பாடநூல்களின் வெறுப்பரசியல் பாசிசம்
மு.சிவகுருநாதன்
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (Tamilnadu Open University) சமூக அறிவியல்துறையின் அரசியல் அறிவியல் முதுகலை முதலாமாண்டு பாடத்தில் இருக்கும் சிறுபான்மையினர், இடதுசாரிகள், தி.மு.க. மீதான வன்மம் வெளிப்படும் சில வரிகளைச் செய்தியாளர்கள் சந்திப்பில் வாசித்துக்காட்டி, இது குறித்து உரிய நடவடிக்கைகள எடுக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகக்கல்வி காவிமயமானதின் சிறுதுளியே இது.
பல்கலைக்கழக
துணைவேந்தர்கள், உயர் அலுவலர்கள், உறுப்பினர்கள் என கடந்த பல்லாண்டுகளாக காவி
ஆதிக்கம் மிகுந்துள்ளது. இதன் கொடிய கரங்கள் பாடநூல்கள் உள்ளிட்ட அனைத்திலும்
வேரோடியுள்ளன. நடுநிலையாளர்கள் தொடர்ந்து பலமுறை எச்சரிக்கை விடுத்தவாறு உள்ளனர்.
முன்பிருந்த ஆட்சியாளர்கள் அதுகுறித்து
கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளவில்லை. அதன் பாதிப்பை தமிழகம் நீண்டகாலம்
எதிர்கொள்ளப் போகிறது.
இது அரசியல் அறிவியல் பாடநூல். இன்னும் மொழி, கலை, அறிவியல் பாடங்களும் எவ்வாறு எழுதப்பட்டிருக்கும் என்பது பேரச்சமாக உள்ளது. எனவே புதிய அரசு கொரோனா பெருந்தொற்றோடு, இந்த பாசிச வெறியோடும் தொடர்ந்துப் போராட வேண்டியிருக்கும்.
தமிழ்நாடு திறந்த
நிலை பல்கலைக்கழகப் பாடநூலில் இடம்பெறும் வன்மம் கக்கும் பாசிச வெறுப்பரசியல்
நஞ்சிற்கு அளவேயில்லை. அவற்றின் ஒவ்வொரு சொல்லும் பாசிச வெறுப்பை விதைப்பவை.
அனைத்தும் உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகள். இதை ஒரு சங்கிதான் எழுதியிருக்க
முடியும். இதை எழுதிய அந்தச் சங்கி அடிப்படை மொழியறிவு கூட இல்லாத மூடனாகவே இருக்க
முடியும் என்பதையும் சொற்றொடர் அமைப்பும், பயன்பாடுகளும் நமக்கு உணர்த்துகின்றன. அப்பாடநூல் பாசிச வெறுப்பரசியலின் சில பத்திகள்:
“எண்பதுகளில் சீக்கிய இந்துக் கலவரங்களும்
நிராங்கரி சீக்கியக் கலவரங்களும் மிகுந்தன. உச்சக்கட்டத்தில் இராணுவத்தை அனுப்பி
பொற்கோயிலில் புகலிடம் தேடிய தீவிரவாதிகளை வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
எனினும் நீல விண்மீன் எனப்படும் இராணுவ நடவடிக்கை சீக்கிய மதவெறிக்கு முடிவு
கட்டினாலும் அது இந்திராவின் படுகொலையில் முடிந்தது.
எனினும் தொண்ணூறுகளில்
ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி இயக்கங்கள் தலைதூக்கின. அவை அயோத்தியில் இராமர்
பிறந்த இடத்தில் பாபர் கட்டிய மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டக் கோரின. எனவே
அயோத்தித் திருநகர் நோக்கி தொடர்ந்தது. காவி ஆடைச் சாமியார்களும் செங்கல் சுமந்து
சென்றனர். 1992 டிசம்பர் 6-ல் பதற்றம் உச்சமடைந்தது. சங்பரிவாரம் அனைத்தும்
ஒன்றாய்க்கூடி பாபர் மசூதியை இடித்தன. பிரிவினைக்கு பிற்பாடு இந்தியாவில்
மாபெரும் மதக்கலவரங்களை அது உருவாக்கியது.
2002ல் பத்தாண்டுகட்குப் பின்னர் ராம்
பக்தர்கள் பயணம் செய்த சபர்மதி இரயில் கோத்ராவில் கொளுத்தப்பட்டு 52 பேர்
பலியாயினர். எனவே குஜராத்தில் பலபேர் தாக்கப்பட்டு சொத்துக்கள் சூறையிடப்பட்டன.
2005 அக்டோபர் உ.பி.யில் கலவரம் மூண்டது. சமஸ்கிருதப் பள்ளி கொளுத்தப்பட்டது.
மொத்தத்தில் இக்கலவரங்களில் இந்துக்கள் முகமதியர் எல்லாரும் சமமாகப்
பாதிக்கப்பட்டனர்.
13.2.3. வகுப்பு வாதத்திற்கான காரணங்கள்
இந்தியாவில் வகுப்பு வாதத்திற்கான
முக்கிய காரணங்கள்
1.முஸ்லீம்கள் ஒதுங்கி வாழ்வது
இந்து முஸ்லீம் கலவரங்கட்கு முதல்காரணம் முஸ்லீம்கள் ஒதுங்கி இருப்பதும்
தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலக்காமையும் ஆகும். முல்லாக்களும் குருமார்களும்
போதிக்கின்ற மதவெறியில் முஸ்லீம்கள் அந்நாளைய அராபியர், பாரசீகர்களை, மொகலாயர்களை
முன்னோர்களாகக் கருதுகின்றனர். உண்மையாதெனில் இவர்களில் பெரும்பாலானோர் மதமாற்றம்
ஆனவரே. இந்த மதமாற்றம் பற்றி கோரி முகமதியர் பிரிவினைக்குப் பிற்பாடும் தீவிரவாதக்
கொள்கைகளை கடைபிடிக்கின்றனர். அவர்கள்
இந்தியா பன்முகம் படைத்த நாடு என்றும் எந்த ஒரு மதத்தின் தீவிரவாதமும் இந்த
நாட்டிற்கு ஏற்புடையது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
2.மதப்பழமை வாதம்
விடுதலை பெற்ற இந்தியாவில் மதப்பழமை வாதமும் குறுகிய மனப்பாங்கும் வகுப்பு வாதத்தைக் கிளப்பி வருகின்றன. முகமதிய அமைப்புக்கள் – ஜாமயத் இஸ்லாமி, முகமது கழகம், முகமது மல்சீஸ் போன்றவை புதிய கருத்துக்களை எதிர்த்தும் இடைக்கால முகமதியமைப் பண்பாட்டின் பெருமை பேசியும் வருகின்றன. தனிவாழ்வில் மத மேம்பாடும் மதப்பற்றும் பேசப்படுகின்றன. அவை இந்து முகமதிய மனப்பாங்கு வேறுபாட்டையும் பண்பாட்டு வேறுபாட்டையும் தனிச்சட்ட வேறுபாடுகளையும் வலியுறுத்தி வருகின்றன. பாகிஸ்தானில் மற்ற முகமதிய நாடுகளில் சரியத் எனும் தனிச்சட்டம் மாற்றப்படுகையில் இங்குள்ள இந்திய அரசை அதில் கை வைக்கலாகாது என அவை எச்சரிக்கின்றன.
3.சமுதாயக் காரணங்கள்
ஜனநாயகம் என்பது பெரும்பான்மை ஆட்சி. எல்லாக் கட்சிகளும் பெரும்பான்மை வகுப்பிலிருந்தே வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்றன. எனவே சிறுபான்மையர் இந்திய அரசியலில் தம்வலிமையைக் காட்ட முனைகின்றனர். அதற்காக மதமாற்றம் விரைவாக நடைபெறுகிறது. நீண்ட காலமாக மதமாற்றம் வந்தாலும் இந்துக்கள் இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் மாறுவது விருப்பப்படுவதில்லை. ஏனெனில் மதமாற்றம் மூலம் இந்தியா மீண்டும் அந்நியரின் ஆட்சிக்கு மாறிவிடுமோ என அஞ்சுகின்றனர். 1979ல் தமிழ்நாட்டில் மீனாட்சிபுரத்திலும் ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் பல இந்துக்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டது, ஆரிய சமாஜ் அமைப்பிற்கு எரிச்சலூட்டியது. ஒரிஸ்ஸாவில், ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனம் காட்டுவாசிகளை மதமாற்றம் செய்தன. இதனை இந்து அமைப்புகள் கண்டித்தன. இதன் விளைவாக மதமாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் எரிக்கப்பட்டார். எனவே தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் மதமாற்றத் தடைச்சட்டம் இயற்றப்பட்டன. ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவை திரும்பப் பெறப்பட்டன. எனவே இந்த மதமாற்றங்கள் இந்து முஸ்லீம்கள் உறவை இந்து கிருஸ்த்தவ உறவைப் பாதிக்கும்.
4.பொருளாதாரக் காரணங்கள்
மதக்கலவரங்கள் இச்சமுதாய உட்பிரிவுகளில் இருக்கும் பொருளியல் காரணங்களால் கூட நிகழக்கூடும். 1981ல் பரோடாவில் மதக்கலவரம் வெடித்தது. அவை கள்ளச்சாராய விற்பனையாலும் சூதாட்டத்தாலும் போயுஸ் முகமதியர் இடையே தோன்றியதாகும். மராத்தி மொழி பேசும் தாழ்த்தப்பட்டவர்கள் தம் தொழிலான மீன்பிடித்தலை விட்டுவிட்டு கள்ளச் சாராயத்திலும் சூதாட்டத்திலும் இறங்கின முஸ்லீம்களுக்கு போட்டியாக இதன் விளைவாக பரோடாவில் கலவரம் வெடித்தது.
அஸ்கர் அலி எனும் சமுதாய அறிஞர், முகமதியர் செல்வம் சேர்த்ததும் , அதனால் வந்த பொருளாதார போட்டியுமே இந்து முஸ்லீம் மோதலுக்கு காரணம் என்கிறார்.
5.அரசியல் காரணங்கள்
இந்திய அரசியல் அரசியலமைப்பு விதிகள் 15,16,25,26,27,28,29,30,347,50A மற்றும் 350B போன்றவைகள் சிறுபான்மையினர் நலனை பாதுகாக்கின்றது. இந்தப்பிரிவின் கீழ் சிறுபான்மையினர் பல நன்மைகளை பெறக்கூடும். இந்தப் பிரிவின் கீழ் சிறுபான்மையினர், கல்வி நிறுவனங்கள் அமைக்கலாம். தமிழகத்தில் 42 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இவற்றுள் 35 சிறுபான்மையினரால் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மூன்று முக்கிய சமயத்தினர் உள்ளனர். இந்துக்கள் 87 விழுக்காடு, கிறித்தவர் 7 விழுக்காடு, முகமதியர் 6 விழுக்காடு. எனவே சிறுபான்மையினர் 13 விழுக்காடு உள்ளனர். 13 விழுக்காடு உள்ள சிறுபான்மையினர் 35 நிறுவனங்களை, ஆனால் 87 விழுக்காடு உள்ள இந்துக்களிடம் 7 பள்ளிகளே உள்ளன. இது அரசியல் சாசனம் அளித்த சலுகை ஆகும். மேலும் மத்திய, மாநில அரசுகள் வேறு அவ்வப்போது சிறுபான்மை மக்களை திருப்திப் படுத்துகின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு பல ஆளுநர்களை நியமித்தது. அவர்களுள் பலர் சிறுபான்மை சமூகத்தினரே ஆவர். இந்தத் திருப்திபடுத்தும் கொள்கையே இந்துக்களிடம் ஒரு வெறுப்பை வளர்க்கின்றது.
6. பாகிஸ்தானின் பங்கு:
இந்தியாவில் மதக் கலவரத்திற்கு இரு புறமும் சூழ்ந்த முகமதிய நாடுகளும் காரணமாகும். ஏதேனும் சிறு கலவரம் எனில் பாகிஸ்தான் வானொலியும் செய்தி ஏடுகளும் அதைப் பெரிது படுத்திக் காட்டுகின்றன, ஒரு முகமதிய சமுதாயமே அழிக்கப்படுவதாக எழுதுகின்றன. பாகிஸ்தான் அரசும் இந்திய அரசைக் குற்றம் சாட்டுவதுடன் மதச்சார்பற்ற இந்தியக் கோட்பாட்டுக்கு எதிராக முகமதியரைத் தூண்டுகின்றன. ஆனால் அறியாமை மிக்க முகமதியர் பாகிஸ்தானின் சூழ்ச்சி அறியாது பாகிஸ்தான் நம் நாடு எனக் கருதி இந்தியாவை வெறுக்கின்றனர். மிகப் பழமை வாதத்தில் ஊறிய அவர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
7. வகுப்புவாதக் கட்சிகளும் அமைப்புகளும்
இந்து முன்னணி, அகாலிதளம், சிவசேனா, முஸ்லிம் லீக், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கிறித்தவ ஜனநாயக முன்னணி போன்றவை விடுதலை பெற்ற இந்தியாவில் வகுப்புவாதப் பிரச்சாரத்தைப் பரப்பி தேசியப் பார்வையைத் தடுத்து வகுப்புக் கலவரங்களை மூட்டி விடுகின்றன. ஜே.ஆர்.சிவாக் எனும் அறிஞர் சமய அடிப்படைக் கட்சிகள் உள்ளவரை சமயச் சார்பற்ற இந்தியாவில் வகுப்புவாதத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்று சரியாக எடுத்துரைத்தார்.
8. முகமதிய வாக்கு வங்கிகள்
பல இந்தியக் கட்சிகள் குறிப்பாக மதங்களுக்கு எதிரான தி.மு.க., பொதுவுடைமைக் கட்சிகள் அவர்களின் வாக்கு வங்கிகளாக மாற்றி வருகின்றன. அவை அவர்களை தேசியப் பாதையில் கலந்துவிடாமல் தடுக்கின்றன. அவை கண்மூடித்தனமாக சிறுபான்மையினரை ஆதரிக்கின்றன. முகமதியர் கலவரம் உருவாக்கி வன்முறை வெடிக்கும்போது அவரைக் கண்டிக்காமல் இருக்கின்றன. ஆனால் இந்துக்கள் திரும்பத் தாக்கித் தற்காப்பு தேடினால் அவர்களைக் கண்டிக்கின்றன, உத்தரப் பிரதேசத்தில் மாவு நகரில் தசரா விழாவின்போது அக் 13, 2005-ல் கலவரம் மூண்டது. சமஸ்கிருதப் பள்ளி எரிக்கப்பட்டது. அந்நகரின் சட்டமன்ற உறுப்பினர் அன்சாரி ஆட்டம் போட்டார்”.
இந்த உயர்கல்விப் பாடநூல் கக்கும் பாசிச வெறியை வரிக்குவரி விளக்க வேண்டியதில்லை. வாசிக்கும்போதே எளிதில் உணரலாம். இந்தளவிற்கு மோசமில்லை என்றாலும்கூட தமிழகப் பள்ளிக்கல்விப் பாடநூல்களும் சில இடங்களில் இதே மாதிரியில் இருப்பது நமது பேரவலமாகும். (பார்க்க: கல்வி அபத்தங்கள் - மு.சிவகுருநாதன், வெளியீடு: பன்மை, திருவாரூர்)
“ஆங்கிலேயர்கள் தங்களது நாட்டிற்கு சென்ற பிறகு இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவ வேண்டுமென எண்ணி முஸ்லீம் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் புரட்சியில் கலந்துகொண்டனர்”. (VIII, சமூக அறிவியல், பக்.194&195) என்ற இஸ்லாமிய வெறுப்புணர்வைத் தூண்டும் வரிகளை நீக்கிச் சொல்லியிருக்கிறார்கள். எந்த வகுப்புப் பாடநூலை எடுத்துக் கொண்டாலும் அவற்றின் பக்கங்களில் வெறுப்பு விதைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்றை மட்டும் நீக்கிவிடுவது போதுமானதல்ல. கீழக்கண்ட வரிகள் இன்னும் பாடநூலில் தொடர்கின்றன.
“இந்தியாவின் மாபெரும் தேசபக்தர்களுள் அவரும் (ஜான்சி ராணி லட்சுமிபாய்) ஒருவர்”. “ஆங்கில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி 1857 புரட்சியில் கலந்துகொண்ட தலைவர்களில் மிகவும் துணிச்சலானவர் இராணி லட்சுமிபாய் ஆவார்”. (பக்.194) ஆனால், “திப்பு சுல்தான் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கெதிராக போரிட்டார்”. (பக்.196)
அரசர்களை அவர்கள் சார்ந்த மத அடிப்படையில் அணுகும் போக்கு மிகவும் அபாயகரமானது. குழந்தைகளிடம் வளர்க்கப்படும் வெறுப்பரசியல் சமூக அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்கக்கூடியது. தமிழக அரசின் பாடநூல்களில் காணப்படும் வேறுசில வெறுப்பரசியல் வரிகள் சிலவற்றைக் காண்போம்.
“முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கேயிருந்த தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றி டெல்லியைப் பொட்டற்காடாக்கினார்”. (பக்.131, 7 ஆம் வகுப்பு வரலாறு)
“1192 இல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜின் படைகளை முற்றிலுமாகத் தோற்கடித்த முகமதுகோரி அவரைக் கைது செய்து கொன்றார்”. (பக்.147)
“முகலாய மாமன்னர்களில் கடைசி அரசரான ஔரங்கசீப் தம் தந்தையைச் சிறைப்படுத்தி ஆட்சியைத் தொடங்கினார். ஆலம்கிர் (உலகைக் கைப்பற்றியவர்) என்னும் பட்டத்தை சூட்டிக் கொண்டார். இவர் தம் தாத்தா ஜஹாங்கீரைப்போல கலைகளின்மீது ஆர்வம் கொண்டவராகவோ தந்தை ஷாஜகானைப் போல் கட்டிடக் கலையில் நாட்டங்கொண்டவராகவோ இல்லை. தமது மதத்தைத் தவிர ஏனைய மதங்களை அவர் சகித்துக்கொள்ளவில்லை. இந்துக்களின் மீது மீண்டும் ஜிசியா வரியை விதித்தார். இந்துக்களை அரசுப் பணிகளில் அமர்த்துவதைத் தவிர்த்தார்”. (பக். 131&132, 7 வரலாறு)
அக்பருடைய “தூண்டுதலின் காரணமாக பைராம்கான் குஜராத்தில் கொல்லப்பட்டார்”. (பக்.131, ஏழாம் வகுப்பு சமூக அறிவியல், இரண்டாம் பருவம்)
“அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது”. (ஏழாம் வகுப்பு – வரலாறு)
“இந்தியாவின் நிலவரைபடத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் வேதகாலத்தின்போது உருவானது. மகாபாரதத்தில் தண்ணீரால் சூழப்பட்ட உலகம் சித்தரிக்கப்பட்டுள்ளது”. (பக்.95) 9 ஆம் வகுப்பு
சிறுபான்மையினரைப் பிறராக (Others) அணுகும் போக்கும் வெறுப்புணர்வை வளர்ப்பதும் அடையாள அரசியலும் பாடநூலின் பொதுக்குணங்களாக மாறிவிட்டதை பேரச்சத்துடன் அணுக வேண்டியுள்ளது, என்று அந்நூலின் முன்னுரையில் சொல்லியிருப்பதை மீண்டும் நினைவு கூர வேண்டியுள்ளது.
எனவே, உடனடியாகச் செய்ய வேண்டியன:
· பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி ஈறாக பாடநூல்களில் திட்டமிட்டு உருவாக்கப்படும் வெறுப்பரசியலையும் அதன்மூலம் பாசிசத்தைப் பரப்பும் முயற்சிகளை தடுத்து நிறுத்தவேண்டும்.
· ஒன்றாம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை இருக்கின்ற பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை ஆய்வு செய்ய உரிய அறிஞர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழு தனித்தனியே அமைக்கப்பட வேண்டும்.
· பாடநூல்களையும் அரசு வெளியீடுகளையும் ஆய்வு செய்வது சமூகத் தணிக்கையாக (Social Audit) வளர்த்தெடுக்கப் படவேண்டும். நமக்கேன் வம்பு என்று கண்டும் காணாத போக்கு மறைய வேண்டும்.
· கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி அமைப்புகளில் உள்ள மதவெறிச் சங்கிகள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். ‘நடுநிலையாளர்’ என்ற போர்வையிலிருப்போரின் முகத்திரையைக் கிழிக்க சமூக ஊடகங்கள் பெரும்பங்காற்ற இயலும்.
· புதிய பாடநூல்கள் வரைவாக வெளியிடப்பட்டு பின்னர் இறுதி செய்யப்படவேண்டும்.
நன்றி:
http://panmai.in/2021/05/21/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf/