வெள்ளி, நவம்பர் 19, 2021

ஒரு நினைவுக் குறிப்பு

 ஒரு நினைவுக் குறிப்பு


                               மு.சிவகுருநாதன்

 



            வேதாரண்யம் ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் (1983-1986)  நான் 6-8 வகுப்புகளைப் படித்தேன். அப்பள்ளி இன்று மேனிலைப்பள்ளி.  அப்போதெல்லாம் எட்டாம் வகுப்பிற்கு மாவட்ட அளவிலானப் பொதுத்தேர்வு உண்டு. அத்தேர்வை அருகிலுள்ள உயர்நிலை அல்லது மேனிலைப் பள்ளிகளில்தான் எழுத வேண்டும். நாங்கள் தகட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் (இப்போது அது மேனிலைப்பள்ளியாக உள்ளது.)  எட்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுதினோம்.  

 

       ஒன்பதாம் வகுப்பிற்கு எங்கள் வீட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள தகட்டூர் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இது வேதாரண்யம் வட்டத்தில் உள்ளது. மற்றொரு வாய்ப்பு, 5 கி.மீ. தூரத்திலுள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த இடும்பாவனம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வது. (இதுவும் இப்போது மேனிலைப் பள்ளிதான்.)

 

        அண்ணாப்பேட்டை, துளசியாப்பட்டினம் பகுதியிலிருப்பவர்கள் மிதிவண்டிகளில் செல்ல இடும்பாவனம் பள்ளியைதான் தேர்வு செய்வது வழக்கம். அருகிலிருப்பது உள்ளிட்ட வேறுசில காரணங்களும் இதற்குண்டு.  எனது அண்ணன்களும் இங்குதான் படித்தனர். மேனிலைப்பள்ளிக்கு ஆயக்காரன்புலம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய மூன்றில் ஒன்றை மட்டும் தேர்வு செய்தாக வேண்டும். அன்று வேறு மேனிலைப் பள்ளிகள் இல்லை.

 

       அப்போது இடும்பானம் உயர்நிலைப் பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு ஒற்றை இலக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. எனவே அப்பா என்னை அப்பள்ளியில் சேர்க்க விரும்பவில்லை. மேலும் அன்று எனக்கு சைக்கிள் ஓட்டவும் தெரியாது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்தபின் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது தனிக்கதை.

 

        அன்றே நல்ல பள்ளிகளைத் தேடும் படலம் தொடங்கிவிட்டது. இன்றைய சுயநிதிப்பள்ளிகளின் இடத்தை அன்று உதவிபெறும் பள்ளிகள் பிடித்திருந்தன. அன்றைய காலத்தில் எங்களது ஊரைவிட அருகிலிருந்த கற்பகநாதர்குளம் கிராமத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வு அதிகமிருந்தது. அங்கிருந்த அதிக ஆசிரியர் குடும்பங்கள் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

 

       எனது தந்தையாரின் ஆசிரிய நண்பர் கற்பகநாதர்குளம் திரு மாரிமுத்து அவர்கள் தனது இளைய மகனை திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள பள்ளங்கோயில் செயின்ட் ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் சேர்த்திருந்தார். தொலைவிலிருப்பதால் சென்றுவர இயலாது; விடுதிதான். தொண்டியக்காட்டைச் சேர்ந்த ஆசிரியர்  ஒருவரும் தனது பிள்ளையை அங்கு சேர்த்திருந்தார்.  கிழவன் சேதுபதி எனும் ரகுநாத சேதுபதியால் பிப்ரவரி 04, 1693 இல் இராமநாதபுரம் ஓரியூரில் தலைவெட்டிக் கொல்லப்பட்ட போர்ச்சுகீசிய கத்தோலிக்க மதபோதகர் ஜான் டி பிரிட்டோ பெயரிலான இப்பள்ளி தமிழில் புனித அருளானந்தர் உயர்நிலைப் பள்ளி என்றும் அழைக்கப்பட்டது. 

 

       அப்பா என்னை பள்ளங்கோயில் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். பள்ளியில், விடுதியில் இடம் கிடைக்குமா என்ற கவலை அப்பாவிடம் நிறைய இருந்தது. அப்பா தனது நண்பர் மாரிமுத்து மூலம் அப்பள்ளி  இடைநிலை ஆசிரியர் திரு அய்யாவு அவர்களிடம் முன்பே சொல்லியிருந்தார். 

 

       அன்று நுழைவுத்தேர்வு நடத்தினார்கள். சேர வருபவர்களுக்கு  அவ்வப்போது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. நாங்கள்  சென்றபோது சுமார் 25 பேர் அந்த நுழைவுத்தேர்வை எழுதினோம். 50 மதிப்பெண்களில் நான் வாங்கியது 30 தான் அதிக மதிப்பெண். எவ்வித சிரமமுமின்றி விடுதியிலும் இடம் கிடைத்தது. விடுதிக்கட்டணம் குறைவு. சாப்பாடு மிக மோசமாகவே இருக்கும். ஆனால் பள்ளி நல்ல பள்ளி; 400 மதிப்பெண்கள் பெற உதவும் பள்ளி.

 

       விடுதியிலிருந்து மாதத்தில் ஒரு சனி, ஞாயிறு வீட்டுக்குச் சென்று வருவோம். ஊரிலிருந்து காலை வேளையில் திரும்புகையில் திருத்துறைப்பூண்டி தேனாம்பிகா உணவகத்தில் சிற்றுண்டி. ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர் அனுமதி உண்டு. அன்று வீட்டிலிருந்து உணவு மற்றும் தின்பண்டங்கள் கொண்டு வருவார். திருத்துறைப்பூண்டி கோகுல் மிக்சர் கண்டிப்பாக இருக்கும்.  சில நாட்களில் அண்ணனை அனுப்பி வைப்பார். விடுமுறை நாள்களில் உணவுக்குப்பின் படிக்க அமர்த்தப்படுவோம். பார்வையாளர் வந்தால்தான் ஞாயிறன்று சற்று விடுதலை கிடைக்கும்.

 

      அப்பா கிளை அஞ்சலகப்பணியிலும் இருந்ததால் ஞாயிறு மட்டுமே விடுமுறை. வேறு பயணங்கள் இருந்தால் இங்கு வர இயலாது. மாதத்தில் ஒரு வாரம் நான் சென்று விடுவேன். ஒரு வாரம் அப்பா வருவார். இரண்டு வாரங்கள் எப்படியோ ஓடிவிடும்.

 

     விடுதியின் உணவு, அடக்குமுறைகள் எல்லாம் மோசமானதாகவே  இருந்தன. ஆயினும் பள்ளி நன்றாகச் செயல்பட்டது. அருட்திரு அந்தோணிசாமி தலைமையில் சோமசுந்தரம், பாலகிருஷ்ண மூர்த்தி, அல்போன்ஸ், ஜோசப் ராஜ், ஷேக் மைதீன் போன்ற பல ஆசிரியர்கள் விடுதி மாணவர்கள் மீதும் பள்ளி மீதும்  கூடுதல் கவனமெடுத்துச் செயல்பட்டனர்.  

 

     வீட்டுக்கவலையுடன் நாள்தோறும் ‘தினமணி’  படிக்க இயலாத கவலையும் தொற்றிக் கொண்டது. ஐராவதம் மகாதேவன் ஆசிரியப் பொறுப்பில் தினமணிச்சுடர், தமிழ்மணி என ‘அநுபந்தங்கள்’ வந்த காலமது. அக்கவலையை கடியாச்சேரி கடைத்தெருவிலுள்ள ஒரு சைக்கிள் கடை தீர்த்து வைத்தது. மதிய உணவு இடைவேளையில் விரைந்தோடிச் சென்று விடுவது எனது வழக்கமானது.

 

     அப்பாவின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தேனா என்று தெரியவில்லை. பத்தாம் வகுப்பில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் +1,+2 வகுப்புகளில் இதேபோல் இன்னொரு விடுதி கிடைத்தால் நல்லது என்ற எண்ணம் அப்பாவிற்கு இருந்தது. அதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

 

    கல்லூரிப் பட்டப்படிப்புகளை விரும்பாத அப்பா பள்ளி இறுதிக்குப் பிறகு பணி வாய்ப்புள்ள சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை மட்டுமே எங்களுக்காகத் தேர்வு செய்வது வழக்கமாக இருந்தது. இதன் மூலம் அரசு வேலை, சொந்தக்காலில் நிற்பதற்கு உதவுதல் என்கிற அளவில் அவரது திட்டங்கள் இருந்தன. இதுதான் எங்களை இன்றும் வாழ வைக்கிறது.

 

(நவம்பர் 19, 2021 - இன்று அப்பாவின் 16-வது நினைவு நாள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக