வியாழன், மே 13, 2021

ஆசிரியர்களும் சமூகப் பார்வைகளும்

 

ஆசிரியர்களும் சமூகப் பார்வைகளும்

மு.சிவகுருநாதன்

       கொரோனாப் பெருந்தொற்றுக்கு தமிழக முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடைகள் வழங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் கூறப்படுகின்றன. ஒரு மாதம் அல்லது அரை மாதம் ஊதியத்தை அளிக்க வேண்டுமென சிலர் கோருகின்றனர்.

     நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இம்மாதிரிப் பேரிடர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். இவர்கள் மாத ஊதியத்தை மட்டும் நம்பி வாழ்பவர்கள் அல்ல. விதிவிலக்காக குடிசையில் வாழும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு மாரிமுத்து அவர்கள் தனது ஊதியத்தை முழுமையாக கட்சிக்கு அளித்துவிட்டு அதிலிருந்து சிறுதொகையை மதிப்பூதியமாகப் பெறும் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவர்.

     அரசு ஊழியர்கள் வழக்கபோல் ஒரு நாள் ஊதியத்தை மட்டும் அளிப்பது வழக்கமான ஒன்று. சென்ற ஆண்டைப் போல இவ்வாண்டும் ஒருநாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய சங்கங்கள் அரசிடம் வேண்டுகோள் வைத்திருக்கின்றன. அகவிலைப்படி ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈட்டியவிடுப்பை காசாக்கும் வசதியும் சென்ற ஆண்டில் இல்லை.

   ஒரு மாத ஊதியத்தை வழங்குவதுகூட பலருக்கு ஏற்புடையதாகக் கூட இருக்கும். ஆனால் அதை ஒரே தவணையாக அளிப்பதில் சிக்கல் உண்டாகும். 15 அல்லது 30 நாள்களின் ஊதியத்தை 5 அல்லது 10 தவணைகளாக பிடித்தம் செய்வதுகூட சுமையைக் குறைக்கலாம். வீட்டுக்கடன் மற்றும் பிற கடன்தொகைகளைக் கட்ட இயலாமல் கடன் வழங்கிய நிறுவனம், கணக்கு வைத்திருக்கும் வங்கி என இருதரப்பிற்கும் தண்டம் கட்டவேண்டிய நிலை இருப்பதைக் கணக்கில் கொள்வது அவசியம்.

      நமது சமூகத்தைப் போன்றே ஆசிரியர்கள் அனைவரும் ஒருபடித்தானவர்கள் இல்ல. ஒரே குடும்பத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் பணியாற்றுதல், தொழில் செய்தல், தனிப்பயிற்சி நடத்துதல், சுயநிதிப்பள்ளிகளில் பங்குதாரர்களாக இருத்தல் போன்ற நிலைகளும் ஒற்றைச் சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் நிலையும் உண்டு. இதையெல்லாம் காணாமல் மேம்போக்குக் கூண்டுகளிலிருந்து இம்மாதிரி ஆலோசனைகளை வழங்குபவர்கள் தங்களிடம் கல்வி பயிலும் குழந்தைகளின் சமூக நிலையை எவ்விதம் அறிவார்கள் என்கிற அச்சம் ஏற்படுகிறது. 

      இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பெருமளவு விடுமுறையில் கழிந்தது, பள்ளிக்கேச் செல்லவில்லை என்பதும் எல்லாருக்கும் பொருந்துவதாகவும் இல்லை. சிலர் தன்னார்வமாகக் கல்வி சார்ந்த பணிகளைச் செய்தனர். இம்மாதிரியான பணிகளை ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தவும் முந்தைய அரசும் கல்வித்துறையும் தவறிவிட்டன.

    உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் இவ்வாண்டு ஜனவரி 18 (18/01/2021) லிருந்து திறக்கப்பட்டு அடுத்த நாள் முதல் 9-12 வகுப்பு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஞாயிறு ஒரு நாள் வார விடுமுறையில்  ஏப்ரல் 30 வரை பள்ளிகள் இயங்கின; ஆசிரியர்கள் பணிக்குச் சென்று வந்தனர். இதில் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகள் 8, 9 மாணவர்களுக்குத் திறனறித் தேர்வுகள் நடைபெற்றன. பெருந்தொற்று அச்சத்திலும் போக்குவரத்து அதிகமில்லாததாலும் தனி வாகனங்களில் சென்று வந்த நிலையும் இருந்தது.

     ஒரு கட்டத்தில் 10, +1 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோதும் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வரக் கட்டாயப்படுத்தப்பட்டனர். +2 செய்முறைத்தேர்வுகள் முடிந்து மாணவர்களே பள்ளிகளில் இல்லாத நிலையிலும் ஆசிரியர்கள் மட்டும் முந்தைய அரசால் பழிவாங்கப்பட்டனர். ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்றும் மறுபுறத்தில் கல்லூரி ஆசிரியர்களை பணிக்கு வரசொல்லக்கூடாது என்ற எச்சரிக்கையையும் ஒரே நேரத்தில் செய்தனர்.

     இம்மாதிரிப் பெருந்தொற்றுக் காலத்தில் பாகுபாடுகள் பெரிதும் பேணப்பட்டன. கல்வியியல் பட்டப் படிப்புகளுக்கு (B.Ed.) இறுதித்தேர்வு வீட்டிலிருந்து எழுதக்கூடிய ஒன்றாகவும் (Assignments)  இடைநிலை ஆசிரியர் பட்டயப் (D.T.Ed.) படிப்பிற்கு பொதுத்தேர்வாகவும் அமைந்த நிலையையும் கண்டோம்.

    அனைத்து அரிசிக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு அதில் முதல் தவணையாக 2,000 வழங்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வருமான வரி செலுத்துவோர் என சில லட்சம் பேரை ஒதுக்கினால் அரசுக்கு செலவு மிச்சமாகும். இதைக்கூட பெருந்தொற்றைத் தடுக்கப் பயன்படுத்தலாம்.  இதற்குப் பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைக்க வேண்டும். தற்போது அரசு ஏதேனும் அறிவிப்பு செய்யலாம். ஆனால் நடக்க வாய்ப்பில்லை. அவர்களாக முன்வந்து விட்டுக் கொடுக்கலாம் என்பது நடைமுறையில் அவ்வளவு பலனைத் தருவதில்லை. மேலும் அரசு ஊழியர்களில் மிகக்குறைவான ஊதியம் பெறும் ‘டி’ பிரிவு ஊழியர்களும் உண்டு. எனவே எல்லாருக்கும் உதவி தேவையில்லை என்றும் முடிவு செய்திட இயலாது.

     இம்மாதிரியான சலுகைகளும் சில நேரங்களில் அபத்தமாகப் போய்விடுவதற்கு ஒரு அண்மைக்கால உதாரணம். முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது ஒதுக்கீட்டின் அடிப்படையே தகர்த்தது. மேலும் உள் ஒதுக்கீடு என்கிற நடைமுறை ஒதுக்கீட்டின் பலன் அப்பிரிவின் கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உருவானது. அதன்படியே அட்டவணைப் பிரிவில் அருந்ததியர்களுக்கு 3% உள் ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது.

    முந்தைய தமிழக அரசால் கடைசி நேரத்தில் தேர்தலைக் கருத்தில் கொண்டு மிகவும் பிற்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டது. நீதிமன்றமும் இதற்குத் தடை அளிக்க மறுத்தது.

        பழங்குடிப் பிரிவில் இன்னும் சேர்க்கப்படாமல் மிகவும் பிற்பட்டோர் பிரிவிலிருக்கும் வாக்ரிகளுக்கு (நரிக்குறவர்கள்) அல்லவா உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்? இவர்களைப் போன்று ஒதுக்கீட்டின் பலன் கிடைக்காமற்போகும் பல சாதிகள் இங்குண்டு. ஆனால் சமூக நீதி மேலிருந்து கீழாகப் பரவுகிறது. இம்மாதிரி ஒதுக்கீடுகளும் சலுகைகளும் கீழிலிருந்து மேலாக வரவேண்டும். நடுத்தர வர்க்கம் தனது சிந்தனைகளையும் சமூகப் பார்வையையும் இனியாவது மாற்றிக் கொள்ள வேண்டும்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக