திங்கள், ஏப்ரல் 11, 2022

உணவும் உலகமும்

 உணவும்  உலகமும் 

 

மு.சிவகுருநாதன்

 

 


        உலகில் ஐந்து வகையான காலநிலைகள் நிலவுகின்றன.  அவை வெப்பமண்டல (Tropical), மித வெப்ப மண்டல (Moderate or Temperate), வறண்ட (Dry), கண்ட (Continental), துருவக் காலநிலைகள் (Polar)  என வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் உட்பிரிவுகளும் உண்டு. இதனையொட்டியே இயற்கைத் தாவரங்களும் வேளாண் பயிர்களும் வளர்கின்றன. நிலத்தோற்றம், மண்வளம், நீர்வளம், பணியாளர்கள்  போன்றவற்றைவிட வேளாண்மையை நிர்ணயிக்கும் காரணிகளில் முதன்மையான ஒன்றாக காலநிலை (Climate) இருக்கிறது. உதாரணமாக மிதவெப்பமண்டலப் பயிர் கோதுமையை வெப்பமண்டலமான தென்னிந்தியாவில் விளைவிக்க முடியாது.

       ஆதிமனிதனுக்கு உள்ளூர் வளங்களே ஆதாரமாக விளங்கியது. எனவே அவனது இருப்பிடத்திற்கு அருகில் கிடைக்கும் தாவர மற்றும் விலங்கின் உணவுகளை மட்டுமே உண்டான். இந்த இயல் தாவரங்கள் அவனது உடலுக்கும் மட்டுமல்லாது சூழலுக்கும் கேடாக அமையவில்லை.  உணவுப்பயிர்களும் விலங்குகளும்  உலகின் சில இடங்களில் தற்சார்பாகத்  தோன்றின. இத்தகைய மண்டலங்கள்  தென்மேற்கு ஆசியா, சீனா, மெசோ அமெரிக்கா, அமேசான் வடிநிலம், கிழக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற பகுதியிலும் அதன் அருகிலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

       ஒவ்வொரு பகுதிகளும் சில குறிப்பிட்ட உணவுப்பயிர்கள் தோன்றிய இடங்களாகக் கணிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, காப்பி – எத்தியோப்பியா, அரிசி, தினை வகைகள் – சீனா, இந்தியா, கோதுமை – தென்மேற்கு ஆசியா, சோளம்- மத்திய அமெரிக்கா, உருளைக்கிழங்கு – அமேசான், எண்ணைய் பனை – மேற்கு ஆப்பிரிக்கா, சூரியகாந்தி - கிழக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்தியா மற்றும் தமிழகத்துப் பகுதிகளில் நெல் மற்றும் தினை வகைகள் உற்பத்தி செய்யப்பட்ட காலகட்டம் குறித்த தெளிவான ஆய்வுகள் இன்னும் நடைபெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.

        நாளடைவில் மனிதனது இடப்பெயர்வுகளால் அவன் விரும்பும் தாவர வகைகளும் இடம்பெயரலாயிற்று. ஆதிமனிதனின் நுகர்வுக்குப் பின்னர் அவை பிற இடங்களில் வளர்க்கப் பழக்கப்படுத்தப்பட்டன. இவற்றிலும் காலநிலை மக்களின் விருப்பார்வங்கள் அன்றைய வணிக உறவுகள் ஆகியன உள்ளீடாகச் செயல்பட்டன. உதாரணமாக, ஓட்ஸ் – மேற்கு ஐரோப்பா, எள், கத்தரிக்காய் – சிந்து சமவெளி, அத்தி – எகிப்து போன்றவை உள்ளன.

          பண்டைய காலத்தில் மனித-தாவர-விலங்குகளின் இடப்பெயர்வு அதிகளவில் நடைபெற்றன. காலனியச் சூழலிலும் இவை தொடர்ந்தன.  உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், மிளகாய் போன்றவை இந்தியாவிற்கு வந்தது இக்காலத்தில்தான். இன்றைய உலகமயச் சூழலில் வேளாண் பயிர்களைவிட அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள் வாணிகம் செழிப்பதைக் காண்கிறோம். காப்பி, தேயிலை, ரப்பர், புகையிலை, முந்திரி, யூக்லிப்டஸ் போன்ற தோட்டப்பயிர்களும் நமது நாட்டுக்குள் இப்படித்தான்  நுழைந்தது. அவை பெரும்பகுதி மக்களைக் கொத்தடிமைகளாக மாற்றின.

         உலகமயப் பொருளாதாரச் சூழலில் இன்றைய உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. வணிகத்திற்காக மட்டும் நாட்டின் எல்லைகள் திறந்துவிடப்படுகின்றன. உள்ளூர் மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

         ஐரோப்பியர்கள் குடியேறி அந்நாட்டு பூர்வகுடிகளைக் கொன்றழித்து முற்றிலும் குடியேறிகளின் நாடாக மாற்றப்பட்ட அமெரிக்காவின் வரலாற்றை நாமறிவோம். அந்நாட்டு உணவு பல ஐரோப்பிய நாடுகளின் உணவுமுறைகளின் கலவையாக உள்ளது. உருளைக்கிழங்கு, வறுத்த கோழி, பன்றி, மாட்டிறைச்சிகள், சாறுகள் ஆகியன இவற்றில் முதன்மை இடத்தை வகிக்கின்றன.

       நிலக்கடலை, வெண்ணெய், சாக்லெட், சோளம், உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கோழி, பன்றி, ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சிகள், மிளகுத்தூள், மாம்பழம், கொய்யா, அன்னாசி, தேங்காய் போன்ற வெப்பமண்டலப் பழங்கள் போன்றவை தென் அமெரிக்க உணவுகளில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவைகளிலும் அவர்களது பாரம்பரிய உணவுகளும் ஐரோப்பிய உணவுகளும் இரண்டறக் கலந்துவிட்டன. ரஷ்யவின் மரபு உணவுகளில் சூடான மற்றும் குளிர்ந்த சூப்கள், வெள்ளரிக்காய் மற்றும் பிற காய்கறி சாலட்கள், ரொட்டி, ஊறுகாய் காய்கறிகள், மீன், தேநீர், காபி, ஓட்கா ஆகியன குறிப்பிடும்படியாக உள்ளன.

     ஆப்பிரிக்க உணவில் வெயில் காயவைத்து பதப்படுத்திய இறைச்சித் துண்டுக்கு இடமுண்டு. நம்மூர் மீன் கருவாடுகளைப்போல பழங்குடி மக்களிடம் குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் இறைச்சியை இயற்கையான முறைகளில் பதப்படுத்திச் சேமித்து வைத்திருந்து உண்ணும் பழக்கம் இருக்கிறது. ஆனால் இத்தகைய இயற்கையான பதப்படுத்தலுக்கு மாற்றாக  வணிக நோக்கத்திற்காக அறமின்றி செயற்கையான வேதிப்பொருள்களைக் கொண்டு பதப்படுத்துவதால் உணவு கிட்டத்தட்ட நஞ்சாகிறது. புற்றுநோய் போன்ற தீராத நோய்களுக்கும் மரபுவழிக் குறைபாடுகளுக்கும் காரணமாக அமைகிறது.

      இத்தாலியின் உணவான பீசா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஜெர்மனியின்  உணவான பர்கர் இன்று உலக உணவாக மாறியது எவ்வாறு? இளநீர் மற்றும் இயற்கையான பழச்சாறுகளின் இடத்தை பெப்சி, கோக் மற்றும் புட்டிகளில் அடைக்கப்பட்ட பானங்கள் பெற்றது எப்படி? இவற்றிலுள்ள கொழுப்பும் இணைக்கப்படும் கூட்டுப்பொருள்களும் மனித உடலுக்கு நீண்ட காலம் தீங்கிழைக்கும். கம்மங்கூழ், கேப்பங்களிக்கு மாற்றாகுமா ஓட்ஸ்?  நீரிழிவு நோயாளிகளுக்கான உணவில் ஓட்ஸ் முக்கிய இடம்பெறுகிறதே! இது என்ன மாவுப்பொருள் இல்லாத உணவா? நம்மூர் சிறுதானியங்கள் இதைவிட மேம்பட்டவையே.

       முற்றிலும் அறமற்ற உணவு வணிகம், உணவு உற்பத்தி முறைகள், வேளாண்மையில் ஏற்படுத்தும் மாற்றங்கள்  ஆகிய மூன்று அம்சங்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

        முதலாவதாக துரித உணவுகள், உணவு அரசியல், வணிக முற்றுரிமை, உணவுக் கலாச்சாரம், வணிக உத்திகள், சட்டங்கள் மற்றும் வரையறைகளை மீறுதல், தடை செய்யப்பட்டப் பொருள்களின் பயன்பாடு என்று உணவு அரசியல் வலை விரிவடைகிறது.     

        இரண்டாவதாக பீசா, பர்கர், நூடுல்ஸ், பிரைடு ரைஸ், பிரட் என எதுவாக இருப்பினும் இவற்றின் உள்ளீட்டுப் பொருளும் தயாரிப்பு முறைகளும் கேள்விக்குரியவை.  இவைகளில் பெரும்பாலும் சேர்க்கப்படும் மைதா நார்ச்சத்தற்ற மனிதன் உண்பதற்கு ஏற்றதல்ல. மோனோ சோடியம் குளூட்டாமேட் (MSG) என்ற வேதிப்பொருளின் வாசனை நமது மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியைத் தூண்டி அட்ரினலின், இன்சுலின் போன்ற நொதிகளைச் சுரக்கச் செய்து அடிக்கடி பசியுணர்வைத் தூண்டுகிறது.  சுவைக்காகச் சேர்க்கப்படும் அஜினோமோட்டோ மற்றும் நிறமூட்டிகள் குடலுக்கும் செரித்தல் உறுப்புகளுக்கும் கேடாகும். இதில் பயன்படும் எண்ணெய்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

          பெண் குழந்தைகள் விரைவில் பருவமடையக் காரணமான ஈஸ்ட்ரோஜன் நொதிச் சுரப்பு அதிகமாக இத்தகைய உணவுமுறைகளே காரணமாகும். நீரழிவு, இதய நோய்கள், புற்றுநோய்கள், பற்கள், எலும்புகள், மூட்டுகளில் வரும் நோய்கள், முன்கழுத்துக் கழலை, தைராய்டு போன்ற நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் குறைபாடுகள், உடல் பருமன் போன்ற பல்வேறு நோய்களுக்கும் இடர்பாடுகளுக்கும் காரணமாக அமைகின்றன.

        மூன்றாவது அம்சமாக மரபுப்பயிர்களை அழித்துச் சந்தைப் பயிர்களைப் பெருக்குதல், மரபணு மாற்றம், வேளாண்மையில் வேதியுரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கம், வளர்ச்சியூச்சிக்களைக் கொண்டு வளர்க்கப்படும் தாவர-விலங்கினங்கள்  போன்றவை வேளாண்மையை முகத்தை மாற்றுவதாக அமையும். 

             ஐரோப்பாவிலுள்ள பல நாடுகள்  தடை செய்யப்பட்ட உணவு வகைகள் நம்மூரில் மிகத் தாரளமாகக் கிடைக்கின்றன. நமது நாட்டில் தடைசெய்யப்பட்ட பல பொருள்களே இங்கே கிடைக்கின்றபோது இதிலென்ன வியப்படைய ஒன்றுமில்லை. செயற்கை நிறமூட்டிகள் (ஜெம்ஸ் மிட்டாய், சாக்லெட்கள்), நெகிழிப்பைகளில் அடைக்கப்பட்ட கோழி மற்றும்  இறைச்சிகள், மரபணு மாற்றப் பயிர்கள் (சூரியகாந்தி, கத்தரிக்காய்) மற்றும் மரபணு மாற்றப்பட்ட விலங்குகளின் இறைச்சிகள்,  உணவை மிருதுவாக்க ரொட்டித் தயாரித்தலில்  பயன்படும் சோடியம் பை கார்பனேட், பொட்டாசியம் புரோமைடு, பொட்டாசியம் அயோடைடு போன்ற வேதிப்பொருள்கள், பண்ணை வளர்ப்பு மீன்கள், கொழுப்பு மாற்றி உணவுகள் (உருளைக்கிழங்கு வறுவல்கள்), வளர்ச்சி ஊக்கிகள் அளித்துப் பெறப்படும் ஹார்மோன் பால் போன்ற பல்வேறு உணவுகளால் மனிதர்களுக்கு  சொல்லெண்ணாத் தீங்குகள் ஏற்படுகின்றன. எனவே விழித்துக்கொண்ட நாடுகள் அவற்றைத் தடை செய்கின்றன.

     எண்ணைய் பனை எனப்படும் செம்பனை பாமாயில் உற்பத்திக்குப் பயன்படுகிறது என்பதை மட்டும் நாமறிவோம். இவற்றை அதிகளவில் உற்பத்தி செய்ய பாரம்பரியமாக நெல் போன்ற தானியங்கள் உற்பத்தி செய்யும் நிலமும் மண்ணும் பாழடிக்கப்படுகின்றன. இதனால் காடழிப்பும் அதிகரிக்கிறது. பாமாயில் உணவகங்கள், விருந்து விழாக்களின் சமையலில்  முதன்மைப்பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி இன்று சந்தைகளை நிறைக்கும்  சோப்பு, ஷாம்பு, சலவைத்தூள், நூடுல்ஸ், பீசா, பர்கர், கே.எஃப்.சி. சிக்கன் வறுவல், உருளைக்கிழங்கு வறுவல் (சிப்ஸ்) போன்றவற்றில் பெரும்பங்காக உள்ளது.

       சோளம் என்கிற சிறுதானியப் பயிரைக் கலப்பினமாக மாற்றி கால்நடை உணவுக்காக உருவாக்கப்பட்டது மக்காச்சோளமாகும். உயிரி எரிபொருள், உயிரி நெகிழி என்பதாக இதன் எல்லைகள் இன்று விரிவடைந்துள்ளது. சோயாவிலிருந்து எடுக்கப்படும் உயிரி எரிபொருளுக்கு சந்தையில் அதிகத் தேவை இருக்கிறது. இவ்வகை வணிக எல்லை விரிவாக்கம் உணவுப்பயிர் வேளாண்மையை கேள்விக்குள்ளாக்குகின்றன.

       காலனியத்தின் கோரப்பிடியில் கருநீலச் சாயம் தயாரிக்கப் பயன்படும் அவுரியைப் பயிரிட்டதால்  விவசாயிகளும் வேளாண்மையும் பாதிக்கப்பட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட நேர்ந்ததை  அறிவோம். நெல்லுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும் இதனால் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டும் என்கிற பரப்புரை முன்னெடுக்கப்படுகிறது. இந்த மாற்றுப்பயிர்களில் மக்காச்சோளம், சோயா, எண்ணைப்பனை, சூரியகாந்தி போன்றவை கண்டிப்பாக இருக்கும். இதன் உண்மையான நோக்கம் உணவு உற்பத்தியல்ல; பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது வணிக நோக்கங்களுக்காக உணவுப் பயிர்களை அழிக்க முனைகிறார்கள். தொலைநோக்கில் இதன் விளைவுகள் மிக மோசமான உணவுப்பஞ்சத்தைக் கொண்டு வரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.     

       நன்றி: பொம்மி - சிறுவர் மாத இதழ் ஏப்ரல் 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக