செவ்வாய், பிப்ரவரி 28, 2023

சாசனம்: பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்

 

சாசனம்: பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்

மு.சிவகுருநாதன்



 

 

        உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக பல இதழ்கள் வெளியாகின்றன. தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுஎனும் ஆய்விதழும் தற்போது வெளிவரவில்லை என்று தெரிகிறது.

         இந்த நிலையில் சாசனம்ஆய்விதழ் 2019 லிருந்து தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. ஆண்டுக்கு இருமுறை மற்றும் இருமொழி இதழான சாசனம் இதுவரை ஆறு இதழ்களைத்  ந்துள்ளது. 2020க்கான இரு இதழ்களும் ஒரே தொகுப்பாக வெளியானது. நூல் முழுதும் வண்ணப்படங்களுடன் அழகான தாள் மற்றும் வடிவமைப்பில் இதழ் வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. தனி இதழ் விலை ரூ. 500; ஆண்டு சந்தா ரூ.900

 

      கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றியல் ஆய்வு மையம் இந்த ஆய்விதழை வெளியிடுகிறது. டாக்டர் கே.ஏ.மனோகரன் கௌரவ ஆசிரியர்; பொறியாளர் பி.குமார் கௌரவ உதவி ஆசிரியர்;  ஆசிரியர் சுகவன முருகன். இவர் ‘புது எழுத்து’ என்ற நவீன இலக்கிய இதழின் ஆசிரியர் மனோன்மணி ஆவார்.

     டாக்டர் எஸ்.ராஜவேலு, டாக்டர் வி.கே.சண்முகம், திரு வீர ராகவன், திரு ஏ.பி.தேவேந்திர பூபதி, திரு டி.எஸ். சுப்பிரமணியன், திரு எஸ்.பரந்தாமன் ஆகியோர் ஆலோசகர்களாக உள்ளனர்.

     ஆறாவது இதழில் கிண்ணிமங்கலம் கல்வெட்டு குறித்த சில கேள்விகளை சொ.சாந்தலிங்கம் முன்வைக்கிறார். எஸ்.இராமச்சந்திரனின் ‘குவீரன் – ஓர் ஆய்வு கட்டுரை’யும் இடம்பெற்றுள்ளது.

    ‘சோழ அரசில் நிலவுடையாளர்கள், விவசாயிகள், அடிமைகள்’, என்ற எ.சுப்பராயலு அவர்களின் கட்டுரை இரா.சிசுபாலனின் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது.

     இலங்கையில் தமிழ் இராசதானியின் தோற்றம் பற்றிய கிழக்கிலங்கையின் அரிய கல்வெட்டுகள் குறித்த பரமு புட்பரத்தினம் அவர்களின் கட்டுரையும் உள்ளது.

    கரிக்கையூர் தொல்மாந்தர் ஓவியங்கள் (யாக்கை அறவமைவு), தமிழகத்தில் புதிய கற்கால கல்தேய்ப்பு பாறை ஓவியங்கள் (சுகவன முருகன்), தொண்டமானூர் பாறைக் கீறல்கள் (ச.பாலமுருகன் / சி.பழனிச்சாமி / சிற்றிங்கூர் ராஜா), ஐகுந்தம் வணிகக் குழு கல்வெட்டு (சி.கோவிந்தராஜ்), தீர்த்தமலை கம்மாளர் செப்பேடு (சூரபத்மன்) போன்ற பல கட்டுரைகளும் வண்ணப்படங்களும் ஆர்ட் தாளில் அணிவகுக்கின்றன. இருமொழி இதழானதால் ஆங்கிலக் கட்டுரைகளும் உண்டு. 

 விரிவான பதிவு பின்னர்.

 

இதழ் விவரங்கள்:

 

சாசனம் – (ஆண்டுக்கு இருமுறை இருமொழி ஆய்விதழ் - தமிழ், ஆங்கிலம்),

தனி இதழ் விலை ரூ. 500; ஆண்டு சந்தா ரூ.900.

வெளியீடு:

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றியல் ஆய்வு மையம்,

கே.ஏ.பி. கல்யாண மண்டபம்,

ஓசூர் – 635109,

கிருஷ்ணகிரி மாவட்டம்.

அலைபேசி: 9842647101

மின்னஞ்சல்:   kdhrckgi@gmail.com    

                           editorsasanam@gmail.com

செவ்வாய், பிப்ரவரி 07, 2023

பள்ளிக் கல்வித்துறை - இதழ்கள்- நூலக வாசிப்பு

                            பள்ளிக் கல்வித்துறை - இதழ்கள்-  நூலக வாசிப்பு

மு.சிவகுருநாதன்


 

 

          வெறும் புள்ளிவிவரங்களையும் EMIS ஐ மட்டும் பிடித்துத் தொங்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மருந்திற்கு சில நல்ல செயல்களையும் செய்ய முனைகிறது.  இவை பாதியில் நின்றுபோகாமல் தொடர்ந்தால் நல்லது. மேலும் இம்முயற்சிகள் எந்தத் திசைநோக்கில் பயணிக்கிறது என்பதில்தான் இதன் தாக்கமும் வெற்றியும் அடங்கியிருக்கிறது.

   1-5 வகுப்புக் குழந்தைகளுக்குஊஞ்சல்இதழும் 6-9 வகுப்புக் குழந்தைகளுக்கு  'தேன்சிட்டு' இதழும் ஆசிரியர்களுக்கு 'கனவு ஆசிரியர்' என்ற மாத இதழும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள கழகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. சிறார் இதழ்கள் tabloid  வடிவில் தனித்தனியே 6 பேர் படிக்கும் வண்ணம் 24 பக்க அளவில் உள்ளது.  'கனவு ஆசிரியர்' 52 பக்கத்தில் A4 அளவில் உள்ளது. 7வது இதழ் முதல் பள்ளிகளுக்கு அஞ்சலில் அனுப்பப்படுகிறது.

         மேலும் இளந்தளிர் இலக்கியத் திட்டம் என்ற தலைப்பில் சிறுவர் நூல்களைப் பதிப்பிக்கும் பணியும் நடந்துவருகிறது. பல்வேறு தலைப்புகளில் சிறார் நூல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆவணப் பதிப்புகள், தொல்லியல் துறையுடன் இணைந்த வெளியீடுகள், திசைதோறும் திராவிடம், நூற்றாண்டு படைப்பாளிகளின் திரட்டு,  உயர்கல்விநுழைவுத்தேர்வு வினா வங்கிகள் போன்ற பல்வேறு வெளியீட்டுத் திட்டங்களும் உண்டு.        

     ‘கனவு ஆசிரியர்ஜனவரி 2023 இதழில் தமிழின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர் என்கிற பெரிய அறிமுகத்துடன் மாலனின் சிறுகதை (தப்புக் கணக்கு) ஒன்று இடம்பெறுகிறது. தனியார் பள்ளி நடைமுறைகளைக் கிண்டல் செய்யும் கதை. அரசுப் பள்ளி ஆசிரியருக்கான இதழில் இக்கதை இடம்பெறும் நோக்கம் என்ன? தனியார் பள்ளிகளை அல்லது அதன் ஆசிரியர்களை விமர்சிப்பதுதான் இதன் நோக்கமா? அப்படியெனில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதியளித்து அவர்களது வணிகத்திற்கு அரசுதானே வழிவகை செய்துவருகின்றது. 

       பள்ளிகளை, ஆசிரியர்களை, கல்வியமைப்பை விமர்சிக்கக் கூடாது என்பதில்லை. அவை தர்க்க எல்லைக்கு உட்பட்டதாக அமைவது நல்லது. ஒருவாரத்திற்கு 7 நாள்கள் எனில் இருவாரத்திற்கு எத்தனை நாள்கள்? என்ற 2X7=14 விடையெழுதுவதற்குப் பதிலாக 7X2=14 என்று எழுதும் குழந்தை ஜனனிக்கு 0 மதிப்பெண் அளிக்கிறார் ஆசிரியை. அதை அக்குழந்தையின் தாத்தா தட்டிக்கேட்க, அந்த ஆசிரியையும் அப்பள்ளி முதல்வரும் வகுப்பில் சொல்லிக் கொடுத்தபடிதான் எழுத வேண்டும். எனவே அதுவே சரியானது என்று வாதிடுகின்றனர். அந்த சுயநிதிப்பள்ளியின் அதிகார எல்லைக்குள் வராது என்ற நிலையிலும் கல்வி அலுவலர் விடை பகுதி சரியென்று மழுப்பி அனுப்புகிறார். அமைச்சர் அளவிற்கு  பிரச்சினையைக் கொண்டுசெல்ல நினைக்கும் தாத்தாவை அத்துடன் விடுமாறு சொல்லும் குழந்தையின் தந்தை அதை வேறுவிதமாக அணுகுகிறார். இதுவே கதைசொல்லியின் அணுகுமுறையாக உள்ளது.

        இது பெண் குழந்தை. ஞாபகம் வைச்சுகுங்க. சொல்லிக் கொடுத்த மாதிரியில்லாம வேறு மாதிரி யோசிக்கிற குழந்தை. பின்னால பெரியவளானா நிறைய கேள்வி கேப்பா. இதுநாள் வரைக்கும் நடைமுறையில இருக்கிற சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் இதையெல்லாம் கேள்வி கேட்பாள். வித்தியாசமா சிந்திக்கிறதினாலேயே காயம் படுவா. ஊரோடு உலகத்தோட, ஒத்து வாழாம இருந்தா அவளுக்கும் அவஸ்தை. மற்றவர்களுக்கும் இம்சை.”

அதனால?”

ஏய், டீச்சர் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறாளோ அப்படியே கணக்குப் போடு. அதிகப் பிரசங்கித் தனமெல்லாம் பண்ணாதேஎன்று சொல்லிக்கொண்டே எழுந்தார் அப்பா.

       இதெல்லாம் கதையில் நடக்கும் உரையாடல்தானே! இதில் கதைசொல்லிக்குப் பங்கில்லை என்று வாதிடமுடியுமா? இறுதியில் இது ஏற்கப்பட்டு கதைசொல்லியின் சனாதன விருப்பம்தான் நிறைவேறுகிறது.

       கணித அடிப்படைச் செயல்களில் கூட்டல், பெருக்கல் ஆகிய இரண்டிற்கும் பரிமாற்றுப் பண்பு  (Commutativity) உண்டு. கூட்டலில்    a + b = b + a; பெருக்கலில்   a X b = b X a என்பது அனைவரும் அறிந்த எளிய உண்மை. கழித்தல், வகுத்தல் போன்ற செயல்களில் இப்பண்பு கிடையாது. இதுகூட புரியாமல் கல்வியமைப்பைக் கிண்டலடிப்பதாக நினைத்துக் கொண்டு வன்மத்தைக் கக்குகிறார் மாலன். இக்கதையின் ஊடாக சனாதனக் கருத்துகளை வலியுறுத்த பள்ளிக் கல்வித்துறை இடமளிப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது.

       மேலும் இச்சிறுகதை முன்பே 'தாய்' இதழில் வெளியாகி இதே தலைப்பிலான அவரது சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது; இணையப்பக்கத்திலும் கிடைக்கிறது. இது மறுபிரசுரம் என்பதைக்கூடக் குறிப்பிடாமல் வெளியிடுவது இதழியல் அறமல்ல. இந்த அறமற்ற செயல் ஒருபுறமும், முற்றிலும் பழமைவாத, அடிப்படைவாத அம்சங்களை உயர்த்திப் பிடிக்கும் கருத்துகளை கல்விப்புலத்தில் உலவச்செய்வதும் மிகுந்த  அதிர்ச்சியை அளிக்கிறது.

               பாடநூலில் இடம்பெறும் பிழைகள் தேர்வுகளில் சரிவர கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதனால் போட்டித் தேர்வு விடைகள் தொடர்பாக பல நீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. மேலும் கல்வி நடைமுறைகள், கொள்கைகள் மீது பல தர்க்கப்பூர்வமான விமர்சனத்தை எழுப்ப முடியும். கணிதத்தில் யாரும் செய்யத்துணியாத பிழையான ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு தர்க்கமற்ற கூறுகளால் நமது கல்விமுறையை விமர்சிப்பதான பாவனையில் இச்சிறுகதை இயங்குகிறது.

      இதைக் கல்விமுறை மீதான விமர்சனம் என்றே வைத்துக்கொண்டாலுகூட இம்முறைக்கு மாற்றாக மாலன்கள் முன்வைப்பது எதை? இதை மெக்காலே கல்வியின் சீரழிவு என்றும் குருகுலக்கல்வியே மாற்று எனவும் இவர்கள் எப்போதும் புலம்பித் தீர்க்கின்றனர். தங்களது பெருவிருப்பமான சனாதன தருமத்தை நிலைநாட்ட அதுவே உதவும் என்பது இவர்களின் நம்பிக்கை. சனாதனம் சூத்திரர், பஞ்சமர், பெண்கள் ஆகியோரை ஒன்றாகத்தானே கருதுகிறது! “ஊரோடு ஒத்து வாழ்”, என்று பெண் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தும் இக்கதை ஆசிரியர்களுக்காக கல்வித்துறை வெளியிடும் இதழில் வெளியாவது காலக்கொடுமை மட்டுமல்ல; வன்முறையும்கூட.

           மாலன்களுக்கு தமிழ்நாடு கல்வித்துறை வெளியிடும் இதழில் ஏன் இடமளிக்கிறார்கள். இவரது அபாரத் திறமைகளுக்கு (!?) சன் டிவி, குங்குமம் போன்றவற்றில் பதவிகளும் பொறுப்புகளும் வழங்கியாகிவிட்டது. கலைஞர் தொலைக்காட்சி, தினகரன், முரசொலி போன்றவற்றில் இடம், பதவியளித்துப் பெருமைப்ப்படுத்தலாம். மாலன் நாராயணன்களும் மணிகண்ட பூபதிகளும் இருக்க வேண்டிய இடம் அதுதான். பள்ளிக்கல்வித்துறையின் தொலைக்காட்சி, இதழ்களில் இவர்களுக்கு ஏன் இடம் என்று நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். ஆனால் அதுதான் நடக்கிறது.  

     'தேன்சிட்டு' இதழில்  படி, விருப்பப்படிஎன்ற தலைப்பில் கீழக்கண்ட வாசகங்கள் இடம்பெறுகின்றன.

     அரசுப் பள்ளி நூலகங்களில் உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றும் வாசிக்கலாம்.  காலையிலும் படிக்கலாம்... மாலையிலும் படிக்கலாம்... இடைவேளையிலும் படிக்கலாம்... கதைகள் சொல்லி, எழுதி, வரைந்து, நடித்து, ஆடிப் பாடி மகிழ்வோம்.

நூலக வகுப்புகளில் நூலகங்களைப் பயன்படுத்துவோம்!

மதிய இடைவேளை வாசிப்பு நேரத்தில் நூலகப் புத்தகங்களை வாசிப்போம்!

     ஆனால் நடைமுறை என்னவாக உள்ளது என்பதை அறிவது மிக அவசியம். மாணவர்கள் நேரடியாக நூலகம் சென்று தனது விருப்பமான நூலைத் தேர்வு செய்து வாசிக்கும் நடைமுறை வழக்கில் இல்லை. பாடநூல்களைத்தான் நாம் அவர்களது தலையில் கட்டுகிறோம். நூலகத்திலுமா இப்படி இருக்க வேண்டும்? இவைகுளிர்பதன அறைகளின் முடிவாகஇருக்கிறதே தவிர மாணவர்கள், ஆசிரியர்களின் முடிவாக இருப்பதில்லை.

       EMISம், செயலிகளும் வகிக்கும் இடத்தில் சிறுதுளி கூட  வேறு எந்தக் கல்விச் செயல்பாடுகளுக்கும் அறவே கிடையாது. மாணவர் வருகைப்பதிவை TNSED Attendence என்ற செயலியில் குறிக்க வேண்டும். எண்ணும் எழுத்தும், நூலகம், விளையாட்டு, உடல்நலம், நலத்திட்டங்கள் போன்றவற்றை   TN SED Schools என்ற வேறொரு செயலியில் பதிவிட வேண்டும். மாணவர்களின் மதிப்பெண்களை www.emis.tnschool.gov.in என்ற இணையத்தில் பதிவேற்ற வேண்டும். இதில் பல இடங்களில் மதிப்பெண்கள் இருக்கும். எந்த இடத்தில் பதிவிடுவது என்பது யாருக்கும் தெரியாது.

         நாம் அலைபேசிகளில் நூற்றுக்கணக்கான செயலிகளைப் பயன்படுத்தியிருப்போம். எல்லா செயலிகளும் பயன்படுத்துவதற்கு எளிமையாக user friendly ஆக இருக்கும். நாம் ஒரு செயலை முடித்த பிறகும் இன்னும் செய்யவில்லை என்று தகவல் வரும். இதைச் செய்யுங்கள், அதைச்செய்யுங்கள், logout செய்துவிட்டு  மீண்டும் login செய்யுங்கள் என்பார்கள். அப்படிச் செய்தாலும் சுற்றிக்கொண்டே இருக்கும். வாரத்திற்கு இரண்டு மூன்று verison update ஆகும். அப்படியும் பலனிருக்காது. காலை வீட்டில் கிளம்பும்போதே இந்த செயலியை முடுக்கிவிட வேண்டும் என்றும் விடுமுறை நாள்களில் வருகைப்பதிவு ஒத்திகை நடத்த வேண்டும் என்றும் புலனத்தில் (whatsapp) அறிவுரைகள் வந்த வண்ணமிருக்கும். இப்படியொரு உலக மகா அலைபேசி செயலியை வடிவமைத்தவர்களுக்கு நோபல்பரிசை விட பெரிய பரிசு வழங்கலாம். ‘சர்வர்அளவு பற்றி யாரும் கவலைகொள்வதில்லை. நாங்கள் சொல்வதைச் செய்யுங்கள் என்று மிரட்டுவதுதான் நடக்கிறது.

       TN SED Schools செயலிக்குச் சென்று வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புத்தக அலமாரியில் புத்தகங்களைச் சேர்க்க வேண்டும். பிறகு அவற்றை குழந்தைகளின் தலைக்கு ஒன்றாக கட்ட வேண்டும். பிறகு நூலகத்தில் தேடினால் அந்தப் புத்தகம் இருக்காது. குழந்தைகள் அவர்களாகவே தேடித் தேர்தெடுத்த நூலை அவர்களுக்கு வழங்கி அவற்றைப் பதிவிடுவதுதானே பொருத்தமாக இருக்க முடியும்? கொக்குத் தலையில் வெண்ணெயை வைத்து அது உருகி கண்ணை மறைக்கும்போது பிடிக்கும் முயற்சிக்கும் கதைபோல இருக்கிறது.

      நூலக வாசிப்பு, விளையாட்டு என்றெல்லாம் பேசுகிற வேளையில் இந்தத் 'தேன்சிட்டு' மாணவர் இதழ் ஏன் 10, +1, +2  ஆகிய வகுப்புகளுக்கு இல்லை என்று கேட்கத் தோன்றுகிறது? +1, +2 வகுப்புகள் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் இல்லை என்பார்கள். அங்கும் இதே நிலைதான். இதைப்போல பள்ளிகளில் பெயருக்கு நடத்தப்படும் ஓவியம், விளையாட்டு போன்ற தேர்வுகள் 10 ஆம் வகுப்பிற்கு இல்லை. காரணம் மிகவும் வெளிப்படையானது, இவை பொதுத்தேர்வு வகுப்புகள் அவ்வளவுதான்.  வேறு எதற்கும் இங்கு இடமில்லை. இந்தச் சூழலில் அவ்வகுப்பில் ஓவியம், விளையாட்டு, நூலக வகுப்புகள் எவ்வாறு செயல்படும்? இணைச் செயல்பாடுகள் மட்டுமல்ல; பாட்த்திட்டமே இவ்வாறுதான் வடிவமைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 6-8 மாணவர்கள் 7 கண்டங்களின் புவியியலைக் கற்றபின் முதன்முதலாக தமிழ்நாடு புவியியலை அறிவதோ 10 ஆம் வகுப்பில்தான். இதற்குப் பொதுத்தேர்வை விட வேறு காரணம் இருக்கும் என்று நம்புகிறீர்களா?

       அறிவிற்கும் கல்விக்கும் தொடர்பற்ற நிலைமைகளை கல்வித்துறை உருவாக்குவது சரியல்ல. நன்றாக யோசித்து, பிறரைக் கலந்தாலோசித்து இம்முடிவுகள் எடுக்கப்படவேண்டும். வெறும் விளம்பரங்கள் கதைக்கு ஆகாது. ஆதிக்க, ஆணவ முடிவுகள் குறிப்பிட்ட நல்ல விளைவுகளைத் தராது. பொறுப்பிலுள்ளவர்கள் சிந்தித்துச் செயல்பட்டால் கல்வித்துறையை சீரழிவிலிருந்து காப்பாற்றலாம்

 

நன்றி: புதிய விடியல் (மாதமிருமுறை) - பிப்ரவரி 1-15, 2023

சனி, பிப்ரவரி 04, 2023

சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்

                           சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்

மு.சிவகுருநாதன்


 

          பபாசிஎன்று அழைக்கப்படும்  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சென்னைப் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1976 இல்  மிகச்சிறிய அளவில் சுமார் 30 கடைகள் என்றளவில் தொடங்கிய  இப்புத்தகத் திருவிழா 46 ஆண்டுகளில் 900க்கும் மேற்பட்ட கடைகளில் என்கிற பிரமாண்ட அளவில் விரிவடைந்துள்ளது. இதற்கு நூல்களை வாங்கி வாசிக்கும் பெரும் வாசகர் கூட்டமே காரணமாகும். தமிழ் அறிவுலகம் பெருமை கொள்ளும் செய்தியாக இது இருக்கிறது.

        இவ்வாண்டின் 46வது சென்னைப் புத்தகத் திருவிழா ஜனவரி 6 இல் தொடங்கி 22 முடிய எனத் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டிலிருந்து சர்வதேச சென்னைப் புத்தகக் காட்சியை (CIBF) தமிழ்நாடு அரசு முன்னெடுக்கிறது. இந்த முன்முயற்சி மூலம் 300க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை பிற உலகமொழிகளுக்குக் கொண்டு செல்ல ரூபாய் 3 கோடி மொழிபெயர்ப்பு மானியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

        சென்ற ஆண்டிலிருந்து மாவட்டந்தோறும் அரசின் சார்பில் கண்காட்சி நடத்தப்படுகிறது. மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், நெய்வேலி, திருச்சி போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டாலும் சென்னைப் புத்தகக் காட்சி தமிழ்நாட்டின் அறிவுலக அடையாளமாகத் திகழ்கிறது. இக்கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கில் நிதியுதவி அளிக்கிறது. ‘பபாசிஎன்ற தனியார் அமைப்பு நடத்தினாலும் இதன் பின்னணியில் தமிழ்நாடு அரசின் உதவியும் பங்களிப்பும் இருக்கிறது. அரசின் நிதியுதவியுடன் செயல்படுவதால் இவ்வமைப்பு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் நடைமுறையில் அவ்வாறாக இல்லை. ஆண்டுதோறும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அவை கண்காட்சி நடைபெறும்போது மட்டும் பேசும்பொருளாகி பிறகு மறந்து போகின்றன.

         தொடரும் துயரங்களில் முதன்மையானது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்ய மறுப்பதாகும். இவ்வாண்டின் சிறப்பாக  உள்ளே நுழைய முடியாத அளவில் குறைந்த எண்ணிக்கையிலான கழிப்பறைகளும் திறந்த வெளியில் ஓடும் கழிவுகளும் வாசகர்களை முகம் சுழிக்கவும், சிவக்கவும் வைத்தன. இப்பிரச்சினை ஆண்டாண்டாகத் தொடர்வது. சில ஆண்டுகளில் கொஞ்சமாவது மேம்படுத்தியிருந்தனர். சர்வதேச புத்தகக் காட்சி நடக்கும் இம்முறை மிக மோசமான நிலையில் எவ்வித சுகாதார வசதியுமின்றி இருக்கும் அவலம் பெருந்துயரமாகும். நல்லவேளையாக CIBF வேறு அரங்கில் நடக்கிறது. அங்கு நூல் விற்பனைகள் இல்லை; பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டும் போடப்படும்.  


 

      ஆண்டுதோறும் வாசகர்களின் வரவு, நூல்களின் விற்பனை அனைத்தும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சென்ற ஆண்டின் 45வது புத்தகக் காட்சியில் 15 லட்சம் வாசகர்கள் 15 கோடிக்கு விற்பனை என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. வெறும் பணம் பண்ணும் வணிகமாக மட்டும் பபாசிஇதனைக் கருதுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது; அரசும் நிதியுதவி அளிக்கிறது. எனவே அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குவதுதான் சரியாக இருக்க முடியும். பன்னெடுங்காலமாக இதனைச் செய்ய மறுக்கும் அறிவுலக வன்முறை நிகழ்கிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, ஜனநாயகத் தன்மை என எதுவும் இல்லாத நிலையே நீடிக்கிறது.

         மகாத்மா காந்தியின் கல்விக் கொள்கைகளைப் பின்பற்றிச் செயல்பட்ட காரணத்தால் வ.வே.சு. அய்யரின் குருகுலத்திற்கு காங்கிரஸ் கட்சியின் நிதியுதவி வழங்கப்பட்டது. அங்கு சாதிரீதியாகப் பாகுபாடு காட்டப்பட்டபோது தந்தை பெரியார் அதனைக் கேள்விக்குட்படுத்தினார். அரசின் நிதியைப் பெறும் இந்த அமைப்பு பொறுப்புணர்வுடனும் நம்பகத்தன்மையுடன் நடந்துகொள்வதில்லை என்பதை அறிவுலக வீழ்ச்சியாக அவதானிக்க வேண்டியுள்ளது.

       கடந்த பத்தாண்டாக, இடவசதிக்காக சென்னை மாநகரின் தீவுபோன்ற ஒரு இடத்தில் (YMCA வளாகம்) இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அருகில் உணவகங்கள் ஏதும் இல்லாத நிலையில் கண்காட்சிக்கென அமைக்கப்படும் உணவகங்களின் தரமும் விலையும் கேள்விக்குரியவை. மேம்பட்ட அதிக என்ணிக்கையிலும் இவை அமைக்கப்படுவதில்லை. குடிநீர் வசதிகள் போதுமானதாக இருப்பதில்லை. எதிரே மேடையமைத்து முழுநேரமும்  வாய்வீச்சாளர்களை பேசவைப்பது புத்தகக் காட்சிக்கு தேவையற்றது.  இங்கும் வணிகமே கோலோச்சுகிறது. விழாக்களுக்குப் பெருந்தொகை வசூலிக்கவும் இம்மேடை பயன்படுகிறது. ஆனால் உணவக, ஓய்விட வசதிகளை மேம்படுத்த யாரும் நினைப்பதில்லை. 

        கடைகளுக்கு நடுவில் வாசகர்கள் வந்துசெல்ல அதிக இடைவெளி இருக்க வேண்டும் என்பதும் தொடரும் கோரிக்கை. கோரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் இதை இன்னும் மேம்படுத்துவது அவசியம். ஆனால் நிலைமை மோசமாகிறது. ஒருமுறை அகலமான பாதைகளை அமைத்திருந்தனர். இம்முறை அதற்கும்  தட்டுப்பாடு. நுழைவுவாயிலிருந்து ஒவ்வொரு வரிசைக்கும் செல்லும் வழிகளை முற்றாக அடைத்து வைத்துள்ளனர். மிகக்குறுகலான குறுக்கு வழிகளையே நாட வேண்டியிருப்பதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.  F வரிசை எனப்படும் நான்கு சேர்ந்தப் பெருங்கடைகளுக்கு முக்கியத்துவம் தருவதாக அரங்க அமைப்பு உள்ளது. இந்தப் பெருங்கடைகளுக்கு இருபுறகும் செல்ல வழியுண்டு. சிறிய ஒரு மற்றும் இரு கடைகள் ஒருவழிப்பாதையில் மட்டும் இயங்குபவை. இவைகளை ஓரங்கட்டும் வடிவமைப்பில் கண்காட்சி அரங்கம் அமைந்துள்ளது. எல்லாம் பெரும் பதிப்பகங்களுக்குச் செய்யும் சேவை!

        பபாசிஉறுப்பினர்கள்  சுமார் 500 என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு குறைந்த வாடகையும் உறுப்பினரல்லாதோருக்கு அதிக வாடகையும் விதிக்கப்படுகிறது. பதிப்பகம் செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை கணக்கில் கொள்ளாமல் உறுப்பினர் என்பதற்காக கடை ஒதுக்குவது சரியல்ல. இவ்வாறு ஒதுக்கப்படும் கடைகளை பலர் வேறு ஒருவருக்கு விற்றுவிடுகின்றனர். இதற்கான விதிகளை மாற்றியும் இயக்கத்தில் இல்லாத பதிப்பகங்களை நீக்கியும் அமைப்பைச் சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும். பல புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.  இந்த நான்குப் பெருங்கடைகளை (F வரிசை) தனி வரிசையாக அமைக்கலாம். இவற்றிற்கு மட்டும் முக்கியத்துவமளித்து அரங்கின் மையத்தில் அமைப்பதும் இதனால் சிறிய பதிப்பாளர்களை ஓரத்திலும் கூட்ட மிகுதியான முட்டுச்சந்திலும் நிறுத்துவதும் மோசமானதாகும்.

           2020இல் 43வது புத்தகக் காட்சியில் அப்போதைய தமிழ்நாடு அரசுக்கு எதிரான நூல்களை வெளியிட்டார், அரங்கில் விற்பனைக்கு வைத்திருந்தார் என்று அன்பழகன் என்பவர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இது கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலாகும். அப்போது அமைப்பின் துணைத்தலைவராக இருந்த பாரதி புத்தகாலயம் க.நாகராஜன் தனது  எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இந்த அமைப்பு ஜனநாயகத் தன்மையற்றுச் செயல்புரிவதற்கு இது ஓரு சான்றாகும். நூல்களை தணிக்கை செய்தெல்லாம் கண்காட்சி நடத்தவியலாது. அரசின் உதவி பெறுவதற்காக அரசின் ஊதுகுழலாகச் செயல்படுவதும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றைத் தட்டிக்கழிப்பதும் மிக மோசமான முன்னுதாரணங்களாகும்.

          இவ்வாண்டும் புத்தகக் கண்காட்சியில் கடை அமைக்க பெண்கள்,  மாற்று பாலினத்தவர்கள், தலித்கள் போன்றோருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் சொல்லப்பட்டது. இதன்பிறகு சிலருக்கு அனுமதி கிடைத்தது. மாற்றுப் பாலினத்தவர்கள் தொடங்கிய 'குயர் பதிப்பகம்' புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றது.  இருப்பினும் பலருக்கு இடம் கிடைக்கவில்லை. நடைபாதையில் கடை பரப்பி சால்ட் பதிப்பகம்தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கம் இந்த அமைப்பில் இருப்பதாகச் சொல்லப்படுவதும் தமிழ் அறிவுலகத்தின் களங்கமாக  அமையும்  என்பதில் அய்யமில்லை.

          2007இல் 30வது சென்னைப் புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்தபோது, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, தம் சொந்த பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசி அமைப்பிடம் அளித்து, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6 எழுத்தாளர்களுக்கு விருதளிக்க ஏற்பாடு செய்தார். ‘பபாசியின் செயல்பாடுகளை உற்றுநோக்கும்போது இவ்வமைப்பு இதற்குத் தகுதியானதுதானா என்கிற கேள்வியும் எழுகிறது.

          இவ்வளவிற்கு இலவச அனுமதி கிடையாது. நுழைவுக்கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரள்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் சிறுபகுதியைக் கொண்டே சிறப்பான அடிப்படை வசதிகளைச் செய்ய முடியும். ஆனால் பபாசி  முற்றிலும் வணிக நோக்கில் மட்டும் இயங்குகிறது. பல்லாண்டாக முன்வைக்கப்படும் புகார்களை அடுத்தடுத்த நிகழ்வுகளில் சரிசெய்யவும் எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை. இந்த அமைப்பிற்கு தமிழ்நாடு அரசு உதவுவதை விட தாமே முன்நின்று கண்காட்சியை நடத்துவதே சரியாக இருக்க முடியும். மேலும் புதுச்சேரி புத்தகக் கண்காட்சியில் அரசின் சார்பில் நூல்களுக்கு 5% கழிவு வழங்கப்படுவதைப்போல, முற்றிலும் லாபநோக்கில் செயல்படும் இத்தகைய அமைப்புகளை நிதியளித்து வளர்ப்பதைக் காட்டிலும் வாசகர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் திட்டங்களை அரசு செய்யலாம்.        

 

நன்றி: பேசும் புதியசக்தி – பிப்ரவரி 2023 இதழ்