புதன், நவம்பர் 10, 2021

உரிமைப் போராட்டங்களின் எதிர்காலம்?

உரிமைப் போராட்டங்களின் எதிர்காலம்?

 

மு.சிவகுருநாதன்

 


 

 

      உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் பேரணியாக சென்ற விவசாயிகளில்  நால்வர்  ஒன்றிய உள்துறை இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோரப் படுகொலைகளை பதிவு செய்த உள்ளூர் பத்தரிக்கையாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். உடன் நிகழ்ந்த வன்முறையில் மேலும் நால்வர் பலியாயினர். 

     சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் இது போன்ற, திட்டமிட்டு நிகழ்த்தப்படும்  பல்வேறு வன்முறை வெறியாட்டங்களை பட்டியலிட முடியும். ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் இந்த விவசாயிகள்  குடியரசு நாளான்று டிராக்டர் பேரணி நடத்தியபோதும் தாக்குதல் நடைபெற்றது. 'பண்டோரா' பேப்பரில் அம்பலமாகியிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் 'தேசபக்தருமான'  டெண்டுல்கர் போராடும் விவசாயிகளை தேச விரோதிகள் என்றார். அங்கு வன்முறையைத் தூண்டியவர்கள் தேசபக்தர்களாகும் 'ரசவாதம்' இவ்வாறுதான் நிகழ்கிறது.

      ஒன்றிய அரசின் குடியுரிமைச் சட்டங்களை எதிர்த்து மிகவும் அமைதியாக அறவழியில் ஷாகின் பாக்கில் அதிகளவு பெண்கள் பங்கேற்புடன்  நடந்த போராட்டங்கள் காவிக் கலவரக்காரர்களால் ஒடுக்கப்பட்டன. துப்பாக்கி ஏந்திய  மதவெறியனின் வன்முறையை காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க. விற்கு ஒரு வித்தியாசமும் இல்லை என்கிற உண்மை  உலகிற்கு உறைத்தது.

     சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்கள் தமிழக காவல்துறையினரின்  அரச வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. இதைப்போலவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் 13 உயிர்களைக் குடித்த அரச வன்முறையால் முடித்து வைக்கப்பட்டது. இன்னும் கொஞ்சம் வரலாற்றைப் புரட்டினால் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட அரச வன்முறை நமது பார்வைக்கு வரலாம்.  இப்படியாகத் தொடர்ந்துப்  பின்னோக்கிப் பயணித்தால்  ரவுலட் சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வாலாபாக்கில் பலியான எண்ணற்ற உயிர்கள் வரலாற்றில் உறைந்து போயிள்ளதையும்  அறிய முடியும்.

        1919 ஜாலியன்வாலாபாக் படுகொலைகளுக்குப் பின்னர் மகாத்மா காந்தி உண்மையறியும் குழு அமைத்து  விரிவான அறிக்கையை  வெளியிடுகிறார். சில மாதங்களிலேயே காங்கிரஸ் பஞ்சாப் சப் கமிட்டியார் விசாரணை ரிப்போர்ட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு 'பஞ்சாப் துயரம்' என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக  வெளியிடப்படுகிறது.  அதிலுள்ள காந்தியின் வாக்குமூலத்தில் சத்தியாகிரகம் எனும் அகிம்சைப் போராட்டத்தின் வழிமுறைகளாக கீழ்க்கண்ட செய்திகளை எடுத்துரைக்கிறார். 

   "சத்தியாக்கிரகிகளுக்கு பொறுமையும் அபிமானமும் இன்றியமையாத குணங்கள். அதாவது பிறருக்குத் தீங்கு செய்யாமல் சகல கஷ்டங்களையும் தாமே சகித்துக் கொண்டிருப்பது சத்தியாகிரகிகளுக்கு அழகு. ராஜியத்துறையில் சத்தியாகிரகத்தைத் தாராளமாய் அனுஷ்டித்துப் பார்க்கலாம். அநீதமான சட்டங்களை எதிர்த்துப் போராட சத்தியாகிரகம் ஓர் ஒழுங்கான ஆயுதம். மனுக்களின் மூலமாயும் மகஜர்களின் மூலமாயும் ஒருவருடைய கோரிக்கைகள் நிறைவேறாமல் போனால் அவருக்கு அப்பால் இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று பலாத்காரமாகப் பிரவேசித்துக் காரியத்தை சாதித்துக் கொள்ளுதல்; மற்றது எக்கஷ்டங்களையும் உற்சாகமாகச் சகித்துக் கொண்டு சட்டத்தை மீறி நடத்தல். அநீதமான சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதிருப்பது குற்றமாகாது. சத்தியமே நமக்குப் பெரிது. ஒரு குறிப்பிட்ட சட்டத்தை மீறி நடப்பதனால் சமூகத்திற்கு நன்மை உண்டாகும் என்று தெரிந்தால் தைரியமாக அச்சட்டத்தை மீறி நடக்க வேண்டியது சத்தியாக்கிரகிகளின் கடமை. கவர்ன்மெண்டின் காரியங்களில் தங்களுக்குள்ள அதிருப்தியையும் வெறுப்பையும் வெளிப்படையாக காட்டும் பொருட்டு சத்தியாக்கிரகிகள் அதிகார கவர்ன்மெண்டாரோடு ஒத்துழையாமல் இருந்தும் அவர்கள் சட்டத்திற்கு கீழ்படியாதிருப்பதும் ஒத்துழையாமலிருப்பதும் சத்தியாக்கிரக தர்மங்களில் சில ஆகும்". (பக்.129, பஞ்சாப் துயரம் - இரண்டாம் பாகம், வெளியீடு: 1920, எஸ்.கணேசன் அண்டு கோ, திருவல்லிக்கேணி, சென்னை)  

      கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரையில் நடைபெற்ற அறவழிப் போராட்டங்கள், கதிராமங்கலம், நெடுவாசல் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டங்கள், சேலம் எட்டு வழிச்சாலை  என அனைத்தையும் முடித்து வைக்க அரசுகளும் அரசாதரவுக் குண்டர்களும் இத்தகைய வன்முறை வழிகளை மிகத்தெளிவானத் திட்டங்களுடன் கையாள்கின்றனர். 

      1919 ஆம் ஆண்டின் ரவுலட் சட்டத்தைப் போன்ற கொடிய சட்டங்களே குடியுரிமை மற்றும் புதிய வேளாண் சட்டங்களாகும். இத்தகைய சட்டங்களைக்  காலனித்துவ பிரித்தானிய அரசு மட்டும்தான் கொண்டுவரும் என்பதில்லை. மக்களாட்சி அரசுகளும் இத்தகைய கொடுஞ்சட்டங்களை அமல்படுத்தலாம். அவற்றை எதிர்ப்பது நமது அடிப்படை உரிமை.

     இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒன்றிய அளவிலும் மாநில அளவிலும் நடக்கும் உரிமைப் போராட்டங்கள் எதுவும்  தேசிய, மாநிலக் கட்சிகளால் நடத்தப்படுபவை அல்ல. அணு உலை எதிர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு கூட கிடைப்பதில்லை. மிகவும் குறைவான பலம் கொண்ட அழுத்தக் குழுக்கள்தான் (Pressure Groups)  இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்து நடத்துகின்றன. விவசாயிகள் சங்கங்கள், சிறுபான்மையினர் அமைப்புகள், அணு உலை, மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்புகள், சூழலியல் இயக்கங்கள், வணிகர்கள் போன்ற பலமற்ற அமைப்புகள் தான்  இவற்றை ஒருங்கிணைக்கின்றன.  ஒருவகையில் இவை பேருரு அரசியல் சாராத வெகுமக்கள் இயக்கமாகவே வளர்கின்றன. சில நேரங்களில் அரசியல் - கருத்தியல் நிலைப்பாடுகள் இன்றியும் போராட்டங்கள் தொடங்குகின்றன. பின்னர் அதன் பாதையில் கருத்தியல்கள் உருக்கொள்கின்றன. 

     காந்தி உரிமைப் போராட்டங்களுக்கான ஆயுதமாக நமது அவைதீகப் மரபிலிருந்து அகிம்சையைத் தெரிவு செய்தார். அதனடிப்படையிலேயே இந்திய விடுதலையை நோக்கிய அவரது செயல்பாடுகள் அமைந்தன. நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்த அகிம்சைப் போர்முறை உலகளவில் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. 

      அதிநவீன ஆயுதங்களையும் படை வலிமையையும் நிரம்பப் பெற்றுள்ள அதிகாரத்துவ அரசுகளிடம் போராட எந்த ஆயுதங்களும் இணையில்லாத நிலையில் அகிம்சை ஆயுதத்தையே நாமும் கண்டடைய வேண்டியுள்ளது. 

    மக்களாட்சியின் மாண்புகள் சிதைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் பதிலளிக்கும் நிலையே இன்றில்லை. ஜனநாயக நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன. கருத்துரிமை மறுக்கப்பட்டு UAPA போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் ஏவப்படுகின்றன. தள்ளாத வயதிலும் நோயாலும் மனித உரிமைப் போராளிகள் சிறைச்சாலைகளில் மரணமடைகின்றனர். அவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றங்கள் மறுக்கின்றன. 'தேச பக்தி'  ஆட்சியாளர்களின் ஏகபோகமாகிப்  பிறரை தேசவிரோதிகளாகக் கட்டமைக்கவும் செய்கிறது. 

     நீதிமன்றங்கள் மக்களைப் போராட வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர். ஏதோ ஒருவகையில் இவை அரசுகளிடம் சரணடைகின்றன. மக்களாட்சியின்  நான்காவது தூணாக மதிக்கப்பட்ட ஊடகங்கள் அரசு மற்றும் கார்ப்பரேட்களின் ஊதுகுழலாய் மாறியிருக்கின்றன. 

     இந்த நிலையில் மக்களாட்சியின் பெயரால் அரச வன்முறையை எதிர்கொள்ளும் சூழலில் அகிம்சை ஆயுதம் மட்டும் நமக்குப் போதுமானதுதானா? இதற்கான மாற்று வழிமுறைகளையும் செல்நெறிகளை இதுவரையில் நான் கண்டடைந்திருக்கிறோமா?   பிளவுபடுத்துவது ஆளும், அதிகார வர்க்கத்திற்கு ஏதுவான செயலாக உள்ளது. சாதி, மதம், மொழி, தொழில்  போன்ற கூறுகளை இவர்கள் தங்களது ஆயுதங்களாகப் பாவிக்கின்றனர். 

     விவசாயிகள், மீனவர்கள்,  வணிகர்கள், பழங்குடிகள், சிறுபான்மையினர் என தனித்தனியே பிரிந்திருப்பதும் பிரித்து அணுகுவதும் ஒற்றுமையை கேள்விக்குள்ளாகுகிறது. பஞ்சாப் விவசாயிகளின் பிரச்சினை பற்றி காவிரி டெல்டா விவசாயிகளுக்குக் கவலையில்லை; எட்டுவழிச்சாலை பற்றி தமிழகத்தின் பிறபகுதி விவசாயிகள் கவலைப்பட வேண்டியதில்லை என்ற நிலை இருப்பதால் போராட்டங்கள் அனைத்தும் உள்ளூர் அளவிலேயே சுருங்கி விடுகின்றன. வெறும் அடையாள அளவில் இல்லாமல் பரந்த நிலையில் இந்த ஒருங்கிணைப்பு உண்டாக வேண்டும். பெருந்திரள் மக்கள் எழுச்சியே சர்வாதிகார மக்களாட்சியை கொஞ்சமாவது அசைக்கும். இதற்கான வேலைத்திட்டங்களும் குறைந்த பட்ச செயல்திட்டங்களும் உருவாக வேண்டும்.

    பிரச்சினைகளைப் பொதுவானதாக உணரும் நிலை வேண்டும். பெருமளவில் மக்கள் பங்கேற்பு இல்லாத எதுவும் இங்கு தோற்றுப்போகும். இப்போராட்டங்கள் பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டும்.  இத்தகைய இயக்கங்கள் தேர்தலில் எதிரிகளை அம்பலப்படுத்தி எதிர்கொள்ள வேண்டும். அகிம்சை என்பது அடிவாங்கி, குண்டடிபட்டு சாவதல்ல; மாறாக அதனுள்ளும் போர்க்குணம் அடங்கியுள்ளது. அந்தப் போர்க்குணமே நமக்கான விடுதலையைப் பெற்றுத்தரும்.

    பாசிச அரசுகளுக்கும் சட்டங்களுக்கும் எதிராக பொதுத்தேர்தல்களைக் கூட ஆயுதமாகப் பயன்படுத்த முடியும். நமது பிளவுகள், ஏழ்மை, கல்வியறிவின்மை, குழுவாதம் போன்றவை இவ்வாயுதத்தைச் சரிவரப் பயன்படுத்தத் தடையாக இருக்கின்றன. இன்றிருக்கும் தேர்தல் முறைகள் மோசமானவைதான். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட மாற்று வழிகள் அனுமதிக்கப்படாத வரையில் சிக்கல் தொடரவே செய்யும். அதற்குத் தேர்தல் புறக்கணிப்பு மட்டுமே தீர்வாக அமைய முடியாது. 

       நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றொரு பரப்புரை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. யார் நல்லவர் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை.  நல்லவர் என்று அனுமானிக்கக் கூடியவர் பாசிசத்தின் பிரதிநிதியாகக் கூட இருக்கலாம். எனவே கருத்தியல்கள் தான் முக்கியமே தவிர தனிப்பட்ட குணநலன்கள் அல்ல.  நம்மை மேலும் பிளவுபடுத்த தேர்தல்களின் போது புதிய அணிகள் உருவாக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் பாசிச, ஆளும் வர்க்கங்கள் இருக்கின்றன. இத்தகைய சூழ்ச்சியும் தேர்தல் ஆயுதத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் செய்கின்றன. 

       பல்வேறு வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வுகள், முடிவுகள் என்று  இருக்கவியலாது. குறைந்த பட்ச செயல்திட்ட அடிப்படையிலேயே அரசும் பொதுமக்களும் இயங்க முடியும். பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் ஒரு குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் ஒருங்கிணைக்கப் படவேண்டும்.  இந்த அழுத்தக் குழுக்கள் ஆளும், அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் ஆற்றலுடையதாக மாற வேண்டும். பெருந்திரள் மக்கள் சக்தி வீணாக்கப் படாமல் பயன்படுவது அவசியம்.

 

நன்றி: 'பேசும் புதிய சக்தி' – மாத இதழ், நவம்பர் 2021 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக