சனி, மே 22, 2021

பாடநூல்களை சமூகத் தணிக்கை செய்ய வேண்டும்

 

பாடநூல்களை சமூகத் தணிக்கை செய்ய வேண்டும்

 

மு.சிவகுருநாதன்

 

       திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பாடத்தில் இருக்கும் சிறுபான்மையினர், இடதுசாரிகள், திமுக மீதான வன்மம் வெளிப்படும் சில வரிகளைப் பொதுவெளியில் வாசித்துக்காட்டி, இது குறித்து உரிய நடவடிக்கைகள எடுக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதாற்கு அவருக்குப் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவிப்போம்.

 


     இம்மாதிரியானச் செயல்பாடுகளைக் கொண்டே கல்வி காவிமயமாகிவிட்டதை நடுநிலையாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கின்றனர். பள்ளிக்கல்வி பாடநூலும் இதே மாதிரி இருப்பது பேரவலம். (பார்க்க: கல்வி அபத்தங்கள் - மு.சிவகுருநாதன்)

 


     திரு பொன்முடி வாசித்துக் காட்டிய பகுதியை இதுவரை எத்தனை பேர் படித்திருப்பார்கள். அவர்களில் ஒருவர்கூட ஏன் கேள்வி எழுப்பவில்லை அல்லது முன்வரவில்லை. இம்மாதிரியான அநீதிகளை எதிர்க்கும் நமது குரல்கள் எங்கே போயின. பெரியார் மண் என்று பெருமை பேசித்திரிவது மட்டும் பொதுமா?

 

     பாடநூல்களையும் அரசு வெளியீடுகளையும் ஆய்வு செய்வது சமூகத் தணிக்கையாக (Social Audit) வளர்த்தெடுக்கப் படவேண்டும். நமக்கேன் வம்பு என்று கண்டும் காணாத போக்கு மறைய வேண்டும்.

 

    இது குறித்து எழுத்தாளரும் கல்வியாளருமான தோழர் விழியன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து சில பகுதிகள்:

 

     "பாடபுத்தகத்தில் ஒரு பகுதியை வாசிக்கின்றீர்கள் (கல்லூரி மாணவராகவோ, கல்லூரி பேராசிரியராகவோ, ஆசிரியராகவோ, மாணவராகவோ). அந்த பகுதி சரியில்லை, ஓவியம் உவப்பானதாக இல்லை, எழுத்துக்கள் ஒரு குறிப்பிட்டவர்கள் மீது வன்மத்தினை உருவாக்குகின்றது. சமநிலையை குலைக்கின்றது, அறிவியலுக்கு புறம்பானது என நினைக்கும்போது உடனடியாக அதன்மீது கருத்துருவாக்கம் செய்ய வேண்டும். பலருக்கு கவனப்படுத்த வேண்டும். சமூக ஊடகம் நம் கைகளில் இருக்கின்றது, சொந்த பக்கத்தில் குறிப்பிடலாம், தினசரிகளுக்கு மடலிடலாம், இதழ்களுக்கு தெரிவிக்கலாம், குறிப்பிட்ட துறைகளிடம் முறையிடலாம்.

 

     ஒவ்வொன்றிற்கும் ஒரு அமைச்சர் தலையிடவேண்டும் என நினைக்கக்கூடாது. இந்த விஷயம் எப்போதோ வெளிவந்திருக்க வேண்டும். அதனை எடுத்த ஆசிரியர்கள் வெளியே சொல்லவில்லை என்றார்கள் அவர்களும் அந்த எழுத்தினை பகுதியினை அங்கீகரிப்பதாக சமூகம் கருதும். குறைந்தபட்சம் அந்த வகுப்பிலாவது ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும்.

 

    கேள்வி கேட்பதே எதிர்நிலை அல்ல. கேள்வி கேட்பது ஒரு விழிப்புநிலை. அதனையே கல்வி விதைக்கவேண்டும் எல்லா மட்டத்திலும். விழிப்பு நிலையில் இருக்கும் சமூகமே அடுத்தடுத்த நிலையினை அடையும். அதுவே உண்மையான வளர்ச்சி." (எழுத்தாளர் விழியன்)

 

    பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர் அலுவலர்கள், உறுப்பினர்கள் என கடந்த பல்லாண்டுகளாக காவி ஆதிக்கம் மிகுந்துள்ளது. இதன் கொடிய கரங்கள் பாடநூல்கள் உள்ளிட்ட அனைத்திலும் வேரோடியுள்ளன.

 

     புதிய கல்விக்கொள்கை ஆதரவுக் கூட்டங்கள் பலவற்றை நடத்தியதிலிருந்து இதை அறியமுடியும். இந்த காவி ஊடுருவலை முற்றிலும் அகற்ற வேண்டும். அதுதான் இன்றைய கல்வியின் பெரும் சவால், கொரோனா பெருந்தொற்றை விட.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக