திங்கள், ஏப்ரல் 25, 2022

சூழலியல்   உணர்வூட்டும் பாடல்கள்

 சூழலியல்   உணர்வூட்டும் பாடல்கள்

 

  மு.சிவகுருநாதன்

 


 

 

 

           இன்றைய சூழலில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மிகவும் சிக்கலான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. மின்னணு ஊடக வலையில் குழந்தைகளைச் சென்றடைந்திருக்கும் பொருண்மைகள் நம்மை அச்சப்பட வைக்கின்றன. இன்றைய குழந்தைகளில் ஒருபகுதியினர் இந்த வலையில்தான் சிக்கியுள்ளனர். இதன் மறுபுறம் இந்த மின்னணு வசதிகள் எட்டாத அடித்தட்டுக் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் இரண்டு தரப்பிற்குமான பெரிய  இடைவெளி கல்வி உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் எதிரொளிக்கவே செய்கிறது. இதை வெறும் கற்றல் இடைவெளி என்று மட்டும் கடந்துவிட முடியாது; அதையும் தாண்டி இந்தக் கல்வி இடைவெளி தலைமுறைகளைப் பாதிக்கும் அளவிற்கு வளர்வது நல்லதல்ல.

 

       ஒன்றிரண்டு நொடிகள் அல்லது நிமிடங்களில் காட்டப்படும் காணொளிகள் குழந்தைகளை மட்டுமல்ல, நாமனைவரையும் ஈர்க்கும் ஒன்றாக மாறிவிடுகிறது. இத்தகைய விளம்பரங்கள் வாயிலாக வணிக உலகம் செழிக்கிறது. இந்த உத்திகளை கல்வியில் செயல்படுத்தி ஈர்ப்பை ஏற்படுத்த விரும்புகிறோம். ஆனால் வணிக உத்திகளுக்கேற்ப கல்வி உத்திகளை வடிவமைப்பது  சரியாக இருக்காது.

 

       ‘கொரோனா’விற்கு பிந்தைய கல்வியை மின்னணு ஊடகங்கள்  வழியே வளர்த்தெடுக்க இணைய வணிகக் கும்பல்கள் பெரிதும் விரும்புகின்றன. கல்வியை முற்றாக வணிகமாக்கி சிலர் கொள்ளையடிக்கும் சூழலை நாம் இன்று காணமுடிகிறது. இவற்றையும் தாண்டி அடித்தட்டுக் குழந்தைகளின் கல்வியை உறுதிசெய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் மக்கள் நல அரசுகளுக்கு இருக்கிறது.  அதற்கு புதிய வகையான, குழந்தைகளுக்கு ஈர்ப்புள்ள, குழந்தைகள் மீது கவனம் கொள்கின்ற  உத்திகளைக் கண்டடைய வேண்டிய தேவையிருக்கிறது. 

 

         மாணவர்களை கற்றலில் மகிழ்வுடன் ஈடுபடுத்த பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறன. அவற்றில் ஒன்று பாடல்களாகும். பாடம் சார்ந்த செய்திகளை எளிய பாடல்கள் வழியே கற்றுத்தருவது என்கிற முயற்சியில் ஈடுபட்ட ஒருவரது பாடல்கள் தொகுப்புதான் ‘பாட்டும் பாடமும்’  என்ற நூலாக நம் கையில் தவழ்கிறது.

  

       மாலத்தீவுகளில் நீண்ட கல்வியனுபவம் உடைய நண்பர் குருங்குளம் முத்து ராஜா அவர்கள் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றியபோது பல்வேறு பாடல்கள் வழியே தமது கற்றல் பணிகளைச் செம்மையாக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார். அவர் எழுதிய 75 சிறார் பாடல்களின் தொகுப்பே இந்நூல்.

 

     ஆசிரியர் குருங்குளம் முத்து ராஜா சமூக அக்கறையும் கருத்தியல் தெளிவும் அரசியல் புரிதலும் கொண்டவர். அதன் பிரதிபளிப்பை அவரது பாடல்களில் காண முடிகிறது. சூழலியல், அறிவியல், இயற்கை, மொழி, வரலாறு, பண்பாடு, விளையாட்டு, திருக்குறள், உறவுகள் போன்ற பல்வேறு களங்களை இத்தொகுப்பு பிரதிநிதித்துவப் படுத்துகிறது. இவற்றில் சூழலியல் குறித்த அக்கறைகள் மிகுதியாக வெளிப்படுவதையும் காண்கிறோம். 

 

         நமது சூரியக் குடும்பத்தை,  

 

“அண்ட வெளியில் பால்வீதி 

அந்த வீதியில் குடியிருக்கும் 

அதிசயமான குடும்பமாக”,  (74) 

 

          கவிஞர் அடையாளம் காண்கிறார். (அடைப்புக்குறிக்குள் உள்ளவை பாடல் வரிசை எண்கள்) 

 

“ஒற்றை மரமென எண்ணாதே – அது ஓராயிரம் உயிர்களின் வாழிடமே!”, (32)

                     என்று இயற்கையை,

"வனமே தருது உயிர்மூச்சு – அதில் வாழும் விலங்குகள் உறவாச்சு!"  (38)

                      என்று  சூழியல் மண்டலத் தொடர்புகளை,

"உச்சிக் கிளையில் நீ அமர்ந்து மரத்தை வெட்டுற - நாம்

உயிர்வாழும் பூமியையே மாசு படுத்துற

மக்காத குப்பையெல்லாம் சங்கடந்தாங்க – நீங்க

மஞ்சப் பையை கையிலெடுங்க மங்கலந்தாங்க!”,  (42)  

                                               என்று மனிதர்களது கொடுஞ்செயல்களைப் பட்டியலிடுவதோடு  நில்லாது, அதற்கானத் தீர்வை நோக்கி நம்மையும் குழந்தைகளையும்  நகர்த்துகிறார்.    

        தமிழக அரசே 'மஞ்சள் பை' இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறது. மஞ்சள் மங்கலகரமானது என்று சொல்வதுகூட உண்மையில் பொதுவானதல்ல. மேலும் செயற்கை வண்ணங்களும் அதன் சாயப்பட்டறைகளும் சூழலுக்குப் பெருங்கேடாகும். சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணமில்லாத் துணிப்பை இயக்கமே நமக்குத் தேவை. இதுவே சூழலியல் அறத்தைப் பேண வழிவகுக்கும்.

“சுற்றுச்சூழல் காப்பதுவே என்றும் நமது பொறுப்பு!

இயற்கையோடு இணைந்து வாழ்தல் தமிழர்களின் சிறப்பு!”,  (31)  

              என்று மீண்டும் நமது பழங்கால வாழ்முறைக்கு திரும்ப வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது. இந்தத் தொன்மை  வாழ்வு 5000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக்  கொண்டது.

"முதலிடத்தில்  மனிதனென்று முண்டா தட்ட வேண்டாம் - நம்

மூளை இதயம் எல்லாம் கூட முக்காப்பங்கு நீர்தான்!",  (46)

            என்று சொல்வதன் மூலம்  ஆறறிவு, பகுத்தறிவு, மனித இனம் என்று பெருமை பேசித் திரியும்  தலைகளைக்  கொஞ்சம் குட்டியும்  வைக்கிறார். 

"பாடிப் பறக்கும் பறவைகளோ ஆயிரம் உண்டு – தன்

பெயர் தெரிந்த ஒரே இனம் நீ மட்டும்தானோ!

ஊரைச் சுத்தம் செய்து வாழும் உன்னதக் காகம் – நீ

உறவென்பார் எனக்கு அதில் பெருமையும் தானே!"   (68)

             என்ற வரிகளின் வழியே சூழலைச் சுத்தம் செய்யும் காக்கையின் பண்பு விளக்கப்படுவதோடு, வண்ணங்களில் கருப்பும், பறவையினங்களில் காக்கை மீதும் பிற்போக்குச் சமூகம் சுமத்தியுள்ள குறியீடுகளையும்  ஒருசேர விமர்சனத்திற்கு  உட்படுத்துகிறார்.  

          கிராமத்துக் குழந்தைகள் (05),  ஒத்த டயர் வண்டிக்கொரு ஓட்டப்பந்தயம் (25), முகில் வரைந்த ஓவியம் (13), சிக்கனம் (15), உண்டி வில் (40)  போன்ற பாடல்கள் பேச்சுமொழியில் அமைந்து, குழந்தைகளுக்கு இனிமையும் மகிழ்வும் தரும் வகையில்  உள்ளன.

 

 “காட்டுப்பழம் போல  உங்க கடை மிட்டாய் இனிக்குமா?

கூட்டாளிக் கும்மாளம்  கொண்டாட்டம்  இருக்குமா?”, (05) 

            என்ற வினாவே நமக்கு விடையையும் சேர்த்துச்  சொல்லிவிடுகிறது.

 “படுசுட்டி ஒன்னும் ரெண்டும் போட்டிக்கு வாங்க

பாவப்பட்ட  மத்தவங்க  பரீட்சைக்கு படிங்க!”, (25)

                இவ்வரிகள் குழந்தைகளின் அகமன உலகையும் நமது கல்வி நிலையையும் ஒருசேரச் சுட்டுவது அழகு.

        சதுரங்க விளையாட்டைச் சொல்லும்போதுகூட அதிலும் குழந்தைகளுக்கு,  

“ஊராளும் மன்னன் - மக்கள்  ஒன்னுகூடி இருக்கணும்!

ஒத்துமையா இல்லேன்னா ஒத்தையில சாகணும்!”,      (20)

                       என்கிற நல்ல சேதியும்  சொல்கிறார்.

"தொட்டுத் தடவி பேசாதே தூரமா நில்லு

கிட்ட வந்து உரசாதே விலகியே நில்லு!

(…)

அச்சமில்ல அசிங்கமில்ல சத்தம் போடுவேன்

அம்மாகிட்ட அப்பாகிட்ட நானே சொல்லுவேன்",  (63) 

                    என்ற வரிகள் போக்சோ (POCSO-2012) போன்ற கடுஞ்சட்டங்கள் இருந்தபோதிலும் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளைக் காப்பாற்றும் ஆயுதமாக  அமையும் என்பதில் அய்யமில்லை.

       நாம் வேட்டைச் சமூகத்திலிருந்து வந்தவர்கள்தான். பெருமைகள் பட்டியலில் மட்டுமே  அதற்கு இடந்தர முடியும்! நாம் இன்று வேட்டையாடச் சூழலிலும் சட்டத்திலும்  துளியும் இடமில்லை. ஆனால் ஒளிப்படமெடுக்க அனுமதியுண்டே!

      எனவேதான்,  

"பழந்தின்னும் பறவைகளை அடிக்கக் கூடாது – தம்பி

பறவை தின்னும் பழங்களையே அடிச்சு தின்னுங்க!",   (40) 

              எனக் குழந்தைகளுக்கு அறிவுரை தருகிறார்.

       எல்லாக் காலங்களுக்கும் எல்லா உயிர்களுக்குமான நிலையான அறம் இருக்க முடியாதல்லவா! மனிதனுக்குத்தான் வேட்டையாடத் தடை; புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகளுக்கல்ல.

           இதையே, 

"மான்கள் கூட்டம் பெருகிவிடில் மாபெரும் காடும் அழிந்து விடும்!

காட்டுக்  காவல்காரன் நீ வேட்டையாடி வா புலியே!",   (51) 

                எனக்கூறி வேட்டைக்குப் புலியை அனுப்பி வைக்கிறார். இது முரணல்ல; இயற்கை அளித்திருக்கும்  சூழலியல் சமன்பாடு. 

"வெறுங்கையால் கடல் அலையை தடுக்க முடியுமா?

வேலுநாச்சிப் படை வருது  அடக்க முடியாமா?", (71) 

                  என்று தற்கால அரசியல் சூழலுக்கேற்ற வேலு நாச்சியார் கும்மிப்பாட்டும் (71) இந்நூலில் உண்டு.  ‘கெஜார்லி படுகொலை’ (18) போன்ற வரலாற்று நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் பாடல்களும் இருக்கின்றன.

         கவிதைக்குப் பொய் அழகு என்பார்கள். இதில்  தர்க்கம்  (logic) பார்ப்பது இயலாது. குழந்தைகளும் ஒரு வகையில் இத்தகைய தர்க்க வரையறைக்கு அப்பாற்பட்டவர்களே. 

       பாடநூல்கள், பாடப்பொருள்கள் சார்ந்து எழுதுவதால் பல இடங்களில் அவற்றைப் பிரதிபளிக்க வேண்டியிருக்கிறது. ஏவூர்திகள் மற்றும் செயற்கைக்கோள்கள் பெருமைகள், பிற்காலச் சோழப் பெருமைகள், சைவப் பெருமைகள்  மட்டுமே இங்கு பேச இயலும்.  எவ்வளவுதான் சூழலியல் பேசினாலும்  விண்வெளிக் குப்பைகள், அதன் மாசுபாடுகள் பற்றியெல்லாம் வாய்திறக்க இடமில்லை. 

      குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நாநிலங்களும்  பாலையாக வாய்ப்புள்ளச் சூழலில்,

 "முதலிரண்டும் வளம் குறைந்தால் பாலை நிலமாகும்!", (31)

             என்கிற பாடநூல் வரையறைக்குள் இயங்க வேண்டிய கட்டாயம் இருப்பது கவிதைக்குக் கொஞ்சம்   இடையூறுதான். ஆனால், என்ன செய்வது?

       கவிஞர் முத்து ராஜா இத்தகைய வெளிகளைத் தாண்டிப் பாடல் (கவிதை) வெளியில்  கட்டற்று, மேலும் சிறகடித்துப்  பறக்கட்டும். 

      நூலின் எல்லாப் பாடல்களை இங்கு எடுத்துக்காட்டுவது சரியாக இருக்காது. பாடல்களின்  (கவிதை) பரப்பில் வாசகர்களது எண்ணங்களும் சேர்ந்து  மேலும் மெருகூட்டட்டும்.

 

('பன்மை'யின் ஆறாவது வெளியீடான குருங்குளம் முத்து ராஜாவின் 'பாட்டும் பாடமும்' நூலின் மதிப்புரை.)                                                                                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக