோம்.  காங்கிரீட் வகுப்பறைகள்  இல்லை. இல்லாவிட்டால் என்ன?மரங்கள் அடர்ந்த இயற்கையான சூழலில் பள்ளி இருக்கிறது. 

 

       வகுப்பறைகள், மைதானம் ஆகியவற்றைப் பார்த்த பிறகு கஜா புயல் நிவாரணமாக தோழர் செ.மணிமாறன் ஏற்பாட்டில் ஆரோக்கியம்  & நல்வாழ்வு முகநூல் குழும நண்பர்கள்  3.5 லட்சம் மதிப்பில் கட்டிக்கொடுத்த சமையறையைப் பார்த்துத் திரும்பினோம்.

 

       இன்று ஆடு மற்றும் கன்றுகுட்டியை  மட்டுமே கொஞ்ச முடிந்தது. நாய்கள் விருந்தில் 'பிசி'யாகிவிட்டன, என்ன செய்வது?